முன்குறிப்பு 1: இந்தக் கதை என் கனவில் வந்தது. நான் கதை எழுதுவதைக் கைவிட்டு பல வருடங்களாகின்றன. முன்பெல்லாம் என் கனவில் வரும் கதையை அப்படியே எழுதிவிடுவேன். அவை பிரசுரமாகி புகழ் பெறவும் செய்தன. ஆனால் சமீப காலமாக என்னால் எழுத முடியவில்லை. அதோடு என் மொழியும் எனக்கு மறந்து கொண்டே வருகிறது. மொழியில் உள்ள சொற்கள் வாக்கிய கட்டுமானம் எல்லாம் நினைவில் இருக்கிறது. ஆனால் எழுதினால் என் மொழி அர்த்தம் பெற மறுக்கிறது. ‘நாய்குட்டியுடன் என் மகன் விளையாடிக் கொண்டிருந்தான்’ என்று எழுதும்போது அந்த வரியில் நாய்க்குட்டியோ மகனோ விளையாட்டோ இல்லை. அந்த வரி ஒரு சவம் போலக் கிடந்தது. என்னுள் என் மொழியின் சடலம் மட்டுமே கிடக்கிறது. அதனால் இக்கதையை நான் சொல்லச் சொல்ல வேறொரு எழுத்தாளன்தான் எழுதினான். அவனுடைய தாய்மொழி தமிழ்.
முன்குறிப்பு 2: இக்கதையை என் நண்பர் என்னிடம் அலைபேசியில் சொன்னார். நான் குரல்பதிவை செய்கிறேனா என்று இரண்டு முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் கதையை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். முழுக் கதையையும் கேட்ட பிறகு என் இஷ்டப்படிதான் கதையை எழுத முடியும் என்று நண்பரிடம் சொல்லிவிட்டேன். அவரும் சரி என்றார். இக்கதையில் இடம்பெறும் பெயர்கள், சம்பவங்கள் எல்லாமும் கற்பனை. எங்கும் எக்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை – சுரேஷ் பிரதீப்
1
அலைச் சத்தம் காதை அறைய விழித்துக் கொண்டேன். வழக்கம்போல வீட்டில்தான் இருக்கிறேனா என்று சந்தேகம் தட்டியது. வழக்கம்போலவே அகல்யாவை என் மொழியில் அழைக்க எண்ணி கட்டுப்படுத்திக் கொண்டு எங்கள் நாட்டின் தேசிய மொழியில் அழைத்தேன்.
வந்தாள்.
பார்த்தேன்.
அவளுக்குப் புரிந்துவிட்டது.
‘ஐயோ சாரிப்பா. படு’ என்று சொல்லி என்னை அணைத்துக் கொண்டாள். அவள் இடப்புறம் நானும் வலப்புறம் மகளும். என் தலையை வருடும் அவள் கையில் ஆதூரமும் மகளின் உடலை வருடும் கையில் அனிச்சையும் இருந்தன. என் மார்புத் துடிப்பு குறைவதை சமநிலைப் படுவதை அகல்யா அவள் மார்பின் துடிப்பிலிருந்து உணர்ந்து கொண்டாள்.
‘போதுமா?’
‘ம்’
அகல்யா எழுந்து சென்று பிறகும் நான் படுத்துத்தான் கிடந்தேன். என்னால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு என் மொழியை மறைத்து அவளிடம் பேச முடியும்?
எழும் போதெல்லாம் என்னுள் ஊறும் பதற்றத்துக்கு என் மொழியை மறைப்பதுதான் காரணம் இல்லையா? ஆனால் அதுகூடத் தெரியாமல் எழுந்ததும் நடுங்கும் என் உடலை அகல்யா சமநிலைக்கு கொண்டு வருகிறாள்.
நான் என் மொழியில் பேசக்கூடாது என்று முடிவெடுத்த போது அது அவ்வளவு கஷ்டமாக இல்லை. அப்பாவுக்கு என் மொழி மீது இருந்த பற்றே என்னை எங்கள் நாட்டின் தேசிய மொழியை கற்றுக் கொள்ள வைத்தது. நான் தேசியமொழியை கற்றுக் கொண்டதொடு பள்ளிக் காலத்திலேயே அம்மொழியில் கவிதை எழுதவும் கற்றுக் கொண்டேன். அப்பாதான் தேசிய மொழியில் நான் எந்தத் தேர்வும் எழுதக்கூடாது எந்தச் சான்றிதழும் பெறக்கூடாது என்று சொல்லிவிட்டார். தேசியமொழிச் சான்றிதழ் இல்லாததாலேயே அரசுத்துறையில் எனக்கு கிடைக்க வேண்டிய பதவியைவிட ஒருபடி கீழான பதவியில் அமர நேர்ந்தது.
ஒருவகையில் அதுவும் நல்லதாய் போயிற்று. அதனால்தான் அகல்யாவை சந்தித்தேன். அவளுக்கு தாய்மொழியும் தேசியமொழியும் ஒன்றுதான். என்னையும் அகல்யா அப்படியே நினைத்துவிட்டாள். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாட்டின் தென்மூலையில் இருந்த எங்கள் மாகாணத்தில் நான் அகல்யாவை மணம் புரிந்து கொண்ட நாட்களில் எங்கள் மொழி செத்துக் கொண்டிருந்தது. அதனால் அகல்யாவை எளிதாக நம்ப வைக்க முடிந்தது. அம்மாவின் சம்மந்தம் பெற்று நான் என்னை அநாதை என்று சொல்லிக் கொண்டு அகல்யாவை மணமுடித்தேன்.
