காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை

(பட மூலம்: தமிழ் விக்கி இணையதளம்)
எழுத்தாளர் இராசேந்திர சோழன் கடந்த மார்ச் 1 (2024) அன்று காலமானார். பொதுவாக ஒரு படைப்பாளியின் மறைவை ஒட்டி அவர் சார்ந்து பகிரப்படும் நினைவுகள், அவர் படைப்புகளை மதிப்பிட்டு வெளியிடப்படும் கட்டுரைகள் முக்கியமானவை. முதல் வகை எழுத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்த புரிதலை உருவாக்குவதன் வழியாக வாசகர்கள் அவரை மேலும் நெருங்க உதவுகின்றன. இராசேந்திர சோழன் குறித்து நினைவெனப் பகிர என்னிடம் ஏதுமில்லை. அவருடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இரண்டாவது வகை எழுத்துகள் – அதாவது மதிப்பீடுகள் – மற்றொரு வகையில் முக்கியமானதாகிறது. வாழும்போது எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடு, அழகியல் நிலைப்பாடு போன்றவற்றால் நட்பும் பகையுமான சூழலில் இருந்து உருவாகும் மதிப்பீடுகள் அக்கலைஞனின் மரணத்திற்குப் பிறகு மெல்ல வலுவிழக்கத் தொடங்குகின்றன. வாசிப்பின் வழியாக மட்டும் எழுத்தாளர் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறார். அவ்வகையில் இராசேந்திர சோழனுக்கு அஞ்சலி செலுத்தும் இக்கட்டுரை அவர் படைப்புகள் மற்றும் ஆளுமை குறித்த மதிப்பீடாகவும் அமைகிறது.
*
“இராசேந்திர சோழனின் மிகச் சிறந்த கதைகளில் பெரும்பாலானவை அவர் எழுதத் தொடங்கிய எழுபதுகளின் தொடக்கத்திலேயே வெளிவந்துவிட்டன. இடதுசாரியாக களச் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கத் தொடங்கிவிட்டதால் அதன் பிறகான காலங்களில் அவர் எழுதியவை குறைவு. அவற்றிலும் பெரும்பாலானவை அரசியல் பகடிக் கதைகள்.”
இராசேந்திர சோழன் குறித்து தமிழ்ச்சூழலில் பொதுவாக நிலவும் கருத்து ஏறத்தாழ இதுதான். இக்கருத்தினை முன்வைத்த பிறகு இராசேந்திர சோழனின் படைப்புகள் பற்றிப் பேசுவது ரொம்பவும் எளிமையாகிப் போகிறது. ‘புற்றிலுறையும் பாம்புகள்’, ‘சிறகுகள் முளைத்து’ என்று பாலுறவின் பரிணாமங்களில் ஒன்று உக்கிரமாக வெளிப்படும் கதையொன்றை எடுத்து வசதியாகப் பேசிவிட முடிகிறது. அங்கிருந்து தொடங்கி இராசோவின் படைப்புலகைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டி நீட்டி பேச முடியும். ஆனால் ஒரு படைப்பாளியைப் பற்றி முழுமையான மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்ளும்போது அவருடைய சாதனைகள் அளவுக்கு அவருடைய சறுக்கல்களையும் கணக்கில் கொள்வதே சரி என்று நான் நினைக்கிறேன். சாதனைகள், சறுக்கல்கள் போன்ற சொற்கள் ஏதோ பரீட்சை பேப்பரில் மதிப்பெண் போடுவது போலத் தொனிக்கின்றன! இப்படிச் சொல்லலாம். கலை வெற்றிகள் அளவுக்கே படைப்பாளியின் அக்கறை செயல்பட்ட தளமும் முக்கியமானது.
‘எங்கள் தெருவில் ஒரு கதாப்பாத்திரம்’ என்ற கதையின் வழியாகவே இராசோ இலக்கிய உலகில் கவனம் பெறுகிறார். அவருடைய இருபதுகளில் எழுதிய இக்கதையிலேயே முதிர்ச்சியும் பூரணமும் வெளிப்படுகிறது. முதல் வாசிப்புக்கு பவுனம்மா என்ற பெண்ணின் கனிவையும் தன்னைச் சார்ந்தவர்கள் அத்தனை பேர் மீதான பிரியத்தையும் சொல்லும் கதையாகத் தெரிகிறது. தொடக்ககால சிறுகதை ஒன்றில் ஒற்றைக் குறிக்கோளுடன் பாயாமல் உரையாடல்கள் வழியாக வலுவான தருணங்களைக் கட்டமைத்து பவுனம்மாவின் ஆளுமையை உணர்த்திச் செல்வதாக இராசோவின் எழுத்தின் மீதான ஆளுகையை காட்டிவிடுகிறது. ஆனால் மேலதிகமாக இராசோ இக்கதையில் பவுனம்மா நுட்பமாக சுரண்டப்படுவதையும் சொல்கிறார். ஆனால் இச்சுரண்டல் சார்ந்து எந்தவொரு நேர்க்குறிப்பும் கதையில் இல்லை. இந்த நுட்பமே இன்றும் வாசிக்கத்தக்க படைப்பாக இதை மாற்றுகிறது.
