நேற்று மாநில அரசில் பணிபுரியும் தம்பி விஜய்யை பார்த்திருக்கிறான். தனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை அவனால் விவரிக்க முடியவில்லை. ஆனால் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சியைப் போன்ற ஒன்றுதான் விஜய்யை வெல்ல வைத்திருக்கிறது என்று அவன் நம்புகிறான். தவெகவின் வெற்றி குறித்து நான் கேட்ட அதிகபட்ச ‘rational’ பதில் இதுதான்.
ஏனெனில் தவெகவின் வெற்றியை எப்படி புரிந்து கொள்வது என்று பலருக்கு குழப்பமாக இருக்கிறது. மேலும் பலர் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இந்தக் குழப்பமும் அதிர்ச்சியும்தான் தவெக குறித்து எரிச்சலுடனும் ஏளனத்துடனும் பலரையும் பேச வைக்கிறது. இந்த எரிச்சலுக்கும் ஏளனத்துக்கும் பின்னிருக்கும் உளநிலை என்ன?
‘நீ ஏன் என்னைப்போல சிந்திக்கவில்லை?’
இதையே இன்னும் சற்று பரிவுடன் வேறு மாதிரியும் கேட்கிறார்கள்.
‘நீயும் என்னைப்போல சிந்திப்பாய் என்று நம்பினேன். இப்படி மோசம் பண்ணிவிட்டாயே!’
மேலும் சிலர்.
‘உனக்கு சிந்திக்க தெரியவில்லை. நீ செய்திருப்பதன் ஆபத்தை எதிர்காலத்தில் உணர்வாய்’
இப்படியெல்லாம் பேசப்பேச தவெகவுக்கு ஓட்டுப்போட்டவர்கள் மேலும் குழப்பமே அடைவார்கள்.
‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இதைப்பற்றி எல்லாம் நீங்கள் இதற்கு முன் எங்களிடம் பேசவே இல்லையே!’
இப்போது குழப்பம் அடைவது குற்றஞ்சாட்டியவர்கள் முறை.
‘என்னது! பேசவே இல்லையா?! எவ்வளவு பேசினோம். பிம்பங்களை நம்பி ஏமாறாதீர்கள்! வழிபாட்டு உணர்வுடன் வாக்களிக்காதீர்கள்!’
‘இப்படியெல்லாம் சொன்னீர்களா? பிறகேன் நீங்கள் திமுகவில் இருந்தீர்கள்?’
இத்துடன் உரையாடல் முற்றுபெறும். இரண்டு பக்கமும் மௌனம். திமுகவை நியாயப்படுத்த ஒரு பொது அறிவுஜீவியிடம் காரணங்களே இல்லை. கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே திமுக தலைமையை பொது அறிவுஜீவிகள் சாதிக்க முனைந்தனர். திமுகவின் மீதான மௌனமே இந்தப் பக்கம் தவெகவின் வெற்றியாகத் திரும்பி இருக்கிறது.இல்லை நானும் சுருக்குகிறேன்.

சாரு சினிமாவை தமிழர்களின் மதம் என்றார். விஜய் அங்கிருந்து எழுந்தருளிய கடவுள். எனக்கு இலக்கியத்திற்குள் நடக்கும் ‘தெய்வக்கிளறல்கள்’ அதிர்ச்சியை அளிக்கின்றன. ஒருவேளை என் இயல்பு அப்படியானதாக இருக்கலாம். ஆனால் ஒரு ‘தெய்வத்தை’ மையமிட்டு ஏராளமானவர்கள் ஆர்பரிப்பது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி.