பாப்பா இப்போது பேசத் தொடங்கிவிட்டாள். வந்து ஆசையாகப் பேசுகிறாள். என் மொழியில் அவளைக் கொஞ்சி விட மனம் துடிக்கிறது. ஆனாலும் அச்சம். இன்னும் எவ்வளவு காலம் நான் இவ்வளவு கவனத்துடன் வாழ்வது?
ஒவ்வொரு நாளும் என் மொழியை பேசாதிருப்பது ஒவ்வொரு நாளும் அப்படி பேசாது போகக் காரணமான நாளை அல்லவா நினைவூட்டுகிறது?
2
அன்று ஞாயிற்றுக்கிழமை. நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். நான் எழுந்தபோது அடுப்படியில் இருந்து கோழிக் குருமாவின் வாசம் வந்து கொண்டிருந்தது. மணி ஒன்பதாகிவிட்டிருந்தது. அப்பா ஸ்டார் பிராய்லர்ஸ் கடைக்கு என்னை சைக்கிளில் வைத்து அழைத்துக்கொண்டு போவார். வண்டி வாங்கிய பிறகு வண்டியில் பின்னே அமரவைத்து அழைத்துப் போவார். அவர் தலையில் இருந்து வரும் எண்ணெய் வாசம் எனக்குப் பிடிக்கும். கோழிக்கறி வாங்குவதோடு எனக்குப் பிடித்த மசால்வடை, நிலா ஹோட்டல் பரோட்டா எல்லாம் வாங்கித் தருவார். ஆனால் என் முகத்தில் லேசாக மீசை அரும்பத் தொடங்கியதிலிருந்து என்னிடமிருந்து மெல்ல அவராகவே விலகிப்போனது போலிருந்தது. எனக்கு தேசிய மொழி மீதிருந்த ஈடுபாடு கூட அந்த விலகலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன்.
‘அப்பா எங்கம்மா’ என்று சாப்பிட உட்கார்ந்தபோது கேட்டேன்.
அப்பா அன்று எங்கே போயிருந்தார் என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு ஆயிரம் வருட வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது சோர்வு தரக்கூடியது. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.
கடலுக்கு அப்பால் இருந்த நாட்டின் வடக்கிலும் எங்கள் நாட்டின் தெற்கிலும் நாங்கள் ஒரே மொழியைப் பேசினோம்.இரண்டு நாடுகளும் எங்கள் மொழியை இரண்டாம் பட்சமாகக் கருதின. கடலுக்கு அப்பால் இருந்த நாட்டில் அடிக்கடி சண்டை மூண்டதற்கு இது காரணமா என்று தெரியவில்லை. ஆனால் அங்கு அடிக்கடி சண்டை நடந்தது. நாங்கள் குடியிருந்த கோடிவனத்தில் இருந்த கழுகுப்பாறையில் ஏறிப் பார்த்தால் கடலுக்கு அப்பால் இருந்த நாட்டின் விளிம்பினைப் பார்க்க முடியும் என்பார்கள். எனக்கு அதெல்லாம் தெரிந்தது இல்லை. ஆனால் கோடிவனத்திலிருந்து கடலுக்கு அப்பால் இருந்த நாடு கொஞ்ச தூரத்தில்தான் இருந்தது. எங்கள் வீட்டிற்கு சில சமயம் இரவுகளில் வந்து அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பவர்கள் அந்த நாட்டினர் என்று எனக்குப் பதினான்கு வயதானபோதுதான் தெரிய வந்தது. அப்பாவும் அம்மாவும் நான் தூங்கிவிட்டேனா என்று உறுதி செய்து கொண்ட பிறகுதான் அவர்களிடம் பேசினார்கள். எங்கள் உறவுக்காரர்களும் இப்படி இரவு நேரங்களில் வருவது சகஜம் என்பதால் எனக்கு முதலில் வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை.
ஒருநாள் தூக்கத்திற்குள்ளேயே அவர்கள் பேசுவது கேட்டது. எங்கள் மொழியில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பாவும் அம்மாவும் பேசுவதைத் தவிர மேலுமிரு குரல்கள் கேட்டன. ஒன்று ஆண்குரல். மற்றொன்று பெண்குரல். அக்குரல்களின் நளினம் உறக்கத்தில் கூட என்னை ஈர்ப்பதை உணர்ந்து கொண்டே உறங்கிக் கொண்டிருந்தேன்.
உடன் படிக்கும் சரஸ்வதியும் சமூக அறிவியல் பாடமெடுக்கும் வைதேகி டீச்சரும் கனவுகளில் புகுந்து என்னை அலைகழித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை.அவர்கள் கனவில் வரும்போது என்ன மாதிரியான ஆசுவாசத்தை மனம் அடையுமோ அதே ஆசுவாசம் பாதி விழிப்பும் பாதி கனவுமாக கழிந்த அந்த நாட்களில் ஏற்பட்டது. அன்று நான் எழுந்து அமர்ந்து கொண்டேன். அவர்கள் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நான் நடுவீட்டில் இருந்த கட்டிலில் படுத்துக் கிடந்தேன். பாதி உறக்கத்தில் இனிமையாகத் தெரிந்த அவர்களின் இருப்பு இப்போது எனக்கு அச்சத்தைத் தரத் தொடங்கியது.
