1

அர்ஜுன் சுப்ரமணியனை நீங்கள் புகைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். கருப்பும் வெண்மையும் சரிவரக் கலந்த தாடியும் மீசையுமாக புகைப்படங்களில் வெகுளியாக சிரித்துக் கொண்டிருக்கும் அந்தத் தமிழர் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் என்று சொன்னால் யாராலும் எளிதாக நம்பிவிட முடியாது. ஆனால் அவர் நேரிலும் புகைப்படத்தில் இருப்பது போலத்தான் இருப்பார். அதே சிரிப்பு. அதே வெகுளித்தனம்.

நான் உத்தரபிரதேசத்தில் பிறந்தவன். எனக்கு இப்போது நாற்பது வயதாகிறது. அர்ஜுனுக்கு என்னைவிட பத்து வயது அதிகம். அவர்தான் எனக்கு குரு.எங்கள் ஊர் லக்னௌவில் இருந்து முன்னூறு கிலோமீட்டர் தள்ளியிருந்த ஒரு கிராமம். எங்கள் ஊரில் இருந்து லக்னௌவைவிட தில்லி பக்கமாக இருந்தது. ஆனால் எங்கள் ஊர்க்காரர்கள் தில்லி வாசிகளை அந்நியமாக உணர்ந்தார்கள். லக்னௌவாசிகளுக்கு நாங்களும் அந்நியமாகவே இருந்தோம். இதெல்லாம் தெரிவதற்கு முன்பே நான் என் ஊரிலிருந்து அந்நியப்பட்டுவிட்டேன். நான் தலித்துகளுக்கும் தாக்கூர்களுக்கும் இடைபட்ட ஒரு சாதியில் பிறந்தவன்தான். எங்கள் ஊர் தாக்கூர்கள் ஏதாவது காரணம் சொல்லி தலித்துகளை தாக்கவரும் போதெல்லாம் எங்கள் ஆட்கள் தலித்துகளுக்கு அரணாக நின்றனர். ஆனால் இது ஒன்று மட்டுமே என் உறவினர்களின் நல்ல குணமாக இருந்தது.

மற்றபடி பேருந்தே வராத வயல்களுக்கு மத்தியில் இருந்த குடிசைகளின் தொகுதியான எங்கள் ஊரில் சண்டைகளுக்குப் பஞ்சமே இல்லை. நடக்கும் சண்டைகளில் முக்கால்வாசி கள்ள உறவு சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். கொலையில் போய் முடிந்துவிடுமோ என்று அஞ்சிய சண்டைகள் சாதாரணமாகவும் வேடிக்கை சண்டைகள் கொலையிலும் முடியும் விசித்திரமும் நடக்கும். நான்தான் வீட்டின் மூத்த பிள்ளை. என் அம்மாவுக்கு என்னை நினைத்து ஒரு பயம் இருந்தது. நான் பொறுப்பாகப் படித்தேன். உச்சி வெயிலில் காலில் செருப்புகூட இல்லாமல் எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தள்ளி இருந்த பள்ளிக்கு நடந்து செல்லும் என்னை என் அம்மா அச்சத்துடன்தான் பார்த்தார்.என் தம்பி தங்கைகளிடம் இருந்த விளையாட்டுத்தனம் என்னிடம் அவ்வயதிலேயே சுத்தமாக இல்லை. நான் சாந்தமான படிக்கிற பையன் என்கிற எண்ணம்தான் அப்பா உட்பட அனைவரிடமும் இருந்தது. ஆனால் அம்மாவுக்கு மட்டும்தான் நான் கடுமையாக கோபப்படக் கூடியவன் என்பது தெரிந்தது.

நான் பதினான்கு வயதில்தான் முதன்முதலாக கணினியைப் பார்த்தேன். அதுவரை கருப்பாக திரை இருந்தால் அதுவொரு டெலிவிஷன், அதில் படம் பார்க்கலாம் என்று மட்டுமே எனக்குத் தெரிந்து இருந்தது. ஆனால் கணினியில் மௌஸ் மற்றும் கீபோர்ட் இரண்டையும் வைத்து நாம் நினைத்த மாதிரி படம் வரையலாம் எழுதலாம் என்பதையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை. என் ஆசிரியர் ஒருவர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது என்னிடம் கணினியை காண்பித்தார். சில நிமிடங்களே என்றாலும் என் மனம் கணினிக்காக ஏங்கத் தொடங்கிவிட்டது. எப்படியாவது ஒரு கணினியைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்று தவித்தேன். அந்த ஆசை ரஜ்னியால் நிறைவேறியது.

