நேற்று அஞ்சனாவின் பிறந்தநாள். அவளுக்குப் பரிசாக அளிக்க என்னிடம் சொற்கள்தான் உள்ளன. அஞ்சனம் என்றால் கண்களை துலக்கமாகக் காட்டும் மை. இக்கவிதைகள் அவளுக்கு அஞ்சனம்.

1

கொழுப்பு

பாப்பாக்குட்டி

பட்டுக்குட்டி

பன்னிக்குட்டி

குல்கந்து குட்டி

என்றெல்லாம்

குழந்தையைக் கொஞ்சியவன்

எல்லாவற்றிலும்

‘குட்டி’ சேர்த்துக் கொள்கிறான்

டிஃபன் குட்டி

சோபாக்குட்டி

ஆஃபீஸ் குட்டி

இறுதியாக 

எதையோ தீவிரமாக

பேசிக் கொண்டிருந்தபோது

இப்படிச் சொன்னான்

வாழ்க்கை குட்டி

பாருங்கள்

இந்தக் குட்டி எப்படி 

அவனுடைய

எல்லாவற்றையும்

குட்டி ஆக்கிவிட்டாள்

என்று

பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும்

நீர்த்துளியின்

கொழுப்பு

இவளுக்கு

2

கோவிலில் ஒரு சிறிய பெண் சிலை

பெயரில்லை

உருவிலும் தெளிவில்லை

முத்திரைகள் புலப்படவில்லை

எங்கும் பதிக்கப்படவில்லை

தனியே நிற்கிறது

காணாமல்போன

குழந்தையைப்

போல

அடி என் கண்ணே!

யாரடி உன்னை தொலைத்தது?!

3

தலையாட்டும் புத்தர்சிலை

அருகிலொரு வெற்றுப் பாத்திரம்

அதிலிருந்து

அள்ளி அள்ளி

ஊட்டுகிறாள் மகள்

என்ன சுவை!

என்ன சுவை!

4

காலத்தைக் கடத்தல்

மனைவி எடுத்திருந்த புகைப்படத்தில்

குப்புறப்படுத்துத் தூங்குகிறாள் மகள்

இடதுகையால் முகத்தை மூடிக்கொண்டு

வலதுகாலை வயிற்றுக்கு நெருக்கமாக வைத்தபடியே

அருகிலேயே

அப்படியே

தூங்குகிறேன் நான்

5

அது

அது என்னாது

படி

அது என்னாது

மொட்டைமாடி

அது என்னாது

வானம்

அது என்னாது

நிலவு

அது என்னாது

நட்சத்திரங்கள்

அது என்னாது

பிரபஞ்சம்

அது என்னாது

தெரியவில்லை கண்ணே

எங்கள் யாருக்கும் தெரியவில்லை

ஆனால்

கண்டிப்பா 

இன்றிரவு

உன் கனவில் 

கடவுள் வந்து சொல்வார்

காலையில் கண்விழிக்கும்போது எனக்குச் சொல்கிறாயா

‘அது என்னாது’ என்று

6

அதிருப்தி

நானும்

அவள் பிறந்ததிலிருந்து

பார்க்கிறேன்

எப்போதும்

முகத்திலொரு அதிருப்தி

தூங்கும்போதுகூட

என்னவோ

தகுதியற்ற இடத்துக்கு

வந்துவிட்டதுபோல

சரிடி

இதை நீதான் தகுதிப்படுத்தேன் 

என்கிறேன்

சிரிக்கிறாள்

சிரிக்கிறாள்

அப்படிச்

சிரிக்கிறாள்

7

ஆகவே செயல்புரிக!

தூங்கிக்கொண்டிருக்கிறாள்

அழுதுகொண்டிருக்கிறாள்

சிரித்துக்கொண்டிருக்கிறாள்

உண்டுகொண்டிருக்கிறாள்

விளையாடிக்கொண்டிருக்கிறாள்

கடித்துக்கொண்டிருக்கிறாள்

அடித்துக்கொண்டிருக்கிறாள்

ஓடிக்கொண்டிருக்கிறாள்

ஒளிந்துகொண்டிருக்கிறாள்

பயந்துகொண்டிருக்கிறாள்

பார்த்துக்கொண்டிருக்கிறாள்

ஒரு நொடியும்

சும்மா இருப்பதில்லை

8

வாலு

அலுவலகத்தில் அவளுக்கு வயது எழுபது

பேருந்தில் ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி வெளியே பார்ப்பவளின் வயதினை கணிக்க அவள் கண்களை நீங்கள் பார்க்க வேண்டும்

வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் உடலுக்கும் மனதுக்கும் ஒரே வயது

எல்லோரும் உறங்கிய பின் அவள் வயதுக்கு என்னவோ ஆகிறது

ஏதோவொரு கணத்தில் எழுதத் தொடங்கிறாள்

முதல் சொல்லை விழுதெனப் பற்றி வந்து குதிக்கிறாள்

ஒரு வால் முளைத்த பட்டுக்குட்டி

9

ரகசியம்

மகளின் 

பழைய உடையொன்றைக் கிழித்து

சாமிப்படங்களைத் துடைத்தேன்

குழந்தையின் வாசம் தெய்வங்களை மலரச் செய்துவிட்டது

அன்று முழுக்க அவ்வளவு மகிழ்ச்சி தெய்வங்களுக்கு

ஊரில் நல்ல மழை

ஒரு கெட்டசெய்தியும் காதில் விழவில்லை

ரொம்பநாள் பகைநாடுகள் போர்நிறுத்தம் அறிவிக்கின்றன

கற்றுக் கொள்ளுங்கள் 

இப்படி ஏதாவது செய்துதான்

தெய்வங்களை

நம் வழிக்குக் கொண்டுவர வேண்டும்

10

அந்நியம்

குளத்தில் ஒரு கல்லை எறிந்தேன்

தன்விளிம்புவரை

அலைகளை அனுப்பி

எச்சரிக்கை செய்தது

கொஞ்ச நேரத்தில் மழை பெய்தது

முகமெல்லாம் பல்லாகச்

சிரித்தது குளம்

11

தியானம்

வெண்சிறகு விரித்துப்

பறந்த கொக்கு

நான் காணும்போதெல்லாம்

சிறகு சுறுக்கி

உறுமீன் தேடுகிறது

உறுமீனை உட்கார்ந்து தேடவேண்டும் என்று தெரியவில்லை அதற்கு

பாவம்!

