1

திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ராமேஸ்வரநாதன் இறந்தபோது, காங்கிரஸ்காரரான அப்பாவை வெறுப்பேற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவரால் விக்டோரியா என்று பெயரிடப்பட்ட அவர் மகள் தஞ்சாவூர் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீமில் ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

நான்கரை மணியாகியும் குறையாத வெயிலை ராமேஸ்வரநாதன் உணர முடியாதவாறு அவர் அறையில் ஏசி ஓடிக் கொண்டிருந்தது. மூன்று மணிக்குத் தூங்கத் தொடங்கியவர் நான்கு மணிக்கு தொண்டை காந்துவது போலிருக்கவே எழுந்தார். அன்று சனிக்கிழமை என்பதால் அசைவம் ஏதும் சாப்பிட்டிருக்கவில்லை. 

விக்டோரியா சென்னையில் இருந்து காலையிலேயே புறப்பட்டுவிட்டாள். அவள் ரயிலில் வந்திருந்தால் ராமேஸ்வரநாதன் சாவதற்கு முன்பு வீட்டுக்கு வந்திருக்கலாம். விக்டோரியாவுக்கு படுத்துக் கொண்டு பயணிக்க பயம். அம்மா அவளை தனியே தூங்க அனுமதித்ததே இல்லை. அறைத்தூக்கத்தில் இருக்கும்போது ‘ஒடுக்கிப்படுடி. பரப்பிகிட்டு தூங்குற?’’ என்று அம்மா அதட்டுவது காதில் விழுந்து விக்டோரியா ஒடுங்கிப் படுப்பாள்.

ராமேஸ்வரநாதன் மணியைப் பார்த்தார். இரவு செய்வதற்கு பெரிதாக ஒன்றும் வேலை இல்லை. காலையிலையே சுலோச்சனா சமைத்து வைத்துவிட்டாள்.

‘இது ரொம்ப நேரம் சூடு தாங்கும்’ என்று தொண்டையில் ஆதங்கம் முட்ட அவள் கொடுத்துப்போன சிவப்பு நிற ஹாட் பாக்ஸில் கொதிக்கும் சாதம் சுலோச்சனாவையே நினைவூட்டியது.

‘சாடையா பேசிட்டு இருந்தவன் ரெண்டு நாளா அசிங்க அசிங்கமா கேக்குறாங்க. மவளுக்கு கல்யாணம் பண்ற வரையாவது மான மரியாதியோட இருந்தாவனும்’

அவள் நின்று கொள்கிறேன் என்றுதான் சொன்னாள். 

‘சரி மாசாமாசம் பணத்த மட்டுமாவது வந்து வாங்கிக்க’ என்று சொன்ன ராமேஸ்வரநாதனை அவள் பார்த்த பார்வை அவர் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வைத்தது.

‘சரி காலையில மட்டும் வந்து சமைச்சு வச்சிட்டு போயிடு.’

பஸ் கிடைக்காது என்று எதிர்பார்த்துத்தான் கோயம்பேட்டுக்குப் போனாள். ஆனால் ஆம்னிபஸ் கிடைத்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டாள். விக்டோரியா ஆம்னி பஸ்ஸிலும் ஸ்லீப்பர் பேருந்துகளில் ஏறமாட்டாள். சிலசமயம் மூடி இருக்கும் திரை விலகுவதை காணநேரும். அது அவளுக்கு சங்கடத்தை அளிக்கும்.

திரும்பப் போய் படுத்தும் உறக்கம் வரவில்லை. இதுபோன்ற தருணங்களை ராமேஸ்வரநாதன் எப்படியாவது தவிர்த்துவிட முனைவார். சுலோச்சனா வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தவரை மனம் பழைய விஷயங்களில் லயிக்கவில்லை. அவள் லயிக்கவும் விடமாட்டாள். தஞ்சாவூருக்கு ராமேஸ்வரநாதனும் விக்டோரியாவும் வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. சுலோச்சனா கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அந்த வீட்டில் சமைக்கவும் துவைக்கவும் கூட்டிப் பெருக்கவும் என்று இருந்திருக்கிறாள். முதல் வருடம் சாதாரணமாகவே கடந்தது. ஆனால் சுலோச்சனாவுக்கு ராமேஸ்வரநாதனின் பதற்றங்கள் புரிய அந்த ஒரு வருடம் போதுமானதாக இருந்தது.

