பேராசிரியர் டி.தருமராஜ் ‘நாயாட்டு’ என்ற புகழ்பெற்ற மலையாளப்படம் பற்றி எழுதிய கட்டுரையில் அப்படத்தில் தலித் என்ற அடையாளம் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்கும் அரசியல் உத்தியாக மட்டுமே மாறிப்போயிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி இருப்பார். இத்தனைக்கும் அதிகாரம் செயல்படும் விதம் குறித்து மிகக்கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கும் படம் அது. படத்தின் முடிவில் ‘பலிகடா’ ஆவதும் ஒரு தலித்தான். ஆனால் படத்தின் நோக்கத்தில் தலித் ‘ஆளுமை’ என்ற ஒன்று பெரிதாக காட்டப்படவில்லை. இது சமீபத்தில் வந்த படம்.

கொஞ்சம் பின்னே போய் இலக்கியத்தில் தலித் ஆளுமையை தேடிப் பார்க்கலாம். பளிச்சென்று நம் கண்ணுக்குத் தெரிகிறவர் அழகிரி பகடை (பிறகு – பூமணி). அதற்கும் பின்னே போனால்? சட்டென்று யாரும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் வரலாற்றில் தலித் ஆளுமைகள் இல்லையா என்ன? தமிழகத்திலும் கேரளத்திலும் எத்தனையோ தலித் ஆளுமைகள் வாழ்ந்தும் சாதித்தும் மறைந்திருக்கின்றனர். ஆனாலும் ஏன் அவர்களைப் பற்றிய சித்திரம் எதுவும் நம்‌ படைப்புகளில் பெரிதாக வரவில்லை. இதற்கு நான் எந்த ‘சதி’யையும் காரணமாகச் சொல்லமாட்டேன். தமிழ் இலக்கியந்தைம் பொறுத்தவரை வரலாற்று ஆளுமைகளை புனைவாக்கிப் பார்ப்பது இன்றே மிகக்குறைவுதான். அப்படி இருக்க பூமணி போன்ற ஒரு மேதை எழுத வருவதற்கு முன் அத்தகைய ஆளுமை மிகுந்த தலித்துகள் புனைவிலக்கியத்தில் இடம்பெறாததில் ஆச்சரியம் கொள்ளவோ அதிர்ச்சி அடையவோ எதுவுமில்லை. அதோடு இங்கு ஆளுமை என்பதை மனதில் தங்கும் ஒரு பாத்திரம் என்ற அர்த்தத்தில் அன்றி அறிவுஜீவி செயல்பாட்டாளர் என்ற நோக்கில் நான் பயன்படுத்தவில்லை.

தமிழில் தலித் குறித்த அக்கறை பாரதியிலேயே வெளிப்படத் தொடங்குகிறது. ஃபிஜி தீவில் கரும்புத் தோட்டத்தில் உழலும் தலித்துகள் பற்றி பாரதி கவிதை எழுதி இருக்கிறார். அடுத்ததாக புதுமைப்பித்தனின் துன்பக்கேணி. துன்பக்கேணியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பாடுகள் குறித்த ஒரு வலுவான சித்திரமும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதும் அதனால் ஏற்படும் இயல்புத் திரிபும் பேசப்படுகிறது. மலையாள நாவலான தோட்டியின் மகனும் ஏறத்தாழ இது போன்ற சித்திரத்தையே அளிக்கிறது. ஆனால் காரந்த்தின் சோமனின் உடுக்கை இவை எல்லாவற்றையும் தாண்டி நிற்கிறது. அப்படைப்பினை அப்படித் தாண்ட வைப்பது எது?‌ வேறென்ன அந்த உடுக்கைதான்!

சோமனின் உடுக்கை நாவலை நான் நேற்றுதான் வாசித்தேன். காரந்த்தின் அழிந்த பிறகு, சோமனின் உடுக்கை என்ற இரண்டு நாவல்களும் முன்னேரே மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது அச்சில் இல்லை. ஆனால் சோமனின் உடுக்கை ஒரு முன்னோடி தலித் நாவல் என்பது இலக்கியச்சூழலில் புழங்கும் பலரைப் போலவே எனக்கும் தெரிந்து இருந்தது. அதோடு தலித் இலக்கியம் ஒரு அலையென எழுந்து அதன் முடிவை ஏறத்தாழ எட்டியும்விட்டது. ஆகவே சோமனின் உடுக்கை முன்னோடிப் படைப்பே என்றாலும் தலித் இலக்கியத்தின் ‘டெம்ப்ளேட்’ அதில் இல்லாமலா போகும் என்ற அவநம்பிக்கையுடன்தான் வாசிக்கத் தொடங்கினேன். இந்த ‘டெம்ப்ளேட்’ என்பது மனித உடல்போலதான். நீங்கள் மனித நாகரிகத்துடன் தொடர்பே இல்லாத ஒரு பழங்குடியைப் பார்த்தாலும் அவர்களும் ‘புறப்பார்வை’க்கு நம்மைப்போல் தானே இருப்பார்கள்?‌ அதுபோலவே படைப்புகளின் உடலிலும் இந்த டெம்ப்ளேட் தன்மை குடியேறுகிறது.

