தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு – பின்னம் விழாமல் இழுக்கப்பட்டுவரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கின்றது. இல்லை – இல்லை. சிலந்திப் பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழை போல நீண்டுகொண்டே வருகிறது. இன்று – நேற்று – நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக்கொண்டு கட்டிவைத்துப் பேசிக்கொள்ளும் சவுகரியக் கற்பனைதானே. – கயிற்றரவு கதையில் புதுமைப்பித்தன்
காலம் பற்றிய யோசனை வரும் போதெல்லாம் புதுமைப்பித்தனின் இந்த வரிகள் என் நினைவிற்கு வரும். காலத்தை உணர்வது உடலா? மனமா? இரண்டுக்கும் ஒரேநேரத்தில் காலம் அனுபவமாகிறது. ஆனால் உடல் உணரும் காலத்தை நாம் நேரம் அல்லது பருவம் என்று வகுத்து விடுகிறோம். காலையில் எழும்போது குளிர்கிறது. குளிர்காலம். குளிர்காலம் எப்போது முடியும் அல்லது இந்தக் கடுங்குளிர் எப்போது முடியும் என்று யோசிக்கத் தொடங்குகிறோம். அடுத்ததாக உடலின் காலம் புறவுலகத்தால் தெளிவாக வகுக்கப்படுகிறது. புறவுலகு காலத்தின் எளிய பகுதியான நேரத்துக்கு மனித உடலைப் பழக்குகிறது. பிறந்த குழந்தைக்கு இந்த உடலின் நேரவிதிகள் அவ்வளவு தீவிரமாக கடைபிடிக்கப்படுவதில்லை. அது நினைத்த நேரத்திற்குத் தூங்கி நினைத்த நேரத்திற்கு எழ அனுமதிக்கப்படுகிறது. ‘காலாகாலத்தில்’ அது செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஆனால் குழந்தையின் காலமின்மை நம்முடைய நேர அட்டவணையை குழப்பும். அது எப்போது உறங்கும் எப்போது விழிக்கும் என்றெல்லாம் எண்ணி நாம் பதற்றமடைவோம்.
பள்ளியில் சேர்க்கப்படும்போது நம் பதற்றம் குறைந்து குழந்தையின் பதற்றம் அதிகரிக்கிறது. ‘நேரத்தில்’ பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் குழந்தையின் மீது பெருந்துயரமாகக் கவிகிறது. அது நம்முடைய ‘நேர அனுபவத்துக்குள்’ திணிக்கப்படுகிறது. பாவம்! தன்னை ஒரு உடலாக ஒரு குழந்தை உணரத் தொடங்கியவுடன் உடல் உணரும் காலத்தை ஓராயிரம் சிறு சிறு செயல்களாகப் பிரித்து உடல் கால உணர்வு கொள்வதை அல்லது காலத்தில் இருந்து தப்பிப்பதை சமூகம் தடை செய்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள். சாகசம் என்று நாம் சொல்வது அனைத்துமே சமூகம் விதித்திருக்கும் இந்த நேர அட்டவணையில் இருந்து ஒருவர் வெளியேறுவதாகவே இருக்கும். உடல் காலத்தை உணர்வது இரண்டு வகையில்தான். காமத்தின் வழியாக. பசியின் வழியாக. இரண்டையும் கட்டுப்படுத்தவே ‘ஆன்மீகம்’ அறிவுறுத்துகிறது. போகத்தில் திளைக்கும்போது கால உணர்வு அற்றுப் போகிறது. எல்லைக்குட்பட்ட இந்த உடல் அவ்வளவு ‘சொகுசு’டன் இருப்பது காலத்துடன் தனக்கிருக்கும் உறவை துண்டித்துக் கொள்வதாகவே மாறிவிடும். கால உணர்வு கொண்டவர்களின் உடல் விழிப்புடனிருக்கிறது. ஆனால் அரசாங்கம் மனிதர்களின் கால உணர்வை மழுங்கடிக்க கீழான கேளிக்கை தொடங்கி ஒற்றைப்படையாக்கம் செய்யப்பட்ட வரலாறுவரை அவர்களிடம் ஏராளமானவற்றைக் கொடுக்கிறது. போகங்கள் மனிதர்களின் ஆணவத்தைத் தூண்டுகின்றன. இன்னும் இன்னுமென மனிதர்களுக்கு வெறியேற்றுகின்றன. மரணம் பற்றிய பிரக்ஞையை மனிதர்கள் இழக்கிறார்கள். போரோ நோயோ வந்துதான் மனிதர்களுக்கு அவர்களின் உடல் சார்ந்த எல்லையை உணர வைக்க முடிகிறது. உடல் காலத்தை உணர்வதற்கு எதிரான திசையில் மனம் காலத்தை உணர்கிறது.