என் பெரியப்பா மகன் கிஷோர்குமார் நல்ல வசதியாக இருந்தான். எங்கள் ஊரிலேயே அவன் ஒருவன் வீட்டில்தான் டிவி இருந்தது. அவன் வீட்டுக்கு நான் தனியாகச் சென்றதே இல்லை. அம்மாவும் உடன்வருவாள். அம்மா என்னை நம்பாததுதான் அவள் என்னுடன் வந்ததற்கு காரணம் என்று இப்போது தோன்றுகிறது.அவள் நினைத்திருந்தது போல எனக்கு கிஷோரின் மனைவி ரஜ்னி மீது எந்தவொரு எண்ணமும் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் அவள் என்னை வம்புக்கு இழுப்பவளாகவே இருந்தாள்.

‘தம்பி உன் அண்ணன் யுதிஷ்டிரன் மாதிரி இருக்கிறான். நீயும் உன் தம்பியும் எனக்கு பீமனாகவும் அர்ஜுனனாகவும் இருங்களேன்’அம்மாவை வைத்துக் கொண்டே இப்படிப் பேசுவாள்.

அவளுக்கும் எனக்கும் ஒரே வயது. பதினைந்து. ஆனால் நான் அவளை ‘பாபி சாஹிபா’ என்றே அழைப்பேன்.

பத்திரிகைகளில் வந்த கணினிப் படங்களை எல்லாம் கத்தரித்து வைத்திருந்தேன்.Operating system என்ற சொல்லின் மீதும் எனக்கு ஒரு மயக்கமே ஏற்பட்டிருந்தது. விண்டோஸ் சர்வர் 2003 என்ற வாக்கியத்துடன் கணினி திரை ஒளிர்வது எனக்குள் அவ்வளவு கிளர்ச்சியை அளித்திருந்தது. பேரழகியான ரஜ்னிகூட அந்தக் கிளர்ச்சியை எனக்கு அளிக்கவில்லை.ரஜ்னி இப்போது அழகை எல்லாம் இழந்துவிட்டாள். மூன்று குழந்தைகள் பெற்று வெந்நிற சினைப்பன்றி போல மாறிவிட்டாள். ஆனால் என் மனைவி நேகா இப்போதும் பார்ப்பவர்களை பதறச் செய்யும் பேரழகுடன் திகழ்கிறாள். எல்லாம் இந்த கணினி தந்த கொடுப்பினைதான்.

கிஷோரின் வீட்டில் இருந்த ஓனிடா டிவியில்தான் முதன்முதலாக அர்ஜுன் சுப்ரமணியனை இருபத்தைந்து வயது இளைஞனாகப் பார்த்தேன். அர்ஜுனின் இணையதள வடிவமைப்புகள் சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கி இருந்தன. நான் பார்த்தபோது அர்ஜுன் இப்படி பேசிக் கொண்டிருந்தார்.

‘அழகும் பயன்பாட்டின் ஒரு பகுதிதான். எதிர்காலத்தில் லட்சக்கணக்கானவர்கள் பணியழுத்தத்துடன் கணினியின் முன் அமர்வார்கள். அவர்களை நம் இணையதளத்தின் நிறங்கள் மேலும் பதற்றம் கொள்ளச் செய்யும்படி இருக்கக்கூடாது. ஆகவே நாங்கள்….’

ரஜ்னி குறுக்கே புகுந்து இப்படிச் சொன்னாள்.‘நமக்கு அர்ஜுனன் வேண்டாம். நீ யுதிஷ்டிரனைக் கொன்றுவிட்டு என்னை இந்திரப்பிரஸ்தம் அழைத்துப்போ’அன்று எனக்குள் எழுந்த கோபத்துடன் கையை ஓங்கியிருந்தேன் என்றால் இன்று சிறையில் இருந்து தண்டனை முடிந்து வெளிவந்தவனாக இருந்திருப்பேன். என் கைகளில் வலுவேறியபோது அம்மாவின் கை என் கையைப் பற்றி இருந்தது. நான் கோபப்பட்டேன் என்பதுகூட ரஜ்னிக்குத் தெரியவில்லை!

அன்று வீட்டிற்கு திரும்பி நடக்கும்போதே அம்மா சொல்லிவிட்டாள்.

‘கமல் நீ இங்கு இருக்க வேண்டாம்’

2‘

‘Act in haste’‘Do what is necessary’அர்ஜுன் சுப்ரமணியனின் அறையில் அவருடைய இருக்கைக்குப் பின்னே இந்த வாசகங்கள் மட்டும்தான் எழுதி இருக்கும்.நான் முப்பது வயதில் என் நாயகனை முதன்முறையாக சந்தித்தேன். ஆனால் நான் அவரை அப்படிச் சந்திக்க விரும்பவில்லை. வெப் டிசைனிங்கிலும் செயற்கை நுண்ணறிவிலும் பெரும் சாதனையாளனாக அவர் முன்னே போய் நிற்கவே விரும்பினேன். ஆனால் முப்பது வயதில் ஒரு ஊழியனாக வேலைக்குச் சேர்வதற்கான நேர்முகத்துக்காக அவர் முன்பே போய் நின்றேன்.

