சில வருடங்களுக்கு முன்புவரை எனக்கு பெரிய பெரிய நாவல்கள் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘கனவு’ போன்ற ரொமாண்டிக்கான வார்த்தைகளை நான் பயன்படுத்தியதே இல்லை! மேலும் ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டமிருக்கு கழுதை மேய்க்க என்ற பழமொழியையோடு தொடர்புடைய கட்டுரை என்பதால் ஆசை இருந்தது என்று எழுதுவதே சரி.சரி இப்போது அந்த ஆசை இல்லையா?

இந்த ஆசைகளை கடந்த காலத்தில் போல் சொருகி வைக்கும்படி இப்போது என்ன நடந்துவிட்டது என்று என் எழுத்துச் செயல்பாட்டின் மீது அக்கறை கொண்ட – அப்படி ஒரு மயிராண்டியும் என் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் – கண்ணுக்குத் தெரியாத ஏதாவது மயிராண்டி இப்படிக் கேட்கலாம் இல்லையா?கிளைக்கதை நாவலின் முன்னுரையிலேயே அதைச் சொல்லி இருப்பேன். நாவல் ‘கிளைத்துத்’தான் எழ முடியும். மரத்திலிருந்து கிளைகள் முளைப்பது போல. சிந்தனையில் இருந்து மெல்ல மெல்ல ஊறித்தான் நாவல் எழ முடியும். ஆனால் எனக்கு அப்படி சிந்தனையில் மூழ்கி இருக்கும்படியான சூழல் இல்லை.

நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை! எனக்கு மட்டுமில்லை. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கும் அது இல்லை. அதனால்தான் தமிழில் வெளியாகும் பெரும்பாலான நாவல்கள் வெறும் தகவல் குவியல்களாக உள்ளன. நாவல் தருணங்கள் இயல்பான வளர்சிதை மாற்றத்தை அடைய எழுத்தாளனின் சூழலும் அனுமதிக்க வேண்டும். அத்தகைய சூழல் இன்று இல்லை.

பாதைகளை நீயே உருவாக்கு! தடைகளை தகர்த்து எறி!

இப்படி சிலர் கூச்சலிடுகின்றனர். இந்த தன்முனைப்புக் கூச்சல்களுக்கு இந்தக் கட்டுரையை நான் எப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதுதான் பதிலாக இருக்க முடியும்.நான் காலையில் ஏழு நாற்பதுக்கு ரயில் ஏறினால்தான் ஒன்பதேகால் மணிக்குள் அலுவலகம் செல்ல முடியும். இரவு பதினொன்று அல்லது பனிரெண்டு மணிவரை வாசித்துவிட்டுப் படுத்தால் காலையில் ஆறு மணிக்கு எழலாம். இல்லையென்றால் நேரமாகிவிடும். அப்பா வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் திருமதிகுன்னத்தில் என்னை ரயிலேற்றிவிட வண்டியில் அழைத்துச் செல்வார். இந்தக் கட்டுரையை வண்டியின் பின்னே அமர்ந்து கொண்டு எழுதத் தொடங்கினேன். இந்தப் பத்திக்கு முந்தைய பத்திவரை ரயில் ஏறுவதற்கு முன் எழுதியது. இந்தப் பத்தி ரயிலில் கக்கூஸுக்கு எதிரே – சற்று நாற்றமடிக்கும் என்பதால் அங்கு அதிகமாக கூட்டம் இருக்காது – நின்று கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவதற்கு இவ்வளவு தன்முனைப்பு போதுமா அய்யா!

அதனால் இங்கு பிரச்சினை தன்முனைப்பு அல்ல. தொடர் சிந்தனை. இதைச் சொன்னால் ‘நீ வேலைக்குப் போகிறாய்?, மத்திய தர வாழ்வின் சொகுசுக்காகத்தானே நாயே?’ என்று ஒரு கோஷ்டி கடிக்க வரும்.

இவர்கள் எழுத்தாளன் என்றால் காந்திபோல வேட்டியை மட்டுமே சுற்றிக் கொண்டு அருகம்புல் சாறு குடித்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்! அதாவது எழுத்தாளன் தன் வாழ்க்கைத் தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும், எந்த வகையிலும் ஒரு சராசரி வாழ்க்கையை வாழக்கூடாது என்று எதிர்பார்ப்பவர்கள்.