பேருந்துக்குள் ஒலியே இல்லை. சென்னை மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது‌. தாம்பரம் நோக்கி பேருந்து செல்லும் சாலை அவ்வளவு ‘பச்சையாக’ இருந்தது. நாசியை வருடிக் கொண்டே இருக்கும் மெல்லிய நாற்றத்தை சகித்துக் கொண்டால் சென்னையை விட அழகான ஊர் வேறெதுவும் இல்லை என்று விக்டோரியா நினைத்தாள். ஒலியற்ற பேருந்தின் வழியே ரசம் பூசப்படாத கண்ணாடிக்கு வெளியே மௌனப்படம் போல ஓடிக் கொண்டிருக்கும் சென்னையை வேலை செய்யும் நேரத்தில் பார்க்க முடிவதே இல்லை. பரபரப்பு. பரபரப்பு. யாருக்கோ எதுவோ உடனடியாக தேவைப்படுகிறது. அந்த ‘உடனடி’ என்ற சொல் ஒரு வேலையாக தலையில் இறங்குகிறது. மின்சாரம் தாக்கியது போல அதிரத் தொடங்கும் உடலை இயக்குவது மூளையா முதுகுத்தண்டா என்று உணர்ந்து முடிப்பதற்குள் வேலை தொடங்கி விடுகிறது. வேலை. வேலை. வேலை. வேலையை ரசிக்க வேண்டும் அல்லது சாக வேண்டும்.‌ வேறு வழியே இல்லை. 

ராமேஸ்வரநாதன் தன் பெண்ணைக்கூட நிமிர்ந்து பார்ப்பதில்லை என்பது சுலோச்சனாவுக்கு கொஞ்ச நாளிலேயே புரிந்துவிட்டது. தன் உடலில் ஊறும் கண்களை சுலோச்சனா ரசித்தும் வெறுத்தும் பொருட்படுத்தாதும் கடந்து வந்துவிட்டாள். ஆனால் ராமேஸ்வரநாதன் தன் உடலை பார்த்துவிடவே கூடாது என்று காட்டும் கவனம் அவளுக்குள் எதையோ தூண்டிவிட்டது. அந்த உணர்வுக்கு பெயர் என்ன? கணவன் அவள் உடலில் கைகளைத் தேய்க்கும் போது அவள் இணங்கியது அந்த உணர்வால்தான். அழும் குழந்தையை அள்ளித்தூக்கும்போதும் அதுதான் நடக்கிறது. அந்த உணர்வு தோன்றும்போது அவள் உடல் நெகிழ்ந்து போகிறது. மனதில் ஆனந்தம் பொங்குகிறது. இதயத்துடிப்பு கூடுகிறது. அந்நொடியில் அவள் முன் தோன்றும் சங்கடத்தைத் தீர்க்காமல் அடுத்த அடி வைக்க முடியாது என்றிருக்கிறது.

இன்று அப்படி இல்லை. அந்தக் காலை அவ்வளவு அமைதியாக இருக்கிறது. சென்னையில் இருந்து புறப்படும்போது உடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும் திரும்பிப் போகும்போது விரோதிகளாகவும் தோன்றும் அந்த தர்க்கமற்ற உணர்வு மீண்டும் ஆக்ரமிக்கிறது. அதோடு அவளைப் போலவே முதல்நாள் இரவே அவசர அவசரமாக கிளம்பாமல் சற்று தாமதித்துப் புறப்படும் சக பயணிகள் எல்லாம் அவள் அன்புக்குரியவர்கள் அல்லவா! ஓட்டுநரைத் தவிர. அவருக்கு இலக்கு இருக்கும். இத்தனை மணிக்குள் சென்றுசேர வேண்டும். இவ்வளவு பெட்ரோலுக்குள் பயணத்தை முடித்திருக்க வேண்டும். யாரோ ஒருவரையாவது கஷ்டப்படுத்தாமல் யாருக்கும் இன்பமே இருக்காதா என்று நினைத்துக் கொண்டாள்.