முந்தைய தினம் நேகாவிடம் இதைச் சொன்னபோது அவள் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். ‘அர்ஜுன் சுப்ரமணியமே உன்னை நேர்காணல் செய்யப் போகிறார். அவருடைய ஹெச்ஆர் டீமில் வேலை செய்ய உனக்கு கசக்கிறதா?’ என்று சற்று எரிச்சலுடன் கேட்டால்.

அவள் மூன்றுமுறை ஜென்ட்இண்ட்(Gentle Intelligence)க்கு விண்ணப்பித்தும் ஒருமுறைகூட நேர்முகத்துக்கு அழைக்கப்படவில்லை. என் மீது பொறாமை இருக்கத்தானே செய்யும்!

நான் ஏதாவது ஒன்றை சாதித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் இருந்தேன். நான் வேலை பார்த்த நிறுவனங்கள் எனக்குக் கொடுத்த வேலைகள் எல்லாம் எனக்கு சிறிய தடைகளாக மட்டுமே இருந்தன.

‘கமலிடம் நமக்கு என்ன வேண்டும் என்று விளக்கிச் சொல்லிவிட்டால் வேலை முடிந்தது என்று நினைத்துக் கொள்ளலாம்.’

நான் வேலை செய்த அத்தனை நிறுவனங்களிலும் இதுதான் பொதுக்கூற்று. இக்கூற்று எனக்கு சந்தோஷத்தை அளித்தாலும் நான் மேலும் மேலும் செல்வதற்கு ஏங்கினேன். ஆனால் எனக்குள்ளாகவே ‘நான் திறமையான வேலைக்காரன்’ என்று நம்பத் தொடங்கிவிட்டேன். எவ்வளவு திறமை இருந்தாலும் நான் வேலைக்காரன் மட்டுமே என்ற எண்ணம் என்னிடம் பெருகிப் பெருகி என்னை தினம் தினம் சோர்வடையச் செய்தது. இருபது வயதிலிருந்து முப்பது வயதுவரை என்ன செய்து கொண்டிருந்தோம் என்று யோசித்தால் ஏக்கமே மிஞ்சியது.

அர்ஜுன் நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்ததை விட பலமடங்கு பெரிதாகிவிட்டார்.

ஆனால் நான்?

பேசாமல் ரஜ்னியுடன் ஒருமுறையாவது படுத்திருக்கலாமோ என்று எண்ணியபோது என்னையறியாமேலேயே கதறி அழுதேன். நேகாவின் தேகம் எனக்கு ஆறுதலளித்தாலும் அது தற்காலிகமானதாகவே இருந்தது. அதோடு மணமாகி இரண்டு வருடங்களாகியும் இருவர் உடலிலும் ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தும் அவள் கருவுறாதது வேறு என்னை சோர்வடையச் செய்தது. எல்லாவற்றுக்கும் மேல் என் துயரங்கள் எல்லாம் அவளுடைய பிரேஸியர் ஹூக்கை கழட்டினால் மாறிவிடும் என்று அவள் நம்பியதை நான் அவமதிப்பாகவே எடுத்துக் கொண்டேன்.

‘என் அறைக்கு வந்த யாரும் வந்த உடனேயே அந்த வாக்கியங்களைப் பார்த்தது இல்லை’

அதே சிரிப்புடன் ஒரு கதர் சட்டை வேட்டியில் அமர்ந்திருந்த அர்ஜுன் சுப்ரமணியன் என்னிடம் சொன்னார்.

‘சாதாரண வாக்கியங்கள். ஆனால் எனக்குப் பிடித்திருக்கின்றன.’

‘பயப்படாதீர்கள். அர்த்தம் எல்லாம் கேட்டுவிடமாட்டேன்’

‘நீங்கள் கேட்டாலும் நான் சொல்வதாக இல்லை’

ஒரு நேர்முகம் இவ்வளவு சகஜமாகத் தொடங்கியது எனக்கு ஆச்சரியமளித்தது.

‘கமல். உங்கள் தகுதிகளை அறிந்துகொண்ட பிறகுதான் நேர்முகத்துக்கே அழைத்தேன். நீங்கள் இங்கு செய்யப்போவது வேலை அல்ல. நிர்வாகம். நன்றாக வேலை செய்யத் தெரிந்தவருக்குத்தான் நன்றாக நிர்வாகமும் செய்யத் தெரியும் என்று நம்பும் பழைய காலத்து ஆள் நான்.’

‘நீங்கள் புதுமையானவராக இல்லாதிருப்பதற்கு கடவுளுக்கு நன்றி’

அர்ஜுன் சுப்ரமணியன் எனக்கு கை கொடுத்தார்.

3அது கடவுளின் கையா?

எனக்கு கை கொடுத்தது அர்ஜுனா அல்லது அந்த பஜ்ரங்பலியேதானா?