எங்கள் நாட்டின் அரசுத் தரப்பு கடலுக்கு அப்பால் இருந்த நாட்டின் அரசினை சில சமயமும் புரட்சிக் குழுக்களை சில சமயமும் மாறி மாறி ஆதரித்துக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால் நான் பிறந்த பிறகு எங்கள் நாடு புரட்சிக் குழுக்களுக்கு முழுமையாக எதிராக மாறிப் போயிருந்தது. மொழியை வைத்து எங்களை அவர்கள் மாசுபடுத்துவதாக எங்கள் நாட்டின் அரசு கருதத் தொடங்கிவிட்டது. இதெல்லாம் அன்றெனக்குத் தெரியாது. ஆனால் கடலுக்கு அப்பால் உள்ள நாட்டினர் ‘கெட்டவர்கள்’ என்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் நான் அரசு வேலைக்குப் போவதில் சிக்கல் ஏற்படும் என்றும் நான் புரிந்து வைத்திருந்தேன். அது துல்லியமான உண்மை.
மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது ஒருநாள் அப்பா வீட்டில் இருந்தபோது அவர் காதுபடவே ‘நான் நல்லா இருக்கணும்னு கொஞ்சமாவது உங்களுக்கு நெனப்பிருந்தா கண்டவங்களையும் வீட்டுக்குள்ள விடாதீங்க’ என்று சொன்னேன்.
அதற்கு அடுத்த ஞாயிறில் இருந்துதான் அப்பா என்னை கறி வாங்க அழைத்துச் செல்வதை நிறுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அதன்பிறகு எங்கள் மொழியை எங்களைவிட பத்து மடங்கு இனிமையாகப் பேசும் கடலுக்கு அப்பால் உள்ள நாட்டினர் யாரும் எங்கள் வீட்டுக்கு வரவில்லை.
3
ஒரு விஷயத்தில் நமக்கு ஆர்வம் இல்லாதுபோனால் அது அவ்வளவு பெரிய விஷயம் என்றாலும் நமக்கு எவ்வளவு அருகில் நடந்தாலும் அதை நாம் பொருட்படுத்துவதே இல்லை என்று இன்று படுகிறது. அப்பா இறந்துபோன ஞாயிற்றுக்கிழமை எங்கள் குடும்பத்தை நேரடியாகத் தாக்கும்வரை எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம்கூட இல்லாத மௌனத் தோட்டத்தில் நிகழ்ந்த எதையும் நான் கண்டுகொள்ளாதிருந்தது இன்றுவரை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
மௌனத்தோட்டம் அப்பா இறந்தவன்று அந்தப் பெயரில் அழைக்கப்படவில்லை. எங்கள் வீட்டிலிருந்து தெற்கு திசையில் சென்றால் கொஞ்ச தூரத்தில் கடல் வந்துவிடும். அலையே இல்லாத கடல். சதுப்பு நிலம் போலத் தோன்றும். கடலோரமாக புதர்ச் செடிகள் மண்டிக் கிடக்கும். எனக்கு அச்செடிகள் ஒவ்வாமையை அளித்தன. ஆனால் மௌனத்தோட்டம் அப்படி இல்லை. அந்நிலத்தின் பெரும் பகுதியில் நெல் விளைந்தது. மீதி நிலம் மாந்தோப்பு, தென்னந்தோப்பு, கொய்யா மரங்கள், வாழை என் சீராக பிரிக்கப்பட்டிருந்தது. அந்நிலத்தை அண்ணாமலைச் செட்டியார் என்ற வணிகர் வாங்கி இருந்தார்.
அண்ணாமலைச் செட்டியார் வெளிநாட்டில் வியாபாரம் செய்து சம்பாதித்ததாகச் சொல்வார்கள். ஆனால் அவருக்குப் பணம் வந்தது கடலுக்கு அப்பால் உள்ள நாட்டிலிருந்து என்றொரு பேச்சும் உலவியது. விதைப்பு இல்லாத நாட்களில் செட்டியார் தோப்பில் – அன்று அந்தப் பெயரில்தான் மௌனத்தோட்டம் அழைக்கப்பட்டது – கூட்டம் ‘ஜேஜே’ என இருக்கும். செட்டியார் தோப்பு ஒரு முக்கியமான சந்திப்பு மையமாக இருந்தது. தென்னந்தோப்பில் கல் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. அங்கு ஒரு நூலகமும் இருந்தது. ஆனால் அதில் ஒரேயொரு தேசியமொழி நூலினைக்கூட பார்க்க முடியாது. ஆனாலும் எனக்கு செட்டியார் தோப்பு பிடித்திருந்தது. எங்கள் வீட்டிலிருந்து வடக்காகத் திரும்பி முகப்பாறுக்கு எதிர்திசையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று முகப்பாற்றுப் பாலத்தைக் கடந்தால் செட்டியார் தோப்பு வந்துவிடும். தோப்பிற்குள் வண்டியில் செல்ல முடியாது. முகப்பாற்றின் மீது இரண்டு பேர் கைகோர்த்து நடக்கும் அளவு மட்டுமே அகலம் கொண்ட ஒரு நடைப்பாலம் இருக்கும். அந்தப் பாலத்தில் ஏற இருபது படிகள். பாலத்தில் இருந்து பார்க்கும்போது முகப்பாறு இன்னும் ஆழத்தில் தெரியும்.
தோப்பினை பராமரிப்பவர்கள் எங்கள் மொழியை சற்று வித்தியாசமாகப் பேசுவதாக எனக்குத் தோன்றும். ஆனால் அவர்களில் யாரும் எங்கள் மீது கோபப்பட்டதே இல்லை. காய்ப்பு நாட்களில் மாவடுவினை உடைத்து – வெட்டினால் அவ்வளவு ருசிக்காது – உப்புபோட்டு மண் சட்டிகளில் வைத்திருப்பார்கள். நுங்கு,இளநீருக்கு மட்டும் கொஞ்சமாக காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். காசு இல்லை என்று தலையைச் சொறிந்தால் சும்மாவும் கொடுத்து விடுவார்கள்.