தென் கர்நாடகத்தில் சிலநூறு குடும்பங்கள் மட்டும் வசிக்கும் ஒரு கிராமத்தில் சோம என்ற குடிப்புலையன் சங்கப்பய்யா என்ற நிலச்சுவான்தாரிடம் பண்ணை அடிமையாக உழைக்கிறான். அவனுக்கு ஐந்து பிள்ளைகள். ஆனால் நாவல் இந்தப் புள்ளியில் தொடங்குவதில்லை.‌ மொத்த கிராமமும் மௌனத்தில் மூழ்கிப்போன நள்ளிரவில் எந்த ஒலியும் ஒளியும் இல்லாத அந்தப் பொழுதில் சோமனின் உடுக்கைச் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்கிறது. ஒரு திகில் கதை அல்லது பேய்க்கதையின் தொடக்கம்போல! ஆனால் நாவல் என்னவோ பண்ணையடிமையாக உழலும் ஒரு குடும்பத்தின் விஷச்சுழல் போன்ற வாழ்க்கைச்சுழலைத்தான் பேசுவது போலத் தெரிகிறது.

சோமனும் அவனுடைய இரண்டு மூத்த மகன்களும் (சனிய, குருவ) சங்கப்பய்யாவின் வயலில் உழகின்றனர். மகள் பெள்ளி விறகும் தீவனமும் சேர்த்து வீட்டை நடத்துகிறாள். இரண்டு இளைய மகன்கள் (நீல, காள) பெரும்பாலான நேரம் உடல்நலமின்றி படுத்துக் கிடக்கின்றனர். ஆனால் சோமவிடம் இரண்டு எருதுகள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு ஒரு துண்டு நிலம் வாங்கி விவசாயம் செய்ய சோம ஆசைப்படுகிறான்.* பிரச்சினை தொடங்குவது அங்குதான்!

சோமவின் இந்த ஆசையை தவிர்த்துவிட்டு பார்க்கும்போது சோமவின் வாழ்வில் எந்தப் பிரச்சினையும் இருப்பது போலத் தெரியவில்லை. தினமும் உழைப்பதற்கு அரசி கூலியாக கிடைக்கிறது. அதில் பாதியை கள்ளுக்கடையில் கொடுத்து அந்த அரிசிக்கு இணையாக இல்லையென்றாலும் சோம மகிழ்ந்து போகும் அளவுக்கு குடிக்க அவனுக்கு கள்ளும் கிடைக்கிறது. மூத்த மகன்களும் உழைக்கிறார்கள். சோமவின் வாழ்வு அவலம் நிறைந்ததுதான்‌. ஆனால் முழுக்க இருளானது இல்லை. பிறகு ஏன் சோமவின் குடும்பம் அப்படி சிதறிப் போகிறது? காரணம் சோமவின் ‘ஆசை’தான். சோமவுக்கு எதிராக நாவலில் பிற பாத்திரங்கள் தகிடுதத்தங்கள் செய்தாலும் அவனை ஒட்டச் சுரண்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. சோமவின் ஜமீன்தார் சங்கப்பய்யாவுக்கு சோமவின் மூத்த மகன வயதுதான். அதனாலோ‌ என்னவோ சங்கப்பய்யா சோமவின் மீது பரிவுடனே நடந்து கொள்கிறான். சோமவுக்கு குத்தகைக்கு நிலம் தர சங்கப்பய்யா தயங்குவது கூட புலையன் விவசாயம் செய்யக்கூடாது என்ற ஊர்க் கட்டுப்பாட்டில் தானன்றி தனிப்பட்ட எந்தக் காரணத்துக்காகவும் இல்லை.