அதன்பிறகு என் வாழ்வில் வந்தது எல்லாம் ஏறுமுகம்தான். நேகா அந்த வருடமே கருவுற்றாள். அவளை வேலையை விடச்சொல்லும் தைரியம் அப்போதே எனக்கு ஏற்பட்டுவிட்டது.

அர்ஜுன் எனக்கு எதையுமே கற்பிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய குறிப்புகள் மட்டுமே சொல்வார். ஆனால் நான் ஜென்ட்இண்ட்(GentInt)எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அக்குறிப்புகள் போதுமானதாக இருந்தன. நான் ப்ரோக்ராம் செய்வதில் ஈடுபட்ட காலங்களில் எங்களுக்கு ப்ராஜெக்ட் தரும் நிறுவனங்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.‌ அவர்கள் கேட்பதை ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டு செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்வதே என் குறிக்கோளாக இருந்தது. நான் ப்ரோக்ராமராக, டீம் லீடாக, மேலேளாரகப் பணியாற்றிய போதெல்லாம் இது ஒன்றுதான் என் குறிக்கோளாக இருந்தது. மேலாளராக இருந்தபோது என்னிடம் பணிபுரிகிறார்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கியது மட்டுமே நான் ஈடுபட்ட நிர்வாகப்பணி.

ஆனால் நான் பணியில் சேர்ந்திருந்தது ஜென்ட்இண்ட்டின் தலைமை அலுவலகம். ஒரே நாளில் ஐம்பது ப்ராஜெக்டுகள் வந்தன. அவற்றை உலகம் முழுக்க உள்ள எங்கள் கிளைகளுக்குப் பிரித்து அனுப்ப வேண்டும்.‌சிறிய சிறிய பணிகளை கிளை அளவிலேயே அவர்கள் செய்து கொள்வார்கள். எங்களிடம் வருவதெல்லாம் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்படும் பெரிய திட்டங்கள் மட்டும்தான்! ஜென்ட்இண்ட் தலைமை அலுவலகம் இருபது மாடிக் கட்டிடம். முதல் ஐந்து தளங்கள் நிர்வாகத் தலைமையகம். அதற்கு அடுத்த ஐந்து தளங்கள் அக்கௌண்ட்டிங், தணிக்கை, சட்ட நிபுணர்கள் குழு என்று அர்ஜுனுக்கே அவ்வளாகப் புரியாத பிரிவினர்! அதற்கும் மேல் உள்ள பத்து தளங்களில் உலகம் முழுக்க ஜென்ட்இண்ட்டில் என்ன வேலை நடக்கிறதோ அது நடந்தது. ப்ரொக்ராமிங்!

நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் முதலிரு தளங்களைத் தாண்டிப் போனதே இல்லை. முழுக்க அந்நியமான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. ஐந்து தளங்கள் தாண்டிப்போனால் ஏதோ அரசாங்க அலுவலகத்துக்குள் வந்துவிட்ட உணர்வு. அங்கு பணியாற்றியவர்களும் அப்படித்தான் இருந்தனர். சுடிதாரையே புடவை மாதிரி சுற்றி இருக்கும் பெண்கள். கடுமையான பாறை போன்ற இறுகிய முகம் கொண்ட ஆண்கள். சட்ட நிபுணர்கள் பிரிவில் உள்ளவர்கள் ‘இவன் மீது என்ன கேஸ் போடலாம்’ என்று நினைத்தபடியே என்னைப் பார்ப்பதாக எனக்குத் தோன்றும்.

பதினேறாவது தளத்திற்கு சென்றபோதுதான் சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்பட்டது.நான் ஜென்ட்இண்ட்டில் வேலைக்குச் சேர்ந்து வேலையை கற்றுக் கொண்டிருக்கும் கொஞ்ச நாளுக்குள்ளேயே மென்பொருளில் எவ்வளவு மாற்றங்கள்! ஒரு வருடம் கழித்து வந்தால் எல்லாவற்றையும் புதிதாகத்தான் கற்றுகொள்ள வேண்டி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஒருவகையில் எல்லாமும் இப்படி விரைவாக மாறுவது எனக்கு சலிப்பாக இருந்தது.

ஜென்ட்இண்ட்டில் பணியில் சேர்ந்தபோதுதான் நான் எங்கள் ஊருக்கு பதினைந்து வருடங்கள் கழித்துப் போனேன். நான் முதன்முதலில் யார் வீட்டில் கணினியைப் பார்த்தேனோ அந்த ஆசிரியரே என்னை ஊருக்கு அழைத்திருந்தார். ஊரில் எனக்குப் பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!என்னுடைய மாதச்சம்பளம் எங்கள் ஊரிலேயே அதிக சம்பளம் வாங்கிய ஒரு அரசு அதிகாரியின் வருடச் சம்பளம் என்பது மட்டும் காரணம் அல்ல. என் பெயர் பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. ஊருக்கு வந்தபிறகுதான் எனக்கே இந்த விஷயம் தெரிந்தது. சந்தோஷமும் பெருமிதமும் பொங்க ஊருக்குப் போனேன். நேகா வரவில்லை. கருவுற்ற செய்தி அறிந்து ஒரு மாதம்தான் ஆகி இருந்தது. வயிற்றுக்குள் ஒரு சோப்புநுரைக் குமிழ் உள்ளது போன்றும் கொஞ்சம் கவனம் பிசகினாலும் அது உடைந்துவிடும் என்றும் அவள் அஞ்சினாள்.