அலங்கரிக்கப்பட்டு திரை நீக்கப்பட்டவுடன் ‘கோவிந்தா கோவிந்தா’ என்றும் ‘அரோகரா அரோகரா’ என்றும் நாம் ஆர்பரிக்கிறோம். பேராசிரியர் டி.தருமராஜ் அதனாலேயே விஜயை ஜல்லிக்கட்டு காளை என்றார். எங்கிருக்கிறது என்றே தெரியாமல் பழக்கப்பட்டு வாடிவாசலில் சீறி எழும் காளை. நான் அந்தக் காளையைத்தான் தெய்வம் என்கிறேன்! தெய்வம் என்றதும் இதை வாசிப்பவர்களுக்கு என்ன உணர்வு தோன்றுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றுவது ‘the death of common sense’. இதை ஒரு பகுத்தறிவாதியாக நான் சொல்லவில்லை. தெய்வ நம்பிக்கை கொண்டவனாக சொல்கிறேன்!
என் தெய்வத்திற்கும் எனக்குமான தொடர்பு பொது அறிவு, பகுத்தறிவு போன்றவற்றை சார்ந்து இயங்குவதில்லை. என் மனைவியை மகளை பெற்றோரை நான் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதில்லை. என் குடும்பமும் என் தெய்வமும் நாமும் ஒன்றிலொன்று பிணைந்தவர்கள். அங்கு பகுத்தறிவு செயல்படுவதில்லை.இப்படி இருப்பது சரியா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை. இப்படி இல்லாமல் வேறு எப்படி இருந்தாலும் நான் அழிய நேரிடலாம் என்று அஞ்சுகிறேன்.இது என் ‘நம்பிக்கை’ சார்ந்த விஷயம்.
ஆனால் இலக்கியத்தில் சினிமாவில் எல்லாம் நடக்கும் ‘தெய்வக்கிளறல்’ வேறு வகையானதாக இருக்கிறது. முதலில் தெய்வம் ‘நின்று கொல்லும்’ ஒன்றாக தூய இருப்பாக உருவகப்படுத்தப்படுகிறது. முயன்று ‘தரிசிக்க’ வேண்டிய ஒன்று , ‘சோதனைகள்’ அளித்தாலும் இறுதியில் ரட்சிப்பது, ‘தீயவர்களை விஸ்வரூபம் எடுத்து அழிப்பது’ என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
கவனியுங்கள். விஜய் இப்படி ஒரு தெய்வம். இந்த தெய்வத்திற்கு எதிராக காண்பிக்கப்ட்ட அரக்கர்கள் எல்லோரும் தெய்வம் சுட்டிக்காட்டிய குண இயல்பினை கொண்டிருந்தார்கள். வழக்கம்போல தெய்வம் அரக்கர்களுக்கு அவகாசமும் வழங்கியது. ஆனால் அரக்கர்கள் தன் முன்னே நிற்பது தெய்வம் என்று உணரவில்லை. உணர்ந்திருந்தால் தெய்வம் தெய்வமும் ஆகி இருக்காது! அரக்கர்கள் அரக்கர்களும் ஆகி இருக்கமாட்டார்கள்! மாறாக பக்தர்களை தொடர்ந்து பழித்துரைப்பதன் வழியாக தங்கள் அரக்க குணத்தை அதிகரித்துக்கொண்டே சென்றனர். தெய்வத்திற்கு கரங்களும் படைக்கலன்களும் பெருகிக் கொண்டே சென்றன. பன்னிரு கைகளிலும் படைக்கலன்களுடன் எழுந்த விராட தெய்வம் வதம் முடித்து கருவறை மீண்டிருக்கிறது.
கதையாக கேட்க நன்றாக இருக்கிறது இல்லையா! வதம் முடித்து கருவறை மீண்டிருக்கிறது என்பதை அவ்வளவு சீரியஸாக எழுதவில்லை என்று சொல்லாவிட்டால் நான் தெய்வத்தை போற்றிப் புகழ்வதாக நீங்கள் நினைத்துவிடக்கூடும்!இங்கு தெய்வமும் அரக்கர்களும் நிரந்தர இருப்புகள் அல்ல. ஆனால் இந்தக் கதையில் ஒரு சிக்கல் இருக்கிறது. அரக்கர்களைத்தான் அழிக்க முடியும். தெய்வத்தை அழிக்க முடியாது. அதோடு ஒருமுறை தெய்வமாகிவிட்டவரை மீண்டும் அரக்கராக்கவும் முடியாது. இருக்கும் ஒரேவழி தெய்வத்தை தெய்வமல்லாததாக ஆக்க வேண்டியதுதான். சரி அப்படியென்றால் திராவிட இயக்கம் போல தெய்வத்தை வெறும் கல் என்று சொல்லலாமா? பக்தனுக்கு தெய்வம் கல் என்று ஏற்கனவே தெரியும். தெய்வத்தின் தோற்றம் the death of common sense என்றால் தெய்வத்தின் முடிவு birth of common sense தான்.