சுலோச்சனா தனக்குள் பொங்கிய உணர்வுக்கு பரிதாபம் எனப் பெயரிட்டுக் கொண்டாள். ராமேஸ்வரநாதனை தழுவித்தான் அவர் மீதான பரிதாபத்தை போக்கிக் கொள்ள முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. அவளை திரும்பியே பார்க்காத ராமேஸ்வரநாதனுக்கு அவளுடைய உடலைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கவில்லை. அவர்கள் இணைந்திருக்கும் போது பேசியதில்லை. இருவர் கண்களும் பார்த்துக் கொண்டதும் இல்லை. ஒருமுறைகூட அவர்கள் அதுபற்றி பேசிக்கொண்டதும் இல்லை. ஆனால் ராமேஸ்வரநாதன் இறுக்கம் தளர்ந்தார். இயல்பாக ராமேஸ்வரநாதன் தன் கடந்தகாலம் பற்றி சுலோச்சனாவிடம் சொன்னார்.

2

விக்டோரியா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். வழக்கம்போல குவித்திருந்த மணலில் தண்ணீர் ஊற்றி. எப்போது வேண்டுமானாலும் அம்மாவிடமிருந்து அடி கிடைக்கலாம். ஆனால் அவள் இன்று கவலைப்படவில்லை. வீட்டிற்குள் இன்ஸ்பெக்டர் மாமா இருந்தார். அப்பாவும். எதிர்வீட்டு நாய் அவளை உற்றுப் பார்த்தது. இவள் பயப்படத் தொடங்கியதும் அது குரைக்கத் தொடங்கியது. பயந்து கொண்டு உள்ளே ஓடினாள். இன்ஸ்பெக்டர் மாமா சீருடையில் உட்கார்ந்திருந்தார். அவள் அம்மா பாக்யலக்ஷ்மி நின்று கொண்டே டீப் பாயில் இருந்த ஒரு தாளில் குனிந்து கையெழுத்து போடுவதை விக்டோரியா பார்த்தாள். அப்பா சுவரில் சாய்ந்து தலைகுனிந்து நின்றிருந்தார். 

‘இனிமேலாவது ஒடம்ப அடக்கப் பழகு’

சாதாரணமாக சொன்ன இன்ஸ்பெக்டர் மாமாவின் கை முழு வேகத்துடன் அம்மாவின் கன்னத்தில் பதிந்தது. தரையில் சுருண்டு விழுந்தவளின் உதட்டோரம் ரத்தம். அம்மாவுக்கு இரண்டு நாட்கள் காய்ச்சல். அப்பா லீவ் போட்டுவிட்டு அம்மாவைப் பார்த்துக் கொண்டார். விக்டோரியா, அம்மா, அப்பா என்று படுத்திருந்த வரிசை மாறி இருவருக்கும் நடுவே விக்டோரியா படுக்க வைக்கப்பட்டாள். ஆனால் அது சில மாதங்கள்தான் நீடித்தது.

இன்ஸ்பெக்டர் மாமா தன்னுடைய சொந்த மாமா இல்லை என்று விக்டோரியாவுக்குத் தெரியும். பாக்யலக்ஷ்மிக்கு அறை விழுந்ததை அவள் பார்த்திருக்க வேண்டாம் என்று ராமேஸ்வரநாதன் நினைத்தார். குழந்தை அந்த மாதிரி யார் அறைபட்டும் பார்த்தது இல்லை. ராமேஸ்வரநாதன் தன் சொந்தபந்தங்களில் இருந்து விலக்கி வைத்தே மகளை வளர்க்க விரும்பினார். அன்பைப் பொழிந்து தள்ளும் தன் சொந்தங்கள் சொத்துப் பிரச்சினைகளில் நாய் போல் அடித்துக் கொள்வதையும் கொலைக்குக்கூட அஞ்சாமல் இறங்குவதையும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் தன் குடும்பத்துக்கு அந்த சொத்துக்களோ அதனால் உருவாகும் சண்டைகளோ வேண்டாம் என்று நினைத்ததால்தான் நகரம் நோக்கியே வந்தார்.‌ ஆனால் பாக்யலக்ஷ்மிக்கு தன் இஷ்டம் போல் இருக்க அதுவொரு வாய்ப்பாகிப் போகும் என்று அவர் யோசிக்கவில்லை. விக்டோரியா இரண்டு வயதாவதுவரை அவர்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் சாரங்கபாணியுடன் பாக்யலக்ஷ்மி தொடர்பு வைத்திருந்திருப்பாள் என்று அவரால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் புதுவீடு மாறிய பிறகு அவ்வப்போது அவர் தலை இவர் வீட்டுப்பக்கம் தென்படுவதாக வந்த தகவல்களை அவர் உதாசீனப்படுத்தினார். இன்ஸ்பெக்டர் மாமாவால் பாக்யலக்ஷ்மி அறையப்படுவற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு வரும் சமயம் சாராங்கபாணி ரொம்ப இயல்பாக அவர் வீட்டிலிருந்து இறங்கி ராமேஸ்வரநாதனைத் தாண்டிப்போனார். 