கல்லூரி முதல் வருடம் சேர்ந்தபோதுதான் முதல் முறையாக நான் அம்மா அப்பாவை விட்டுத் தனியே தங்கினேன். நான் படித்த கல்லூரியில் தேசிய மொழி தீவிரமாக பின்பற்றப்பட்டது. உண்மையில் எங்கள் நாட்டின் தேசிய மொழி என் மொழி பேசும் மக்கள் எதிர்த்தது துரதிர்ஷ்டவசமானதுதான். எங்கள் மக்கள் எங்கள் நாட்டின் தேசிய மொழியை எதிர்ப்பதால் அவர்கள் எந்த அளவுக்குப் பின்னோக்கிப் போகிறார்கள் என்று அவர்களுக்கே புரியாமல் இருந்தது. எங்கள் நாடு அனைத்து மக்களையும் சமமாக நடத்தவே நினைத்தது. அப்படி சமமாக நடத்த அனைத்து மக்களுக்கும் ஒரு இணைப்பு மொழி அவசியம். அந்த இணைப்பு மொழி ஏற்கனவே பெரும்பாலானவர்களால் பேசப்படுவதாக இருக்க வேண்டும். எங்கள் தேசியமொழி அப்படித்தான் இருந்தது. அது அழகும் மென்மையும் நிறைந்த மொழி. எங்கள் மொழி அளவுக்கு எங்கள் தேசிய மொழியில் போலித்தனம் கிடையாது. அதோடு எங்கள் மொழியில் போலியாக துருத்தித் தெரியும் ஒரு ஆண் இயல்பு எங்கள் தேசிய மொழியில் இல்லை. எவ்வளவு மென்மையான குரலில் பேசினாலும் எங்கள் மொழி ஆண்மை ஓங்கியதாகவே ஒலித்தது. ஆனால் எங்கள் தேசியமொழியோ குழைந்து துவண்டது.
என் மகள் சின்ன சின்ன வாக்கியங்களில் பேசுகிறாள். அவள் மழலைக் குரலில் தேசியமொழியை கேட்பது எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும். ஆனால் நான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் தேசிய மொழியை சரளமாகப் பேசினாலும் கல்லூரியில் என் மொழிதான் என் அடையாளமாக இருந்தது. தேசியமொழிப் பேசுகிறவர்கள் என் மொழி பேசுகிறவர்களை தேசவிரோதிகள் போலவே பார்த்தனர். ஆனால் அதெல்லாம் அப்பா இறந்த தினத்திற்கு பிறகு நடக்கத் தொடங்கியது. கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் எனக்கு சோறு இறங்கவில்லை. வீட்டு நினைவாகவே இருந்தது. அம்மாவுடனேயே இருந்துவிடலாம் என்று தோன்றியது.
கல்லூரி வரும்வரை என் அம்மாவை நான் பொருட்படுத்தியதே இல்லை. அப்பாவுடன்தான் சண்டைக்கு நின்றேன். அவர் சொல்லும் ஒவ்வொன்றையும் எதிர்க்க வேண்டும் என்று மனம் துடித்துக் கொண்டிருந்தது.
எங்கள் மொழி அவருக்கு உணர்வுப்பூர்வமானது. ஆனால் நான் அவரை இனவாதி என்றேன். கற்பனைகளில் வாழ்கிறவர் என்று பழித்தேன். பெரிய சவால்கள் ஏதும் இல்லாத வாழ்வை வாழ்ந்தவர் என்பதால் அவருக்கு இந்த மொழிவெறி பிடித்திருக்கிறது என்று பழித்தேன். இதையெல்லாம் நான் அம்மாவிடம்தான் பாதி கேலியாகவும் பாதி கோபமாகவும் சொல்வேன். ஆனால் இதெல்லாம் அவர் காதுக்குப் போய்விடும் என்று எனக்குத் தெரியும். என்னிடம் நேரடியாக அவர் பேசியதோ அல்லது அம்மாவின் மூலமாக இதற்கெல்லாம் பதில் சொன்னதோ இல்லை. ஆனால் அவரை நான் தூற்றத் தூற்ற அவர் என்னைப் பார்க்கும் பார்வையில் ஒரு பெருமிதம் கூடிக்கொண்டே வந்ததை இன்று உணர முடிகிறது.
அன்று ‘இவருக்கென்ன பைத்தியமா’ என்று நினைத்தேன். இப்போது என் மகள் ‘என்ன தூக்காதப்பா’ என்று சொல்லும்போது என் நெஞ்சில் ஊறும் பெருமிதம்தானே அவர் நெஞ்சிலும் ஊறி இருக்கும் என்று தோன்றுகிறது.
ஆனால் இதை சாத்தியப்படுத்தியது அம்மா. என் பேச்சில் குத்தியிருந்த முட்களை எல்லாம் பிடுங்கிவிட்டு சாரத்தை மட்டும் அவரிடம் கொடுத்திருக்கிறாள். கல்லூரியில் சேர்ந்தபோது நான் அம்மாவைத் தேடியது இந்த காரணத்திற்காக அல்ல.
