
1
அப்பா இதையெல்லாம் விரும்பி இருக்கமாட்டார். அப்பா இறக்கும்வரை தன் இந்து மத நம்பிக்கைகளைக் கைவிடவில்லை. ஆனால் அம்மா அவ்வளவு ‘கிறிஸ்துவராக’ இருந்தது இல்லை. வீட்டில் எனக்கு எதைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை இருந்தது. ஆனால் நான் எதையுமே தேர்வு செய்யவில்லை. என் விருப்பம் மொழியில்தான் இருந்தது. மொழியென்றால் பேச்சுமொழி, நிரல் மொழி இரண்டிலும்! அப்பாவுக்கு முன்னதில்தான் ஆர்வம் மிகுதி. அப்பா ஒரு எழுத்தாளர். மொழி பற்றி என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். அப்பா சொல்வார்.
‘லாங்வேஜுல இயல்பாவே ஒரு ஐடியலிஸம் இருக்குடா பாப்பா. மொழியில் கெட்டவார்த்தை அப்படீன்னு எதுவுமே கிடையாது. ஏன் நல்லது கெட்டது கூட கிடையாது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கனவு. பியூர் கிரியேஷன். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு குழந்தை மாதிரி. அவ்வளவு பரிசுத்தம்’
இதை அவர் சொன்ன தினம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.எனக்கு அப்போது பதினோரு வயது. நாங்கள் தஞ்சாவூரில் எங்கள் வீட்டில் இருந்தோம். நல்ல பனி பெய்து கொண்டிருந்த விடிகாலை. தூக்கம் கலைந்து எழுந்து வந்தேன். அப்பா கூடத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். என்னைத் தூக்கி தன்மேலே படுக்க வைத்துக் கொண்டு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘பரிசுத்தம்’ என்று அவர் என் கன்னத்தை கிள்ளியபோது அவர் மனதில் நான் குழந்தையாக இருந்தேன். ஆனால் நான் குழந்தையாக இருக்க விரும்பவில்லை. நான் அவர் மேலேயே தூங்கிவிடத்தான் விரும்பினேன். அவர் மார்பைவிட ஆதூரமான இன்னொரு இடம் எனக்கு வாய்க்கப்போவதில்லை என்று தெரியும். ஆனால் நான் அவரிடமிருந்து இறங்கி உள்ளே சென்று தூங்கினேன். அப்பா அன்றிலிருந்து என்னைத் தூக்குவதில்லை. இப்போது அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது. எங்கிருந்தாவது வந்து என்னைத் தூக்கிக் கொள்ளமாட்டாரா என்று இருக்கிறது.
நானறிந்த அப்பா இப்படிப் பேசுகிறவர்தான். மொழி குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் சர்வதேச இலக்கிய இதழ்களில் வந்திருக்கின்றன. அதைவிட அவரொரு தொழிற்சங்கவாதியாகவே அறியப்பட்டார். சூழியல் சீர்கேடு, நுகர்வுக் கலாச்சாரம், பெரிய அளவிலான காலநிலை மாற்றங்கள் அதனால் ஏற்படும் இடப்பெயர்வுகள் என்று அனைத்தையும் இணைத்து அவர் நிறைய எழுதி இருக்கிறார். எனக்கு அவருடைய சிக்கலான கட்டுரைகள் எளிமையாக தெரியத் தொடங்கியபோது எனக்கு பதினைந்து வயதுதான் ஆகி இருந்தது. அவர் எழுதிய கட்டுரைகள் ஐந்து பெருந்தொகுதிகளாக அப்போதே வெளியாகி இருந்தன. நான் அவற்றை முழுமையாக வாசித்து இருந்தேன். அம்மாவுக்கு அப்பா எப்போதும் மரியாதைக்குரியவராகவே இருந்தார். நான் அவரை மெல்லிய ஏளனத்துடன் அணுகுகிறேன் என்று அம்மாவுக்கு பெரிய மனக்குறை இருந்தது.
மத்திய அரசுத் துறையில் உயர் பதவியில் இருந்த அம்மாவுக்குள் ‘உனக்கென்னடி தெரியும் அவர் பட்ட கஷ்டமும் நஷ்டமும்’ என்று சொல்லும் ஒரு பாமரப்பபெண் எப்போதும் வெளிப்படக் காத்திருந்தாள். அவளை வெளியே விடக்கூடாது என்ற சுதாரிப்பும் அம்மாவிடம் இருந்தது. அம்மாவுக்கு நானும் தம்பியும் போல அப்பாவும் இன்னொரு குழந்தைதான். ஒரே வேறுபாடு என்னிடமும் தம்பியிடமும் இருந்த கண்டிப்பு அப்பாவிடம் அம்மாவுக்கு இருக்கவில்லை. நான் பதினேழு வயதில் ஃபிரான்ஸ் வந்தேன். அப்பா ஏன் என்னை ஃபிரான்ஸுக்கு அனுப்ப விரும்பினார் என்று எனக்குப் புரிந்ததே இல்லை. ஆனால் என் ஆர்வங்களுக்கு தேசமும் மொழியும் அவசியமாக இருக்கவில்லை. சிறுவயதிலேயே நிரல் எழுதுவதில் இருந்த ஆர்வத்தால் அது சார்ந்த படிப்புகளையே தேர்ந்தெடுத்தேன். அவ்வப்போது தற்காலிகமான காதல்கள். ஆறு வருடங்கள். இந்தியாவின் நூறாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களின் போது நான் நாடு திரும்பினேன். இந்தியாவில் உள்ள அத்தனை பெரிய மென்பொருள் நிறுவனங்களும் என்னை அவற்றின் இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம்கட்ட தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க தயாராக இருந்தன. எனக்கு அப்பாவுடன் இருக்க வேண்டும் போல இருந்தது.
நான் ஃபிரான்ஸ் சென்ற போதிருந்த அப்பா திரும்பி வந்தபோது இல்லை. அம்மாவுக்கு நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமிருந்தது. எனக்கும் இருந்ததுதான். என் அம்மாவையும் அப்பாவையும் பார்க்கும் யாருக்கும் வரக்கூடிய ஆசைதான். அப்பாவுடன் என் மணவாழ்க்கை குறித்து நான் பேச விரும்பினேன். ஆனால் அவர் என்னுடன் பேசக்கூடத் தயாராக இல்லை. அவரிடம் முன்பு போல அமைதி இல்லை. என்னவோ ஆழமாக காயப்பட்டவரைப் போல இருந்தார். அவர் சிக்கல் என்னவென்று எனக்குப் புரியவில்லை. என் தம்பி நிர்வாகவியல் துறையில் உயர் பதவியை அடையும் வாய்ப்பினை பெற்றவனாக இருந்தான். அம்மா எங்கள் எல்லோரையும் இணைத்து ஒட்டும் ஈரத்துடன்தான் இருந்தாள். அம்மாவுக்கு வயதே ஆகாதா என்று தோன்றும். ஆனால் அப்பாவுக்கு கிழடு தட்டிவிட்டது. அறுபது வயதுகூட அவருக்கு ஆகவில்லை. அவருடைய நண்பர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். எனக்கு அப்பாவின் மீது கோபம் வந்தது. நான் அவரிடம் கேட்டேவிட்டேன்.
‘ஏம்ப்பா இப்படி இருக்க?’
‘வேற எப்படி இருக்கணும்?’
ரொம்ப நேரம் பேசவேண்டி இருக்கும் என்று சலிப்பு தட்டியது. ஆனால் அவர் என் அப்பா.
‘இல்லப்பா ஏதோ உங்கிட்ட ஒரு ஹேட்ரட் இருக்கிற மாதிரி தோணுது’
அப்பா ஒன்றும் சொல்லவில்லை. நான் இன்னும் நெருங்கினேன்.
‘மனசுக்கு என்ன கஷ்டம்ப்பா’
அவர் என்னை அவ்வளவு இறுகக் கட்டிக் கொண்டு அவ்வளவு சத்தமாக அழுவதை ஓடிவந்து பார்த்த அம்மா ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள். அடுத்த நொடி எங்கள் இருவரையும் அணைத்துக் கொண்டாள். என் டிஷர்ட் அப்பாவின் கண்ணீரால் நனைந்தது. உச்சந்தலை அம்மாவின் கண்ணீரால். அப்பா எதுவும் பேசவில்லை.அடுத்த நாள் அப்பா கைது செய்யப்பட்டார். நாங்கள் நொறுங்கிப் போனோம்.

2
மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. நாங்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்தோம். அப்பா கைது செய்யப்பட்ட பிறகுதான் நான் அவரைப் பற்றி உண்மையில் அறிந்து கொள்ளத் தொடங்கினேன்.
என் அப்பாவின் கதை இதுதான்.
என் அப்பா பொது அறிவுஜீவியாக அறியப்பட்ட ஒரு எழுத்தாளர். ஆனால் அவருக்கு நாவலாசிரியர் ஆகவேண்டும் என்றுதான் விருப்பம் இருந்திருக்கிறது. எனக்கு மூன்று வயதாவதற்கு முன்பே மூன்று நாவல்கள் எழுதி இருக்கிறார். அவர் சிறைக்கு சென்று நாங்கள் அவரை மீட்கப் போராடிய காலத்தில்தான் நான் அவருடைய ஆரம்பகட்ட எழுத்துக்களை வாசித்தேன். என் அப்பா எவ்வளவு பெரிய காதலர்! பெண்களிடம் எவ்வளவு இனிமையாகவும் குரூரமாகவும் நடந்து கொண்டிருக்கிறார்!அம்மாவின் மீதும் என் மீதும் அவருக்கிருந்த ஈடுபாட்டின் ஆழம்தான் என்ன!