உடலின் காலம் பற்றிப் பேசும்போது எல்லாமும் புறவயமானதாக கையாளத்தக்கதாகத் தோன்றுகிறது. விழிப்புணர்வின் வழியாக உடலின் காலத்தை நம்மால் கண்காணிக்க முடிகிறது. சிந்தனையின் வழியாக உடலின் காலத்தை உணரவும் முடிகிறது. ஆனால் மனதின் காலம்?
உண்மையில் மனம் என்பது என்ன? நம்முள்ளிருந்து நம்மிடம் ஓயாது உரையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிந்தனைத் தொடர்ச்சி என்று சொல்லலாமா? உண்மையில் நம் மனதை நாம் உணர்வதே இல்லை. அதற்கும் நமக்கும் பெரிய தொடர்பில்லாதது போலதான் தினம் தினம் வாழ்கிறோம். மனதுடன் ஒரு மனிதர் எவ்வளவு தூரம் தொடர்பில்லாத வாழ்கிறாரோ அவ்வளவு தூரம் அவர் தன் அன்றாடத்திலும் மரபுக்குள்ளும் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
நாம் சமூகம் என்று இணைந்து வாழ்வதே கால உணர்வை மறக்கத்தானோ என்று தோன்றும். துறவறம் மேற்கொள்கிறவர்கள் சமூகத்தில் இருந்து விலகிச் செல்வது காமத்தை விலக்க பந்தத்தை அறுக்க என்பதை எல்லாம் தாண்டி காலத்தை ‘உணர’ என்றும் தோன்றும்.
நான் அடிக்கடி சொல்லும் ஒரு உதாரணம். சமூக வாழ்க்கை என்பது பண்டிகை நெருங்கும் சமயத்தில் ஒரு நெருக்கமான கடைவீதியில் நிற்பது போன்றதுதான். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மைச் சூழ்ந்திருக்கும் சமூகம் நம்மை ‘நகர்த்தி’ கொண்டு சென்றுவிடும். ஆனால் மனிதன் வெறும் ‘சமூக விலங்கு’ மட்டும் அல்ல. வெறும் சமூக விலங்காக மட்டும் இருந்தால் சமூகத்தில் ‘வளர்ச்சி’ என்பதே சாத்தியமில்லாத போயிருக்கும். இங்கு வளர்ச்சி என்பதை நாகரிகமடைதல் என்று எடுத்துக் கொள்ளலாம். நாகரிகத்தில் அவ்வப்போது நாம் பின்னுக்கும் போகிறோம். சமூகமாக வாழும்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் நிறுவனங்கள் நம்மை காலத்தை உணரவே விடுவதில்லை. கலை கால உணர்வை அற்றுப்போகச் செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் கலை மனதுக்கு கால உணர்வை அளிக்கிறது என்று சொல்வது அவ்வளவு தவறாகப் போய்விடாது.
கலை என்றில்லை எந்தவொரு அறிவுத்துறையும் காலத்தை அதன் தர்க்கத்தின்படி ‘உணர’ வைக்கவே முயல்கிறது. எல்லா அறிவுத்துறைகளுக்கும் ‘வரலாறு’ இருக்கிறது. அதன் தொடக்கப்புள்ளி பற்றியும் செல்திசை பற்றியும் ஒரு உத்தேசமான பார்வையை நமக்கு அத்துறை வழங்குகிறது. அறிவுத்துறைகளின் காலப்பகுப்பு புறவயமானதாக இருக்கிறது. ஆனால் கலையில் காலப்பகுப்பு மாயத்தன்மை கொண்டது.