‘கடன்’, ‘மனக்கணக்கு’ என பொருளாதார ஏற்றத்தாழ்வினால் துயர் நிறைந்ததாக மாறிப்போன வாழ்க்கைகளையும் இராசோ வலுவான சித்திரங்களாக எழுதி இருக்கிறார். ‘சுழல் காற்றும் சருகுகளும்’ , ‘அவுட்பாஸ்’, ‘பறிமுதல்’ போன்ற கதைகள் வறுமையும் ஆதரவின்மையும் சிறுவர்களில் செலுத்தும் தாக்கங்களையும் அக்கறையுடன் பேசுகின்றன. இராசோவின் கதைகள் அனைத்தையும் பட்டியலிட்டு வகைப்படுத்துவது என் நோக்கமல்ல. சிறப்பானவை என்று பாராட்டப்படும் கதைகளைப் புரிந்து கொள்ள இந்த அறிமுகம் தேவையானதாகிறது. மேற்சொன்ன கதைகளில் இருந்தும் இராசோவின் இடதுசாரிப் பின்னணியில் இருந்தும் இக்கதைகள் அனைத்தும் ‘மனிதாபிமான முற்போக்கு’ தன்மை கொண்ட கதைகள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆண் பெண் உறவு சார்ந்த கதைகளையும் இவ்வகையான மனிதாபிமான நோக்கிலிருந்து உருவாக்கிக் கொண்டிருப்பதே இராசோவின் தனித்துவம்.
‘சிறகுகள் முளைத்து’ என்ற இராசோவின் குறுநாவல் பிரபலமானது. அந்நூலுக்கு அவர் எழுதிய நீளமான பின்னுரை நூலைவிடப் பிரபலமானது. ஒருவகையில் இராசோவின் இலக்கியக் கொள்கை சார்ந்த பிரகடனம் போல அப்பின்னுரை அமைந்திருக்கிறது. இடதுசாரிகள் மார்க்சியத்தை வெறும் உற்பத்தி உறவு சார்ந்த கொள்கையாக குறுக்கிப் புரிந்து வைத்திருப்பதை கடுமையாக விமர்சிக்கிறார். மார்க்சிய நோக்கினை முதலாளி – தொழிலாளி உறவில் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து மட்டத்திலான உறவுகளிலும் இராசேந்திர சோழன் சோதனை செய்ய விரும்புகிறார். இவ்விருப்பத்தின் விளைவாகவே அவருடைய கதைகள் நவீனத் தன்மை அடைகின்றன. முற்போக்கு கொள்கைகளை மிக எளிதாக தொழிற்சாலையில் அரசாங்கத்தில் பள்ளிகளில் சமூகத்தில் அமுல்படுத்திவிட முடியும். கருத்தளவிலாவது. மேற்சொன்ன நிறுவனங்கள் அனைத்தும் ஏதோவொரு வகையில் நவீன விழுமியங்களால் உருவாக்கப்பட்டவை. நவீனப் பொருளாதாரக் கொள்கைகள், ஜனநாயகம் என புதுமையை ஏற்றுக் கொள்ளும் தன்மை அவற்றில் கொஞ்சமாவது உண்டு. ஆனால் குடும்பத்தில் அது இயல்வதல்ல. குடும்பத்தை கட்டி நிறுத்தி இருப்பது காமம். ‘இயல்பான குடும்பம்’ என்று சொல்லப்படுவது உடலுறவின் வழியாக குழந்தை பெற்றுக் கொண்ட ஆணும் பெண்ணும் குழந்தைகளையும் இருக்கும் குடும்பத்தைத்தான். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் கொண்ட குடும்பமோ கணவனைத் தவிர வேறு ஆண் வழியா பிறந்த குழந்தைகளை கொண்ட குடும்பமோ இயல்பானதாக கருதப்படுவதில்லை. சமூகம் காமத்தின் வழியே உருவாகாத குடும்பங்களை இன்றுமே சந்தேகத்துடனேயே பார்க்கிறது. ஆனால் இவற்றை நாம் பொதுவில் விவாதிப்பது இல்லை. குடும்பத்தின் மீது சமூகம் உருவாக்கி இருக்கும் காமம் சார்ந்த இந்த நிர்பந்தமே பெண்ணின் மீது ஏகப்பட்ட தளைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. காலங்காலமாக சொல்லப்படும் ‘பத்தினிக் கதைகள்’, பெண்களின் மீது சமூகமும் குடும்பமும் இணைந்து நிகழ்த்தும் கண்காணிப்பு என்று குடும்பம் என்ற நிறுவனம் மற்ற நிறுவனங்களைப் போலவே தன்னுடைய அங்கத்தினர்கள் மீது கட்டுப்பாடுகளை செலுத்துகிறது. இராசேந்திர சோழனின் கதைகள் இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்பட்ட புள்ளியில் நிகழ்கின்றன என்பதே அவற்றின் சிறப்பு.