இத்தகைய காந்தியக் கொடூர ஆலோசகர்கள், தன்னம்பிக்கை வெறியர்களையே திரும்பத் திரும்ப பார்த்து நான் கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தேன். ஏனென்றால் என்னதான் பெரிய வசதி வாய்ப்பாக வாழவில்லை என்றாலும் ‘கடைக்குட்டி’ என்பதால் நான் சற்று சொகுசாக இருந்தததாகத்தான் தோன்றுகிறது. சிறு வயதில் வீட்டு வேலைகள் என்று பெரிதாக எதுவும் செய்ததில்லை. வாசிப்பதற்கான சுதந்திரம் இருந்தது. எழுவதற்கு உகந்த சூழல் என்பது இத்தகைய ‘சொகுசு’தான் என்பது என் எண்ணம்.

நீங்கள் வெந்தழலில் வெந்திருக்கலாம் ஆனால் அந்த வெப்பத்தை அப்படியே கதையில் கொண்டுவர முடியாது. கதை கொஞ்சம் ‘டிரிக்கியான’ சமாச்சாரம். அது நம்முடைய எல்லா உணர்வுகளையும் நம்மையே சந்தேகப்பட வைப்பது. பொதுச் சமூகத்திற்கு ‘படுபாதகம்’ என்று தோன்றும் எதுவும் கதைக்குள் just like that வந்துபோகும். ரொம்ப உணர்ச்சிகரமான விஷயங்கள் என்று நம்பப்படுகிறவற்றை ‘ச்சீ’ என்று சொல்லிக் கடக்கும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன.

எங்கெங்கோ சுற்றுகிறேன். கதைத் தர்க்கத்துக்குள் சிந்திக்கவும் எழுதவும் நீங்கள் சற்று ‘சுதந்திரமாக’ இருக்க வேண்டும். உங்கள் அலுவலக விஷயங்கள் உங்கள் கனவுகளில் வரத் தொடங்கிவிட்டால் எழுத்தாளனாக நீங்கள் செத்துவிட்டீர்கள். அந்த லாஜிக் படி Of course நானும் செத்துவிட்டேன்.

இந்தச் சூழலில்தான் சாருவின் முதன்மை புனைவுப் பாத்திரமான கண்ணாயிரம் பெருமாள் என்னை ஈடேற்றுகிறார். எழுத்தாளனுக்கு எந்த உணர்வையும் விட சென்சிட்டிவிட்டி ரொம்ப ரொம்ப முக்கியம். (நுண்ணுணர்வு என்று எழுதலாம். அது ஏதோ பூச்சி மாதிரி ஒலிக்கிறது.) தன்னைச் சுற்றி இருப்பவை நடப்பவை சுற்றி இருக்கும் மனிதர்கள் தன்னை எப்படி எல்லாம் பாதிக்கிறார்கள் என்ற புரிதல் எழுத்தாளனுக்கு அவசியம். சென்சிட்டிவிட்டி இல்லாதவர்கள் எழுத்தில் அலங்காரமாக எதையாவது ஜோடித்து வைக்கலாம். ஆனால் அதில் ‘உயிர்’ இருக்காது.

எழுதும் கணத்தைவிட இந்த சென்சிட்டிவிட்டி மற்ற நேரங்களில் மிக மிக ஆபத்தான உணர்வு. உடல்நிலையைக்கூட மோசமாக பாதிக்கக்கூடியது. சென்சிட்டிவிட்டி அதிகம் கொண்டவர்களுக்குத்தான் சாமியார்கள் தேவைப்படுகிறார்கள் அல்லது ஏதாவது கொள்கை கோட்பாடு தேவைப்படுகிறது. சாமியார் இத்தகையவர்களுக்கு ‘ஞானம்’ வழங்குகிறார். கொள்கை கோட்பாடுகள் இத்தகையவர்களுக்கு ‘லட்சியவெறி’ ஊட்டுகின்றன. அதன்பிறகு இவர்கள் ஞானத்தையும் லட்சியவெறியையும் மற்றவர்கள் மீது வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் மனதளவில் ‘மொழுக்கட்டை’யாக மாறி இருப்பார்கள். உலகில் நடக்கும் எதுவுமே இத்தகையவர்களை பாதிக்காது. எதனாலும் பாதிக்கப்படாதவர்கள் எழுதுவது எப்படி அய்யா இன்னொருவரை பாதிக்கும்?