2021ல் சிறிய அளவில் இது நடந்தது. அதற்கு முன்பு 2006ல் நடந்ததைச் சொல்லி விடுகிறேன். அப்போது எனக்கு பதினான்கு வயது. அரசியலை கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கத் தொடங்குகிறேன். தேர்தல் மலர் என்றொரு புத்தகத்தை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருந்த ஞாபகம் இன்றும் இருக்கிறது. அதில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ்,வைகோ, திருமாவளவன் என்று அரசியல் கட்சித் தலைவர்களின் பயோடேட்டா இருந்தது. அதில் திருமாவளவன் மிக இளையவர் என்ற தகவல் எனக்கு காரணமே இல்லாத உற்சாகத்தையும் அவர் மீதான மரியாதையும் அளித்தது.
2006ல் திமுக வென்று அடுத்த ஐந்து வருடங்கள் ஜெயலலிதாவால் மைனாரிட்டி திமுக அரசு என்று அழைக்கப்படவிருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன் நான் அடைந்த உளச்சித்திரம் வேறு வகையானது. அன்று டிவி என்றால் அது சன் டிவி மட்டும்தான். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை அன்றைய ஜெயலலிதா அரசின் ‘கொடுமைகளை’ சோக இசையுடன் சன் டிவி காண்பித்துக் கொண்டே இருந்தது.
கருணாநிதி கைது செய்யப்பட்டது, புத்துணர்ச்சி முகாமுக்கு யானைகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் காவலர்களால் நள்ளிரவில் வீடுகளில் நுழைந்து கைது செய்யப்பட்டது மற்றும் பல விஷயங்கள் ஜெயலலிதாவை ஒரு ‘அரக்கி’யாக காட்ட முனைந்தன. அந்தத் தேர்தலில்தான் கருணாநிதி கலர்டிவி தருவதாக அறிவித்தார். (தரவும் செய்தார். என் வீட்டிற்கு வந்த முதல் கலர் டிவி அதுதான்!) ஆனால் இந்த ‘முன்னேற்பாடுகளை’ கண்டு நான் அதிமுக பெரிய அளவில் தோல்வி அடையும் என்று நினைத்தேன். நடக்கவில்லை. சரி பரவாயில்லை. சிறிய அளவிலாவது தோற்றார்களே! திமுக பொற்கால ஆட்சி நடத்தும் என்று நினைத்தேன். பொற்கால ஆட்சி என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் ‘புதுயுகம் பிறக்கிறது’ என்று நம்பினேன்.
2021ல் சிறிய அளவில் என்றாலும் அப்படி நம்பிய ஒரு இளைஞர் கூட்டம் இருந்தது. அதாவது திமுக எல்லா வகையான பிற்போக்குத்தனங்களுக்கும் எதிரானது, எதிர்ப்பவர்கள் மீது வன்முறையை பிரயோகிக்காது, தலித்துகளின் மீதான வன்முறை குறைவதை உறுதிபடுத்தும் என்றெல்லாம் நம்பினார்கள். இப்படியே நம்பினார்கள் என்று சொல்ல முடியாது. ஏதோ ‘நல்லதாக’ நடக்கும் என்று நம்பினார்கள். புதிதாக ஓட்டுப்போட வருகிறவர்கள் இப்படி நம்புவது இயல்புதான். அந்த நம்பிக்கை பொய்த்துப் போவதும் இயல்புதான்!