இம்மீறல் அவர் கதைகளில் எவ்வாறு நிகழ்கிறது? பேச்சின் வழியாக. அறிவார்ந்த பேச்சாகவோ, அன்பு ததும்பும் பேச்சாகவோ அது இருப்பதில்லை. முதல் பார்வைக்கு அப்பேச்சில் எந்த மர்மமும் இருப்பதாகக்கூட நமக்குப் படுவதில்லை. நவீனத் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் எவ்வளவு குறைவாகப் பேசி நாம் கேட்டிருக்கிறோம் என்பதை இராசோவின் உரையாடல்களை வாசிக்கும்போதுதான் உணர்ந்து கொள்ள முடிகிறது. நெடுங்காலமாக வன்முறையால் ஒடுக்கப்பட்டவனை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்து பேசச் சொல்வது போல இராசோ தன் பெண் பாத்திரங்களைப் பேச வைக்கிறார். ‘புற்றிலுறையும் பாம்புகள்’, ‘நாட்டம்’, ‘ஊனம்’, ‘கோணல் வடிவங்கள்’ என்று ஒவ்வொரு கதையிலும் கேட்கும் குரல்கள் அனைத்தும் நாம் முன்பு கேட்டறியாதவை. அதனாலேயே முதல் வாசிப்பில் அதிர்ச்சியும் அசூயையும் கொள்ளச் செய்கிறவை.
நாட்டம் கதையில் பெண்ணின் இச்சை நேரடியாக வெளிப்படுகிறது என்றால் புற்றிலுறையும் பாம்புகள் கதையில் அவ்விச்சை பல அடுக்குகளுக்கு பின்னே இருக்கிறது. இக்குரல்களைக் கேட்கும் வாசகன் இரண்டு எதிர்மறை உணர்வுகளை அடையும் வாய்ப்பிருக்கிறது. ஒன்று இப்படியெல்லாம் பெண்கள் பேசுகிறார்களா? அடுத்ததாக இக்குரல்களுக்கும் பாலுணர்ச்சிக் கதைகளில் பெண்கள் வெளிப்படுத்தும் குரல்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
முதல் கேள்விக்கான பதில் ரொம்பவும் எளிமையானதுதான். இயல்புவாதத்தன்மை கொண்ட இராசேந்திர சோழனின் புனைவுகளில் மிக இயல்பாக சுதந்திரமான இபபெண்களின் குரல்கள் புனையப்படுகின்றன. சர்வசாதாரணமாகத் தெரியும் உரையாடல்களுக்கு பின்னே ஆசிரியரின் பிரக்ஞையும் கற்பனையும் உயிரோட்டத்துடன் செயல்பட்டிருப்பதை உணர சற்று பொறுப்புடன் இராசோவின் எழுத்துக்களை அணுக வேண்டி இருக்கிறது. பிரபஞ்சனின் சந்தியா நாவலின் நாயகியான சந்தியாவை வாசிக்கும்போது அது முழுக்க முழுக்க எழுத்தாளரின் பெண்கள் மீதான அக்கறை சார்ந்த முற்போக்கு கருத்துக்களை நம்மிடம் ஒப்பிக்க உருவான பாத்திரம் என்று தெரிந்து விடுகிறது. ஆனால் இராசோவுடைய பலமே அவர் படைப்புகளில் எங்குமே பெண்கள் மீதான அக்கறை கருத்துகளாக வெளியிடப்பபடுதில்லை என்பதில் அடங்கி இருக்கிறது. ஆகவே ‘இயல்பாக’ப் பேசும் தொனியில் அமைக்கப்பட்டுள்ள உரையாடல்கள் உண்மையில் வாசகர்கள் கற்பனை செய்யவும் விவாதிக்கவும் வேண்டிய அவசியத்தை உருவாக்கி விடுகின்றன.