சோம வாங்கிய கடனுக்காக சோமவின் மகன்களை காபி தோட்டத்துக்கு அழைத்துச் செல்லும் மன்வேல்கூட அவ்வளவு தீங்கானவன் என்று சொல்லிவிட முடியாது. சோம வாழ்வில் அடுத்த அடியை எப்படியாவது எடுத்து வைத்துவிட வேண்டும் என்று விரும்பும் போதெல்லாம் சமூக நடைமுறைகளே அவனுக்குத் தடையாக வருகின்றன. தான் வளர்க்கும் எருதுகளைவிற்று மன்வேலுக்கு பட்ட கடனை அடைத்திருந்தால் சோமவின் குடும்பம் சந்திக்கும் பல பிரச்சினைகள் நிகழாமலேயே போயிருக்குமே என்றுதான் இந்நாவலை வாசிக்கும்போது நாமும் யோசிப்போம்.

காரந்த்தின் மேதைமை வெளிப்படும் இடம் இதுதான். ஊரில் துண்டு நிலம் வாங்கி விவசாயம் பண்ண ஏன் ஒரு புலையன் ‘ஆசை’ப்படக்கூடாது என்பதே அவருடைய கேள்வியாக இருக்கிறது. சொமவுக்கு இரண்டு ஆசைகள் இருக்கின்றன. ஒன்று தன் உடுக்கையை வாசிப்பது. மற்றொன்று கொஞ்சம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணுவது. ஊராரின் தூக்கத்தையே கெடுக்கும்படி அவன் உடுக்கை வாசித்தாலும் ஊரில் யாரும் அதுபற்றி புகார் சொல்வதில்லை. சோம தன் புலைய வாழ்வில் பகல் முழுக்க அனுபவிக்கும் வலிகளுக்கும் நுண் அவமானங்களுக்கும் ஒரு மருந்தென அவன் உடுக்கை வாசிப்பது அமைகிறது. சோம விவசாயம் பண்ண விரும்புவதற்கும் தன் அவமானத்தையும் வலிகளையும் போக்கிக் கொள்ள விரும்புவதுதான் காரணம். ஆனால் ஊர் அதை அனுமதிக்க மறுக்கிறது. அதை எப்படியாவது தடுத்தவிட வேண்டும் என்று மொத்த சமூகமும் முனைகிறது. சோம கிறிஸ்துவத்துக்கு மாறினால் ஒரு துண்டு நிலம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சோமவின் இரண்டாவது மகன் குருவ அப்படித்தான் மாறிப் போகிறான். ஆனால் சோமவுக்கு மதம் மாற விருப்பமில்லை.‌‌ அவன் தன் காவல் பூதமான பஞ்சுருளியை அஞ்சுகிறான். வழிபடுகிறான்.

சோம தனக்கு ஏற்கனவே இருக்கும் அடையாளத்தினை அப்படியே தக்க வைத்துக் கொண்டு அங்கிருந்து மேலெழ விரும்புகிறான். அது நிகழ்வதற்கான வாய்ப்பு சமூகத்தில் இல்லை. ஒன்று அவன் விவசாயத்தை கைவிட வேண்டும் அல்லது தன் மரபைக் கைவிட வேண்டும். நாவல் முழுக்க சோமவிடம் இந்த தவிப்பே வெளிப்படுகிறது. பொதுவாக முற்போக்கு நாவல்கள் தன் பாத்திரங்கள் எதையாவது ஒன்றைக் கைவிட்டு மேலேறிவிடுவதாகவே காண்பிக்க விரும்பும். பழைய நினைவுகளை உதறுவதையே எல்லா தலித்துகளுக்கும் சிந்தனையாளர்கள் பரிந்துரைப்பார்கள். அவ்வாறு நினைவுகளையும் ஆசைகளையும் கைவிடுவது எவ்வளவு வலி நிறைந்தது என்பதை பரிவோடு அணுகுகிறவர்கள் இன்றும் குறைவுதான். காரந்த் அந்தப் பரிவுடன்தான் சோமவை அணுகுகிறார்.

சோமவின் வாழ்க்கையில் உள்ள அவலங்களை இந்த நாவல் நேரடியாக எங்கும் சொல்வதே இல்லை. சோமவின் குடும்பத்தில் ஒரு பெரிய இழப்பு நிகழ்ந்த பிறகும்கூட அவன் வீட்டிற்கு உறவினர்கள் வருவதும் தொடக்கத்தில் தொல்லையெனத் தெரியும் உறவினர்களின் இருப்பு மெல்ல மெல்ல கொண்டாட்டமானதாக மாறுவதும் இந்நாவலில் எழுதப்பட்டிருக்கும் அபாரமான பகுதி. சோமவின் உறவினர்களுடன் உப்பு பச்சைமிளகாய் வைத்து கஞ்சி குடிக்கும் நாம் ஒரு கட்டத்தில் வேட்டையில் கிடைத்த முயல்கறியையும் ஊரில் இறந்துபோன எருமையையும் அவ்வளவு ஆனந்தமாக சாப்பிடத் தொடங்குவோம். சோமவின் வீட்டிலிருந்து உறவினர்கள் புறப்படுவது நாமும் அங்கிருந்து புறப்படுவது போன்ற வலியைத் தரும்.