அம்மா மட்டுமே பொருளுடைய வாழ்வை வாழ்வதாக எனக்குத் தோன்றியது. அம்மாவுடைய ஒரு அங்க அசைவுகூட கவனமற்றதாக இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை. டிவி பார்க்கும்போது கூட அவ்வளவு ஒன்றிப் போய் பார்ப்பாள். அடுப்பில் வேலை செய்யும்போது கூட்டிப்பெருக்கும்போது என்று ஒவ்வொரு வேலை செய்யும்போதும் அதற்கென்றே பிறப்பெடுத்தது போலச் செய்வாள். ஒரு மாதம் முழுக்க அம்மாவின் நினைவே வாட்டிக் கொண்டிருந்தது. எப்போது போய் அவள் மடியில் விழுவோம் என்றிருந்தது.
ரயிலேறி பேருந்து மாறி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அந்த உணர்வெல்லாம் காணாமல் போய்விட்டது. நன்றாகக் குளித்துச் சாப்பிவிட்டு படுத்தேன். நான் நிலையற்று இருப்பதை அப்பா உணர்ந்து கொண்டார். அன்று அவருடைய ஸ்ப்லெண்டரில் என்னை செட்டியார் தோப்புக்குக் கூட்டிப் போனார். என்னிடம் எதுவும் பேசவில்லை. என் அருகிலும் இல்லை. மதியம் வீட்டுக்குப் போய் அம்மாவையும் அழைத்து வந்தார். அம்மா அத்தனை விதமாக சூரிய வழிபாட்டு நாளுக்கு மறுநாள்தான் சமைப்பாள். வயல் நண்டு குழம்பு, வருத்த இறால் , துள்ளுகெண்டை மீன் குழம்பு, பொறித்த நெத்திலி, மிளகுபோட்டு பிரட்டிய கோழி, ஆட்டுக்கால் சூப், குடல்குழம்பு, முட்டை பொடிமாஸ், ஆட்டுக்கறி வறுவல், மிளகு ரசம் இதுபோக செரிக்க வேண்டும் என்று ஃபிளாஸ்க்கில் வெந்நீர். இவ்வளவையும் தூக்கிக் கொண்டு அம்மா வந்தாள். எனக்கு மட்டும் சமைத்து எடுத்து வரவில்லை. செட்டியார் தோப்பில் வேலை செய்தவர்களுக்கும் கொண்டு வந்தாள். வாழை இலைகளை தோப்பிலேயே வெட்டிக் கொண்டோம்.
எல்லோரும் நீலநிற தார்ப்பாயில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். கொஞ்ச நேரத்தில் அப்பாவும் அப்பா வயதுடைய பிற ஆண்களும் எழுந்து போய்விட்டனர். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் நெஞ்சில் என்னவோ பொங்கிக் கொண்டு வந்தது. அழத் தொடங்கிவிட்டேன். முதல் விசும்பலை மட்டும்தான் என்னால் கட்டுப்படுத்த முடிந்தது.
அந்த விசும்பலின் மெல்லிய ஒலி கேட்டதும் ‘என்ன கண்ணு’ என்று அங்கிருந்த ஐந்தாறு பெண்களில் யாரோ கேட்டது எனக்குக் கேட்டது. அந்த ஒலித்தொடுகை எனக்குப் போதுமனதாக இருந்தது. நான் ஓங்கி அழத் தொடங்கிவிட்டேன். அம்மா உட்கார்ந்திருந்த என் தலையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அந்தக் காட்சியை பிறர் பார்த்திருந்தால் அவள் என்னை இறுக்கிக் கொன்று கொண்டிருப்பது போலவும் நான் என் கைகளை வீசி தப்பிக்க முனைவது போலவும் தோன்றி இருக்கும். ஆனால் என் அம்மாவால் கொதிக்கும் என் தலையை மட்டும்தான் ஆசுவாசப்படுத்த முடிந்தது. சுற்றி இருந்த பெண்கள் என் கைகளைப் பிடித்துக் கொண்டனர். திமிறிக்கொண்டிருந்த என் உடல் மெல்ல மெல்ல சமநிலைப்படுவதை நான் உணர்ந்தேன். நரம்புகளில் அந்த அமைதி படர்ந்தது. உடைந்து நொறுங்கப் போகும் கண்ணாடிப் பாத்திரத்தை ஏழெட்டு கைகள் பற்றினால் அந்தப் பாத்திரம் எவ்வளவு ஆசுவாசம் கொள்ளுமோ அவ்வளவு ஆசுவாசம் என்னில் ஊறியது. அம்மாவின் உடல் வாசனையை நான் உணரத் தொடங்கிய கணத்தில் மிகச் சரியாக அம்மா என்னிடமிருந்து விலகிக் கொண்டாள்.
நான் சோர்ந்துபோய் படுத்தேன். என் தலைக்குக்கீழே யாருடைய மடியோ இருந்தது. தூக்கத்தில் கனவுகள் என்னை அலைகழித்தன. அந்தக் கனவெல்லாம் இப்போது ஞாபகம் இல்லை. ஒருவேளை அன்று வந்த கனவைத்தான் நான் பின்னாட்களில் வாழ்ந்தேனா அல்லது இப்போது கதையாக எழுதிக் கொண்டிருப்பது அந்தக் கனவுதானா நடந்தது எதுவும் நடக்கவே இல்லையா என்றெல்லாம் எனக்கு இப்போது குழப்பமாக இருக்கிறது. எழுந்தபோது என் தலைக்குக் கீழே ஒரு தலையணை இருந்தது. தார்ப்பாய்க்கும் எனக்கும் நடுவே ஒரு போர்வை. முதலில் நான் விடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன். நடந்த முடிந்த எதையும் நினைவுமீட்ட மனம் விரும்பவில்லை.