விக்டோரியாவுக்கு  அப்பா தன்னை அடிக்கடி அருகே கூப்பிட்டு முகத்தை உற்றுப் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. அப்பா கலகலப்பானவர் இல்லை என்றாலும் அவர் முகம் இப்போது தன்னை நோக்கி எந்த உணர்ச்சியும் காட்டாமல் மாறி இருப்பதை குழந்தையால் உணர முடிந்தது. விக்டோரியா அவர் கண்ணில் படும்போது ராமேஸ்வரநாதனின் உடலில் தோன்றும் குழைவும் சுறுசுறுப்பான குழந்தை எங்கே விழுந்து வைப்பாளோ என்ற பதற்றத்தில் தோன்றும் பரபரப்பும் அவரிடம் இல்லாமல் போய்விட்டது. பாக்யலக்ஷ்மி அறை வாங்கிய நாளுக்குப் பிறகு அப்பா தன்னிடம் பழையபடி நடந்து கொள்வதாக விக்டோரியாவுக்குத் தோன்றியது.

பாக்யலக்ஷ்மி அறை வாங்கிய நாளுக்குப் பிறகு ராமேஸ்வரநாதனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. அடுத்த எட்டு வருடங்கள் அப்படியே கழிந்தன. அவர் அழைப்புக்கு அவள் இணங்க மறுக்கவில்லை. ஆனால் சாரங்கபாணியின் வருகையும் நின்று போகவில்லை. முதலில் பாக்யலக்ஷ்மி மாறிவிட்டாள் என்றுதான் ராமேஸ்வரநாதன் நினைத்தார். ஆனால் அவளுள் ஏற்பட்டிருந்தது ஒரேயொரு மாற்றம்தான். சாரங்கபாணியை தான் சந்திப்பது ராமேஸ்வரநாதனுக்குத் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் ராமேஸ்வரநாதனுக்கு எல்லாமும் தெரிந்தே இருந்தது. கணவனுக்கு எதுவும் தெரியவில்லை என்று அவளும் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் தனக்குத் தெரியவில்லை என்று இவரும் எட்டு வருடங்கள் ஆடிய ஆட்டம் விக்டோரியாவால் முடிவுக்கு வந்தது.

முதலில் பாக்யலக்ஷ்மியைத்தான் பள்ளிக்கு அழைத்திருக்கிறார்கள்.‌ அவள் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இது ராமேஸ்வரநாதனுக்குத் தெரியும். சாரங்கபாணி அவளுடன் இருக்கையில் யாரும் அவர்களை தொந்தரவு செய்வதை விரும்பமாட்டான். சாரங்கபாணி பாக்யலக்ஷ்மியிடமிருந்து பதினைந்து சவரம் நகைகளைப் பெற்று அடகு வைத்திருப்பதும் ராமேஸ்வரநாதனுக்குத் தெரிந்தே இருந்தது. தொடக்கத்தில் மகளுக்கோ அக்கம்பக்கத்தினருக்கோ அவர்கள் தொடர்பு தெரிந்துவிடக்கூடாதே என்றுதான் ராமேஸ்வரநாதன் கவலைப்பட்டார். ஆனால் போகப்போக அவர்கள் உறவை அவர்களைவிட அவரால் உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. பாக்யலக்ஷ்மி சாரங்கபாணியை மூர்க்கமாக காதலிக்கிறாள். அவளை அணையவிடாமல் பார்த்துக் கொள்வதில் சாரங்கபாணி சமர்த்தனாக செயல்படுகிறான். அவனுக்கு அவள் உடலும் அவ்வப்போது பணமும் அவளிடமிருந்து தேவைப்படுகிறது. அதேநேரம் அவன் ஒருமுறை கூட அவளிடம் தன் பணத்தேவையைச் சொன்னதில்லை.‌ பாக்யலக்ஷ்மிக்கு சாரங்கபாணி தன்னைப் பற்றி கொடுத்திருக்கும் சித்திரம் பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்தது. எல்லாத் திறனும் இருந்தும் நாட்டில் நிலவும் நேர்மையின்மையால் தனக்கு வேலை கிடைக்கவில்லை.‌ ராமேஸ்வரநாதன் போன்ற அரசு ஊழியர்கள் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்கிறவர்கள்.‌ அவனைப் போன்ற நேர்மையை மட்டுமே நம்புகிறவர்களை உலகம் கைவிட்டு விடுகிறது. இரண்டு சவரன் நகைகள் கைமாறி இருக்கும். பாக்யலக்ஷ்மி தன்னுடைய அலைபேசியில் போட்டு வைத்திருந்த நான்கு இலக்க கடவுச்சொல்லைத் தாண்டி ராமேஸ்வரநாதன் எதையும் பார்த்துவிட முடியாது என்ற நம்பிக்கையில் அவளுக்கும் சாரங்கபாணிக்கும் இடையிலான எந்த உரையாடலையும் அழிக்காமலேயே வைத்திருந்தாள். அதிலிருந்தே ராமேஸ்வரநாதனுக்கு சாரங்கபாணி வீட்டிலிருக்கும்போது பாக்யலக்ஷ்மியின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலும் கிடைத்தது.

