சமீபத்தில் என் நண்பர் ஒரு மாவட்ட மைய நூலகத்துக்குச் சென்றிருக்கிறார். எந்த மாவட்டம் என்ற தகவலை நான் சொல்லப் போவதில்லை. சம்மந்தப்பட்ட நூலகருக்கே அது பிரச்சினையாக முடியலாம் என்பதாலும் அதோடு என் நண்பர் சந்தித்த அனுபவம் இன்று தமிழகம் முழுவதும் நூலகங்களில் ஒரு கலாச்சாரமாகவே பரவி இருப்பதாலும் தனிப்பட்ட தகவல்கள் இன்றி தொடர்கிறேன்.

முதலில் நண்பரைப் பற்றி.என் நண்பர் நூலகத்திற்குச் சென்று வாசிப்பது குறித்து பெரும் உவகை கொள்கிறவர். என்னாலும் அந்த உவகையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பள்ளி நாட்களில் எங்கள் ஊரில் இருந்த அரைநாள் செயல்படும் ஒரு சிறிய நூலகத்தில் அமர்ந்து வாசித்துதான் தான் தீவிர வாசகனானேன். ஒரு மணிக்கு நூலகத்தை மூடி விடுவார்கள் என்பதால் விரைவாகவும் அதேநேரம் கவனமாகவும் வாசிக்கக் கற்றுக் கொண்டது அங்குதான். ஜெயகாந்தனின் ரிஷிமூலம் குறுநாவலை அந்த கிராம நூலகத்தில் வாசித்து இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட முடியாமல் மனம் வெதும்பிக் கிடந்தது அந்த நூலகத்துடனான என்னுடைய தீவிரமான அனுபவங்களில் ஒன்று.

அதன்பிறகு திருத்துறைப்பூண்டி நகராட்சி நூலகம். உண்மையில் நான் அங்கு சென்றபோது நூலகம் நல்ல நிலையில் இல்லை. (தற்போது திருத்துறைப்பூண்டி நூலகம் நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம் என் நண்பரும் நூலகருமான திரு.ஆசைத்தம்பி அவர்கள். வாசகர்களின் மீது பெருமதிப்பு கொண்டவர்.எப்படியாவது பலரை வாசிப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் செயல்படுகிறவர்.) நூலகத்தின் உள்ளே சுவர்களில் நத்தை ஊறும். தண்ணீர் கசிந்து சுவர்கள் ஈரமாகி ஒரு மாதிரியான வாடை வரும். இப்போது இதை எழுதும்போதுகூட அந்த வாடை நாசியில் ஏறுவது போலுள்ளது. ஆனால் அந்த நூலகத்தில் நான் எண்ணற்ற தீவிரமான நூல்களை எடுத்து வாசித்திருக்கிறேன். திருவாரூர் மாற்றலான பிறகுதான் நண்பர் ஆசைத்தம்பியை சந்தித்தேன். திருவாரூர் நூலகம் அவரால் நன்கு பராமரிக்கப்பட்டது. ஆனாலும் அன்று ஏறத்தாழ இருண்டு போயிருந்த திருத்துறைப்பூண்டி நூலகத்துடன் முதல் காதல் போல ஒரு உணர்வுப்பூர்வமான ஒட்டுதல் உருவாகிவிட்டது!

நானே மேலே சொல்லி இருக்கும் உணர்வுகள் நூலகத்தில் வாசிப்பவர்களுக்கு அன்றி பிறருக்கு புரிய வாய்ப்பில்லை. வாசிக்கும் பழக்கமே இல்லாத கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் வாசகர்களின் ஒரே துணை நூல்கள்தான். நாம் வாசிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருப்பது ஒரு அக நிறைவினை அளிக்கும். என் நண்பர்‌ அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமர்ந்து வாசிப்பது அவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம் என்று சொல்லி இருக்கிறார். நான் அவர்மேல் பொறாமை கொண்ட ஒரே தருணம் அதுதான். அங்கு அமர்ந்து படிப்பதற்காகவே இரண்டு நாட்கள் சென்னை செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பருக்கு நான் சொல்லவிருக்கும் அனுபவம் நிகழ்ந்தது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இல்லை. இனி‌ அந்த அனுபவம்.

