கல்லூரி சேர்ந்த புதிதில் வகுப்பில் ஒரு சக மாணவன். இரண்டு பெஞ்சுகள் தள்ளி உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பான். அவன் பெயரை காட்டு கத்தாகக் கத்தினாலும் திரும்பிப் பார்க்கமாட்டான். அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் – 2008ல் வாட்ஸ்அப் வந்திருக்கவில்லை. மேலும் இரண்டாண்டுகள் கழித்து way to sms என்றொரு இணையதளம் வந்தது. அந்த இணைய தளத்தில் நம்முடைய அலைபேசி எண்ணை ரிஜிஸ்டர் செய்து கொண்டு செய்தி அனுப்பலாம். இதுதான் வளர்ந்து வாட்ஸ்அப் ஆனது என்று நினைக்கிறேன் – அனுப்பினால் உடனே திரும்பி ‘என்னடா’ என்பான்.
நானும் இப்படித்தான். கண்முன்னே ஏகப்பட்ட அநியாயங்கள் நடக்கும். நானும் விதவிதமாக அவமானப்படுவேன். எனக்கு ஏதாவது சுரணை இருக்கும் என நினைக்கிறீர்கள்? இருக்கும். ஆனால் வெளிக்காட்ட பயம். வெளிக்காட்டினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். அது பாதிக்கப்படவே கூடாது. இன்றிருப்பது போலவே வாழ்ந்து இப்படியே செத்துவிட வேண்டும் என்ற லட்சியவாதத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கும் கோபம் வரும் என்றெல்லாம் காண்பித்து யாரையும் பகைத்துக் கொள்ளும் எண்ணமெல்லாம் இல்லை. நாளை யாரும் என்னை செருப்பை கழட்டி அடித்தால் – நேரடி அர்த்தத்தில் இல்லாமல் உவமையாகச் சொன்னால் நான் செருப்படி படாத நாட்கள் மிகக்குறைவு – தன்னிச்சையாக கையெல்லாம் ஓங்கிவிடமாட்டேன். முதலில் நான் அடிவாங்கியதை யாரும் பார்த்தார்களா என்று கவனிப்பேன். இல்லையென்றால் ஒன்றும் நடக்காத மாதிரி போய்விடுவேன். ஒரு சங்கடம். அடி பலமாக விழுந்து கன்னம் பழுத்தால் ஒரு சரியான காரணத்தை கண்டறிந்து சொல்ல வேண்டும். ஒருவேளை யாரும் பார்த்துவிட்டால் என்னைப்போன்ற சோப்ளாங்கி நாய்க்காக பரிதாபப்பட்டு பார்த்தவர்கள் உதவிக்கு வருகிறார்களா என்று மௌனமாக யாசித்துக் கொண்டு. அப்படியெல்லாம் யாரும் இதுவரை வந்ததில்லை. ஒருவேளை அப்படி யாரும் வந்தால் நான் உலகைப் பற்றிய என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்வதாக ஜெயவேலிடம் சொல்லி இருக்கிறேன்.
இது நிற்க.எங்கெங்கோ சுற்றுகிறேன். சொல்ல வந்தது இதுதான். நெடிய பண்பாடு கொண்ட பாரதத்தின் புதல்வனான என்னை பாரதத்தின் தேசிய குணமான சூடு சுரணையின்மையும் கோழைத்தனமும் நிரந்தர அச்சமும் எந்நேரமும் பீடித்திருப்பதை எண்ணி நான் இறும்பூது எய்தாத நாளில்லை!
இதுநிற்க.
ஆக யாருக்கு என்ன அநியாயம் நடந்தாலும் அது என் பிரச்சினையாக மாறும் வரை நான் மனதளவில் பாதிக்கப்படுவதில்லை. இப்படி வாழ்வது வசதியாகவும் அவசியமாகவும் இருக்கிறது. இதனாலோ என்னவோ என்னைச் சுற்றி நடக்கும் எதையும் நான் கவனிப்பதில்லை. எப்போதும் தத்தி முண்டமாகவே இருக்கிறேன். ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் எங்கு வாங்கலாம் என்று யோசிக்கமாட்டேன். யாரிடம் எங்கு வாங்கலாம் என்று கேட்கலாம் என்றுதான் யோசிப்பேன். பெறும் ஆலோசனைகளை cross verify பண்ணுவது என்ற பாவத்தை நான் செய்ததே இல்லை. (Cross verify செய்யத் தேவையே இல்லாத இருவர். திருவாரூரில் என்றால் தியாகராஜன் சார் இருக்கிறார். மிகச் சரியான ஆலோசனைகள் மட்டுமே சொல்வார். தஞ்சாவூரில் என்றால் பிரியாவுக்கு ஓரளவு தெரியும் அல்லது யாரிடம் கேட்கலாம் என்று அவளுக்குத் தெரியும்.)