அந்த நாளுக்குப் பிறகு அம்மாதான் அப்பா இறக்கும் நாள்வரை என் நினைவில் இருந்தாள். அந்த நாளுக்குப் பிறகு செட்டியார் தோப்பு தன்னை மௌனத் தோட்டமாக மாற்றிக் கொள்வதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. அன்றிரவு நான் நிம்மதியாக வீட்டுக்கு வந்தேன். மனம் நாணத்தில் நனைந்திருந்தது. அப்பா சற்று நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அவர் முகம் வாடிப்போயிருந்தது. அம்மாவிடம் அவர் சொல்லிய தகவல் ஊர் முழுக்கப் பரவ கொஞ்ச நேரமே ஆனது. கடலுக்கு அப்பால் இருந்த நாட்டின் புரட்சிக் குழுக்கள் ஒன்றின் தலைவர் கொல்லப்பட்டிருந்தார். அவர் படம் ஒன்று எங்கள் வீட்டில் கூட இருந்தது. நான் கடலுக்கு அப்பால் உள்ள நாட்டினர் எங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு முன்பே அப்பா அந்தப் படத்தை சுவரிலிருந்து கழற்றி இருந்தார்.
அப்பா அன்றிரவு மீண்டும் செட்டியார் தோப்புக்குக் கிளம்பினார். நானும் உடன் சென்றேன். மாலை நான் அங்கு கண்ட அமைதி நாங்கள் மீண்டும் சென்றபோது இல்லை. கோபம் இயலாமை ஆத்திரம் தீர்மானமான பழியுணர்வு என்று என்னால் பொருத்திக் கொள்ள முடியாத ஏராளமான உணர்வுகளை அங்கு கண்டேன். அப்பாவும் அந்த உணர்வுகள் எதிலும் பங்கு கொள்ளாதிருந்தார்.
‘நீ வண்டிய எடுத்துட்டு கிளம்பு’ என்றார்.
நானும் வந்துவிட்டேன்.
அந்த நாளுக்குப் பிறகு ஏனோ எனக்கு வீட்டுக்குப் போகும் ஆர்வம் வரவில்லை. எப்போதாவது அம்மாவிடம் ‘ஊருக்கு வரட்டுமா’ என்று கேட்பேன். என் குரலில் இருந்த ஆர்வமின்மையை உணர்ந்து கொண்டு அம்மா வராதே என்று சொல்லிவிடுவாள்.
அன்று நான் வந்திருந்ததுகூட கல்லூரி மூடப்பட்டதால்தான். கடலுக்கு அப்பால் இருந்த நாட்டின் அரசியல் சூழல் கடுமையாகிக் கொண்டிருந்தது. அந்நாட்டில் அரசு நிகழ்த்தும் போர்க் குற்றங்களுக்கு எதிராக உலகம் முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்தன. அதன் எதிரொலி எங்கள் நாட்டிலும் உணரப்பட்டது. ஆனால் நாடு முழுக்க அந்த எதிர்ப்பு பரவவில்லை. தேசிய மொழி பேசியவர்கள் கடலுக்கு அப்பால் இருந்த நாட்டில் நிகழ்வது அவர்கள் பிரச்சினை என்று கருதினர். அதோடு எங்கள் மொழி பேசியவர்கள் அப்பிரச்சினையில் தலையிடுவதையும் எங்கள் நாடு விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை.
அப்பா இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு ஏதோவொரு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். அது அப்படியே பற்றத் தொடங்கியது. எல்லாக் கல்லூரியிலும் ஒருசிலருக்கு மட்டும் உண்மையிலேயே கடலுக்கு அப்பால் இருந்த நாட்டின் மீது அக்கறை இருந்தாலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் அனைவரையும் ஒன்றிணைத்தது. மூன்று நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த ஒரு கல்லூரிக்கு அக்கல்லூரி முதல்வர் காலவரையற்ற விடுமுறை அறிவித்தார். அதன்பிறகு உண்ணாவிரதம் எங்கள் மொழி பேசிய மக்கள் வாழ்ந்த தென்பகுதி முழுவதும் பரவியது. எங்கள் கல்லூரியில் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்பே விடுமுறை அறிவிக்கப்பட்டது. நான் மனமே இல்லாமல் புறப்பட்டு வீட்டுக்கு வந்தேன்.
4
காலை பதினோரு மணியளவில் இரண்டு போலீஸ்காரர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.
நான் வாசலுக்கு வந்தேன்.
அவர்கள் முகத்தில் எரிச்சல் மட்டுமே தெரிந்தது.
‘ஒப்பனுக்கு டெரரிஸ்டுங்க கூடெல்லாம் லிங்க் இருக்கா’
ரத்தம் சுண்டியது போல என் உடல் வெளவெளத்தது.
‘இல்ல சார்’ என்று நான் சொன்னது அவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் குரலைக் கேட்டு அம்மா வெளியே வந்தாள். அவள் கண்களில் துளியும் அச்சம் இல்லை.
‘என்னாச்சு’ என்று கேட்டவளின் குரலில் ஆத்திரம் அடைத்தது.
‘மரியாதையா பாடிய வாங்கிட்டு பிரச்சினை பண்ணாம போயிடு. படிக்கிற பையன் வாழ்க்கைய கெடுத்துடாத’
நான் தலையில் கைவைத்துக் கீழே உட்கார்ந்துவிட்டேன். காலையில் சாப்பிட்டிருந்த கோழிக்குருமா வயிற்றுக்குள்ளேயே நஞ்சாக மாறுவது போலிருந்தது. ஓங்கரித்து வாந்தி எடுத்தேன்.
வாசலில் இதுவரை பேசாமல் நின்றிருந்த போலீஸ்காரர் காலில் லேசாக வாந்தி பட்டது. அவர் ‘ச்சீ’ என்று விலகிக் கொண்டார்.