இரண்டாவது கேள்வி சற்று சிக்கலானது. கற்பனாவாத பாலுணர்ச்சிக் கதைகளிலும் பெண்கள் இதுபோல இச்சையை வெளிப்படுத்தும் விதமாகத்தானே பேசுகின்றனர். சொல்லப்போனால் அவ்வகைக் கதைகளின் அடிப்படையே பெண்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள்தானே! ஆனால் அவ்வுணர்கள் போலியானவை. போலியானவை என்பதைவிட தட்டையானவை என்பது மேலும் பொருந்தும். அக்கதைகளின் ‘சட்டகம்’ என்பது மெல்லிய குற்றவுணர்வுடன் கலந்த உடற்கிளர்ச்சி. ஆனால் இராசோவின் கதைகள் அவ்வுணர்வின் ஆழங்களுக்குள் செல்கின்றன. மானுட உணர்வுகளில் காமம் உருவாக்கும் நெருக்கத்தையும் இடைவெளியையும் பேசுகின்றன. ஊனம் கதையில் கணவனுடைய பாலுறவுத் தகுதியின்மையால் வேற்று ஆண்களுடன் சல்லாபிக்க முயலும் பெண் கதை சொல்லியின் பார்வையில் சித்தரிக்கப்படுகிறாள். அவள் மீது கதை சொல்லிக்கு இரக்கமும் அச்சமும் மாறி மாறித் தோன்றுகிறது. அவள் கணவன் தற்கொலை செய்து கொள்கிறான். துக்க வீட்டில் கணவனின் இறப்பை கண்டுகொள்ளாமல் எங்காவது அமர்ந்திருப்பாள் என்று கதைசொல்லி நினைக்கிறான். ஆனால் அவள் இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறாள். இந்தப் புள்ளியில் நிறுத்தினாலே அது நல்ல கதைதான். ஆனால் இராசேந்திர சோழன் மேலும் ஒரு வரியை எழுதுகிறார். துக்க வீட்டுக்குச் சென்று திரும்பும் கதை சொல்லியிடம் அவன் மனைவி சொல்கிறாள்.
‘என்னா இப்பிடியே வர்றீங்க. போய் அப்பிடியே தோட்டத்தால வாங்க. . . தல முழுவ வேணா. ‘
கதையோடு வாசிக்கும்போது வெவ்வேறு அர்த்தத்தளங்களை திறக்கும் சாத்தியம் கொண்ட வரியாகிவிடுகிறது. எளிய பாலியல் கதைகளில் மட்டுமல்ல மிகத்தீவிரமான மொழிநடையில் திருகித் திருகி எழுதப்படும் பெரும்பாலான சமகாலக் கதைகளில் கூட இத்தகைய நுட்பமும் ஆழமும் கைகூடுவதில்லை. முன்பே சொன்னதுபோல இராசோவின் அறிவார்ந்த பார்வையே இத்தகைய ஆழங்களை கதைகளில் உருவாக்குகிறது.