இப்படி ஒரு மாமட்டியான எனக்கு எதுவொன்றும் எழுத்தின் வழியே வந்தால்தான் புரிந்து கொள்ள முடியும். ஒன்று மாற்றி ஒன்றென வந்துகொண்டே இருக்கும் முடிவிலாத சம்பவத் தொடர்ச்சிகளை என்னால் எந்த வகையிலும் வரையறுத்துப் புரிந்து கொள்ள முடியவில்லை.நண்பர் ஜெயவேலிடம் நான் அடிக்கடி சொல்லும் உதாரணம். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவது போல வாழ வேண்டும். அல்லது அவர் எப்படி விளையாடுகிறார் என்று நான் நினைக்கிறேனோ அதுபோல நான் வாழ வேண்டும். சச்சின் டெண்டுல்கர் அடிக்கடி தொன்னூற்று சொச்சம் ரன்களில் ஆட்டமிழப்பார். அவருடைய இயல்புக்கு அந்த ‘பிரஷர்’ தாங்கக்கூடியது அல்ல. சச்சின் பாலுக்கு பால் (Ball) விளையாடக்கூடியவர். அதாவது ஒவ்வொரு பந்தினையும் (பந்துக்கு பந்து என்று எழுதி இருக்கலாம்) கணித்து அந்தப் பந்தில் என்ன மாதிரி ஷாட் ஆட முடியுமோ அதை மட்டுமே ஆடுவார். அதனால்தான் அவரால் நீண்ட நாட்கள் விளையாட முடிந்தது. அவ்வளவு ரன்களும் அடிக்க முடிந்தது. அப்படித்தான் நானும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொரு பிரச்சினையும் ஒரு பந்து. அதைத் தொகுத்துப் பார்ப்பதில் அர்த்தமே இல்லை. 150 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்து பேட்டை சுற்றி விடுவோம். அது நாம் சுற்றிய பிறகு அழகாக ஸ்ட்ம்ப்பை தெறிக்க விடும். முதுகுக்கு பின்னே பிட்ச்சில் குத்திய பந்து வைடாகும் என்று எதிர்பார்ப்போம். அது நேராக ஸ்ட்ம்ப்பை நோக்கிப் போகும். கஷ்டமான பந்தாக இருக்கும். காட்டு சுத்து சுத்துவோம். சிக்ஸ் போய்விடும்.
இன்று நடக்கும் ஐபிஎல் போலத்தான் வாழ்க்கையும் இருக்கிறது.சூதாட்டமோ என்று சந்தேகமாக இருக்கிறது. இப்படியே நேரம் போகிறதே என்ற குற்றவுணர்வு. பேட்டிங் பிடிக்க வசதியான ஆடுகளம் போல சம்பாதிக்க ஏதுவான சந்தை. எல்லா பந்திலும் சிக்ஸ் அடி என்று எதிர்பார்க்கும் சுற்றம், நட்பு, தொழில்தளம்.என்ன மீண்டும் எங்கெங்கோ போகிறேன்! என்ன சொல்ல வந்தேன் என்றால் வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று எனக்கு எந்த கருத்தும் இல்லை. கடந்த காலத்தின் ஞாபகம்கூட இல்லை!
இப்படிப்பட்ட நான்தான் கொஞ்ச நாளாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறேன். உங்களுக்கு இதெல்லாம் புத்திசாலித்தனமா என்றுகூட தோன்றலாம். ஆனால் சைக்கிளே ஓட்டத் தெரியாதவன் டிவிஎஸ் பிஃப்டி ஓட்டுவது சாதனைதானே! அதுபோல இதெல்லாம் என்னைப்போன்ற மக்குப்பயலுக்கு சாதனைதான்.