முந்தைய பத்தியை எழுதிக் கொண்டிருந்தபோது ரயில் திருவாரூரில் நின்றது. கக்கூஸ் அருகில் இருப்பது குறுகியவழி. ஏகப்பட்ட பேர் ஏறினார்கள். ஏகப்பட்ட பேர் இறங்கினார்கள். ஆனால் ஒரு நீலச்சட்டைக்காரர் வாசலருகிலேயே உட்கார்ந்திருந்தார். அழுக்குச் சட்டை. அழுக்கு உடம்பு. முதல் பார்வைக்கு குடித்திருப்பவர் போலத் தெரிந்தார். ஆனால் பிறகுதான் அவர் காலில் அடிபட்டு புண் கொதகொதவென்றிருப்பது தெரிந்தது. சாய்ந்துவிட்டார். எழச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். முந்தைய பத்தியை நான் எழுதிக் கொண்டிருந்தேன். இடையில் பிரியா கால் பண்ணினாள். அவளுக்கும் எனக்கும் எரிச்சல் ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு செவிலி பற்றி கோபமாகப் பேசினாள். அவள் கோபம் என்னிடமும் பற்றத் தொடங்கியது. அலைபேசியை வைத்தும் படபடப்பு அடங்கவில்லை. அப்போதுதான் இவர் உருண்டு கொண்டிருப்பதைப் பார்த்தேன். கைகொடுத்து தூக்கிவிடலாமா வேண்டாமா என்ற ஊசலாட்ட நிலை. அருவருப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் தூக்கிவிட்டேன். கைகொடுத்து நன்றி சொன்னார்.

அய்யா தயவுசெய்து யாரும் நான் எவ்வளவு பெரிய இளகிய மனங்கொண்ட மயிராண்டி என்று சொல்வதற்காக இதைச் சொன்னதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். சென்சிட்டிவிட்டி போட்டு படுத்தும் பாடு! ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு வண்டியில் ஒரு வேகத்தடையை கடக்கும்போது ஒரு நாய் அலறும் சத்தம் கேட்டது. அப்போது ஏதோ ஞாபகத்தில் வந்துவிட்டேன். நான்தான் இடித்தேனோ என்று இன்றுவரை உறுத்துகிறது. இந்த உறுத்தல், இளகல், எரிச்சல், வெறுப்பு, காழ்ப்பு, பொறாமை, பயம், சோர்வு, செயல்வெறி,குற்றவுணர்வு எல்லாமும் புனைவெழுதத் தேவை. இதோடு மொழியை கூராக்க பேய்த்தனமாக படிக்கவும் வேண்டும்.

எழுத்துக்காக இப்படி வாழும் ஒருவனுக்கு எழுத்தின் வழி என்ன கிடைக்கும்?ஆன்மநிறைவு? அதெல்லாம் ஒரு மயிரும் இல்லை. எழுதும்போது மட்டும்தான் எழுத்தாளனால் நிறைவு கொள்ள முடியும். போதை, பலவீனம், அடிக்ஷன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் எழுத்தாளன் எழுதாமல் வாழ முடியாது. இணையம் வருவதற்கு முன் ஒரு பதின் வயதுப் பையனுக்கு கவர்ச்சி நடிகை என்னவாக இருப்பாளோ அப்படித்தான் எழுத்தாளனுக்கு மொழி. அந்த அலங்காரியின் ஜாலங்களில் மயங்கி மயங்கி அதற்கு வெளியே ஒன்றுமில்லை என்றே அவன் நம்பத் தொடங்கிவிடுவான்.

ஆனால் பாருங்கள் நண்பர்களே! துரதிர்ஷ்டவசமாக எழுத்துக்கு வெளியேதான் எல்லாமும் இருக்கிறது. வெற்றி பணம் புகழ் அதிகாரம் எல்லாமும். இந்த சந்ததிகளுக்காக அல்லது குறைந்தபட்சம் அவன் பெற்ற பிள்ளைகளுக்காக எழுத்துக்கு வெளியே இருப்பவற்றில்தான் அவன் உழல வேண்டியிருக்கிறது. ஏறத்தாழ உடல் முழுக்க கண்ணுக்குத் தெரியாத ஆனால் ரணமான புண்களுடன் கூட்டத்தில் நடப்பது போன்றதுதான். பிறர் எழுத்தாளனைப் பார்த்து ‘பார் நாங்கள் கூடத்தான் உரசிக் கொள்கிறோம். நீ ஏன்டா நாயே லேசாக உரசியதற்கு இப்படிக் கத்துகிறாய்’ என்று கேட்கிறார்கள்!

சென்சிட்டிவிட்டியை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது? சுலபம். கண்ணாயிரம் பெருமாளைப் பாருங்கள்!

ஜோடிப் புறாவை எங்கே காணோம், மாயமான் வேட்டை, நாகூர் தம்ரூட்டும் ஆட்டையாம்பட்டி முறுக்கும் என்று தொடர்ந்து சாருவின் புனைவுகளாகவே வாசிக்கிறேன். சாருவின் எழுத்து பற்றி புகழ்ந்து பேசினால் என்னைவிட தங்களுக்கு இலக்கிய போதம் அதிகம் இருப்பதாக நம்பும் நண்பர்கள் ‘இலக்கிய வடிவம்’ பற்றிப் பேசுகிறார்கள்.