நம்பிக்கை பொய்த்துப் போகும்போது தெய்வம் வராதா என்றுதான் எல்லோரும் ஏங்குகிறார்கள். தன்னால் அப்படியொரு தெய்வம் ஆகிவிட முடியுமா என்றுதான் எல்லா தலைவர்களும் முயல்கிறார்கள். விஜய் எழுந்தருளிவிட்டார். புதிய வாக்காளர்களுக்கு அவர் ஏற்கனவே தெரிந்தவராகவும் இருந்தார். பழைய வாக்காளர்களுக்கு புதிய மாற்றாகவும் தெரிந்திருக்கிறார்.
தெய்வம் தேரில் ஏறிவிட்டது!
நாம் இந்த தெய்வ அரசியலைவிட்டு வெளியேற வேண்டும். எல்லோரும் இளைஞர்களை ‘அரசியல்படுத்துதல்’ என்று இதைத்தான் சொல்கிறார்கள். ஆனால் இந்த அரசியல்படுத்துதலில் உள்ள முக்கியமான பிரச்சினை எல்லா கட்சிகளும் இளைஞர்களை அரசியலுக்கு ஆற்றுப்படுத்த முனைகிறார்கள். அரசியல்படுத்துதலும் ஆற்றுப்படுத்துதலும் வேறு வேறானவை!
அரசியல்படுத்ததுதல் என்பது சமூக இயக்கத்தை புரிந்து கொள்வதற்கான கருத்தியல் கருவிகளை அளித்து அக்கருவிகளின் அடிப்படையில் தலைவர்களை நோக்கி எதிர்பார்ப்பினை வளர்த்துக் கொள்வது. அந்தச் சூழலில் ஏராளமான கேள்விகளை நிர்வகிப்பவரே தலைவராக இருக்க முடியும். அரசு என்பது நிலத்தின் வளங்களை நிர்வகிக்கும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பு சரியாக இயங்குகிறதா என்று அவதானிக்க வேண்டிய பொறுப்பினை கற்றுக் கொடுப்பதே அரசியல்படுத்ததுதல். ஆனால் ஒவ்வொரு கட்சியும் தங்களை மக்களை நோக்கி ஆற்றுப்படுத்தவே விழைகின்றன. சமூகத்தை சிறப்பாக வழிநடத்தும் சூட்சமம் தங்களிடம் இருப்பதாக சொல்கின்றன. ஆற்றுப்படுத்துதலில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கட்சித் தலைவர்களின் சொத்துக் கணக்குகளையும் சொகுசு வாழ்க்கையையும் பார்க்கும் மக்கள் கட்சித் தலைவர்கள் பேசும் கொள்கைகளுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்று கவனிக்கின்றனர்.
சமகால நிகழ்வுகளுடன் பிணைத்துக் கொள்ளும்படிதான் அரசியல் கட்சிகள் இயங்க வேண்டும். அதுதான் அரசியல் கட்சிகளின் உடனடி தேவையும் கூட. ஆனால் அரசியல் கட்சிகள் ஒற்றைப்படையான கதையாடலை முன்வைக்கவே விரும்புகின்றன. பாசிச பாஜக என்ற அர்த்தமற்ற வரியை வைத்து திமுக விளையாடியது. அதே விளையாட்டை தீயசக்தி திமுக என்ற வரியின் வழியே தவெக எதிர்கொண்டது. தவெக இன்றைய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டதும் அல்ல. அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாகவே விளையாடுகின்றன. விஜய் ஒரு ‘தெய்வம்’ என்பதால் அவருக்கு ஒரு edge கிடைத்திருக்கிறது.