இப்படி ஒரு கவிதை
இன்று நடக்கத் தொடங்கினாள் மகள்
தாயும் மகளும் நனைந்த கால்களுடன்
டைல்ஸ் தரையில்
கவனமூன்றி நடக்கிறார்கள்
கொஞ்சநேரத்தில்
காயவிருக்கும் இரு ஜோடி பாதங்களே
உங்களை
இக்கவிதையிலும்
என் கண்ணீரிலும்
எப்போதும்
ஈரம் காயாமல்
வைத்திருப்பேன்
கவிதை என்னைப் பற்றியதால் படித்த உடனே எனக்கு அழுகை வந்துவிட்டது. ஆனால் அப்பாவால் உணர்ச்சிகரமான மனிதராக தொடர்ந்து இருக்க முடியவில்லை. அதற்கு காரணமென அவர் நினைத்தது என நான் இதை ஊகிக்கிறேன்.
அவருடைய அலுவலகத்தில் அவருக்கு வேலையில் நெருக்கடி அதிகரித்தது. 2025வாக்கில் அவர் புனைவு எழுதுவதை கைவிட்டிருக்கிறார். அக்காலத்தில் ஏறத்தாழ எல்லா நிறுவனங்களும் ஊழியர்களை அழுத்தத் தொடங்கி இருக்கின்றன. ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதமும் பெருநிறுவனங்களின் செல்வம் ஒப்பிட முடியாத அளவு உயர்வதும் ஒன்றாக நடந்திருக்கிறது. அம்மாவால் இந்தச் சூழலை தாக்குப் பிடிக்கவும் இயல்பாக இருக்கவும் முடிந்தது. அப்பாவால் முடியவில்லை. அக்காலத்தில் அவருக்கு எதுவுமே நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. மனித குலமே தன் இயல்பில் இருந்து நழுவுவதாக அவர் நம்பினார். ‘பெண்களின் உடலில் எல்லா ரகசியமும் தீர்ந்து போய்விட்டது’ என்று ஒரு ஆழமான பொருளாதார கட்டுரையில் எழுதி வைத்திருக்கிறார்.
‘ஏன் எந்த உணவிலும் சுவையில்லை? தண்ணீர் குடித்தால் ஏன் நாக்கு கூசுகிறது? நாற்றத்திற்கு முகஞ்சுழிப்பதை நாம் ஏன் குறைத்துக் கொண்டே வருகிறோம்?’
அதே கட்டுரையில் வேறொரு இடத்தில் வரும்வரி.
‘உலகம் நோக்கம் இல்லாது போய்விட்டது. எல்லாவற்றையும் தீர்த்துவிட்டு விரைந்து சாகத்தான் நாமெல்லோரும் விரும்புகிறோம்.’
இது இன்னொரு கட்டுரை.
‘என்னால் என் வேலையை சரியாக கவனமூன்றிச் செய்ய முடியவில்லை. என் அலுவலக அறை அசுத்தமாக இருக்கிறது. யாராவது வந்து என்னை தண்டித்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. நான் இவளையும் பாப்பாவையும் பிரிந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்’
நான் பிறந்த ஒரு வருடத்தில் எழுதிய டைரிக் குறிப்பு.
அப்பாவின் கோபம் மொத்தமும் நிறுவனங்களின் மீது திரும்பி இருக்கிறது. என்னால் அந்தக் காலத்தை சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. பிறந்தது முதலே நானும் என் தம்பியும் எதற்காகவும் சிரமப்பட்ட நினைவே இல்லை. இருவரையும் அப்பா தன் கண்களுக்குள்ளும் அம்மா தன் கண்காணிப்புக்குள்ளும் வைத்திருந்தனர். அப்பா பன்னிரண்டு வருடங்களுக்கு முன்புதான் வேலையை விட்டார். நான் பார்த்தவரை அவர் அலுவலகத்துக்கு பிந்திச் சென்றதில்லை. எதற்கும் சலித்துக் கொண்டதில்லை. விடுமுறை நாட்களில் எப்போது அலைபேசி அடித்தாலும் எடுத்துப் பேசுவார். எங்களுடனும் நேரம் செலவிட்டார். தொழிற்சங்க வேலைகளிலும் ஈடுபட்டார். கட்சி சார்பு இல்லாத சர்வதேச தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அப்பாவுக்கு இருந்தது. 2026ல் அவர் தொழிற்சங்கம் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அனேகமாக புனைவினை விடுத்து அவர் எழுதிய முதல் கட்டுரை அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
‘நமக்குள் ஏகப்பட்ட பிரிவினைகள் இருக்கின்றன. இந்த வாழ்க்கை நம்மையெல்லாம் இணைப்பதற்கு பதிலாக மேலும் மேலும் கூறுபோடுகிறது. நம்மை நாம் இணைத்து யோசிக்க ஒரு அடையாளம் வேண்டும். இன்றைய உலகில் தொழிலாளர் அல்லது ஊழியர் என்ற அடையாளத்தைவிட நம்மையெல்லாம் ஒன்றுபடுத்தும் இன்னொரு அடையாளம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும். ஏன் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை? ஏன் நம்மால் நம் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியவில்லை? இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? இப்படியெல்லாம் நாம் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டும். தனியாக நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டால் போதாது. ஒன்றிணைந்து கேட்க வேண்டும். நிறுவனங்களை நோக்கிக் கேட்க வேண்டும்.’
அப்பாவின் இந்தப் பத்தியை மேற்கோள் காட்டி கால் நூற்றாண்டுக்குப் பிறகும் அப்பாவின் எண்ணம் பொருத்தமாக இருப்பதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. எனக்கு சர்வதேச பணிச்சூழல் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. நான் உழைக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. ஆகவே உழைப்பு என்பது பொருளியல் துறையில் ஒரு கலைச்சொல் என்பதைத்தாண்டி அது குறித்து எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அப்பா தினமும் எங்களை ஒரு மணிநேரம் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவார். பின்னர் தோட்ட வேலைகளும் செய்தோம். எனக்கும் தம்பிக்கும் தெரிந்த உழைப்பு அவ்வளவுதான்.
அப்பாவின் கருத்துக்கள் எனக்கு குழப்பமளிக்கின்றன. ஆனால் பெருநிறுவனங்களின் மீது அவருக்கு ஆழமான கோபம் இருந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. அதற்கு அவர் வேலை பார்த்த நிறுவனமும் காரணமாக இருந்திருக்கலாம். அவருடைய தொகுக்கப்பட்ட கட்டுரைகளில் இல்லாத ஏராளமான எழுத்துக்களை நான் கண்டறிந்தேன். 2025வாக்கில் இன்னொரு கட்டுரையில் இப்படி எழுதி இருக்கிறார்.
‘முதலீட்டியச் சமூகம் நம்மை இப்படி நம்பச் சொல்கிறது. முதலீட்டிய உற்பத்தி அதிகரிக்கும்போது அதன் பலன்கள் அடிமட்டம் வரையிலும் பாயும். ஆகவே மக்களை வறுமையில் இருந்து வெளியே எடுக்க ஒரே வழி இந்த முதலீட்டிய சக்கரத்தை இன்னும் வேகமாகச் சுழற்றுவதுதான்! நியாயம் போலத் தெரியும் இந்த வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. உலகின் எல்லாப் பெருநிறுவனங்களும் எப்படி எல்லாம் இன்னும் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்ற நோக்கிலேயே முதலீடுகளைச் செய்கின்றன. அறிவியல் ஆய்வுகள் கூட முதலீடுகளுக்கு சாதகமாகவே நடைபெறுகின்றன. அறிவினை வியாபாரத்துக்கு ஏற்றது போல manipulate செய்து கொள்வதில் விஞ்ஞானிகளுக்கும் நிறுவனங்களுக்கும் எந்தக் கூச்சமும் இல்லை.’
இதிலிருந்து அப்பா பல நம்பகமில்லாத முடிவுகளுக்கு வந்து சேர்கிறார். ஆரம்பகட்ட கொதிப்புகள் அடங்கி 2030க்குப் பிறகு அவர் எழுத்துக்கள் நிதானம் அடைகின்றன. இந்தக் காலத்தில் அப்பா அதிகமும் உணவு, காதல், வாசனை, ரசனை மிகுந்த வாழ்க்கை என்று எழுதி இருக்கிறார். இவற்றுக்கு தடையாகவும் தனிமனித ரசனையை அற்று போகச் செய்து மனிதனை தட்டையானவனாகவும் மாற்றும் காரணிகள் பற்றியும் எழுதுகிறார். உண்மையில் அப்பா புகழடைந்தது இந்த எழுத்துக்களால்தான்.
அவரை ‘காதலிக்கும் அறிவுஜீவி’ என்றெல்லாம் அடைமொழியிட்டு அழைத்தனர். எனக்கே அது பற்றிய நினைவுகள் இருக்கின்றன. அப்பா இந்த காலத்தில் புறத்தோற்றத்திலும் தன்னை சற்று மாற்றிக் கொண்டார் என்று தோன்றுகிறது. என்னை ஃபிரான்ஸ் அனுப்பி வைத்தவன்று அப்பா அம்மாவை விட இளமையாகத் தெரிந்தார். உணவிலும் உடலாரோக்கியத்திலும் தீவிரமான அக்கறை கொண்டிருந்தார். எல்லோருடனும் சமமான இணக்கத்துடனும் சம அளவு விலகலுடனும் இருந்தார். உண்மையில் மிகுந்த நிறைவான வாழ்வினை அவர் அந்தக் காலத்தில் வாழ்ந்ததாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் என்ன நடந்தது? கைது செய்யப்படும் அளவு அப்பா அப்படி என்ன செய்துவிட்டார்?