ஊரில் போய் இறங்கியபோது எனக்கு சலிப்புதான் வந்தது. எதுவுமே மாறவில்லை. சாலைகள் கொஞ்சம் மேம்பட்டிருக்கின்றன. ஒருசில கான்கிரீட் வீடுகள் கட்டப்படட்டிருக்கின்றன. மற்றபடி அதே ஊர். நான் ஊருக்கு வரவில்லை என்றாலும் அம்மாவும் அப்பாவும் என்னை வந்து அடிக்கடி பார்த்துச் செல்வார்கள். ரயிலில் டிக்கெட் போட்டு கொடுத்துவிட்டால் யார் உதவியும் இல்லாமல் என்னை வந்து பார்த்துவிட்டு திரும்பிச் செல்லும் அளவு அவர்களுக்கு இந்தியா பழகிவிட்டது!

என் தம்பி என்னைவிட மூத்தவனாகத் தெரிந்தான். என்னை ஒருவித பயம் கலந்த இளக்காரத்துடன் பார்த்தான். அவன் மனைவியை அறிமுகப்படுத்தினான். குழந்தைகளையும். பெரியவனுக்கு ஆறு வயது.

‘உனக்கு குழந்தை இல்லையா?’ என்றான்.

ஏன்டா வந்தோம் என்றிருந்தது எனக்கு.பதினைந்து வருடங்கள் கழித்துப் பார்க்கிறவனிடம் அவனுக்கு கேட்பதற்கு இருப்பது இதுதானா?ஒருவேளை அவன் என்னைப் பார்த்து அஞ்சுகிறானா? அங்கிருந்த எல்லோரிடமும் அந்த அச்சம் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை நான் அதிர்ஷ்டக்காரன் அல்லது திருடன். என்னவோ செய்து நிறைய சம்பாதித்துவிட்டேன். அவர்களையும் என்னையும் பிணைக்கும் ஒரே அம்சம் கல்யாணம் குழந்தை இதெல்லாம்தான். என் ஆசிரியர் தவிர அத்தனை பேரும் எனக்கு மணமாகிவிட்டதா எத்தனை குழந்தைகள் என்றுதான் விசாரித்தார்கள்‌‌. கேட்காத சிலர் அவர்கள் மகனுக்கு வேலை வாங்கித் தரச் சொன்னார்கள்.

ரஜ்னியைப் பார்த்ததும் எனக்கு அழுகையே வந்துவிட்டது. என் வயதுதானா இவளுக்கு? இரண்டு பெண் குழந்தைகள். ஒரு மகன் இருந்தான். ஏதோவொரு விசித்திரமான காரணத்தால் அவன் என்னைப்போலவே இருப்பதாக எனக்குத் தோன்றியது. பதினைந்து வயதில் ஊரைவிட்டு நான் ஓடிப்போனப்போது இருந்த அதே முகம். பெண்ணில் கருவாவது ஆணின் ஜீன் தகவலா அல்லதா பெண்ணின் ஆழ்மனமா? ரஜ்னியை இழுத்து முத்தமிடத் தோன்றியது. அந்த எண்ணம் என்னில் ஏற்பட்டதுமே அங்கு என் பழைய ரஜ்னி நின்றிருந்தாள். என் ரஜ்னியா? ஆமாம் அப்படித்தான் அப்போது தோன்றியது. ஒருவகையில் என்னை இப்படி மாற்றியது அவள் மூட்டிய எரிச்சல் அல்லவா!

4

ஊரிலிருந்து திரும்பி வரவே பிடிக்கவில்லை. உண்மையில் எங்காவது தங்கிவிடத்தான் மனம் துடித்தது. தேவையில்லாமல் நேகாவை மனம் ரஜ்னியுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது. நேகா சுயநலவாதியாகவும் சோம்பேறியாகவும் தெரிந்தாள். ஆனால் இந்த எண்ணங்கள் எல்லாம் வெறும் பலவீனங்கள் என்று ஜென்ட்இண்ட்டில் என் வேலைகளைத் தீவிரமாகத் தொடங்கியபோதே தெரிந்துவிட்டது.