12

அமிர்தப்பூச்சி

வேம்பு தடவிய முலையை சுவைத்தவள்

கசப்பதெல்லாம் பூச்சி என்று கண்டாள்

அழுபவளைத் தழுவும்

அவள் அம்மாவின்

நெஞ்சை சுட்டி

‘பூச்சி பூச்சி’ என்றாள்

ஒருநாள்

சட்டையின்றி நின்றேன் மகள்முன்

சுரக்கா என் முலை தொட்டு

‘பூச்சி பூச்சி’ என்றாள்

13

ஒரு சாதாரண நிகழ்வு

வெந்நீர் குளியல்தான்

வெயிலும் அடிக்கிறதுதான்

இருந்தாலும்

வாழைகள் விரட்டிய காற்றில்

உடல் சிலிர்க்கிறாள்

‘அம்மா குளுருது’ என்கிறாள்

‘காத்த அடிக்க வேணாம்னு சொல்றா’ என்கிறாள் அம்மா

இவளும்

‘காத்து ,அடிக்காத’ என்கிறாள்

காற்றும் அடிப்பதை நிறுத்திவிட்டது

14

பாடபேதம்

அண்ணன் சொன்னதைக் கேட்டு அவளும் சொல்கிறாள்

அகரமுதல

எலுத்தெலாம்

ஆதிபகவன்

முதற்றே

அழகு

15

யாசகன்

இரண்டாவது பிறந்தநாள் வருகிறது அவளுக்கு

என்ன கொடுப்பது என்று

யோசித்து யோசித்து சோர்ந்து போகிறேன்

ஒன்றும் கொடுக்க இயலாதவனுக்கு 

வந்து பிறந்துவிட்டாளா

இரண்டு பற்கள் இன்னும் முளைக்காத

அந்த சிரிப்பு

ஞாபகம் வருகிறது

கொடுக்க முடியாவிட்டால் என்ன

நான் பெற்றுக் கொள்வதே

அவளுக்கு போதும்!

16

ஒரேயொரு முறை

அவள் அம்மாவைவிட்டு

என்னிடம் ஒட்டிப்

படுத்துக் கொண்டாள்

எவ்வளவு பெருமையாய் இருந்தது!

அமைதியாய் தூங்கும் மனைவியின் மீது 

அவ்வளவு பொறாமையாயும் இருந்தது!

17

படுக்க வைத்துத்தான்

அத்தனைநாள்

அந்த நர்ஸ்ப்பெண்

எடைபார்த்தாள்

இன்று

நின்றபடி

எடைபார்க்கும்

எந்திரத்தில் 

ஏறிநின்று 

பொறுப்பாக

கம்பியை பிடித்திருக்கிறாள்

பாப்பா

எடை கூடியது

பாப்பாவின் உடலில்

மட்டுமல்ல!

18

அசட்டுச் சிரிப்புக்கும்

அர்த்தம் பொதிந்த சிரிப்புக்கும்

இடையிலொரு சிரிப்பிக்கிறது

அச்சிரிப்பு அவள் முகத்தில் இருக்கிறது

அம்முகம் என் நினைவிலெழுகிறது

இப்போது அச்சிரிப்பு

என் முகத்திலிருக்கிறது!

19

இப்படித்தான் தீபாவளிக்கு காத்திருப்பேன்

இப்படித்தான் பொங்கலுக்கு காத்திருப்பேன்

இப்போதெல்லாம்

பண்டிகைகள் உற்சாகமளிப்பதில்லை

அதற்குபதிலாகத்தான்

இவள் பிறந்திருக்கிறாள்போல

இப்போது

இப்படித்தான்

இவள்

பிறந்தநாளுக்கு

காத்திருக்கிறேன்

பிறப்பதற்கு காத்திருந்ததைவிட

பிறந்தநாளுக்கு 

காத்திருப்பது

சந்தோஷமாக இருக்கிறது!

20

கோவிலில்

விழுந்து கும்பிட கற்றுக் கொண்டாள்

வீட்டினுள் நுழைவதற்கு முன்

பிஞ்சுக் கால்களைக் காட்டுகிறாள்

காலணிகளைக் கழற்ற வேண்டுமாம்!

அலுவலகத்திற்கு வழியனுப்ப வாசலுக்கு வருகிறாள்

அழுவதில்லை

முன்புபோல

இதையெல்லாம் ஏக்கத்துடன்

எழுதுகிறேன்

புரிகிறதா!

21

முன்னேறு இந்தியா!

ஒருமுறை

ரயிலில் அழத்தொடங்கியவளை

அமத்துவதற்கென

பக்கத்து தண்டவாளத்தில் ஓடிய ரயிலை

காட்டிவிட்டாள் மனைவி

ரயிலில் போகும்போதெல்லாம்

இப்போது ஒரேபாட்டுதான்

‘இன்னொரு ட்ரெயின் எங்க?

இன்னொரு ட்ரெயின் எங்க?’ 

எனதருமை தேசமே

இவளுக்காகவாவது

இந்தியா முழுமைக்கும்

இரட்டைத் தண்டவாளம்

போடேன்!