சம்பவம் ஒன்று
நாகப்பட்டினத்தில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருந்தேன். நான் தஞ்சாவூர் போகவேண்டும். முன்பெல்லாம் ‘புக்’ பண்ணி விடுவேன். Current Booking என்ற சங்கதி பற்றி பலபேருக்குத் தெரியவில்லை. கட்டுரையில் முன்பே குறிப்பிட்டேன் இல்லையா? தியாகராஜன் சார். அவர்தான் இந்த கரண்ட் புக்கிங் சங்கதி பற்றி எனக்கு சொல்லித் தந்தார். இதுமாதிரி ஏராளமான லௌகீக நுணுக்கங்களை சொல்லித் தந்திருக்கிறார். அதையெல்லாம் வேறு சமயங்களில் சொல்கிறேன்.
கரண்ட் புக்கிங் என்றால் இதுதான். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் வழியாக ஒரு ரயில் எர்ணாகுளம் போகிறது. அந்த ரயிலில் எஸ்8 பெட்டில் 20வது சீட்டை ஒருவர் தஞ்சாவூரில் இருந்து புக் பண்ணி விடுகிறார். இப்போது அந்த ரயிலில் காரைக்கால் முதல் தஞ்சாவூர் வரை அந்த குறிப்பிட்ட சீட் காலியாக இருக்கும். இத்தகைய இருக்கைகளுக்கான (அல்லது படுக்கைகளுக்கு) புக்கிங் ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரங்களுக்கு முன்பு தொடங்கும் . நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் போக 165 ரூபாய் செலவாகும். இப்போதெல்லாம் சீசன் டிக்கெட்டை வைத்துக் கொண்டு இப்படி புக் பண்ணிப்போக குற்றவுணர்வு ஏற்படுகிறது.
சாப்பாட்டு விஷயத்திலும் இப்படித்தான். என்றாவது அசைவ உணவு தனியே போய் சாப்பிட்டால் முன்னூறு நானூறு செலவாகிறது. ஒற்றை ஆளாக இவ்வளவு செலவழிக்கிறோமே அதுவும் லட்சக்கணக்கில் கடனை வைத்துக் கொண்டு என்று குற்றவுணர்வாக இருக்கும். அன்று புக் பண்ணி இருக்கலாம். ஏனெனில் நான் எர்ணாகுளத்தில் புறப்பட முடியாது. அலுவலக நேரம் முடிய ஆறு மணி ஆகும். எர்ணாகுளம் ஐந்து மணிக்கு. அன்று பிரியாவை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால் அனுமதி பெற்று சற்று முன்பே புறப்பட்டேன். அன்றைக்குப் பார்த்து ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் சரியான கூட்டம். எப்படியோ ஏறி வளைந்து நெளிந்து ரயிலின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டேன்.
இங்குதான் என் புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்க்க வேண்டும்!நான்கு பேர் அமரும் இருக்கைகளில் அடித்துப் பிடித்து ஐந்துபேர் அமர்ந்திருந்தனர். அதில் ஒரு மத்திய வயதுப் பெண். ஆனால் இளமையான தோல். உடன் அவர் கணவர். கையில் கட்டு போட்டிருந்தார். அவர்கள் காரைக்காலில் ஏறி இருக்க வேண்டும். பாண்டிச்சேரி போலவே காரைக்காலிலும் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. சற்று குறைவான செலவில் நல்ல வைத்தியம் கிடைக்கும். அவர்கள் தஞ்சாவூரில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. தஞ்சாவூர்காரர்கள் காரைக்கால்வரை எல்லாம் போகமாட்டார்கள்! தஞ்சாவூர்காரர்களின் ‘சுறுசுறுப்பு’தான் உலகப் பிரச்சித்தமாயிற்றே! ஆகவே அவர்கள் திருவாரூரில் இறங்குவார்கள் என்று கணித்தேன். அதேபோல் இறங்கினார்கள். எனக்கு உட்கார இடம் கிடைத்தது.