நம்மூர் அளவுக்கு வேறெங்காவது இந்த ‘வடிவவெறி’ இருக்குமா என்று தெரியவில்லை! சிறுகதை வடிவம் நாவல் வடிவம் எல்லாம் எழுத்தாளன் கவலைப்பட வேண்டிய சங்கதி. அதோடு ஆரம்பநிலை வாசகர்களுக்கு எப்படி ஒரு சின்னப் பையனுக்கு பேண்ட் போட கற்றுக் கொடுப்போமோ அந்த மாதிரி ‘தம்பி இன்னின்ன மாதிரி எல்லாம் இருந்தால் அது சிறுகதை, இன்னின்ன மாதிரி எல்லாம் இருந்தால் அது நாவல்’ என்று சொல்லிக் கொடுப்பதற்குத்தான் வடிவம் படிவமெல்லாம் தேவைப்படும். தேர்ந்த வாசகர்களுக்கு அது அவசியமில்லை. அதோடு ஒரு எழுத்தாளன் என்ன எழுதினாலும் எவ்வளவு எழுதினாலும் அது எதுவும் ‘தொலைந்து’ போகும் சாத்தியமே இல்லாத இந்தக் காலகட்டத்தில் எதற்கு கடைச் சங்கத்தை கடல் கொண்டபோது தொகை நூல்களை நீந்தி எடுத்து வந்து கரை சேர்க்கும் கதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை.

சிறந்தது என்பதை வாசக அனுபவம் முடிவு செய்யட்டும். நாமே இதெல்லாம் நாவல் வடிவம் கொண்ட புறநானூறுகள் இதெல்லாம் சிறுகதை வடிவம் கொண்ட அகநானூறுகள் என்று தொகுக்க வேண்டாம்.

கட்டுரை எங்கோ போய்விட்டது. விஷயத்துக்கு வருகிறேன். நேற்று ரீடிங் டிராக்கர் குழுவில் சாருவின் புனைவுகள் குழந்தைத்தனமானவை என்று எழுதி இருந்தேன். குழந்தைகளுக்கு நல்லது கெட்டது தெரியாது. இரண்டே விஷயங்கள் தான் தெரியும். ஒன்று அதை மகிழ்ச்சியடையச் செய்வது. இன்னொன்று அதை எரிச்சலடையச் செய்வது. ஆனால் இரண்டு உணர்வுகளும் கூரானவை. இதைச் சொன்னபோதுதான் சென்சிட்டிவிட்டி பற்றியும் யோசித்தேன்.வரும் காலங்களில் ஒரு எழுத்தாளன் தன்னுடைய சென்சிட்டிவிட்டி மரத்துப் போகும்படியான இன்னும் ஏராளமான சூழல்களை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே நீங்கள் நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தால் பிரச்சினை இல்லை. உன்னதமானவற்றை எழுதுவதாக பாவலா காட்டிக் கொள்ளலாம். ஆனால் இனிவரும் காலங்களில் எழுத்தாளன் பணக்கார கூடாரங்களில் இருந்து வரமுடியாது. அப்படியே வந்தாலும் அது ‘வாழ்க்கைனா என்னா தெரியுமா’ என்ற டப்பாச் சத்தங்களாகவே இருக்கும். இன்றைய தொழில்ச்சூழல், பணிச்சூழல், குடும்பச்சூழல், சமூகச்சூழலை எந்த கொள்கை கோட்பாட்டையும் ஞான மார்க்கத்தையும் சார்ந்து நிற்காமல் இந்த சந்ததிகளில் ஏற்படும் மாற்றங்கள் தன் அகத்தை பாதிக்கும் விதத்தை பிரதானப்படுத்தி எழுதுவதுதான் உண்மையில் வாசகருடன் உரையாடும் எழுத்தாக இருக்க முடியும்.அப்படி எழுதுவதற்கு சென்சிட்டிவிட்டி மிக மிக அவசியமான உணர்வு.

எழுத்தாளன் ஒரே நேரத்தில் சொகுசுப்‌ பேர் வழியாக – ராஜாவூட்டு கன்னுக்குட்டியாக – தன்னைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிப்பவனாக அதனால் பாதிக்கப்படுகிறவனாக அதேநேரம் தன் வாழ்க்கையை அழித்துக் கொள்ளாதவனாகவும் இருக்க வேண்டும். அந்த வித்தையை கற்றுக் கொள்ள சாருவை எழுத்தாளர்கள் நிச்சயமாக வாசிக்க வேண்டும். சாரு எழுத்தாளர்களின் எழுத்தாளர்.