பெரிய நூலகங்களில் டிஎன்பிசி நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியில் இருப்பவர்களுக்கென தனியாக ஒரு பகுதியை ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். ஆனால் நிறைய பேர் போட்டித்தேர்வு தயாரிப்புகென நூலகத்திற்கு வருவதால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மட்டுமல்லாது மொத்த நூலகத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் இன்று எந்த நூலகத்துக்குச் சென்றாலும் இவர்களே மிகுதியாகக் கண்ணில் படுவார்கள். என் நண்பர் பொது வாசிப்புப் பிரிவில் அமர்ந்து வாசித்திருக்கிறார். இரண்டு முறை அவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்திருக்கிறது. அலைபேசியை சைலண்ட்டில்தான் போட்டிருக்கிறார். அழைப்பு வந்ததால் எழுந்து வெளியே சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்திருக்கிறார். நூலக அலுவலர் ‘இப்படியெல்லாம் போயிட்டு போயிட்டு வரதுன்னா உள்ள வராதா’ என்று சொல்லி இருக்கிறார். நண்பரும் பதிலுக்கு ஏதோ சொல்லி இருக்கிறார். தவறாகவோ மரியாதைக் குறைவாகவோ ஒரு வார்த்தையும் நண்பர் பிரயோகிக்கவில்லை. ‘இது பொதுப்பிரிவுதானே , அந்த மாதிரியான கட்டுப்பாடுகள் எல்லாம் நீங்கள் விதிக்க முடியாது’ என்பதைத்தான் மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார். நண்பரைத் தவிர உட்கார்ந்திருந்த அனைவரும் போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள். முதலில் அவர்கள் அங்கு வந்து அமர்ந்து பயிற்சி எடுப்பதே சரி கிடையாது.‌ அவர்கள் கைகளில் வைத்திருப்பது தங்களுடைய சொந்த புத்தகம். நூலகத்தில் உள்ள நூல்களைத்தான் அங்கு அமர்ந்து படிக்கலாம். நண்பர் இதை நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அவர் அதை நோக்கித்தான் செல்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு நூலக அலுவலர் மிகுந்த நாடகத்தனத்துடன் நண்பரிடம் சண்டைக்கு ஏறி இருக்கிறார். அங்கு படித்துக் கொண்டிருந்த போட்டித் தேர்வர்களும் நூலக அலுவலருடன் இணைந்து கொண்டிருக்கின்றனர். ஏறத்தாழ பத்து பேர் நண்பரை சூழ்ந்து கொண்டு அவரைத் திட்டத் தொடங்கி இருக்கின்றனர். எல்லோரும் அவரை ஒருமையில் பேசி இருக்கின்றனர். நண்பர் வேதனையுடன் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். இருபது வருடங்களாக தீவிரமாக வாசிப்பவர் வாசிப்பு வாசனையே இல்லாத மூடர்களால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

நூலக அலுவலர் மற்றும் போட்டித் தேர்வர்கள் கோணத்தில் யோசித்தால் அவர்கள் பேசியது அச்சத்தால் என்பது விளங்கும். உரிமை இல்லாத ஒன்றை நிலைநாட்டுவதற்காக கும்பலாக சேர்ந்து கொண்டு வன்முறையில் ஈடுபடுவது மனிதர்களின் இயல்புதான்.

என் நண்பர் சொன்னார்.‘நான் ஒரு வார்த்த தப்பா பேசிருந்தா அடிவாங்கிட்டுதான்டா வந்திருக்கணும’போட்டித்தேர்வுக்கு பயிற்சி செய்யும் ஒரு இளைஞன் நண்பரிடம் இப்படிக் கேட்டிருக்கிறான்.

‘நீங்க சும்மா ஃபன் பண்ணதான லைப்ரரி வந்தீங்க. நாங்கெல்லாம் கஷ்டப்பட்டு பரீட்சைக்கு படிக்கிறோம்’