மேற்சொன்ன கதைகள் அனைத்தும் எழுபதுகளின் தொடக்கத்தில் எழுதப்பட்டவை. நுட்பமான அவதானிப்புகளும் புதுமையான பார்வையும் வெளிப்படும் இக்கதைகளில் இருந்து இராசேந்திர சோழன் நகர்ந்து குடும்பத்தை மையமிட்டு கதைகளை அமைக்கத் தொடங்குவது அடுத்த கட்டம் எனலாம். எண்பதுகளில் எழுதப்பட்ட இவ்வகைக் கதைகளில் கண்டறிதலின் குதூகலத்தைத் தாண்டி எல்லாப் பக்கங்களையும் உணர்ந்து கொண்ட விவேகம் மேலோங்கி இருக்கிறது. ‘பரிதாப எழுத்தாளர் பரதேசியார் பண்டித புராணம்’ என்றொரு குறுநாவலை இராசேந்திரன் சோழன் எழுபதுகளின் பிற்பகுதியில் எழுதி இருக்கிறார். எழுதப்பட்டு ஏறத்தாழ இருபது வருடங்டள் கழித்து வெளியாகி இருக்கிறது. இந்நூல் தமிழ்ச்சூழலில் பெரிதாக விவாதிக்கப்படாதது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஒருவேளை குறுநாவலின் தலைப்பும் அதன் தொடக்கமாக அமைந்த பக்கங்களும் நூலின் மீது விலக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இராசேந்திர சோழனின் வாழ்வை ஒட்டிய தன்வரலாற்றுத்தன்மை கொண்ட குறுநாவல் இது. Writer’s Blockல் அவதிப்படும் புதிதாகத் திருமணமான ஒரு இளம் எழுத்தாளனின் வாழ்வை பகடி தொனிக்க எழுதி இருக்கிறார். இக்குறுநாவல் பேசும் எழுத்தாளனின் உளவியல் சிக்கல்கள் தமிழ் எழுத்துலகில் அதிகம் பதிவாகாதவை. தொடக்கத்தில் எழுத்தாளரை எரிச்சலூட்டும் பாத்திரமாக மட்டுமே இடம்பெறும் அவர் மனைவி ஒரு கட்டத்தில் எழுத்தாளரையும் மீறி வியாபிப்பது அபாரமான கலைத்தருணம். மார்க்சியம் கற்றவனாக அறிவுஜீவியாக மனைவியின் பொறுப்பின்மையை தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும் கணவனாக எழுத்தாளர் நமக்குத் தெரிகிறார். ஆனால் அவனது பலகீனமான புள்ளியான, எழுத முடியாத சங்கடத்தின் மீது அடிப்பதன் வழியாக அவன் மனைவி அவனை நிலைகுலையச் செய்கிறாள். உண்மையில் இராசேந்திர சோழன் இக்குறுநாவலில் பேசி இருப்பது மிகத்தீவிரமான இருத்தலியல் சிக்கல். ஆனால் அதையுமே விலகி நின்று பார்க்கும் அறிவார்ந்த கோணம் வெளிப்படுவதே இப்படைப்பின் சிறப்பு. (இக்குறுநாவல் குறித்து மட்டும் தனியே விரிவாக எழுத வேண்டும். இங்கே விரித்துப் பேசினால் கட்டுரையின் நோக்கம் தகர்ந்துவிடுமல்லவா!)
பரிதாப எழுத்தாளர் பரதேசியார் பண்டித புராணம் குறித்து இவ்வளவு நீளமாகச் சொன்னதன் காரணம் இராசேந்திர சோழனின் குடும்பம் பற்றிய பார்வையில் தோன்றியிருக்கும் மாற்றத்தைச் சுட்டவே.
பொதுவாக இராசேந்திரன் சோழன் மீது அவர் பிறழ்வுகளையும் மீறல்களையும் எழுதினார் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இராசோ மனித உறவுகளில் எதையும் பிறழ்வானது என்று கருதவில்லை. பிறழ்வு மீறல் போன்ற சொற்கள் நம்முடைய வைதீகமான பார்வையில் இருந்து உருவாகின்றன. ஆனால் கணவன் மனைவி உறவிலுள்ள காமத்திற்கு அப்பாற்பட்ட சிடுக்குகளை நுணுக்கமாக சித்தரித்த பரிதாப எழுத்தாளர் பரதேசியார் பண்டித புராணம் யாருடைய கவனத்தையும் கவராதது வியப்பளிக்கிறது. இழை, சிதைவுகள், சூழல் என குடும்ப அமைப்பின் வெவ்வேறு புள்ளிகளை சித்தரித்த கதைகளை இராசோ எண்பதுகளில் எழுதி இருக்கிறார். இவற்றில் இழை முக்கியமான கதை. முதல் பார்வைக்கு வெறும் கணவன் மனைவி உரையாடலாக மட்டுமே இக்கதை தெரிகிறது. ஆனால் இவ்வுரையாடலை நாம் இதற்கு முன் எங்குமே கேட்டதில்லை. அசந்தர்ப்பமான சூழலில் யார் வீட்டிலோ நுழைய நேர்ந்து அங்கு கணவனும் மனைவியும் நாம் இருப்பதை உணராது பேசிக் கொண்டிருப்பது போல அவ்வுரையாடல் தொனிக்கிறது. அதே சலிப்பும் ஆதங்கமும் பிரியமுமான தொனியிலேயே அவர்கள் உடலுறவும் கொள்கிறார்கள்! அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் வெளியேறி விடுகிறோம். வாசக மனதில் இக்கதை உருவாக்கும் சங்கடமே இதன் பெறுமதி. சாதாரணமாக கடந்து செல்லும் ஒவ்வொரு இல்லத்தையும் இக்கதை மர்மப்படுத்தி விடுகிறது!