அப்பாவுக்கு எங்களால் புரிந்து கொள்ள முடியாத அளவு தனிப்பட்ட நட்புகள் இருந்திருக்கின்றன.அவர் மீது பல பெண்களுக்கு காதல் இருந்திருக்கிறது. அவருக்கும்தான்! ஆனால் அவர் எந்தக் காதலையும் உடல் தொடர்பாக மாற்றிக் கொள்ளவில்லை. அம்மாவிடம் தன் பலவீனங்கள் எதையும் அவர் மறைக்கவில்லை. உண்மையில் அவர் மிகுந்த மகிழ்ச்சிகரமான மனிதராக மட்டுமே என் நினைவில் இருக்கிறார். அம்மாவும் அப்பா தனக்குத் தெரியாமல் ஏதோவொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பாதி கேலியாகவும் பாதி சந்தேகத்துடனும் நம்பினார். ஆனால் அப்பா விரும்பிய பெண்கள் அம்மாவின் கண்முன்னேதான் இருந்தனர். பத்து வயதிலேயே எனக்கு இதெல்லாம் புரியத் தொடங்கிவிட்டது! அம்மாவுக்கு இது புரியாது. இதையெல்லாம் புரிந்து கொண்டு மனதை வருத்திக் கொண்டு நேரத்தை வீணடிக்கும் அளவு அம்மா சொகுசுப் பேர்வழி இல்லை! அம்மாவிற்கு எந்நேரமும் பொறுப்புகள் இருந்தன. அம்மா எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று விரும்பினார். அப்பாவுக்கும் உதவ விரும்பினார். உதவவும் செய்தார். அப்பா தன் ஐம்பது வயதுவரை எந்தவொரு பெரிய துன்பத்தையும் அனுபவிக்கவில்லை. ஆனால் ஏன்? என்ன வலி இருந்தது அவருக்கு?
நான் கண்டடைந்தது எளிய பதில் அல்ல. யோசித்தால் சிக்கலானது என்றும் இல்லை என்றும் தோன்றுகிறது. சிக்கலாக இருந்தது அப்பாவின் மனம்தான். வெளியே யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் அப்பா உள்ளுக்குள் தாவிக் கொண்டே இருந்திருக்கிறார். இதுதான் காரணம் என்னால் யூகிக்க முடியவில்லை என்றாலும் அப்பா ஒரு கட்டத்தில் தன் புனைவெழுதும் ஆற்றலை இழந்திருக்கிறார்.
‘என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பெண்கள் என்னை வதைக்கின்றனர். பெண்களுடனான என் வரையறைகளுக்குள் அடங்காத அக உறவுகள் என்னை ஆழமாக காயப்படுத்துகின்றன. அந்தக் காயங்களை எண்ணி கிளர்ச்சி அடையும் வயதை நான் தாண்டி வருகிறேன். கதை எழுத வேண்டும் என்ற துடிப்பு கூடிக் கொண்டே வருகிறது. ஆனால் ஒருவரிகூட என்னால் எழுத முடியவில்லை. என் மீது எதற்கோ இருந்த அருளை நான் இழந்துவிட்டேன். நான் நினைவுகளில் இருந்து பிய்த்து வீசப்பட்டுவிட்டேன். என் உறவென்று இருக்கும் என் மனைவியும் குழந்தைகளும் தவிர வேறுயாரும் வேறு எதுவும் என் மனதிற்கு அநாவசியமெனப்படுகிறது. அழகு என்னைத் துன்புறுத்துகிறது. அழகினை மொழியிலும் நினைவிலும் சிறைபிடிக்கப்பட்ட நான் படாதபாடுபடுகிறேன். என் மொழி என்னை கைவிடுகிறது. அல்லது மொழியை அதன் சூட்டோடு மனதிலிருந்து இறக்குவதற்கு என்னிடமிருந்த பிடிதுணியை நான் தவறவிட்டுவிட்டேன். மொழியை நெருங்கும் போதெல்லாம் என் அகம் வழண்டு எரிகிறது. சொற்கள் கூட்டாக இணைந்து அளிக்கும் அர்த்தங்களை இழந்து தனித்தனியே தன்னை காட்டிக் கொள்கின்றன. சொற்களால் போலியான சொற்களால் ஆன உலகிற்குள் நான் மெல்ல மெல்ல மூழ்கிப் போகிறேன்.’
அப்பாவின் இந்த டைரிக்குறிப்பினை வாசித்த பிறகுதான் அவருடைய சிக்கல் எனக்குக் கொஞ்சமாவது புரிபடத் தொடங்கியது. அப்பா ரொம்ப சரியாகப் பேச வேண்டும் என்று நினைப்பவர். அவர் உதட்டுக்கும் மூளைக்கும் தொடர்பில்லாமல் பேசும் கலை அறியாதவர். சொற்கள் அவரைத் துன்புறுத்தின. அவருடைய தொடக்க கால கதைகளில் ஒரு பாத்திரம் இப்படியொரு சிக்கலில் உழன்று கொண்டிருக்கும்.
‘நேற்று அவளைப் பார்த்த சமயம் அழகாகத் தோன்றினாள். இன்றும் அழகாகத் தோன்றுகிறாள். ஆனால் நேற்றின் அழகு இன்றில்லை. நேற்றின் அவள் அழகினைப் பற்றி இன்றுள்ள அழகியிடம் நான் பேசுவது சரியா?இரண்டு அழகுகளும் கிளைத்தது அவள் உடலிலிருந்தா அல்லது என் மனதிலிருந்தா? நான் அவளை அவளுடைய நேற்றுக்காகவா அல்லது இன்றுக்குக்காவா? எதற்காக காதலிக்கிறேன். அழகு ஒரு விஷம். மூளையைத் தாக்கி செயலிழக்கச் செய்து கொன்று விடுகிறது. செத்துப் போவதில் பிரச்சினை இல்லை. ஆனால் அவளை மேலும் மேலும் அறிந்து கொள்ள முடியாத துயரத்தை தவிர்ப்பதற்காகவே வாழவேண்டி இருக்கிறதே!’
இது பிதற்றல்! ஆனால் எனக்கு அவர் பிதற்றுவதுதான் தேவை. தன்னை பிரக்ஞைபூர்வமாக கட்டிக் கொண்ட மனிதர் அல்ல தன்னை கலைத்துக் கொண்ட மனிதர்தான் எனக்கு வேண்டும்.

3
அப்பாவின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இதுதான். அப்பா வெகுநாட்களாக அரசுக்கு எதிராக எழுதி வந்திருக்கிறார். எனக்கு விவரம் தெரியத் தொடங்கிய வயதில் இணையம் ஒரு பெரும் பிரச்சினையை சந்தித்தது. எது உண்மை எது பொய் என்று யாராலும் எதையும் பிரித்து அறிய முடியவில்லை. உண்மைச் செய்தியை அறிவது விலையேறியதாகிவிட்டது. பணம் கொடுத்து சப்ஸ்க்ரைப் செய்தால் மட்டுமே உண்மைச் செய்திகளை நம்பக்தன்மையுடைய நிறுவனங்களிடமிருந்து பெற முடிந்தது. ஒரு நிறுவனம் எவ்வளவு தூரம் உண்மைச் செய்தியை வழங்குகிறது என்பதை சோதிப்பதற்கான தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உருவாகின. தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அளிக்கும் ரேட்டிங்தான் ஒவ்வொரு செய்தி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் தீர்மானித்தது. ஆகவே செய்திகள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. மனம் ஊன்றி எழுதுகிறவர்களால் மட்டுமே இணைய நிறுவனங்களில் தாக்குப்பிடிக்க முடிந்தது.
இணையம் ஒரு கட்டத்தில் உண்மை கற்பனை என்று இரண்டாகப் பிரிந்தது. இணையத்தின் வழியாக கற்பனைகளை பெற விரும்புகிறவர்களுக்கு இணையம் தங்கச் சுரங்கம் போல இருந்தது. எழுதப்படும் ஃபேண்டஸி கதைகளை உடனடியாக காணொளியாக மாற்றி பார்க்க முடிந்தது. வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப கதைகளை மாற்றிக் கொள்ளவும் காட்சிகளை வடிவமைக்கவும் முடிந்தது. பாலியல் தளங்கள் மெய்நிகர் புணர்ச்சி அனுபவத்தை வழங்கின. கற்பனை கொடுக்கும் பணத்துக்கு ஏற்றது போல சொகுசினை வழங்குவதாகவும் முடிவற்ற போதையில் பயனர்களை ஆழ்த்துவதாகவும் இருந்தது.