விக்டோரியாவை பள்ளிக்கு அழைக்கப் போவதற்கு முன்பு How to handle first menstrual cycle என்று கூகுளில் தேடினார்.‌ அதன் ஆலோசனைப்படி சில பேட்களும் அடர் வண்ணத்தில் இரண்டு சல்வார் கமீஸும் வாங்கிக் கொண்டார். மதியம் தான் ஆகி இருந்தது. விக்டோரியா ரொம்ப பயந்து போயெல்லாம் இல்லை. பாக்யலக்ஷ்மி இதுபற்றி அவளிடம் ஏற்கனவே பேசி இருந்தாள். அடுத்த சில நாட்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது. ஆனால் அன்று விக்டோரியா குழந்தையாக மட்டுமே இல்லை என்பது புரிந்து ராமேஸ்வரநாதனுக்கு மெல்லிய அச்சமும் தோன்றியது. முதன்முறையாக அவர் குழந்தை அவர் கண்களுக்கு எவ்வளவு அழகெனத் தெரிந்தது! விக்டோரியா அவளாகவே உடையையும் நாப்கினையும் வாங்கிக் கொண்டு உடைமாற்றி வந்து ‘போலாம்ப்பா’ என்றாள். அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் அய்யனார் கோவில் இருந்தது. மகளின் உதிரம்பட்ட ஆடைகளை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு ப்ளாஸ்டிக் கவரில் நனைத்துப் பிழியப்பட்டிருந்த ஆடைகளை விக்டோரியா எடுத்து வைத்திருந்தாள். வண்டியை எடுத்தபோதுதான் வீட்டுக்கு போகப்போவதில்லையே என்பது ராமேஸ்வரநாதனுக்கு உரைத்தது.

திடீரென விக்டோரியாவுக்கு தான் வயதடைந்தத நாள் நினைவுக்கு வந்தது. பேருந்தில் பலரும் தூங்கத் தொடங்கி இருந்தனர். வேடிக்கைப் பார்ப்பதற்கான பெரிய பெரிய கட்டிடங்கள் குறைந்துவிட்டன. சென்னையை விட்டு விலகி வருகிறோம் என்று‌ மனம் உணர்ந்ததாலோ என்னவோ ஊர்நினைவுகளை அசைபோடத் தொடங்கியது. 

‘சினிமாவுக்கு போவலாமா பாப்பா’ என்று அப்பா கேட்டது விசித்திரமாக இருந்தது. மகிழ்ச்சியாகவும்தான்! செல்வீஸ் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த சோழா தியேட்டருக்கு இன்டர்ஸ்டெல்லார் படத்துக்கு அழைத்துப் போனார்.‌ சோழாதான் அன்று திருவாரூரில் இருந்ததில் பெரிய திரை கொண்ட திரையரங்கம் என்று பெயர் பெற்றிருந்தது. 

‘ஏதாவது தொந்தரவுன்னா சொல்லு பாப்பா’ என்று கேட்ட அப்பாவுக்கு முத்தம் கொடுக்கத் தோன்றியது. 