சாதியை தனிமனிதனின் வக்கிரமென்று விளக்காமல் அதையொரு சமூக கட்டுமானமாகவே இந்நாவல் காண்கிறது. அக்கட்டுமானத்திற்குள் சுரண்டுகிறவன் சுரண்டப்படுகிறவன் என்ற எளிய எதிர்வுகளை முன்வைக்காமல் மனித மனதின் இயல்புகளையே கதையோட்டத்திற்கு நாவல் ஆதாரமாக கொள்கிறது. உதாரணத்திற்கு சோமவுக்கு அவன் மகள் பெள்ளிக்குமான உறவு. அவள் அவனுக்கு ஏறத்தாழ ஒரு தாயைப்போலவும் இறந்து போன மனைவியைப் போலவும்தான் இருக்கிறாள். அதேநேரம் அந்த காலத்தில் திருமணமாகும் வயதைக் கடந்த இளம்பெண்.‌ அவளுடைய பாலியல் தேர்வுகள் கூட சுரண்டல் என்றெல்லாம் இல்லாமல் இயல்பாகவே முன்வைக்கப்படுகின்றன. ‘கற்பு’ போவதை நினைத்து அவள் சீற்றம் கொள்வதில்லை. தனக்கு வேறு என்ன வழி இருக்கிறது என்றே யோசிக்கிறாள். நாவலின் இறுதி அத்தியாயத்தில் சோம மன்வேலுடன் பெள்ளியைப் பார்த்த பிறகு எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பது மிகுந்த நுட்பமான இடம். அதீதமான நாடகீயத் தன்மையுடன் அந்த ‘உச்சத்தை’ காரந்த் எழுதி இருக்கிறார்.ஒ

ஒரு துறவியைப் போல சோம தன்னுடைய உடைமை ஒவ்வொன்றையும் கைவிடுகிறான். சோமவின் வாழ்க்கை முடிவு என்பதைவிட ஒரு தொடக்கம் என்பதாகவே காரந்த் இந்த நாவலை முடித்திருக்கிறார்.ஒவ்வொரு தனிமனிதரின் விருப்பத்திற்கு பின்னும் அவருடைய சமூகநிலை, பால் அடையாளம், சாதி, மதம் போன்ற காரணங்களைத் தாண்டி அகநிறைவுக்கான ஏக்கமும் செயல்படுகிறது. மேற்சொன்ன அடையாளங்களில் மேம்பட்டவர்கள் என்று‌ யாரெல்லாம் ஒத்துக்கொள்ளப்பட்டார்களோ (இந்தியாவைப் பொறுத்தவரை உயர்சாதி இந்து ஆண்) அவர்களைத் தவிர பிற அனைவரும் வாழ்நாள் முழுக்க தங்கள் அடையாளங்களுடன் போராடிக் கொண்டிருப்பதன் சித்தரித்தையே மானுட விடுதலையை பேசும் படைப்புகள் அளிக்கின்றன. மாறாக சோமனின் உடுக்கை சோமவின் அந்தரங்க விருப்பத்தையும் குழப்பமும் ஆவேசமும் நிறைந்த அவனது ஆளுமையையும் நம் முன்னே வைக்கிறது. காரந்த் நாவலை இவ்வாறு முடிக்கிறார்.

/பிடித்திருந்த உடுக்கை; ஓங்கிய கை; கண்களில் நிறைந்திருந்த ஆவேசம் – எல்லாம் இருந்தது இருந்தபடியே இருந்தன. ஆனால், சோம மட்டும் இல்லை!/

இவ்விடத்தில் சோம ஒரு குறியீடாகிப் போகிறார். நாவல் வாசிக்கும்போது இக்கட்டுரையின் தலைப்பு போலத்தான் சோமவிடம் நாமும் கேட்கிறோம்.‘சோம, அந்தத் துடியை நீங்கள் கீழே வைத்திருக்கக்கூடாதா?’ஆனால் ‘சோம ஏன் அந்தத் துடியை கீழே வைக்க வேண்டும்?’ என்று அக்கேள்வியை மாற்றிக் கேட்க வைப்பதே இந்த நாவலின் வெற்றி.