நேகா அப்போது வேலைக்கு போய்க்கொண்டுதான் இருந்தாள். ஜெண்ட்இண்ட்டில் சேர்ந்த பிறகு என்னால் அவளுடன் பேசவே முடியவில்லை. பேசமுடியவில்லையே தவிர பேசமுடியவில்லையே என்ற வருத்தத்துக்கு குறைவில்லை! பாவம் கருவுற்றிருக்கிறாள். இருந்தும்கூட நேகா என்னைப் புரிந்து கொண்டாள். எவ்வகையிலும் என்னை எதிர்பார்க்கவில்லை. இதுவே என் குழந்தையை சுமப்பவள் ரஜ்னியாக இருந்தால்!

எனக்கு ஆறு மாதத்தில் வேலை புரிபடத் தொடங்கிவிட்டது. அப்போதுதான் நேகாவை வேலையை விடச் சம்மதிக்க வைத்தேன்.முதலிரண்டு வருடங்கள் அளவில்லாத உற்சாகத்துடன் பணியாற்றினேன்.‌ ப்ராஜெக்ட்டுகளை பிரித்துக் கொடுப்பதோடு மட்டுமின்றி முதல் பத்து தளங்களிலும் என்னால் ஊடுருவ முடிந்தது! ஆனால் அர்ஜுன்‌ என்னைப் பாராட்டவே இல்லை. அவர் என்னைப் பாராட்ட இன்னும் ஒருவருடம் எடுத்துக் கொண்டார். மூன்று வருடங்களுக்குப் பிறகு என் உற்சாகம் எல்லாம் வடிந்து வேலை அன்றாட நிகழ்வானது. அப்போது அர்ஜுன் என்னிடம் பேசினார்.

‘வெல்கம்’ என்று கை கொடுத்தவரை புரியாமல் பார்த்தேன்.

‘பிராமணர்களை இருபிறப்பாளர்கள் என்று சொல்வார்கள் தெரியுமா?’ என்று கேட்டார்.‘கேள்விப்பட்டிருக்கிறேன்’

‘பணியாளரும் அப்படித்தான்.‌ எது ஒன்றையும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் காலத்தில் நம்மிடம் மிகப்பெரிய உற்சாகம் இருக்கும். ஆனால் அந்த உற்சாகத்தின் காலம் கடந்த பிறகு வருவதுதான் உண்மையான சவால். இப்படிச் சொல்கிறேன்.’ என்று சிரித்துவிட்டுத் தொடர்ந்தார்.

‘மணமான புதிதில் புணர்ச்சிக்குப் பிறகும்கூட என் மனைவியின் உடலை இரவு முழுவதும் தடவிக்கொண்டே கிடப்பேன். புதிய உடல். அதன் ரகசியங்களை அறியத்துடிக்கும் வெறி. புணர்ச்சியும் அக்காலத்தில் உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று அவளுக்கு நானோ எனக்கு அவளோ உடல்ரீதியாக கொடுக்க ஒன்றுமே இல்லை. ஆனால் இன்றும் அதே மகிழ்ச்சி எங்களிடம் நிலவுகிறது. அதற்கு காரணம் எங்கள் இருவரிடையேயான புரிதல். நம்மால் எப்போதும் எல்லாவற்றையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கவே முடியாது என்ற தெளிவு. உங்களிடம் அத்தகைய தெளிவு இந்த ஒரு வருடத்தில் வந்திருக்கிறது கமல்.’

மகிழ்ச்சி, பற்று என்று எந்த உணர்வும் இல்லாது உழைக்கத் தொடங்கினேன். ஆனால் நான் மூழ்க மூழ்க என் புறவுலகம் தெளிவில்லாததாக மாறிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. எனக்கும் நேகாவுக்கும் ஒரு மகனும் மகளும் பிறந்தனர். அவர்களை வளர்ப்பதில்கூட என்னிடம் அர்ஜுனின் தாக்கம் வெளிப்படுவதாக நேகா கூறினாள். என் அலுவலகம் கூட என்னை அர்ஜுனின் ‘மனைவி’ என்றே பேசியது. ஏழு வருடங்களுக்கும் அதிகமாக நான் ஒரே இடத்தில் வேலை செய்தேன். ஒருவேளை அந்த ஒற்றைப்படைத்தன்மை கொடுத்த சலிப்புதான் அர்ஜுனை என்னை ஆராய வைத்தது என்று தோன்றுகிறது.