அதேநேரம் இணையத்தின் உண்மை பகுதி இருண்டு கிடந்தது. ஏகப்பட்ட தணிக்கைகளும் அரசாங்க தலையீடுகளும் உண்மைச் செய்திகளை இணையம் வழியாக வழங்க வேண்டும் என்று விரும்பிய நிறுவனங்களை கடுமையாக முடக்கின. ஆனாலும் பழைய காலப் போர்வீரர்களைப்போல உண்மையின் பக்கம் புறவயமான உலகின் பக்கம் மனிதனின் அன்றாடப் பிரச்சினைகளின் பக்கம் அக்காலத்தின் வீரர்கள் உறுதியுடன் நின்றனர். என் அப்பாவும் அவர்களில் ஒருவர். எவ்வளவு கடுமையான தணிக்கையின் வழியாகவும் அவருடைய கருத்துகள் பரவுவதை அரசுகளால் தடுக்க முடியவில்லை. அவர் எழுதத் தொடங்கிய காலத்தைவிட அரசுகளுக்கும் நிறுவனங்களுக்குமான நெருக்கம் அதிகரித்தது.
அப்பாவின் எழுத்து உலகில் பெருவாரியான மனிதர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று மீண்டும் மீண்டும் சொன்னது. ஆரம்பகட்டத்தில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதி இருக்கிறார்.
‘இன்றைய அறிஞர்கள் மனிதனின் துயரங்களுக்கு அவனை பொறுப்பேற்கச் சொல்கிறார்கள். நான் குடிக்கும் தண்ணீர் சுவையாக இல்லை. இந்தத் துயரத்துக்கு நான் எப்படி பொறுப்பேற்க வேண்டும் என்று அறிஞர்கள் எனக்குச் சொல்ல வேண்டும். ஒரு பாலிதீன் பேப்பரில் நான்கு இட்லி வாங்கிச் சென்று சாப்பிடும் ஒருவன் அந்த பாலிதீன் பேப்பரை அலட்சியமாக எங்கோ தூக்கி எறிகிறான். அவன் சூழியலுக்கு தீங்கு விளைவித்துவிட்டான். ஆனால் அவன் வாழும் நிலத்தின் நீரினை நஞ்சாக்கும் ஒரு தொழிற்சாலையின் – சூழியல் அறிவு கொண்ட – லாபத்தில் பங்கு எடுக்கும் முதலீட்டாளர்கள் சூழியலுக்கு தீங்கு விளைவிக்கவில்லை. இந்த தர்க்கம் எனக்கு விளங்கவில்லை.’
அப்பா இதைவிடப் பலமடங்கு கூர்மையாக தன் வாதங்களை வைக்கக் கற்றுக் கொண்டார். அவருடைய விமர்சகர்களில் சிலர் அவரை காந்தியர் என்றனர். ஆனால் அப்பா தன்னை காந்தியராக உணரவில்லை.
‘காந்தியின் நோக்கம் உடலைத் தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து கடவுளைக் காண்பது. அவருக்கு உடல்மேல் நம்பிக்கை இல்லை. உடல் பாவம் செய்யும் என்ற அவருடைய நம்பிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் உடலை நம்புகிறேன். என் உடலை. இங்கிருக்கும் எல்லா உடல்களையும் நான் நம்புகிறேன். உடல் மகிழ்ச்சி அடைந்தால் அது மிகக்குறைவாக எடுத்துக் கொண்டு மிக அதிகமாக உலகிற்கு வழங்கும். பாலுறவில் திருப்தி அடைந்த உடல் அந்த திருப்தி நீடிக்கும் வரையிலாவது உலகை ரசிக்கவும் அதற்குக் கொடுக்கவும் விரும்புகிறது.’
அப்பாவைப் பற்றிய வரைபடத்தை நான் ஓரளவு முழுமை செய்துவிட்டேன். அவர் உலகின் துன்பங்கள் அனைத்தும் புறவயமானது என்று நம்பினார். மகிழ்ச்சியாக வாழும் மனிதன் வாழ்வில் இருந்து சலித்து உதிர்வான் என்பது அவருடைய ஆழமான நம்பிக்கையாக இருந்தது. மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் நிறுவனங்களே காரணம் என்று அப்பா நம்பினார். பிரச்சினை தொடங்கிய புள்ளி இதுதான்.
‘உலகம் ஒரு பரிவர்த்தனை நிலையம். மனிதகுல நாகரிகம் என்பது பரிவர்த்தனையின் எல்லைகள் பெருகியதுதான். உலகம் முழுக்க பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன.பரிவர்த்தனைகள்தான் நாம் இன்று காணும் பெரிய மதங்களை உருவாக்கின. ஒரு வகையில் பரிவர்த்தனைகளும் மனித உணர்ச்சிகளும் மோதிய புள்ளியில்தான் பெருமதங்கள் பிறந்தன. ஆனால் பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகு மதங்கள் செல்வாக்கு இழக்கத் தொடங்கியபிறகுதான் இன்று நாம் காணும் இந்த மாபெரும் தினம் தினம் தன் விரைவினை அதிகரித்துக் கொண்டே போகும் பரிவர்த்தனை கேந்திரம் உருவானது. ஆனால் இதன் தார்மீகம் என்ன? ஏன் ஒரு நவீன மதம் இந்த பரிவர்த்தனை கேந்திரத்தால் உருவாகவே இல்லை? இன்றைய நாளில் தன்னுடைய மீட்சிக்காக தனியே போய் அமர்கிறவனைவிட அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. மொத்த உலகையும் துறந்து உள்முகமாகத் திரும்புகிறவனை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த பரிவர்த்தனை கேந்திரத்திற்குள் ‘மீட்சி’யை கற்பனை செய்கிறவன் அயோக்கியன். மனிதர்களின் கட்டளைவழியே எந்திரங்கள் உற்பத்தி செய்து தள்ளுகின்றன. ஒவ்வொரு மனிதனும் நூறு ஆயிரம் பழைய மனிதர்களின் ஆற்றலைப் பெற்றுவிட்டான். எந்தத் தனிமனிதனும் தனிமனிதன் இல்லை. இங்கிருக்கும் பிரச்சினைகளை அணுகாமல் அவற்றுக்குத் தீர்வினை யோசிக்காமல் வெறுமனே நுகர்ந்து வாழ்வதும் ஒரு வாழ்க்கையா?’
பிரச்சினையின் தொடக்கம் அனேகமாக இதுதான். அப்பா வேலையைவிட்டது அவருக்கு எழுத்து ஓரளவு வருமானம் தந்ததாலும்தான். ஆனால் அவரால் வேலையைவிட்ட பிறகு பலரையும் சந்திக்க முடிந்தது. அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் அதைவிட பத்து மடங்கு அதிகமான குறிப்புகள் வைத்திருந்தார்.(அதையெல்லாம் தொகுத்து ஒரு தனிநூலாகவும் அவருடைய சுயசரிதையை தனிநூலாகவும் வெளியிடும் எண்ணம் ஃசோபியாவுக்கு இருக்கிறது.) ஆகவே அவருடைய எழுத்து எப்போதும் எதிர்பார்க்கப்படுவதாகவே இருந்தது. அப்பாவுடையது ஒரு கருத்தியல் அடிப்படைவாதியின் இருண்டகால கற்பனை போலத் தோன்றினாலும் அவர் தற்போது இருந்தால் அவருடைய கருதுகோளை அவருடன் விரிவாக விவாதித்து இருக்க முடியும். இன்றும் அவரைப் போன்றதொரு simulation உருவாக்கி அதைச் செய்ய முடியும்தான். ஆனால் என் அப்பாவை போலவே எனக்கும் மனித அறிவு என்பது உடலுக்கு அப்பாற்பட்டது என்பதில் இன்றுவரை நம்பிக்கை பிறக்கவில்லை. ஆற்றலுக்காக எந்த விதமான வெளிப்புற உறுப்புகள் பொறுத்தப்பட்ட பிறகும் ஒரு மனிதரின் தன்னிலை அழிவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
‘மனிதன் என்பவன் அவன் கடந்தகாலத்தின் நினைவுகள்தான். என் அக்கா எனக்குக் கொடுத்த முத்தத்தை சிறுவான இல்லாமல் இளைஞனாக நின்று வாங்கிக் கொண்ட தருணம் எனக்கு நினைவில் இருக்கிறது. காதல்கோட்டை படத்தில் வரும் ‘சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது’ பாடல் என்னுள் கிளர்த்தும் உணர்ச்சி என்னவென்றும் அந்த உணர்ச்சிக்கும் இளம்பச்சை நிறத்துக்கும் உள்ள தொடர்பு என்னவென்றும் இன்றும் எனக்கு விளங்கவில்லை. நான் அப்போது மிகச்சிறியவன். எனக்குள் அப்பாடல் அன்று நிரப்பிய ஏக்கமும் பரிதவிப்பும் இன்றும் அதே அளவு அப்படியே நிரம்புகிறது. என் நினைவுகளின் வழியே நான் காலத்தைத் தாண்டுகிறேன். ஆனால் இந்த விரைவுச் சமூகம் நம் நினைவுகளை மங்கச் செய்கிறது. எங்குமே சாவகாசம் இல்லை. யாரிடமும் மொழியே இல்லை. மொழிதான் நம் உணர்ச்சிகள் சேகரிக்கப்பட்ட பெட்டகம். ஆனால் நாம் இப்போது பேசுவதே இல்லை. நாம் மொழியை இழந்துவிட்டோம். சொற்களை உணர்ச்சிகரமாக பயன்படுத்துவதை தவிர்க்கிறோம்.’