இராசேந்திர சோழன் குறித்து அதிகமும் விவாதிக்கப்படாத அல்லது ஒருசில சொற்களில் கடந்து செல்லும் ஒரு அம்சம் இருக்கிறது. அது அவருடைய அரசியல் முகம். இராசோவின் அரசியல் ஆர்வங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய படைப்புமொழியை தீவிரமான களச்செயல்பாடுகள் பாதித்திருக்கின்றன என்பதை மட்டும் உணர்ந்து கொள்ள முடிகிறது. சவாரி, நாய்க்கடி மாதிரியான பகடிக் கதைகளை களச்செயல்பாடுகள் அளிக்கும் கசப்பிலிருந்தும் சலிப்பிலிருந்துமே எழுதி இருக்கிறார். பரிதாப எழுத்தாளர் பரதேசியார் பண்டித புராணம் குறுநாவவில் இடம்பெறும் கூற்றின் வழியாக இராசோவின் அன்றைய உளநிலையை ஓரளவு விளங்கிக் கொள்ள இயல்கிறது.
ஒரு இலக்கியவாதியாய் இருந்து வாழ்வையே, ஒரு இலக்கிய அனுபவமாகப் பார்ப்பதற்கும், ஒரு அரசியல்வாதியாயிருந்து வாழ்வையே அரசியல் அனுபவமாகப் பார்ப்பதற்கும் இரண்டுக்கும் அடிப்படையில் பெருத்த வேறுபாடுகள் உண்டு என்பதால் நம் எழுத்தாளர்ப் பெருந்தகைதவர்கள் தாம் இலக்கியவாதியாய் இருப்பதைவிடவும் அரசியல்வாதியாய் இருப்பதற்கான சூழ்நிலைகளினாலேயே அதிகம் பாதிக்கப்பட்டு, அதனால் அவர்தம் படைப்பு மனோநிலை சிதைந்து, அது வற்றாத ஜீவ ஊற்றுப் போல பெருக்கெடுத்தோடிய அவர்தம் கற்பனை வளத்தையே வறட்சியடையச் செய்துவிட்டிருக்கலாம்
சுயபகடி தொனிக்கும் இக்கூற்றின் சாரத்தை விளங்கிக் கொள்வது கடினமானதல்ல.
இராசோவின் இந்த மனநிலையைப் பற்றி பேசாமல் அவருடைய எழுத்தாளுமை குறித்த இக்கட்டுரை முழுமைபெறாது. தீவிரமான இலக்கியப் படைப்புகள் நெருக்கடிகளில் இருந்தே உருவாகின்றன. படைப்பாளியின் மனம் ஒரு உலகை கற்பனை செய்கிறது. அது யதார்த்த உலகில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. ஒரு லட்சிய நிலையில் இருந்து யதார்த்த உலகினை அணுகும்போது படைப்பாளியின் மனம் கொள்ளும் கரிசனம்,கசப்பு, துயர் எல்லாமும் ஒரு இலக்கியப் படைப்பின் உணர்வுத்தளத்தை கட்டமைப்பதில் முக்கியமான பங்காற்றுகின்றன. இராசேந்திர சோழன் தன்னுடைய சிறுகதைகளில் தன்னுடைய லட்சியத்திற்கும் சமூக நடைமுறைக்கும் உள்ள இடைவெளிகளை வெற்றிகரமாக சித்தரித்துக் காண்பிக்கிறார். ஆனால் அதுதான் அவருடைய எல்லையா? இராசேந்திர சோழனின் கதைகளைப் படிக்கும் யாரும் குறைந்த சொற்களில் நிகழும் சூழல் விவரணைகள் கூட ஒரு நாவலின் அத்தியாயத்தில் இடம்பெறும் பெறுமானம் கொண்டதாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். நவீனத்துவ சொல்முறை உச்சகட்ட செல்வாக்குடன் திகழந்த காலத்தில் எழுதப்பட்ட இராசேந்திர சோழனின் கதைகளில் பலவும் மிக நீளமானவையாக இருக்கின்றன. சமூக விமர்சன நோக்கும் நேரடியான அரசியல் அனுபவங்கள் கொண்டவரெனினும் அவருடைய படைப்புகளில் அப்பட்டமான பிரச்சாரமோ ஆசிரியர் உள்ளே புகுந்து பாத்திரங்களை பேச வைப்பதோ நிகழ்வதில்லை. இலக்கியம் சார்ந்த இந்தத் தெளிவு இராசேந்திர சோழனின் எளிமையான பகடிக் கதைகளில் கூட வெளிப்படுகிறது. ஆகவே அவருடைய மன அமைப்பு இயல்பில் ஒரு நாவலாசிரியருக்குரியதாக இருக்கிறது. சிறகுகள் முளைத்து என்ற அவருடைய ஆரம்பகால குறுநாவலிலேயே அதற்கான தடயங்கள் தெரிகின்றன என்றாலும் இராசேந்திரன் சோழன் குறிப்பிடும்படியான நாவல் எதையும் எழுதவில்லை. இக்கூற்றினை ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. ஆனால் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு ஏற்பட்ட ஒரு இழப்பாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகவே இதைபற்றி சற்று பேசவும் வேண்டி இருக்கிறது. இராசேந்திர சோழன் தவிர இவ்விஷயத்தை முன்னிட்டுப் பேச வேறு ஆளுமைகள் யாரும் நம்மிடம் இல்லை.