சம்பவம் இரண்டு
இதை முந்தாநாள் எழுதத் தொடங்கினேன். இன்னும் முடிக்கவில்லை. அதற்குள் நேற்றிரவு மாலை இன்னொன்று அறிந்து கொண்டேன். அதுவும் தியாகராஜன் சார் சொன்னதுதான். திருவாரூர் ,நாகை ரயில்வே ஜங்ஷன்களுக்கு வெளியே ஒரு ஏசி கோச்சை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எனக்கு ஏன் என்று புரியவில்லை. புரியாததை பற்றியெல்லாம் அதிகம் நான் அலட்டிக் கொள்வதும் இல்லை. இப்படித்தான் ஒன்றுக்குப் போகும் உறுப்பு வேறு மாதிரி என்னுடையது போல் இல்லாமல் வேறு வடிவில் இருக்கும் மனித இனத்தின் ஒரு பகுதியைப் பற்றி புரிந்து கொள்ள முயன்று ஏகப்பட்ட அடி வாங்கி இருக்கிறேன். (அய்யா என்றால் மனக்காயங்கள். நீங்கள் வேறு மாதிரி ஏதும் நினைத்துவிடாதீர்கள். நானொரு பயந்தாங்கொள்ளி. அதனால் யோக்கியனாக்கும்) ஆகவே அந்த ரயில் பெட்டி மேட்டரை மறந்துவிட்டேன்.
நேற்றுதான் தியாகராஜன் சார் சொன்னார். அந்தப் பெட்டியை ஹோட்டலாக மாற்றப் போகிறார்களாம்! ஏசி ஹோட்டல். திருவாரூர் நாகப்பட்டினத்தில் எல்லாம் இருக்கிறது தஞ்சாவூரில் இல்லையே என்று பேசிக் கொண்டு வந்தோம். தஞ்சாவூரில் இறங்கினேன். இப்போதுதான் கவனிக்கிறேன். ஜங்ஷனுக்கு எதிரே உள்ள வீ.சுப்பையா பிள்ளை மெஸ் ரயில் பெட்டியில்தான் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இனி இரண்டாவது சம்பவம்.பிரபஞ்சன் கருத்தரங்குக்காக பசுபதி கோவிலில் இருந்து மயிலாடுதுறை கிளம்பினோம். சென்ற ஞாயிற்றுக்கிழமை. (பசுபதிகோவில் ரயில் நிலையம் அய்யம்பேட்டையில் இருக்கிறது. அய்யம்பேட்டை ரயில் நிலையத்துக்கும் அய்யம்பேட்டைக்கும் சம்பந்தமே இல்லை.)நான் ரயிலில் கூட்டம் இருக்காது என்று நினைத்தேன். நல்ல கூட்டம். பிரியா மட்டும் அமர ஒரு இடம் கிடைத்தது. அருகில் அமர்ந்திருந்த ஏழெட்டு பேர் தமிழில் பேசவில்லை. தெலுங்கும் இல்லை. சௌராஷ்டிரா! பிரியாவிடம் ‘இவர்கள் எல்லோரும் கும்பகோணத்தில் இறங்குவார்கள்’ என்றேன். இறங்கினார்கள்.’எப்படித் தெரியும்?’ என்றாள்.’சௌராஷ்டிரா பாஷை பேசுவதால் அவர்கள் கும்பகோணத்துக்குக்காரர்களாக இருக்க வாய்ப்பு அதிகம்’ என்றேன்.’இந்தப் பயலுக்கு இவ்வளவு அறிவா’ என்பது போல் பிரியா பார்த்தாள்.
சம்பவம் மூன்று
இது சற்று டொங்கலான விஷயம்தான். நண்பர் ஒருவர் வீடு குடி போகிறார். பணம் வைக்க மொய்க்கவர் வாங்க மறந்துவிட்டேன். இரண்டு மூன்று கடைகளில் கேட்டேன். இல்லை என்றார்கள். வண்டியை எடுத்து எடுத்து நிறுத்த அலுப்பு. சற்று தூரத்தில் மேளச்சத்தம் கேட்டது. மண்டபம் கண்ணுக்குக் தெரியவில்லை. ஆனால் சத்தம் வந்த திசையில் ஒரு பெட்டிக்கடை. கடை அருகில் போனதே கடைக்கார அம்மாள் ‘மொய்க்கவரா’ என்றார்.
முடிவுரை
முன்பே சொன்னதுதான். இதெல்லாம் உங்களுக்கு ‘அடச்செய்’ என்று சொல்லும்படி சாதாரண சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் முப்பது வயதுவரை ஈபி பில் கட்டக்கூட செல்லாதவனுக்கு இதெல்லாம் சாதனைதான்.
காக்கைக்கு தன்….
இல்லை வேண்டாம்.
You know that!
Leave a Reply