அம்மா நின்று கொண்டிருந்தாள்.
‘ஒட்டட குச்சி மாதிரி இருந்தான்.ஒரு தட்டுக்கு செத்துட்டான். அந்தத் தேவ்டியாமகன யாரு அந்த டெரரிஸ்ட் கூட்டத்துக்குள்ள வரச் சொன்னது’
********
அன்று காலையில் இருந்தே செட்டியார் தோப்பில் பெரிய அளவில் கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. ஐயாயிரம் பேராவது இருந்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். நடைப்பாலத்தில் காலையிலேயே நெரிசல் மிகுந்துவிட்டதாகச் சொன்னார்கள். அங்கு கூட்டம் சேர்ந்தது ஒரு லோக்கல் சேனலில் ஒலிபரப்பாக அதை ஒரு பெரிய டிவி சேனல் காட்டத் தொடங்கியது. லோக்கல் சேனலில் பேசிய சிலர் கடலுக்கு அப்பால் இருந்த எங்கள் மொழியின் தொனியில் பேசி இருக்கிறார்கள். ஏற்கனவே அப்பகுதியை கண்காணித்துக் கொண்டிருந்த உளவுத்துறை காவலர்களும் தகவல் கொடுக்க மக்கள் குவிவதற்கு இணையாகவே போலீஸும் குவிந்திருக்கிறது.
என்ன நடந்தது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் என்னிடம் இப்படித்தான் சொன்னார்கள்.
கடலுக்கு அப்பால் இருந்த நாட்டினரும் எங்கள் நாட்டினரும் பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் இருப்பார்கள். காவலர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு எங்கள் நாட்டினரை அடிக்கக்கூடாது. ஆனால் காவலர்களால் வித்தியாசம் கண்டறிய முடியவில்லை.
மேலும் காவலர்கள் வந்ததும் கூடியிருந்தவர்களிடமும் மாறுதல் தோன்றத் தொடங்கி இருக்கிறது. செட்டியார் தோப்பில் அப்போதுதான் அறுவடை முடிந்திருக்கிறது. ஐயாயிரம் பேரைச் சுற்றி வளைக்க ஐநூறு போலீஸ்காரர்கள் போதுமானதாக இருந்திருக்கிறது. ஏதோவொரு கட்டத்தில் எங்கோவொரு மூலையில் போலீஸ் கூட்டத்தில் யாரையோ அடித்திருக்கிறது அல்லது கூட்டத்தில் யாரோ போலீஸை அடித்திருக்கின்றனர். ஆனால் அடுத்து என்ன செய்வது என்று போலீஸ் முடிவு செய்ய அந்தச் சின்ன கைகலப்புப் போதுமானதாக இருந்திருக்கிறது. அடிக்கும்போது பேசியதை வைத்தும் அல்லது அடிவாங்கியவுடன் அலறியதை வைத்தும் போலீஸால் எங்கள் நாட்டினருக்கும் கடலுக்கு அப்பால் இருந்த நாட்டினருக்கும் வேறுபாட்டினைக் கண்டறிய முடிந்திருக்கிறது. ஒருவரையும் விடாமல் அடித்து அடித்தே இரண்டு நாட்டின் மக்களையும் பிரித்திருக்கின்றனர்.
மேலும் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக வந்த போலீஸ்காரர்களில் ஒரு பகுதியினர் கூட்டத்தைத் தடுக்க இன்னொரு பகுதியினர் செட்டியார் தோப்பில் புகுந்து அடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் முகத்தில் புணர்ச்சியின் தீவிரம் கூடியதாக ஒருவர் சொன்னார். ஐயாயிரம் பேரில் எழுநூற்று சொச்சம் பேர் அவர்கள் நாட்டினர். அவர்களில் மோசமாக அடிபட்டிருந்த அறுபத்தேழு பேரை அங்கேயே அவர்கள் கெஞ்சக் கெஞ்ச அடித்துக் கொன்றிருக்கின்றனர். எங்கள் நாட்டினரில் இறந்தது ஒருவர்தான். என் அப்பா. இதெல்லாம் இரண்டு மணிநேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
அம்மா அப்பாவின் உடலை வாங்கிக் கொண்டாள். அம்மா எதுவுமே பேசவில்லை. அப்பா அன்று அங்கு செல்லவே இல்லை. மாரடைப்பு வந்து ஒரு மருத்துவமனையில் இறந்தார். நான் இனி வீட்டுக்கு வரவேண்டாம் என்று அம்மா சொல்லிவிட்டாள்.
(நண்பரின் கனவு இன்னும் தொடர்கிறது. ஆனால் அவர் இதுவரை எழுதினால் போதும் என்று என்னிடம் சொல்லிவிட்டார். நானும் முதலில் இத்துடன் எழுதி நிறுத்திவிட்டேன். ஆனாலும் உறுத்திக் கொண்டே இருந்தது. மீதியையும் எழுதி நண்பருக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். அவரிடமிருந்து பதில் வந்தால் இரண்டாம் பகுதியை வெளியிடுகிறேன் – சுரேஷ் பிரதீப்)
August 13, 2026 at 6:06 pm
சுரேஷ் பிரதீப் எழுதிய **‘மௌனத்தோட்டம்’** சிறுகதையைப் பற்றி..
—
### 1. கதைக்களம் & மையப் பொருள் (Theme & Core Idea)
**‘மௌனத்தோட்டம்’** சிறுகதை **மொழி, அடையாளம், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் குற்ற உணர்ச்சி** ஆகியவற்றை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு கதையாகும்.