நான் அர்ஜுன் பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை. அவரைப் பற்றி தகவல்கள் இயல்பாக என்னிடம் வந்து சேர்ந்தன. அர்ஜுன் தன்னை என்னவாக வெளிப்படுத்திக் கொண்டாரோ அதற்கும் அவர் என்னவாக இருந்தாரோ அதற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. என் தேடல் அவர் ஏன் அப்படி ‘இருந்தார்’ என்பதுதான். அர்ஜுன் ஒரு ‘காந்திய’ வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய உணவு உடை ஏன் இருப்பிடம் கூட எளிமையானதுதான்! ஆனால் அவர் குழந்தைகளை அவர் இந்தியாவில் படிக்க வைக்கவில்லை.‌அவர் மனைவியும் இந்தியர் இல்லை. ஆனால் அவர் இந்திய வாழ்வுமுறை என்ற ஒன்றைப் பற்றி திரும்பத் திரும்ப பேசினார். அதுவே சிலசமயம் ‘தமிழ்’ வாழ்வுமுறையாக மாறும். இந்தியாவும் தமிழ்நாடும் வெவ்வேறு பண்பாடு கொண்டவை என்றொரு கருத்து தமிழ்நாட்டில் நிலவியது. அர்ஜுன் தன்னை அரசியல் சூழலுக்கு ஏற்றது போல் ‘இந்தியராகவும்’ ‘தமிழராகவும்’ வெளிப்படுத்திக் கொண்டார்.

அர்ஜுன் என்ற அவர் பெயரை ‘அருச்சுனன்’ என்று எழுதும் தமிழ் அடிப்படைவாதிகள் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு இயற்கை விவசாயம், தமிழரின் சித்தர் மரபு என்று அர்ஜுன் பேசினார். மற்றொரு பக்கம் பாரதத்தை உலகமே திரும்பிப் பார்க்கும்படி நாம் செய்ய வேண்டும். உலகிலேயே பழமையான நாகரிமான பண்பாடு கொண்டது பாரதம் என்றும் பேசினார். காலப்போக்கில் அர்ஜுனின் ‘பாரதப் பற்று’ அதிகரித்தது. அதற்கு அவருக்கு இந்திய அரசின் சில அமைச்சர்களுடன் ஏற்பட்ட நெருக்கமும் காரணம் என்று சொல்லப்பட்டது.அர்ஜுன் மட்டுமில்லை. அவரைப் போல பெரும் பணக்கார சிஈஓக்கள் அனைவரும் அமைச்சர்களை நெருங்கினர். பாரதத்தின் வளர்ச்சிக்காக பணியாளர்கள் எழுபது மணிநேரம் உழைக்க வேண்டும் எண்பது மணிநேரம் உழைக்க வேண்டும் என்று பேசினார்கள். வார இறுதியில் விடுமுறை என்பதே தேவையில்லை என்று எழுதினார்கள். அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் எழுந்தாலும் பணக்கார சிஈஓக்களின் கருத்து பணிச்சூழலில் வலுவாக ஊன்றியது. அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இவற்றிற்கு சிகரம் வைப்பது போல ஒரு மந்திரி ‘இந்தியர்கள் வேலை நேரத்தைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் உழைப்பார்கள்’ என்று ஒரு ஐரோப்பிய நாட்டில் போய் பேசினார்.

பணக்கார சிஈஓக்கள் உருவாக்கிய இந்த அழுத்தம் நிறுவனங்களிலும் பிரதிபலித்தது. வேலை நேரம் , லே ஆஃப் இரண்டுமே அதிகரித்தது. பணியாளர்கள் மீது ஒருவித இறுக்கம் கவிந்தது.

ஜென்ட்இண்டிற்கு போட்டியாக வரவாய்ப்பிருந்த ஒரு நிறுவனம் TellAI. நான் அந்நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி அர்ஜுனிடம் பலமுறை எடுத்துக் கூறினேன். அர்ஜுன் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வார்.

‘அவர்கள் நிச்சயமாக ஒரு தவறு செய்வார்கள். அதை பெரிதுபடுத்தும் வேலையை மட்டும் நாம் பார்த்தால் போதும்’ என்று சொல்லிவிட்டார்.

அவர்கள் அந்த தவறைச் செய்தார்கள். எளிய விஷயம்தான். TellAIன் இருபது முப்பது மாடிக் கட்டிடங்களின் பால்கனிகளில் தடுப்புகள் அமைத்தார்கள். அதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் லே ஆஃப் நடவடிக்கைகளால் சில பணியாளர்கள் லே ஆஃப் வழங்கப்பட்ட அழுத்தத்தில் மாடியில் இருந்து குதித்து இறந்துபோயினர். இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் பெரிதாக வரவில்லை. எங்களுக்கு அது போதுமானதாக இருந்தது.TellAIக்கு எதிராக ஒரு வலுவான சமூக வலைதளப் பிரச்சாரத்தை தொடங்கினோம். அந்தப் பிரச்சாரத்தை முதலில் எதிர்த்துப் பேசியது வேறுயாரும் இல்லை. அர்ஜுன் சுப்ரமணியன்தான்! வேண்டுமென்றே எங்கள் பிரச்சாரத்தை வலுவாகத் தூண்டும்படி எதிர்த்து எழுதி இருந்தார். TellAI நிறுவனத்தின் பங்குகள் அடிவாங்கின. பத்து நாட்கள் வரை ஊழியர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு, கம்யூனிஸம், புரட்சி என்று சமூக வலைதளம் கொதித்து அடங்கி ஆறிப்போனது.