நவம்பர் மாதம் என்பதால் தியேட்டரைவிட்டு வெளிய வந்தபோது மெல்லிய குளிர் பரவி இருந்தது. நடன வகுப்புக்குப் போய்விட்டு விக்டோரியா வர ஆறு மணி ஆகும் என்பதால் பாக்யலக்ஷ்மியும் பதற்றமுறவில்லை.

வீட்டுக்கு கொஞ்ச தூரம் முன்னே இருக்கும்போது  பாக்யலக்ஷ்மியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

‘பாப்பா எங்கூடதான் இருக்கா’ என்றார்.

எதிர்முனை அமைதியாக இருக்கவே ‘பக்கத்துலதான் இருக்கோம்’ என்றார்.

விக்டோரியாவை அறைக்குள் போகச் சொல்லிவிட்டு அவளிடம் விஷயத்தைச் சொன்னார்.‌ 

‘உனக்கு மதியமே ஃபோன் பண்ணாங்களாம் ஸ்கூல்ல இருந்து. ஸ்விட்ச் ஆஃப்னு வந்துருக்கு. சரி தொந்தரவு பண்ண வேணாம்னு நானே போய் கூட்டிட்டு வந்துட்டேன்’ என்றார்.

இடையே இருந்த நான்கு மணிநேர இடைவெளியை ராமேஸ்வரநாதன் விளக்கவில்லை. பாக்யலக்ஷ்மியும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.‌அவள் விக்டோரியா இருந்த அறைக்குள் போனாள். அன்றிலிருந்து மிக இயல்பாக பாக்யலக்ஷ்மி மாறிப்போனாள்.‌ அவள் அலைபேசியில் எல்லாச் செய்திகளும் அழிக்கப்பட்டிருந்தன. சாரங்கபாணியின்‌ வருகை நின்றுபோனது. விக்டோரியா பத்தாம் வகுப்பு முடிக்கும்வரை நடந்தவற்றை ராமேஸ்வரநாதனாலேயே நம்ப முடியவில்லை. கணவனையும் மகளையும் ஏதோ பாவத்தை கழிப்பது போல பாக்யலக்ஷ்மி கவனித்துக் கொண்டாள்.‌ அதன் உச்சமாகத்தான் ‘நாம ஒரு வீடு கட்டலாங்க’ என்ற யோசனையை அவள் சொன்னாள்.

ராமேஸ்வரநாதனால் இரண்டு நாட்களில் குடிபுகவிருக்கும் வீட்டில் பாக்யலக்ஷ்மி செத்துக் கிடந்தது ஏன்‌ என்று புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் பழைய ஆளாக இருந்திருந்தால் இப்படி ஒன்று நடக்கும் என்று அவர் எதிர்பார்த்திருப்பார். ஆனால் அவர் பாக்யலக்ஷ்மியின் முழுமையான மாற்றத்தால் தன் கூர்மையை இழந்திருந்தார். வீட்டுக்கடன் உடனடியாகக் கிடைத்தது. நாகப்பட்டினம் சாலையின் அருகிலேயே குறைந்த விலையில் இடமும் வாங்க முடிந்தது. நல்லப் பொறியாளரும் கிடைத்தார். விக்டோரியா பதினொன்றாம் வகுப்பு முடிக்கும் முன்பு வீடு எழுந்துவிட்டது. 

உண்மையில் அந்தப் பதினைந்து சவரன் நகை அவருக்கு தேவையே படவில்லை. பாக்யலக்ஷ்மிதான் ‘நான் போய் கேட்டு வாங்காம விடமாட்டேன்’ என்றாள். அப்போதும் ராமேஸ்வரநாதன் வேண்டாம் என்றுதான் தடுத்தார்.

‘நான் காசுக்காக அந்த நகையை கேக்கப் போகல’ என்று சொன்னவளை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொண்டார்.

பாக்யலக்ஷ்மி சாரங்கபாணியின் வீட்டு வாசலுக்கு போய் நின்றபோது சாரங்கபாணி வீட்டில்தான் இருந்தான். பாக்யலக்ஷ்மி தன் வருகையை அவன் எதிர்பார்க்கமாட்டான் என்றும் உடனே இல்லையென்றாலும் கொஞ்ச நாளில் நகையை மீட்டுத் தந்துவிடுவான் என்றுதான் நினைத்தாள். சாரங்கபாணியின் மனைவியை அவளுக்கு ஏற்கனவே தெரியும்.‌அவளுக்கு பயந்து கொண்டாவது அவன் நகைகளை தந்துவிடுவான் என்றுதான் நினைத்தாள். ஆனால் அவள் நகைகளை சாரங்கபாணியின் மனைவி விமலாதான் அணிந்தே இருந்தாள். 