இராசேந்திர சோழனின் படைப்புகள் இயல்புவாதத்தன்மை கொண்டிருந்தாலும் அவர் எழுத்து பெரும்பாலும் தன் ‘முன்னே’ நிகழ்ந்தவற்றின் மீதான விசாரணையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இவ்விசாரணையிலிருந்து இராசேந்திர சோழன் தன் சுயத்தையும் துண்டித்துக் கொள்ளவில்லை. தன்னுடைய மார்க்சிய நோக்கு மட்டும்தான் தன்னுடைய சுயம் என்று அவர் எண்ணியிருந்தால் ‘உளைச்சல்’ மாதிரியான ஒரு கதையை அவர் எழுதி இருக்கமாட்டார். எழுத்தாளனின் சுயம் குறித்த ஆழமான விசாரணைகளை நிகழ்த்தும் பரிதாப எழுத்தாளர் பரதேசியார் பண்டித புராணம் என்றொரு படைப்பையும் அவரால் தந்திருக்க முடியாது. ஆகவே இராசேந்திர சோழன் தான் உட்பட எதுவொன்றையும் கூர்மையான உள்ளுணர்வின் துணையுடன் மட்டுமே அணுகி இருக்கிறார் என்பது தெளிவு. ஆகவே அரசியல் கதைகளை எழுதும்போது பகடியை மட்டுமே அதற்கான கருவியாகக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய பிரக்ஞைபூர்வமான முடிவு என்றே எடுத்துக் கொள்ளலாம். அரசியல் செயல்பாடுகள் தன்னுடைய படைப்பு மனநிலையை வற்றச் செய்வதாக எழுத்தாளர் பரதேசியார் எண்ணுவதுகூட இராசேந்திர சோழனின் எண்ணம் என்றே கொள்ளலாம்.
படைப்பு மனநிலை கைவிட்டுப் போவதற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் அரசியல் செயல்பாடு ஒரு காரணமாக இருக்க இயலுமா? ஏனெனில் இன்றைய சூழலில் படைப்பாளிகள் அனைவரும் நிச்சயமாக ஒரு அரசியல் நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும் என்ற மறைமுகக் கட்டாயம் நிலவுகிறது. அது இயல்பானதும்கூட. சிற்றிதழ் சூழலைக் கடந்து இலக்கியம் (ஆயிரம் குறைபாடுகளுடன் என்றாலும் கூட) பொதுத்தளம் நோக்கிப் போகிறது. அறிவின் துணைகொண்டு விஷயங்களை அணுகத் தெரியாத ஒருவர் படைப்பாளியை அவர் “நம்மவர்தானா?” என்று உறுதி செய்து கொள்ள அவருடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள ஆசைப்படுவது இயல்பானதுதானே! ஆனால் படைப்பு மனநிலை கொண்ட ஒருவரை அரசியல் அவருடைய ஆழ்தளங்களில் இருந்து வெளியே இழுத்து வந்துவிடுகிறது.