ஒரு மனிதன் தன் தாய்மொழியையும், அடையாளத்தையும் முற்றிலுமாகத் துறந்து / மறைத்து, ஆதிக்க மொழியான (தேசிய மொழியான) சூழலில் தன் குடும்பத்தை அமைத்துக் கொள்கிறான். ஆனால், தன் சொந்த மொழியில் பேச முடியாத மௌனம் அவனுள் உருவாக்கும் பயம், பதற்றம் மற்றும் குற்ற உணர்ச்சி அவனைக் கணந்தோறும் அலைக்கழிக்கிறது. மொழி அழிவு என்பது வெறும் எழுத்துக்களின் அழிவு மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் ஆன்மா மற்றும் நினைவுகளின் சிதைவு என்பதை இக்கதை உணர்த்துகிறது.
—
### 2. கதையின் அமைப்பு & வடிவம் (Structure & Meta-narrative)
இக்கதையின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் **‘Meta-fictional’ (புனைவுக்குள் புனைவு)** முன்னுரைகள்:
* **முன்குறிப்பு 1:** கனவில் வந்த கதையை எழுத முடியாமல், மொழி மறந்துபோன சூழலில், வேறொரு தமிழ் எழுத்தாளனிடம் கதையைச் சொல்லி எழுத வைத்ததாக வரும் குறிப்பு.
* **முன்குறிப்பு 2:** நண்பர் போனில் சொன்ன குரல்பதிவைக் கேட்டுத் தன் இஷ்டப்படி எழுதியதாகச் சொல்லும் சுரேஷ் பிரதீப்பின் குறிப்பு.
இந்த இரு முன்னுரைகளும் வாசகனுக்குள் கதையின் உண்மைத்தன்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்து, “மொழி இழப்பு” மற்றும் “சொல்ல முடியாத மௌனம்” என்ற மையப் புள்ளியை கதையின் தலைப்பிலேயே ஆழமாகப் பதிய வைக்கின்றன.
—
### 3. கதாபாத்திர அமைப்பும் உளவியலும்
* **கதாநாயகன் (முதன்மை பாத்திரம்):** தன் தாய்மொழியைப் பேசினால் தன் குடும்பமும் வாழ்வும் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வாழ்பவன். தன் குழந்தையைக் கூடத் சொந்த மொழியில் கொஞ்ச முடியாமல் தவிக்கும் அவனது அகப்போராட்டம் வாசகனின் மனதை நெருடுகிறது.
* **அகல்யா (மனைவி):** கணவனின் பதற்றத்தின் பின்னணியில் உள்ள மொழி அரசியலை அறியாமல், அவனது உடல்ரீதியான நடுக்கத்திற்கு மட்டும் ஆறுதல் அளிக்கும் ஆதரவான மனைவி. அவளது அன்பும், நாயகனின் மறைப்பும் இடையே ஒரு நுட்பமான முரண் நிலவுகிறது.
—
### 4. மொழி மற்றும் நடை (Literary Style)
சுரேஷ் பிரதீப்பின் எழுத்து நடை மிகவும் சுருக்கமானது; ஆனால் ஆழமான படிமங்களைக் கொண்டது.
> *“என் மொழியில் உள்ள சொற்கள் வாக்கிய கட்டுமானம் எல்லாம் நினைவில் இருக்கிறது. ஆனால் எழுதினால் என் மொழி அர்த்தம் பெற மறுக்கிறது… அந்த வரி ஒரு சவம் போலக் கிடந்தது.”*
என்ற வரிகள், ஒரு எழுத்தாளனுக்கும் அவனது தாய்மொழிக்கும் இடையே உள்ள பிணைப்பு அறுந்துபோகும் நிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
—
### 5. மதிப்பீடு – பலங்களும் சுவாரஸ்யங்களும் (Strengths)
1. **அரசியல் குறியீடு:** மொழி ஒடுக்குமுறை, இன அழிப்பு போன்ற தீவிரமான சமூக-அரசியல் சூழல்களை நேரடியாகச் பிரச்சார நெடி இல்லாமல், ஒரு தனிநபரின் உளவியல் வேதனையாக மாற்றியிருப்பது கதையின் வெற்றி.
2. **மன அழுத்தத்தின் சித்தரிப்பு:** அலைச்சத்தம் கேட்டு விழிப்பது, தன் மொழியை மறைக்கத் தேசிய மொழியில் மனைவியை அழைப்பது எனத் தொடக்கத்திலேயே ஒரு கூர்மையான பதற்றத்தைச் சிறுகதை தோற்றுவிக்கிறது.
3. **நினைவுகளின் முரண்:** கடந்த காலத்தின் குடும்ப நினைவுகளும் (அப்பா, கோழிக்கறி வாங்குதல், எண்ணெய் வாசம்) நிகழ்காலத்தின் மௌனமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் விதம் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.
—
### முடிவுரை (Final Verdict)
**‘மௌனத்தோட்டம்’** என்பது வெறும் கதையல்ல; தாய்மொழியை இழந்து வாழும் மனிதனின் **அகதி நிலையைப் பேசும் மௌனக் கூச்சல்**. மொழியையும் நினைவுகளையும் மறைத்து வாழும் ஒருவனின் வாழ்வியல் சித்திரத்தை மிக நுண்ணிய உணர்வுகளோடு கடத்துவதில் சுரேஷ் பிரதீப் வெற்றி பெற்றுள்ளார். நவீனத் தமிழ் சிறுகதைகளில் மொழி மற்றும் அடையாளம் சார்ந்த விவாதங்களுக்கு இக்கதை ஒரு முக்கியமான பங்களிப்பாகும்.