என் நண்பர் ரொம்பவும் வேதனைக்குள்ளானது இந்த வரியால்தான். அதாவது பரீட்சைக்கு படிப்பதைத் தவிர வேறு ஏதாவது வாசிப்பவர்கள் அனைவரும் ‘ஃபன்’ பண்ணுவதாக அந்த இளைஞன் நினைக்கிறான். அவன் மட்டுமல்ல‌. தமிழகத்தின் பொது மனநிலையே அதுதான். தமிழர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் என்றொரு பிரச்சாரம் ரொம்ப நாளாக இங்கு செய்யப்படுகிறது. கண் விழித்துப் படிக்கும் பிள்ளையை டீ போட்டு கொடுத்துவிட்டு கனிவுடன் அம்மாவோ அப்பாவோ பார்த்து நிற்கும் காட்சி நம்மை நெக்குருகச் செய்வது.‌ உண்மையில் நாம் கல்வியை அவ்வளவு முக்கியமென நினைக்கிறோமா?‌ நம்மைப் பொறுத்தவரை கல்வி என்பது வேலைக்குப் போகவைக்கும் ஒரு கருவி. அதனால் படிப்பு என்பதே நம்மைப் பொறுத்தவரை பரீட்சைக்கு படிப்பதுதான். தன் ஊரின் வரலாறு என்ன, தன்னைச் சுற்றி நிகழும் கலைகள் எவை, மனித உறவுகளின் சிடுக்கான தன்மைக்கு என்ன காரணம், அதிகாரம் எப்படி செயல்படுகிறது, அறிவியல் முன்வைக்கும் இயற்கை விசைகள் எவை, ரசவாதம் என்றால் என்ன என்றெல்லாம் தேடுவது ‘வெட்டிவேலை’.

‘இருபது வயதில் அய்யேயெஸ் ஆனவர்’ என்று நாம் தலைப்புச் செய்தி போடுவோம். ஆனால் அந்தச் செய்தியின் அபத்தம் நமக்கு உரைப்பதில்லை. இருபது வயதில் ஒருவன் அரசாங்க வேலைக்கு போயிருக்கிறான். இதில் ஒரு இளைஞன் முன்னுதாரணமாகக் கொள்ள என்ன இருக்கிறது? வீட்டைப் பூட்டிக் கொண்டு ‘கடுமையாக பயிற்சி’ எடுத்தால் தேர்வுகளில் வென்றுவிட முடியும். இருபது வயதில் அய்யேயெஸ் ஆனவனிடம் உங்கள் ஊரில் உள்ள ஒரு எழுத்தாளரின் பெயரை அல்லது கலைஞனின் பெயரை கேட்டால் அவனுக்குத் தெரியுமா?‌ முதலில் அவனுக்கு அவன் ஊரைத் தெரியுமா? தெரிய வேண்டிய அவசியமில்லை. பிழைப்புக்காக அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு எல்லோரும் ஒரு வேலைக்குப் போகிறோம். யுபிஎஸ்சி தேர்வும் அவ்வாறு பிழைப்பதற்கான ஒரு வழி. அதில் பெருமைப்படவோ சிறுமை கொள்ளவோ ஒன்றுமில்லை.

ஆனால் நம்மூரில் கல்விக்கும் பயிற்சிக்குமே வித்தியாசம் தெரிவதில்லை. கல்வி தேடலில் இருந்து நிகழ்வது. அப்படி ஒரு தேடல் நிகழ ஒருவன் உள்ளுக்குள் ஒரு ஆளுமையாக இருக்க வேண்டும். ஆளுமைத்திறனின் அடிப்படை மதிப்பீடுகள். ஆனால் மதிப்பீடே இல்லாதவர்களைத்தான் நாம் திரும்பத் திரும்ப காண நேர்கிறது.நம் பொதுச்சூழலை பற்றிய அவதானிப்பாக இதைச் சொல்ல வேண்டி இருந்தது. நண்பருக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைக்கு இந்த மனநிலைதான் காரணம். அதாவது தேர்வுக்கு படிக்கிறவர்கள் நல்லவர்கள். எதிர்கால தேசத்தின் தூண்கள். ஆனால் ‘கதைபுக்’ படிக்கிறவன் ஃபன் பண்ணுவதற்காக நூலகத்துக்கு வந்திருக்கிறான். நூலகத்தை நாம் இவ்வாறுதான் விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே நாம் எவ்வளவு சீரழிந்து போயிருக்கிறோம் என்பதற்கான சான்று.