இராசேந்திர சோழனும் இந்த ‘விபத்தினை’ எதிர்கொண்டிருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இந்தத் தளத்தில் அவருடைய பங்களிப்பு என்பது எழுத முடியாமல் போவதன் தவிப்பினை நுணுக்கத்துடன் பதிவு செய்த பரிதாப எழுத்தாளர் பரதேசியார் பண்டித புராணம் குறுநாவல்தான். ஆனால் இதுதான் ஒரு எழுத்தாளரின் எல்லையா? இல்லை. இராசேந்திர சோழன் தன்னுடைய மனிதாபிமான அம்சங்களில் இருந்து சற்று வெளியேறி அவர் அரசியல் காரணமாக சந்திக்க நேர்ந்தவர்களை அணுகி இருந்தால் புனைவில் வழியே இன்னுமதிகமான தொலைவுகளை கடந்திருக்க முடியும். 21வது அம்சம் என்ற குறுநாவவில் அதற்கான தடயங்களும் தெரிகின்றன. அவசரநிலை காலத்தை ஒட்டி எழுதப்பட்ட இப்படைப்பில் இந்திராகாந்தி அறிவித்த இருபதம்சத் திட்டத்தை கேலி செய்யும் விதமாக இருபத்தோரு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இராசோவின் பெரும்பாலான அரசியல் கதைகள் போல இதுவுமொரு அரசியல் பகடிதான் என்றாலும் அதிகாரம் செயல்படும் விதத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை காண்பிப்பதாக அமைகிறது. நாவலின் இறுதியில் சுப்பராயன் நிலையை நினைத்து மெல்லிய துக்கம் வாசக மனதில் கவிவதுதான் நாவலாக இதன் வெற்றி. ஆனால் குறுநாவலின் சட்டகம் பகடியாக அமைவதால் அதுவே அதன் எல்லையாகவும் இராசோவின் எல்லையாகவும் அமைந்துவிடுகிறது. லட்சியவாதிகளுக்குரிய நேர்மை இராசோவிடம் இருக்கிறது. அதன் காரணமாக உருவாகும் கோபமுமே எள்ளலாக அவர் படைப்புகளில் வெளிப்படுகிறது. ஆனால் அந்தப் புள்ளியில் இருந்து அவர் நகர்ந்து சென்றிருந்தால் மிக விரிவான அரசியல் நாவல்களை எழுதி இருக்க முடியும். அவசரநிலை காலத்தைப் பற்றிய ஒரு படைப்பு அதிகாரத்தின் திருகுவழிகளைச் சொல்வதாக அமைந்தது போல அவருடைய சமகாலத்தின் மீதான கோபம் என்றென்றைக்குமான அதிகாரத்துக்கு எதிரான குரலாக மாறி இருக்க முடியும்.
மேதை ஒருவரிடம் மட்டுமே இதை எதிர்பார்க்க இயலும் என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றபடி இதுவொரு ஆதங்கம் மட்டுமே.
இதனை தவிர்த்து நோக்கும் போது இராசேந்திர சோழனின் படைப்புலகம் தன்னளவில் பூரணத்துவம் கொண்டதாகவே விளங்குகிறது. பெண்களை போலியான சமூக மதிப்பீடுகள் உருவாக்கும் குணநலன்களைக் கடந்து சித்தரித்ததும் குடும்பம் என்ற அமைப்பின் இயல்பை மிகப் புதுமையான தளத்தில் இருந்து அணுகி இருப்பதும் இராசேந்திர சோழனின் படைப்புலகை முன்னோடித்தன்மை கொண்டதாக மாற்றிவிடுகின்றன. அகச்சித்தரிப்புகளில் அனாவசியமான பூடகங்களை தவிர்த்துவிட்டு நேரடியான மொழியிலும்கூட நுண்மைகளைத் தொட முடியும் என்பதற்குச் சான்றாக இராசேந்திர சோழனின் படைப்புலகம் நம் முன்னே உள்ளது. தன்னுள்ளிருந்த அறிவுஜீவியையும் கலைஞனையும் இணக்கம் கொள்ளச் செய்ய முயன்று கொண்டே இருந்தவர் என்ற வகையிலும் இராசேந்திர சோழன் நமக்கு முக்கியமானவராகிறார்.
அவர் மேலுமதிகமாக வாசிக்கப்படுவதும் விவாதிக்கப்படுவதுமே அவருக்கான சரியான அஞ்சலியாக இருக்க இயலும். இக்கட்டுரை அப்படியொரு விவாதம் தொடங்க வழிவகுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
(முற்றும்)
எழுத்தாளர் இராசேந்திர சோழன் – தமிழ் விக்கி இணையப்பக்கம்
Leave a Reply