அப்பா தொடர்ந்து கட்டுரைகள்தான் எழுதினார் என்றாலும் மேலே உள்ள மேற்கோள் இடம்பெறும் The problems of a purposeful life போன்ற சிறிய நூல்களையும் எழுதி இருக்கிறார். அப்பா இந்நூலுக்காக ஏகப்பட்ட ஆய்வுகளை வாசித்து இருக்கிறார். இணையம் விழித்திருக்கும் நேரமெல்லாம் நம்மை விழிப்புணர்வுடன் இருக்கச் செய்திருக்கிறது என்பதையும் அந்த விழிப்புணர்வு வெறுமனே மனிதர்கள் உருவாக்கிய ஏஜென்சிகள் பற்றிய விழிப்புணர்வாக மட்டுமே இருப்பதால் தம்முடைய மொழியுணர்வு வறண்டு போய்விட்டது என்பதையும் சொல்கிறார்.
மனிதகுலத்தின் ஆதார சிக்கலென அப்பா நினைப்பது அதன் மொழி ஊற்று வற்றியதுதான். அப்பாவின் நிறுவன எதிர்ப்பை தனித்துவமாக்கியது இந்த அம்சம்தான்.
‘நிறுவனங்கள் மனிதனின் நினைவுகளுடன் பிணைக்கப்பட்டிருந்த மொழியையும் கடவுளையும் வற்றச் செய்துவிட்டன. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய விருப்பம் இல்லாமலேயே கூர்மையான கத்திபோல ஆக்கப்பட்டுவிட்டான். அவன் தன் உறவுகளை அன்புடன் அணைக்கும் போதெல்லாம் நெருப்புதான் பறக்கிறது. ஒவ்வொருவரும் மற்றவரை நெருங்க நினைத்து காயப்படுத்திக் கொள்கிறார்கள்.’
அப்பா உறவுச் சிக்கல்கள்,சூழியல் பிரச்சினைகள், தற்கொலைகள், வீட்டில் நடக்கும் கொலைகள், பண மோசடிகள், மன அழுத்த சிக்கல்கள், தூக்கமின்மை, குழந்தைகள் மீதான வெறுப்பு, குழந்தை பெற்றுக் கொள்வதன் மீதான பயம், வெற்றான கடவுள் நம்பிக்கை, மலினமான நுகர்வுக் கலைகள், திறனில்லாத அரசியல் தலைவர்கள், துப்பாக்கிக் கலாச்சாரம், போதைப் பொருட்கள், குழு வன்முறை, சாதி மோதல்கள், இனக்குழு மோதல்கள், மத வன்முறைகள் என்று உலகின் அத்தனை பிரச்சினைகளுக்கும் நிறுவனங்களின் ஆதார குணமான பேராசையே காரணம் என்று சொன்னார். இப்பேராசை நம்மை எங்கும் கொண்டு சென்று நிறுத்தவில்லை என்றார். ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு துயரமும் சம அளவில் பொருட்படுத்தக்கது என்றார். தனி வாழ்வில் அவர் எவ்வளவு நிதானம் தவறினாரோ அந்த அளவு அவருடைய எழுத்து துல்லியம் பெற்றது.
அப்பாவின் கோபத்தில் நியாயம் இருந்ததா இல்லையா என்பதை என்னால் அறுதியிட முடியவில்லை. ஆனால் மனித வாழ்க்கை இரண்டாகப் பிளவுபட்டது. புதிய வாழ்க்கை நடைமுறைகளில் பிணைத்துக் கொள்ளாமல் பழைய வாழ்க்கையில் நீடிப்பது செலவேறியதாக இருந்தது. ஒரு உதாரணம் சொல்லலாம். செயற்கை இறைச்சியை உருவாக்குவதற்கு சார்ந்த ஆய்வுகள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்தன. அடுத்த முப்பது வருடங்களில் அந்தத் துறை மனிதர்களுக்கு உணவே தேவையில்லை ‘Energy bars’ என்று சொல்லப்பட்ட சுவையான சாக்லேட்டுகள் மட்டுமே போதும் என்ற நிலைக்கு நகர்ந்தது. Artificial General Intelligence, விண்வெளி ஆய்வுகள், புற்றுநோய்க்கான மருந்து போன்றவற்றுக்கு இணையான அளவு இந்த செயற்கை உணவிலும் முதலீடுகள் செய்யப்பட்டன. இந்த சாக்லெட் துண்டுகளை உருவாக்க மிகக்குறைவான சக்தியே தேவைப்பட்டது என்றனர். ‘உங்கள் உணவு குறைவான நிலத்தையும் அதிகமான அறிவியலையும் தன்னில் கொண்டிருக்கிறது’ என்று விளம்பரம் செய்த ஒரு நிறுவனம் மருந்து நிறுவனங்கள் மென்பொருள் நிறுவனங்களுக்கு இணையான அளவு வளர்ச்சி அடைந்தது. மனித வாழ்வு பூமியில் வெகுநாட்கள் நீடிப்பதற்கு நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டதாகவே நம்பினர்.
நிலத்தில் விளைந்தவற்றை சாப்பிடுவதும் நேரடியாக மிருக இறைச்சியை உண்பதும் காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்லப்பட்டது. இரண்டு பெருந்தரப்புகளாக இந்த சாக்லேட் உண்பவர்களும் உணவு சாப்பிடுகிறவர்களும் பிரிந்தனர். ஒரு நூற்றாண்டாகவே நடந்து வந்தது போல மலிவானது பெரும்பான்மைக்கும் அரிதானது பணம் படைத்தவர்களுக்கும் கிடைத்தது. எங்களுடையது மத்திய தரத்துக்கு மேலே இருந்த குடும்பம் என்பதால் எங்களால் எங்களுடைய பழைய உணவுப் பழக்கங்களை பேண முடிந்தது. அப்பா இந்த சாக்லேட் பார் உணவுகளை தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தார்.
‘காமத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதும் பசிக்காக சாக்லெட் துண்டுகளையே வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவதும் ஒன்றுதான்’ என்று அப்பா எழுதியது பெரும் சர்ச்சையானது.
‘வாழ்க்கைக்கு மனிதன் உருவாக்கிக் கொண்ட பயன்பாட்டு நோக்கம் மட்டுமே உள்ளது என்று நம்மை நம்ப வைக்க இங்கு பெரிய அளவில் முயற்சிகள் நடக்கின்றன. மகிழ்ச்சி துய்ப்பில் மட்டும்தான் இருக்கிறது என்று முதலில் நாம் நம்பி இப்போது அதுவே உண்மை என்று ஏற்றுக் கொள்ளவும் தொடங்கிவிட்டோம். உயிர்குலத்தின் ஒரு பகுதியாக உணர வேண்டியவர்கள் நிறுவனங்களின் பகுதியாகி நிற்கிறோம்.’
இந்த மேற்கோள் எழுதப்பட்ட கட்டுரைதான் அப்பா கைது செய்யப்பட்டதற்கு முக்கியமான காரணம்.

4
நாற்பதுகளின் தொடக்கத்தில் உலகின் அரசியல் சூழல் எப்படி இருந்தது என்று இன்று என்னால் ஓரளவு தெளிவுடன் பார்க்க முடிகிறது. சந்தை உலகளாவியதாக இருந்தது. சந்தையின் விதிகளை தீர்மானிப்பவர்கள் முதலீட்டாளர்களின் தேவையையும் நிறுவனங்களின் லாபத்தையும் கணக்கில் கொண்ட அளவு பணியாளர்கள் பற்றி யோசிக்கவில்லை. உலகத் தொழிலாளர் கூட்டமைப்பு போன்ற தொழிற்சங்கங்கள் அன்று பெயரிடப்படாத அமைப்பாக செயல்பட்ட நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு முன் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்காக ஒழுங்கு விதிமுறைகளை வகுத்த நிறுவனங்கள் தொழிலாளர் நலன் சார்ந்து யோசிக்கவில்லை.
பல்வேறு விதிகளை உலகின் எல்லா நாடுகளும் இணைந்து உருவாக்கின.
1.தொழிலாளர்கள் மணம் கடந்து உறவில் இருக்கக்கூடாது.
2.ஒரு தொழிலாளர் ஒருமுறை மட்டுமே விவாகரத்து செய்யலாம்.
3.குழந்தை பெற்றுக் கொள்வதாக இருந்தால் நிறுவனத்திடம் No objection certificate பெற வேண்டும்.
4.குடும்ப உறுப்பினர்கள் நிறுவனங்கள் அழைக்கும் போது அலுவலகத்துக்கு வரவேண்டும்.
5.முதல்முறை அழைக்கும்போதே அலைபேசியை எடுக்க வேண்டும்.
6.பற்கள் தெரிய சிரிக்கக்கூடாது.
7.அலைபேசியில் யாருடன் எப்போது பேசினாலும் நிறுவனத்தை வாழ்த்தும் ஸ்லோகனை சொன்ன பிறகே பேசவேண்டும்.
8.நிறுவனத் தலைவரின் புகைப்படம் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும்.
9.ஊழியர்களின் பத்து வயது கடந்த குழந்தைகள் நிறுவனம் சார்ந்த நிலையான நூறு கேள்விகளுக்கு எப்போதும் பதில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.
10.தினமும் உறங்கும் எழும் நேரத்தையும் புணரும் நாட்களையும் குறித்து மாதாந்திர அறிக்கையாக நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும்.
இந்த ஒவ்வொரு ஷரத்தின் நியாயத்தையும் ஒவ்வொரு தனி நூலாக அச்சிடும் அளவு நிறுவனங்களின் கூட்டமைப்பின் முகமாக செயல்பட்ட நாடுகள் விளக்கின. அப்பா இவற்றை மறுத்து மிக விரிவாக எழுதி இருக்கிறார்.
பிரச்சினை வந்தது சாக்லேட் பாரின் வழியாகத்தான்.