நூலகம் என்பது முதன்மையாக வாசகர்களுக்கானதுதான். சரியாகச் சொன்னால் ‘கதைபுக்’ படிக்கிறவர்களுக்கானதுதான். ஆனால் இன்று நூலகத்தை போட்டித்தேர்வர்களுக்கான இடமாக மாற்றி வைத்திருக்கிறோம்.இன்று நாம்‌ அனுபவிக்கும் விஞ்ஞானம் சார்ந்த வசதிகளை உருவாக்கிய அறிவியலாளர்கள் ,சமூகவியல் உரிமைகளை உருவாக்கிய தத்துவவாதிகள் சமூகத்தின் எதிர்காலத்தை பற்றிய கனவுகளை நம்மூள் விதைத்த கலைஞர்கள் எல்லாம் உருவானது நூலகத்தில் இருந்துதான். நூலகம் ஒரு சமூகத்தின் கலாச்சார மையம். நம் நூலகத்தில் எத்தகைய நூல்கள் இருக்கின்றன என்பதுதான் சமூகமாக நாம் எவ்வளவு பண்பட்டவர்கள் அல்லது அறிவிலிகள் என்பதை உலகுக்குச் சொல்லும்.

நூலகம் உண்மையில் அறிஞர்களுக்கான அறிவின் மேல் தாகம் கொண்டவர்களுக்கான இடம். தமிழகம் நூலகத்துக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம். அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்று முன்னாள் முதல்வர்கள் பெயரில் பிரம்மாண்டமான நூலகங்கள் இங்கு கட்டப்படுகின்றன. ஆனால் அரசாங்கங்கள் நூலகங்களுக்கு கொடுக்கும் அந்த முக்கியத்துவம் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதுவொரு பக்கம்.

இன்னொரு பக்கம். நண்பர் இதை என்னிடம் சொன்னதும் எனக்குள் எழுந்த உணர்வுகள் துக்கமும் ஆற்றாமையும் அதன் விளைவான கையாலாகாத கோபமும்தான். தமிழர்கள் அடிப்படையில் வாசிப்புக்கு எதிரானவர்கள். வாசிப்பு பற்றி எந்தத் தமிழரிடமும் பேசவே முடியாது. (ஒப்பிட தெலுங்கும் குஜராத்தியும்(சௌராஷ்டிரா) தாய்மொழியாகக் கொண்ட என் நண்பர்கள் பலரும் தமிழ் வாசிப்பில் ஆரவம் காட்டுகிறார்கள்.) ஆகவே தான் வாசித்த ஒரு நூல் பற்றி ஒரு வாசகர் இங்கு யாருடனும் பகிரந்து கொள்ளவே முடியாது. இரவு நேரத்தில் விபச்சாரம் செய்து சம்பாதிக்கும் ஒருவரைப்போல அச்சத்துடனும் இழிவுணர்வுடனும்தான் ஒரு தமிழ் வாசகர் வாழ்நாள் முழுவதும் வாழவே முடியும். இப்படியிருப்பவர்களுக்கு ஒரே புகலிடம் நூலகம் மட்டும்தான். ஒரு வாசகருக்கு தேவையான நூல்கள் அங்கு கிடைக்கின்றன. அடுத்ததாக தன்னைப்போல வாசிக்கக் கூடிய யாரையாவது சந்திக்கும் வாய்ப்பும் அரிதாகக் கிடைக்கக்கூடும். ஆனால் அங்கும் இப்படியான சிக்கல்கள் முளைக்கின்றன.‘பரீட்சைக்கு படிக்கிற பிள்ளை’ என்று நம்முடைய முட்டாள்தனமான அங்கீகாரம் பெற்றவர்களுடன்‌ ஒரு வாசகர் போராட முடியாது. உங்களுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால் தயவுசெய்து வாரம்‌ ஒருமுறையாவது நூலகத்திற்கு ஒரு அரைமணி நேரம் சென்று வாருங்கள். நூலகத்தை இந்த பரீட்சை கோஷ்டியிடம் முற்றாக நாம் இழந்துவிடக்கூடாது. தீர்வென்று எதையும் சொல்லத் தோன்றவில்லை. ஒரேயொரு கேள்வி மட்டுமே என்னிடம் இருக்கிறது. இதுபோல நூலகத்தில் அமர்ந்து தேர்வுக்கு படித்து இன்று நல்ல வேலையில் இருப்பவர்களில் ஆயிரத்தில் ஒருவராவது வேலைக்குப் போனபிறகு நூலகத்தை திரும்பியாவது பார்த்திருப்பார்களா? நூலகம் போட்டித் தேர்வர்களுக்கு உணவகம் போல. பசி தீர்ந்ததும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். வாசகர்களுக்கு அது வீடு!