அடவுகள், இசை, மொழி, வர்ணம், வடிவம் எல்லாமும் காலத்தைத் தாண்டிவிடும் அல்லது காலத்தைக் குழப்பிவிடும் உட்கிடக்கையை தன்னுள் கொண்டுள்ளன. மனம் இவற்றுடன் புழங்கும்போது கால உணர்வை இழக்கிறது. ஆனால் மனம் இழக்கும் கால உணர்வை உருவாக்கியதும் அதே கலையாகத்தான் இருக்கும்! தஞ்சை பெரிய கோவிலுக்குள் நுழையும்போது ஆயிரம் வருடங்களுக்கு முன் நிலைக்கச் செய்யப்பட்டு ஓரிடத்தில் நிறுத்தப்பட்ட ‘காலத்துக்குள்’ நுழையும் உணர்வை துளியேனும் நாம் அடைகிறோம் அல்லவா?பெரிய கோவில் ஒரு கட்டிடமோ அல்லது வழிபாட்டிடமோ மட்டுமல்ல. அதுவொரு ‘காலத்துண்டு’. அன்று செயல்பட்ட ஏதோவொரு ‘மனோதர்மம்’ தன்னை அப்படி விட்டுச் சென்றிருக்கிறது.
மொழிக்குள் இருப்பதையும் இப்படியான ‘காலத்துண்டுகள்’ தான். இக்கட்டுரையில் ஏதோவொரு சொல் ஆயிரமாண்டு பழமை வாய்ந்ததாக இருக்கும். இன்னொன்று இன்னும் ஆயிரமாண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கும். சொல்லாகத் திரளாத உணர்ச்சிநிலையாக இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் அச்சொல் கிடந்திருக்கும். இந்த இடத்தில் ஆனந்தின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
நான் முதல் அம்பு
நான் முதல் அம்பு. பன்னெடுங்காலமாய்
இந்த மலையுச்சியில்
கிடக்கிறேன்
யார் மீதும் விரோதமற்ற
ஒருவன் வந்து
தன் வில் கொண்டு
என்னை
வெளியில் செலுத்துவானென.
காலத்தை தன்னுள் சுருட்டிக் கொண்டு எத்தனை சொற்கள் இங்கு கிடந்திருக்கும் அப்படி! இக்கட்டுரை பேச வந்த விஷயத்திலிருந்து வெகுவாக விலகிப் போய்விட்டதாகத் தோன்றுகிறது. இலக்கியம் விசேஷமானவர்கள் உணரும் விசேஷமான அனுபவங்கள் பற்றியது அல்ல என்பது என் நம்பிக்கை. சாதாரணர்கள் தன் வாழ்வின் அசாதாரண தருணங்களைக் கண்டு கொள்வதன் வழியாக இலக்கியம் ஆறிய தேநீரில் ஆடையெனப் படிந்திருக்கும் இத்தனை நாள் நாம் இயல்பென நம்பிக் கொண்டிருக்கும் படலத்தை விசிறி உள்ளிருக்கும் ஆழத்தைக் காட்டி விடுகிறது.
ஆழம் தரிசிக்கக் கிடைக்கும் தருணங்களில் எல்லாம் காலமும் தரிசிக்கக் கிடைக்கிறது என்பது இலக்கியமளிக்கும் ஆச்சரியங்களில் ஒன்று! ஆழம் காலம் என்று சந்தத்துடன் பேசவில்லை. ஆழத்திற்கும் காலத்திற்கும் உள்ள தொடர்பைப் பேசவே வந்தேன்.
கு.ப.ராஜகோபாலனின் பிரபலமான கதை. விடியுமா? கணவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று தந்தி வந்திருக்கிறது. தந்தி அந்தக் காலத்தில் ஒரு ‘அபாய அறிவிப்பு’. மனைவி கும்பகோணத்தில் இருக்கிறாள். கணவன் சென்னையில். மனைவியும் அவள் தம்பியும் ரயிலில் இரவு முழுவதும் பயணிப்பதுதான் கதை. ஒரு சாதாரண மனம் காலம் எனும் ‘ஒன்றும் செய்யமுடியாமை’யை உணரும் தருணத்தை கு.ப.ரா அவ்வளவு நேர்த்தியாக எழுதி இருப்பார். முதலில் குஞ்சம்மாளும் அவள் தம்பியும் புறப்படும்போது தெய்வத்தை வழிபட்டு ‘ஒன்றும் இருக்காது’ என்று சொல்லி அவள் அம்மா அனுப்பி வைப்பாள். நல்ல ‘சகுனமாக’ எதிரே வரும். ரயிலில் ஒரு பெண் குஞ்சம்மாளுக்கு பூ கொடுப்பாள். ஆனால் கு.ப.ரா கதை நடுவே எழுதிச் செல்லும் ‘கால உணர்வு’ தரும் வரிகள் முக்கியமானவை.
/ரயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம்./
/எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது./
/சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?/
/இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை./
/எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்./
/“அப்பா! விடியுமா?” என்கிற நினைப்பு ஒருபக்கம்.
“ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!” என்ற நினைப்பு மற்றொரு பக்கம்./
முதல் தடவை வாசிக்கும்போது கதையின் முடிவு நமக்குத் தெரிந்து விடுகிறது. ஆனால் மனதின் முடிவு? அது கொள்ளும் தத்தளிப்புகள்? மனதை ‘மறைத்து’ வைக்கு சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் இக்கதை பேசுகிறது. மனித வாழ்வு லௌகீகமான மகிழ்ச்சி நிறைந்ததாக இருப்பதற்கு காலம் என்ற சங்கதி அதன் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. புத்தன் பற்றிய புராணக் கதையில் அவன் நோய் மூப்பு மரணம் வழியாக ஒரு உடலின் ‘காலம்’ முடிவுக்கு வருவதை அல்லவா காண்கிறான்!
விடியுமா? போல தீவிரமான தருணத்தை எடுத்துக் கொள்ளாமலே கால அனுபவத்தை கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அசோகமித்திரனின் சில கதைகளைச் சொல்ல முடியும். எல்லோரும் குறிப்பிடும் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ கதை அதற்கொரு தொடக்கம் மட்டுமே. எண்கள் என்ற கதை கால அனுபவத்தை இன்னும் தீவிரமாக வழங்கும்கதை. அதைவிடச் சிறந்த கதை என ‘நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது . . .’ என்ற கதையைச் சொல்லலாம். கதையின் தலைப்புதான் கதைத்தருணமும்! ஒரு கிரிக்கெட் மேட்சில் மனம் எவ்வாறு ஒவ்வொரு ஆட்டக்காரனிடமிருந்து தாவித்தாவி செல்கிறது எப்படியெல்லாம் நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்கிறது என்பதை பேசிச்செல்லும் கதை. இக்கதையில் காலம் ஒரு பின்னணியாக மட்டுமே அமைகிறது. அசோகமித்திரன் தன்னுடைய கதைகளில் ஒரு கதையில் உருவாக்கும் உணர்ச்சி நிலையை மற்றொரு கதையில் மேம்படுத்தி இருப்பார். காலமும் ஐந்து குழந்தைகளும் கதையில் காலத்தில் சிக்குண்டு தவிக்கும் மனதின் ஒரு தீற்றல் உள்ளது. அது முழுமையான செவ்வியல் தன்மையை அடைவது ‘நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது . . .’ என்ற இந்தக் கதையில்தான்.
அடுத்ததாக ஜெயமோகனின் மலைவிளிம்பில் என்ற கதை. மனம் பிளந்து கொள்ளும் அபாரமான தருணத்தை இக்கதையில் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். தன் குடும்பத்தை நிர்மூலமாக்கிய ஒருவனை தடயங்களே இல்லாமல் கொல்லும் வாய்ப்பு ஒருவனுக்கு கிடைக்கிறது. மிகக் குறுகிய அந்த காலத்தில் பிரம்மாண்டமாக மனம் விரிவதை அக்கதை பேசுகிறது. இந்த மூன்று கதைகளின் வழியே காலத்துக்கும் மனதுக்குமான தொடர்பை லேசாக கோடிட முடிந்த திருப்தி!
February 5, 2025 at 1:55 pm
கொண்டல் பொழிகரைப் போல்தயிர் புள்ளித்தனி
கண்டநாட் கற்பிதமே காண்நீர்த் – தொண்டர்தம்
ஞாயிறு திங்கள்செவ் வாயெனப் பகுத்தனாட்
பேரொன்றே நாம்பிரித்த வாறு.
அற்றமில் கம்பிபோல் காலத் தொடர்ச்சியாம்
ஒற்றைநூல் போலொருங்கே ஓடும் – பற்றிலாச்
சிலம்பிநூ லொத்திடையின் இன்றுகாலை சின்னாட்கள்
புலப்படா தோடும் தொடர்வு.
February 5, 2025 at 2:38 pm
சிறப்பான கட்டுரை. சுரேஷ்
February 6, 2025 at 8:07 am
Really insightful thought process and some writer reference highlights very interesting. So, chronological time vs Biological time decoding nice.All the best Sir