உலகம் முழுக்க தொழிலாளர்களுக்கு அடிமட்ட ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டிய தேவை எழுந்தது.அடிமட்ட ஊதியம் இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் தங்குமிடம் இரண்டுக்காவும் தேவைப்படும் ஊதியம். அடிமட்ட ஊதியத்தை ஒரே சீராக நிர்ணயிப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன. ஒரு வளர்ந்த நாட்டின் அடிமட்ட ஊதிய அளவை மற்றொரு பின்தங்கிய நாட்டின் வளர்ந்த நாட்டு நிறுவன ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றனர். சந்தை சர்வதேசத்தன்மை அடைந்ததால் உணவுப்பொருட்களின் விலையை நிலையாக அளவிட முடியவில்லை. ஆகவே நிறுவனங்களின் கூட்டமைப்பின் முகமாக செயல்பட்ட அரசுகள் சாக்லெட் பார் நிறுவனங்களுடன் கூட்டு வைத்தன. சாக்லெட் பார் அடிப்படையில் ஊழியர்களின் அடிமட்ட ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஊழியர்களின் அடிமட்ட ஊதியம் ஏற்கனவே இருந்ததில் இருந்து பாதியாகக் குறைந்தது.
இடைவிடாத போராட்டங்களுக்குப் பிறகு ஒரு ஆளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான சாக்லெட் பாரின் அளவு ஒன்றரை ஆளாக மாற்றப்பட்டது. அது பெரும் சாதனையாகவும் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் நூறாவது சுதந்திர தினத்தன்று பிரதமர் தாயுள்ளத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என இதை வருணித்தார். அப்பா காந்தியின் நூறாவது நினைவு தினத்தன்று இந்த சாக்லெட் பார் அபத்தத்தை ஆதிமுதல் அந்தம்வரை விவரித்து மிக நீண்ட கட்டுரை எழுதினார். அவர் கைது செய்யப்பட அக்கட்டுரைதான் முக்கிய காரணமானது.
அப்பா பத்து நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்தார். சிறை நடைமுறைகள் அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்ததைவிட இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. அப்பா சாதாரண கைதியை போலத்தான் நடத்தப்பட்டார். பத்து பேர் இருக்கும் ஒரு சிறை அறையில் பதினோராவதாக சேர்க்கப்பட்டார். மாலை ஆறு மணிக்கு அறையை அடைத்தால் காலையில் எட்டுமணிக்குத்தான் திறப்பார்கள். இந்தப் பதினான்கு மணிநேரமும் சிறை அறைக்குள் யாரும் மலமூத்திரம் கழிக்கக்கூடாது. அப்பா இது ஒன்றுதான் தனக்குச் சிரமமான இருந்ததாகச் சொன்னார். அப்பாவுக்கு அடிக்கடி கழிப்பறை செல்லும் பழக்கம் இருந்தது. அவர் எப்படி சமாளித்திருப்பார் என்று ஆச்சரியப்பட்டேன்.
அப்பா சிறை சென்று வந்த பிறகு இரண்டு வருடங்கள் வழக்கு நடந்தது. அப்பா குற்றவாளி என்றே தீர்ப்பு வந்தது. நல்லவேளையாக தீர்ப்பு வருவதற்கு முன்பே அப்பா இறந்துவிட்டார்!
5
என்னுள் ஓயாது ஓடிக்கொண்டிருப்பது என்ன? அது இவ்வுலகுடன் எவ்விதம் பிணைக்கப்பட்டுள்ளது?என்னுள் ஓயாது ஓடும் அதற்கு நான் பெயரிட்டுவிட்டேன் என்றால் அது எனதாகிவிடுகிறது. ஆனால் எனதென்று இன்று ஏதாவது இருக்கிறதா? என் நினைவுகளை என்னால் நம்ப முடியவில்லை. எல்லாமும் குலைந்து போய்விட்டது. என்னுள் இருந்த மொழி சிதைந்து போய்விட்டது. நான் மீட்க முடியாத இருளினை நோக்கிப் போகிறேன். நான் ஒவ்வொன்றையும் சந்தேகிக்கிறேன். என் அன்பைக் கொட்டி வளர்த்த என் பிள்ளைகள் ஏன் எனக்கு அந்நியர் போலத் தெரிகின்றனர்?என் துயரங்கள் அத்தனையும் ஏந்திக் கொண்ட என் மனைவி ஏன் எனக்கு யாரோ போலானாள்.
நீ தனித்தவன் தனித்தன்மை வாய்ந்தவன் என்று இங்கு கூவப்படும் பிரச்சாரத்திற்கு நான் காது கொடுத்தது இல்லை. என்னுள் ஆழமாக விதைக்கப்பட்ட பயங்கள்தான் என் மொழியை வற்றச்செய்துவிட்டன. மொழி இல்லாதவனாய் என்னால் யாரையும் அணுக முடியவில்லை. எல்லாவற்றிலும் இருந்தும் ஓடிவிடவே விரும்புகிறேன். ஒவ்வொரு நிறுவனமும் எனக்கு ஆழமான கசப்பையே அளிக்கின்றன. நான் இதற்குள் நீடிக்க முடியாது. நான் இப்படி கசப்புற்றவனாக முடிந்து போனால் கல்வி கசப்பையே அளிக்கும் என்று அது தோன்றச் செய்யும். என் கல்வி என்னை மீட்கும். என்னால் சரியாக இடத்தில் தேட முடியவில்லை. பிரச்சினை அதுதான். என் மொழியை இவ்வுலகின் மொழியுடன் இணைத்துக் கொள்ள முடியவில்லை. நான் ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தேன். அன்று சொற்கள் பிளவுபடாத அர்த்தத்துடன் தன்னை என்னுள் நிகழ்த்திக் கொண்டன. அப்போது நான் காதல் கவிதைகள் எழுதினேன். அவளின் பாதத்தின் அழகை சொற்களுக்குள் கொண்டுவர எவ்வளவு முயன்றேன்.
மருதாணியிட்ட உன் பாதம்
தரையில் மெல்ல அழுந்துகிறது
உன் முத்தத் தடத்தை பாதுகாக்க முடியாத பூமி நடுங்கி அதிர்கிறது
ஆயிரம் சாவுகள் எல்லாம்
அதன் துக்கத்துக்கு
குறைவுதான்!
இக்கவிதையை நானே இப்போது சிரித்துக் கொண்டுதான் வாசிக்கிறேன். ஆனால் அன்று என்னால் சொல்லில் இருந்து பொருளுக்கு போக முடிந்தது. இன்று ஏன் சொற்கள் பொருள் அளிப்பதை நிறுத்திவிட்டன? எல்லா வார்த்தைகளும் ஏன் உபச்சார வார்த்தைகள் ஆகிவிட்டன? என் இருப்பு சொற்களால் ஆனதாக இருந்தது? என் சொற்கள் நினைவுகளால் ஆனதாக இருந்தது? ஆனால் நினைவுகள் எல்லாவற்றையும் மொத்தமாக அழிக்கத் துடிக்கும் ஒரு உலகில் என் நினைவுகளைப் பேணி வாழ்வது என்னால் முடியாத காரியமாக இருக்கிறது. நான் சொற்களில் இருந்து பொருளுக்கு போக முடியாமல் தவிக்கிறேன். உயிரிலிருந்து இறப்பு…
6
அப்பா
நீங்கள் எழுதிய கடைசி வார்த்தை இறப்பு. எதையோ சொல்ல வந்து முடிக்காமல் நிறுத்திவிட்டீர்கள். இறந்து போன உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். இறந்துபோன உங்களால் இக்கடிதத்தை படிக்க முடியாது என்ற பரிபூரணமாக நம்பும் அளவு தர்க்கம் இறுகிய ஒருத்தியாக இக்கடிதத்தை எழுதுகிறேன்!
உங்களைப் போலவே எனக்கும் சொற்கள்தான் உலகமாக இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ மனிதர்களின் மொழியில் உள்ள உணர்ச்சிகளை கணினி மொழிக்கு மாற்றுவது சார்ந்துதான் நான் ஆய்வு செய்தேன். ஒரு மனிதனைக் கேட்கும் இன்னொரு மனிதனாகவே எங்களுடைய எந்திர மாதிரிகளை உருவாக்கினோம். நான் கண்டு கொண்டது. சொற்களும் சொற்கள் உருவாக்கும் உணர்ச்சிகளும் முடிவற்றவை. ஒவ்வொரு கணமும் நிகழக்கூடியவை. இந்தப் பிரபஞ்சத்தில் சொல்லைவிட உயிர்ப்பு மிக்கதும் சொல் அளவுக்கு பிணமாக்கப்பட்டதும் இன்னொன்று இல்லை!