சற்று முன்ஜாக்கிரதை உணர்ச்சி கொண்டவளான பாக்யலக்ஷ்மி திரும்பி விடத்தான் நினைத்தாள். ஆனால் விமலா விடவில்லை.

‘எதுக்குடி இங்க வந்த தேவுடியா? நாங்க நிம்மதியா இருந்தா உனக்கு பொறுக்காதா? உடனே தொறந்து காமிச்சு மயக்கலாம்னு வந்தியா?’

சாரங்கபாணியின் வீடு தெருவின் மையத்தில் இருந்தது. விமலா பேசியது தெருவின் இரண்டு புறமும் இருந்த இருபது வீடுகளுக்கும் கேட்டிருக்கும்.‌பேசியதோடு நிறுத்தாமல் நாடகத்தனமாக பாக்யலக்ஷ்மியின் தலைமுடியை கழுத்துக்கு கீழே பிடித்து வந்து சாலையிலும் தள்ளினாள். பாக்யலகஷ்மிக்கு அங்கிருந்து தப்பி ஓட வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு எதுவுமே தோன்றவில்லை. அவள் பதற்றம் முழுமையாக அடங்கி நிகழ்வின் முழு அர்த்தமும் உறைக்க ஒரு முழு இரவு தேவைப்பட்டது. ராமேஸ்வரநாதனிடமும் அவள் எதுவும் சொல்லி இருக்கவில்லை. அவரும் பத்திரிகை வைத்த அசதியில் தூங்கிவிட்டார். ஒவ்வொரு நாளும் எழுந்ததும் பல்துலக்கிவிட்டு கழிவறை சென்று வந்ததும் அவள் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டைத்தான் சென்று பார்ப்பாள்.‌ஒரு குழந்தை வளர்வதை பார்ப்பது போல அந்த வீட்டைப் பார்ப்பது பாக்யலக்ஷ்மிக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.‌ அனிச்சை செயல்போல அன்றும் கிளம்பிவிட்டாள். அவள் உள்ளத்தில் அவ்வளவு எடையை தூக்கிக் கொண்டு அவள் சென்றிருக்கக்கூடாது.

முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான குழந்தைபோல வீடு நின்று கொண்டிருந்தது. இன்பத்தை அனுபவிக்கும் பதத்தில் இருக்கும் மனதால்தான் துயரங்களை அதன் முழு வீரியத்துடன் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். பாக்யலக்ஷ்மிக்கு முந்தைய தினம் ஞாபகம் வந்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. அந்த சம்பவத்தின் முழுமையான அந்நியத்தன்மையும் விமலாவின் ஒவ்வொரு சொற்களும் பாக்யலக்ஷ்மியின் காதில் தெளிவாகக் கேட்டது. அந்த நிகழ்வை எப்படியாவது மனதால் செரித்துவிட அவள் போராடினாள். உடல் மனம் இரண்டுமே ஒத்துழைக்கவில்லை. ரத்தம் அழுத்தம் கூடிக் கொண்டே போய் மாரடைப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரநாதனும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக ராமநாதன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த விக்டோரியாவும் ஒரே நேரத்தில் பாக்யலக்ஷ்மியை நினைத்தனர். அந்த எண்ணத்தின் சூடு தாங்காமல்தான் விக்டோரியா மைக்கெல்ஸ் ஐஸ்க்ரீம் கடைக்குள் சென்றார். ஆனால் ராமேஸ்வரநாதன் பாக்யலக்ஷ்மியின் துயரம் எப்படி இருந்திருக்கும் என்பதை துளிதுளியாக அனுபவித்து இறந்தார். 

அவர் ரத்தம் அழுத்தம் கூடி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அம்மாவின் வேதனையையும் உணர்ந்திருப்பார் என்ற எண்ணம் – ராமேஸ்வரநாதன் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த ‘இறுதிச் சடங்கு’ நிறுவன ஊழியர்கள் அவர் பிணத்தை வீட்டிலிருந்து எடுத்துச் சென்றபோது – விக்டோரியாவுக்கு விசித்திரமான திருப்தியைக் கொடுத்தது.