வைபவ் சூர்யவன்ஷி நன்றாக விளையாடுகிறார். உலகத்தரமான பவுலர்களை எல்லாம் அடித்து துவைக்கிறார். ஆனால் சூர்யவன்ஷியை பவுலர்கள் அப்படியே விட்டுவிட மாட்டார்கள்.அவர் பலவீனங்களை ஆராய்வார்கள். அவருடைய உள உறுதியை சீண்டுவார்கள். சூர்யவன்ஷியை தரையிறக்கத்தான் எல்லா பவுலர்களும் முயல்வார்கள். விஜய் ஒரு வகையில் சூர்யவன்ஷிதான். ஆனால் அவரை ‘வீழ்த்தும்’ வியூகங்களை எதிர்கட்சிகள் எப்படி வகுக்கப் போகின்றன என்ற கேள்வியில்தான் அரசியல்படுத்துதல் சம்மந்தப்பட்டிருக்கிறது.
விஜய் இதுவரை எறியப்பட்ட எல்லா வகையான பந்துகளையும் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்று நிரூபித்துவிட்டார். ஆகவே எதிர்க்கட்சிகளுக்கு புதிய வியூகங்கள் அவசியம். முதலில் இளைஞர்களுக்கு எம்எல்ஏ என்றால் யார்,எம்பி என்றால் யார், அதிகாரம் எப்படி இயங்குகிறது, ஒரு தனிமனிதனுக்கும் அதிகாரத்துக்குமான உறவு என்ன, தெருவிளக்கு எரியாவிட்டால் எங்கு போய் புகாரளிக்க வேண்டும், சிவிக் சென்ஸ் என்றால் என்ன என்றெல்லாம் பாடமெடுக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக பிம்பக் கவர்ச்சி என்று பேசுவது பயனளிக்காது. விஜய் படங்கள் எவ்வளவு அருவருப்பானவை என்று உணர ஒருவன் ராஜமௌலி படத்தைப் பார்க்க கூடாது. தரமான சினிமாக்களை அறிமுகப்படுத்துவதுதான் அதற்கு வழி.
விஜய் மக்களை ஒரு பொட்டலமாக கட்டி பந்து போல வளைத்து தோளில் வைத்துக் கொண்டார். பந்துக்குள் இருப்பவர்களுக்கு அது ‘சுகமாகவும்’ இருக்கலாம். ஆனால் அது நம் இயல்பு இல்லை. முரண்படுவதுதான் மனித இயல்பு. ஏராளமான முரண்பாடுகளை கையாளத் தெரிந்தவனே தலைவன். நாம் நிறைய முரண்பட வேண்டும். நிறைய கேள்வி கேட்க வேண்டும். அதுதான் விஜய் ‘தெய்வத்தை’ தரையிறக்கும் வழி. அடுத்த தேர்தலையும் விஜய் தெய்வமாகவே நின்று எதிர்கொண்டால் அவர் நம்மை மூட்டையில் கட்டி பந்து போல சுருட்ட நாம் அனுமதித்தால் நாம் அறிவிலிகளாவோம். ஜனநாயகத்தில் அறிவிலிகள் அழிவார்கள் அல்ல அழிவினை உருவாக்குவார்கள்.
தவெக, எதிர் கட்சிகள், மக்கள் என்ற மூன்று தரப்பும் முழு விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே மற்றொரு தெய்வ பிரசன்னத்தை தடுக்க முடியும். அடிக்கடி அரசியலில் தெய்வ பிரசன்னம் நிகழ்வது சமூகத்திற்கு தீங்கைத்தான் விளைவிக்கும்.
நாம் இந்தத் தருணத்தை ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள், மக்கள் மூவரும் உரையாடக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும்.
May 5, 2026 at 12:24 pm
Excellent.
May 5, 2026 at 1:39 pm
Good one keep it up Suresh
May 5, 2026 at 1:51 pm
Good Suresh Pradeep.
May 5, 2026 at 3:13 pm
சிறப்பான கட்டுரை.
May 5, 2026 at 5:06 pm
புதிய பார்வை.. சிறப்பு
May 5, 2026 at 5:13 pm
சிறப்பான கட்டுரை
May 6, 2026 at 4:53 am
நல்ல கட்டுரை அண்ணா