நீங்கள் சொல்வது சரிதான். ஏராளமான சொற்களை உள்ளே வைத்திருக்கும் மனிதர்களை எங்களுடைய எந்திர மாதிரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. மனிதனின் நினைவுப்பெட்டகத்தின் உணர்ச்சி தூண்டல்கள் பற்றி நாங்கள் உருவாக்கும் விதிகளை நினைவில் சொற்கள் உள்ள மனிதன் மீறிக்கொண்டே இருக்கிறான். கடந்த நூறு வருட காலத்தை ‘மாபெரும் சேகரிப்பு யுகம்’ என்றுதான் டிஜிட்டல் துறைகளில் அழைக்கிறார்கள். மனிதர்களைப் பற்றி ஏராளமான தரவுகள் சேகரிக்கப்பட்டுவிட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு அவர்களுக்கு தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களைத்தான் எங்களால் விற்க முடிந்திருக்கிறது. அவர்களுக்கு உதவ முடியவில்லை. உயிர்துடிப்புள்ள ஒரு அணைப்போ முத்தமோ ஒரு மனிதனுக்கு வழங்கும் ஆறுதலை எங்கள் மாதிரிகளால் வழங்க இயலவில்லை. நான் ஆய்வு செய்யும் துறையைப் பொறுத்தவரை இந்த ஒரு நூற்றாண்டாக திரட்டப்பட்ட தரவுகள் முழுக்க பயனற்றவை என்று உணர்கிறேன். நான் மேலும் மேலும் சோர்ந்து போயிருந்தேன். என் சோர்வினைப் பற்றி உங்களிடம் பேசவில்லை அப்பா. நீங்கள் இறந்துபோன இந்த ஒருவருட காலத்தில் உங்களுடன் நிறையவே பேசிவிட்டேன். உங்கள் எழுத்துருக்கள் வழியாக. உங்களை என் கனவில் கண்டதன் வழியாக. சில சமயம் உங்கள் எண்ணங்களுடன். நான் இப்போதும் தெளிவாக இல்லை. ஆனால் என்னை எப்போதும் போல நீங்கள் வழிநடத்தி இருக்கிறீர்கள். ஒருமுறை குடும்பத்தின் மீதான உங்களின் ஆழ்ந்த பிணைப்புக்கு காரணம் உங்கள் மீது தாத்தாவுக்கும் ஆத்தாவுக்கும் இருந்த பிணைப்புதான் என்றீர்கள். அப்பா ஒருவேளை நான் செய்யப்போவது என் துறையினராலேயே மூடத்தனம் என்று எண்ணப்படலாம். ஆனால் ஒரு குடும்பம் இறுகிப் பிணைவதற்கு அதற்கு ஒரு விஷயத்தில் உடன்பாடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த உடன்பாட்டைத் தேடித்தான் நீங்கள் அலைந்தீர்கள். உங்களுடைய பெரும்பான்மையான கேள்வி உங்களை நோக்கி நீங்கள் கேட்டுக் கொண்டது. என்னுடைய இந்த இருபத்தேழாவது வயதில் உங்களுடைய முதல் வருட நினைவஞ்சலியாக எங்கள் குழு ஒரு செயலியை வடிவமைத்து இருக்கிறது. உங்கள் இறப்புக்கு பழிவாங்கிவிட்ட திருப்திதான் முதலில் எழுந்தது. அதன்பிறகு ஆழமான அவநம்பிக்கை தோன்றியது. பிறகு இங்கிருக்கும் எவ்வளவோ விஷயங்களில் இதுவும் இருந்துவிட்டு போகட்டும் என்று ஆறுதலைடகிறேன்.

7
‘அப்பா இதையெல்லாம் விரும்பி இருக்கமாட்டார். அவர் சம்பிரதாயங்கள் வழியாக நினைவு கூறப்பட விரும்பவில்லை.’
என் அழைப்பின் பேரில் அப்பாவின் நினைவஞ்சலிக்கு வந்திருந்தவர்கள் அந்த மிகப்பெரிய ஹோட்டலின் மிகப்பெரிய மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். அவர் இந்த வழக்கில் இருந்து விடுபடாமல் இறந்து போவதற்கு காரணமானவர்களே அவர்களில் பெரும்பாலானவர்கள். அவர்களிடம் ஒரு ஆழமான மகிழ்ச்சி இருப்பதை என்னால் உணர முடிந்தது . அப்பா குற்றவாளியாகவே இறந்திருந்தாலும்கூட – அது நிறுவப்பட்ட உண்மை அல்லவா! – அவரை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதாகவே அங்கிருந்த அனைவரும் பேசினர். அம்மாவும் தம்பியும் கலங்கிப் போயினர். நான் தம்பியிடம் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியேறச் சொன்னேன்.
‘எனக்கும் அவரை இவ்வாறு சம்பிரதாயமானதொரு நிகழ்வில் நினைவுபடுத்திக் கொள்வதில் விருப்பம் இல்லை. ஆனால் என்னுடைய செயலி ஒன்றை இந்த அவையில் வைக்க இந்த நினைவஞ்சலியை ஒரு வாய்ப்பாகக் கொள்கிறேன். இந்த செயலியை என் அப்பாவுக்கு என் பரிசெனத் தருகிறேன்.’
எங்கள் குழு இப்படியொரு செயலி உருவாக்கத்தில் இருப்பது ஏறத்தாழ எங்களைத் தவிர யாருக்குமே தெரியாது. பலரின் முகத்திலும் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிந்தது. மென்பொருள் துறையில் நான் செலுத்தி இருந்த தாக்கம் அவர்களை அச்சப்படுத்தியதில் பெரிய வியப்பொன்றும் இல்லை.
‘பாவபுண்ணியம். என் அப்பாவின் வாழ்வை தேடியதில் நான் கண்டடைந்த சொல் இது. அவர் தன் வாழ்நாள் முழுக்க பாவபுண்ணியம் பற்றிய சுரணையை உருவாக்கவே முயன்று கொண்டிருந்தார் என்று எனக்குத் தோன்றியது. பாவங்களை உறுத்தாமல் செய்யக் கற்றுக் கொண்டதுதான் நாம் கடைசி நூறு வருடங்களில் செய்த ஒரே விஷயம் என்று அவர் நம்பினார். நானும் அவ்வாறே நம்புகிறேன். நம் பாவபுண்ணியத்தை நம்மால் அளவிட்டுக் கொள்ள முடியுமா? என் செயலி இந்தக் கேள்விக்கான விடைதான்.’
பலரும் ஆறுதல் அடைந்தனர். அவர்கள் என் அப்பாவை போலவே நானும் தெய்வநம்பிக்கை கொண்ட பெண் என்று எண்ணி இருக்க வேண்டும். நான் அந்த எண்ணத்தை நீடிக்க விடவில்லை.
‘தனிமனிதனுக்குள் பாவபுண்ணியம் பற்றிய வரையறை இன்றும் சிதைந்துவிடவில்லை. நம் சமூகத்தில் குற்றங்கள் குறைந்திருப்பது தனிமனிதனின் பாவபுண்ணியம் பற்றிய விழிப்புணர்வால்தான். ஆனால் அமைப்பாக நாம் பாவபுண்ணியங்களை யோசிக்கிறோமா?அமைப்பாக யோசிக்கும்போது எது சரி? எது தவறு?என்ற முடிவற்ற விவாதத்துக்குள் நாம் சென்று விடுகிறோம். தனிமனிதனின் மகிழ்ச்சியைவிட அமைப்பின் ஸ்திரத்தன்மையும் விளைபொருட்களுமே முக்கியமென்று நாம் கருதுகிறோம். அப்படிக் கருதுவதில் தவறில்லை. ஆனால் இந்த சமரசத்துக்கு உட்பட்ட தனிமனிதனுக்கு நம் அமைப்புகள் என்ன கொடுத்திருக்கின்றன? இந்த சமரசத்தை ஏற்படுத்திய அமைப்புகளின் முதலீட்டாளர்கள் பெறுவதும் இந்த சமரசத்தை ஏற்றுக் கொண்ட தனிமனிதன் பெறுவதும் ஒன்றா? அவன் மகிழ்ச்சிக்காக நாம் எதையாவது செய்திருக்கிறோமா?’
கூர்மையான சிலர் கலக்கமடைந்தனர். அப்படி எண்ணியது என் பிரம்மையாகவும் இருக்கலாம்.
‘இதுபோன்ற ஏராளமான கேள்விகளால் எங்கள் செயலியுடன் நாங்கள் இடைவிடாது உரையாடினோம். இன்றும் உரையாடிக் கொண்டே இருக்கிறோம். எங்கள் செயலி உலகின் நிறுவனங்கள் அனைத்துடைய நோக்கத்தையும் வாசித்து இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் கொள்கையும் அதற்குத் தெரியும். ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர் சட்டங்களையும் அது பயின்று இருக்கிறது. சொற்களுக்கு அடியில் சொல்லப்படாத நியதிகளின் வழியே நிகழும் இயக்கங்களை எங்கள் செயலி கண்காணிக்கிறது. உதாரணமாக ஒரு மருந்து நிறுவனம் தன்னுடைய லட்சியம் எனச் சொல்வது ‘நோயற்ற சமூகம்’. அதன் இயக்கம் இந்த நோக்கத்துடன் எவ்வளவு தூரம் இயைந்து போகிறது என்பதை எங்கள் செயலியால் அனுமானிக்க முடியும். ஒரு நிறுவனத்தின் நோக்கம் ‘சொல்’. அதன் இயக்கம் ‘பொருள்’. சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை இந்த செயலி கணிக்கும்.’
இப்போது என்னால் தெளிவாகவே ஒரு அதிருப்தியின் அலையை உணர முடிந்தது.
‘ஒரு தனிமனிதன் தான் பேசுவதற்கும் உணர்வதற்கும் உள்ள இடைவெளி இச்செயலியால் கணிக்க முடியும். ஒரு நிறுவனம் தான் வாக்களிப்பதற்கும் நடந்து கொள்வதற்கும் உள்ள இடைவெளியையும் இச்செயலியால் கணிக்க முடியும். என் அப்பா வாழ்நாள் முழுவதும் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதை எண்ணி துக்கப்பட்டார். நாங்கள் அதைக் குறைக்க முனைகிறோம். சொல்லுக்கும் பொருளுக்கும் இடைவெளி அதிகரிப்பதே ‘பாவம்’ என்று நான் கருதுகிறேன். இச்செயலி தனிமனிதனின் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை பிறழ்வு என்று வகுக்கிறது. நிறுவனங்களின் பிறழ்வே பாவம். ஒரு நிறுவனத்தின் பொருள் சொல்லில் இருந்து விலகும்போது அங்கு வேதனைகள் பெருகத் தொடங்குகின்றன என்று நான் நம்புகிறேன். எங்கள் செயலி உலகில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட அத்தனை நீதிநூல்களையும் வாசித்து உள்ளது. அத்தனை மதநூல்களையும் அவற்றின் விளக்கங்களையும் வாசித்து இருக்கிறது. அது தொடர்ந்து தனக்குள்ளேயும் எங்களுடனும் ஒரு உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது. நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் தரவுகளைக் கொண்டு எங்கள் செயலியால் நிறுவனங்களை ‘ரேட்’ பண்ண முடியும். நான் உங்களிடமும் உலக மக்களிடமும் கோருவது இதுதான்.ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு பொருளை வாங்கும்போது எங்கள் செயலி அந்த நிறுவனத்தை என்னவாக மதிப்பிட்டு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.’
என் அப்பாவை போலவே நானும் என் எதிரே இருப்பவர்களுக்கு தலைவலியாக மாறுவது எனக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நான் என் கணினியின் மெய்நிகர் திரையைத் தொட்டேன்.
‘இன்றுமுதல் நிறுவனங்களின் பாவபுண்ணியங்களை கணக்கிடும் எங்கள் செயலி உங்களுக்காக.’
நான் திருப்தியாக மெய்நிகர் விசைப்பலகையை தட்டினேன்.
‘Welcome to சொல்பொருள்’
September 27, 2025 at 2:50 am
நல்ல கற்பனை.எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு ஜேஜே வை எழுதும் உத்தேசம் உண்டு.ஜெயமோகனின் ஜேஜே உருவாக்கியது விஷ்ணுபுரம்.இந்தக்கதை அறிவு ஜீவித்தனத்தின் உச்சத்தில் எழுதப்பட்டுள்ளது.களமும் அதில் இயங்கும் காலமும சற்று குழப்பத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தினாலும் ஒரு தீவிர நிலையில் அமைந்துள்ளது.
September 27, 2025 at 9:10 am
தனிமனிதனின் சொல்லுக்கும்
நிறுவனங்களின் சொல்லுக்கும் இடையில் உள்ள இடைவெளி, பொருள் வேறுபாடு,கால மாற்றத்தில் மனிதன் சொல்லை
சொல்லின் பொருளை தொலைத்ததும்.
மனிதன் சுயத்தை தொலைத்து
நிறுவனத்தின் நியதிக்காக நித்திய வாழ்வை இழப்பதை சொற்களின் கோர்வையாக சொல்லும் சொல் பொருள்.
September 28, 2025 at 5:55 am
சுபி இன் சுயசரிதை ஒரு சிறுகதையின் வடிவில்…!!!
பாவ புண்ணிய அளவீடு செயலி கற்பனை அருமை..
சொல்லும் பொருளும் அந்த பொருள் தரக்கூடிய உணர்வும் அருமை.. நம் நூறாவது சுதந்திர தினத்தை மை நிகரில் காண்பித்ததற்கு நன்றி தம்பி….
சு பி
October 3, 2025 at 5:35 am
நல்ல முயற்சி சுரேஷ் ப்ரதீப்.
கதையின் மையத்தை தத்துவார்த்தப்படுத்திக் கொள்வது நமக்கு சிறுகதையின் அளவில் பெரும்பகுதியை மிச்சம் செய்து கொடுக்கும். அப்படி மிச்சமாகும் ஓவ்வொரு வரியும் நிறைய இடத்தை தந்து மைய பிரச்சனையை விவாதிக்க வழி வகுக்கும்.
சொற்கள் பயன்படுத்தப்படும் நோக்கங்களால் அதன் இயல்பான அர்த்தம் மாறி மழுங்குகிறது. இதனால் மனிதர்களின் வாழ்வின் “உண்மையான அர்த்தம்” சிதைந்து விடுகிறது. சொல்லுக்கும் பொருளுக்கும் இடையிலான பிளவு ஒரு முக்கியமான சிந்தனை. இதுதான் மையமென வகுத்துக் கொண்டால் நேரடியாக துவங்க வேண்டியது இன்றைய மிகைத்தொடர்பு காலத்தில் தொடர்புறுத்துவதன் அர்த்தமிழப்பிலிருந்து துவங்கலாம். கதை பிற்பகுதியில்தான் இந்த இடத்திற்கே வந்து சேர்கிறது.
ஆனால் இது வெறும் மொழி-அர்த்த பிரச்சினை அல்ல; அது இலட்சியம்–நடைமுறை, கருத்துமுதல் வாதம்–பொருள்முதல் வாதம் போன்ற அடிப்படை முரண்பாடுகளை குறிக்கிறது. அப்படியெனில் இந்த இடைவெளி எப்போதும் இருப்பதுதானே?
தத்துவார்த்தமாக இது சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை மிகையாக்கிக் கொள்கிறது. கதை அந்த இடைவெளியை முதலீட்டியக் காலத்தின் தனிச்சிறப்பு எனக் காட்டுகிறது. காரணம்: முதலீட்டியத்தில் (capitalism) “அர்த்தம்” உருவாகும் இடம் மதிப்பீடு / மார்க்கெட் / குறியீடுகள் ஆகிறது. அதாவது, பொருளின் உண்மையான பயன்பாடு அல்ல, அதன் மதிப்பு எப்படி குறியீடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் மையம்.
அந்த இடைவெளியை முன்வைத்து நிறுவனங்களுக்கு மதிப்பீடு வழங்குவதால் என்ன நிகழும்? முதலீட்டியத்தின் சிக்கலே அதன் வலைப்பின்னல்தானே? இருக்கும் நான்கு நிறுவனங்களுக்கும் மோசமாக மதிப்பீடு அளிக்கப்பட்டாலும் அதில் குறைந்த மோசமான ஒன்றைதானே பயன்படுத்த முடியும்?
பொத்ரியார்டின் சிமுலாகிராமைதான் கதை சிந்திக்கிறது என நினைக்கிறேன். குறியீடுகளின் வலிமையை ஏற்றுக்கொண்டு மதிப்பீடு செய்வது என்பது “அதற்கு அர்த்தம் உண்டு” என்று நிறுவனங்கள் உருவாக்கும் கருதுகோளை ஏற்றுக் கொண்டு நம்மால் அதை மாற்ற முடியும் என நம்புவதாக ஆகிறது.
ஓலாவில் நீங்கள் எத்தனை குறைவாக ரேட்டிங் குடுத்தாலும் நான்கிற்கு குறைவான ரேட்டிங் கொண்ட வாகன ஓட்டிகளைக் காண இயலாது. சிமுலாக்ராம் சமூகத்தில் உங்களுடைய எதிர்ப்புகளும், மதிப்பீடுகளும் கூட உங்களை ஆற்றுப்படுத்தும் வழியாக அமைப்புகளால் உருவாக்கப்பட்டவைதான்.
அதை எதிர் கொள்ளும் வழி குறியீடுகளுக்கு அர்த்தம் ஏற்றும் தனி வாழ்க்கையை நிகழ்வியல்/இருத்தலியல் நோக்கில் வாழ்வதுதான். படைப்பூக்கமாக தன் வாழ்க்கையை தானே தீர்மானித்துக் கொள்வதுதான். இக்கதை அதற்கு மாறாக நிறுவனங்களுக்கு மதிப்பீடு வழங்குவதால், குறியீடுகளுக்கு அர்த்தம் உருவாக்கும் வலிமை இருக்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதாக தோன்றுகிறது. அதாவது உலகமே சிமுலாக்கிராம் எனவும் நான் சிந்திப்பதால் அதற்கு வெளியே இருக்கிறேன் எனவும் எண்ணிக் கொள்வதைப் போல தோன்றுகிறது.
சரியான படைப்பு சமகால அரசியல் சமூக விமர்சனத்திலிருந்து துவங்கி மொழியல் தத்துவ பிரச்சனை வரைக்கும் விரிய வேண்டும். சிமுலாகிரம் நம் காலகட்டத்தில்தான் இணையமாக தோற்றம் பெற்றிருக்கிறது. ஆகவே இத்தகைய கதைகளை இன்றுதான் எழுத முடியும். சிறப்பான முயற்சி. ஆனால் அதை சரியாக தத்துவார்த்தப் படுத்திக் கொள்ளவில்லையெனில் உலகை இன்னொரு app வழியாக சரியாக்கி விட முடியும் என்ற மிகைக் கற்பனைக்கே வழிவகுக்கும்.
மிகை ஊடகமும் முதலீட்டியமும் நமக்குதான் இப்போது நிகழ்கிறது, இதன் துவக்க அலைகளில் அமெரிக்க ஐரோப்பிய தத்துவவாதிகள், கலைஞர்கள் இதை விவாதித்திருக்கிறார்கள். தத்துவத்தை பயில்வது நம்முடைய வாழ்க்கை மீது இத்தகைய கேள்விகளை எழுப்பிக் கொள்ளும் போது இன்னமும் துல்லியமாகவும் தீவிரமாகவும் தொகுத்துக் கொள்ளவும் தேடவும் உதவும் என எண்ணுகிறேன்.