லே ஆஃப் அதன் பிறகும் தொடரத்தான் செய்தது. நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை.

அர்ஜுன் சொல்வார்.

‘உண்மையில் யாருக்காவது எதன் மீதாவது அதிகாரம் இருக்கிறதா? அதிகாரம் என்பது ஒரு மாயச்சவுக்கு. மனிதர்களை சவுக்கால் அடிப்பதை நிறுத்தி இரண்டு நூற்றாண்டுகள்கூட இன்னும் ஆகவில்லை. அதற்குள் நாம் சவுக்கை நாம் அருவருக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் சவுக்கடி இல்லாமல் எதையாவது கட்டுப்படுத்த முடியும் என்று நீ நினைக்கிறாயா கமல்? நாம் எல்லோரும் சாகப் போகிறோம். சாவை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம். இதில் நிம்மதியாக ஒருவன் இருக்க விரும்புவது அநியாயம் இல்லையா? மன நிம்மதி ஆன்மாவின் இழிநிலை என்று யாரோ ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் சொல்லி இருக்கிறார் இல்லையா? மனிதர்கள் ஏன் நிம்மதியைத் தேடுகிறார்கள்? நிம்மதி என்பது ஒரு கற்பனை. சவுக்குதான் நிஜம். இந்த லேஆஃப் அப்படி ஒரு சவுக்கு. அவர்களை நிற்காமல் ஓடச்செய்ய வேறு வழியே இல்லை. இது உருவாக்கும் பதற்றம் ஒவ்வொருவரையும் சுயநலமாக யோசிக்கச் செய்யும். எதையாவது செய்து நிலைத்துவிட வேண்டும் என்று உந்துதலை அளிக்கும். நிலைப்பவன் ஜெயிப்பவன்.’

அர்ஜுன் இதையெல்லாம் என்னிடம் சொல்லும் அளவு என் தகுதி கூடிவிட்டதா? என்னால் பெருமைப்பட முடியவில்லை. அர்ஜுன் லேஆஃப் செய்வதற்கு ஒரு வித்தியாசமான முறையைக் கையாண்டார். லே ஆஃப் வேலையை ரொம்பத் தாமதமாகத் தொடங்கினார். ஜென்ட்இண்ட்டில் லேஆஃப் தொடங்கிய பிறகும்கூட ‘அர்ஜுன் சுப்ரமணியன் வேறு வழியே இல்லாமல்தான் இதைச் செய்ய ஆரம்பித்தார்’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஒவ்வொரு வெள்ளி மாலையும் லேஆஃப் அறிவிப்பு வரும். எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு கிளையிலும்! எத்தனை பேர் வெளியே அனுப்பப்படுவார்கள் என்பது அர்ஜுனைத் தவிர யாருக்குமே தெரியாது. ஆனால் எங்கள் தலைமையகத்தைப் பொறுத்தவரை ஒரு வெள்ளிக்கு ஒருவர்தான். வெள்ளிக்கிழமை மாலை பொதுவாக இருக்க வேண்டிய உற்சாகம் யாரிடமும் இருக்காது. எங்கள் தலைமையகத்தைப் பொறுத்தவரை அர்ஜுன் சுப்ரமணியனே நேரில் வந்து உத்தரவைக் கொடுப்பார். அதே சிரித்த முகத்துடன்!வெளியேற்றப்படுகிறவர் வேறு வழியே இல்லாமல்தான் இங்கிருந்து வெளியேற்றப்படுகிறார் என்பதை அவர் உணரும்படி செய்வார்.‌அந்த நிமிடங்கள் பெரும் வதை நிரம்பியவை.‌ பலரும் உடைந்து அழுதனர். சிலருக்கு மயக்கம் வந்தது.பால்கனி நோக்கி மட்டும் யாரும் ஓடவில்லை. காரணம் மலைச்சாமி.மலைச்சாமி.

அர்ஜுன் சுப்ரமணியனிடம் விசுவாசம் காட்டும் சந்தர்ப்பம் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத காவலாளி. பெரிய மீசை வைத்திருப்பார்.ஒரு பல்கூட இல்லாத வாய்! ஆனால் இரும்பு போன்ற உடம்பு. எழுபது வயது. எவ்வளவு துயரத்துடன் அலுவலகத்துக்குள் நுழைந்தாலும் மலைச்சாமியைப் பார்த்தால் துக்கமெல்லாம் ஒளிந்து கொள்ளும். அப்படிப்பட்டவரை அர்ஜுன் அந்தச் செயலுக்கு பயன்படுத்தியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அன்று யார் வெளியேற்றப்பட இருக்கிறாரோ அவர் அருகில் மலைச்சாமியை போகச் சொல்லி அர்ஜுன் கண்ணைக் காண்பிப்பார். சாகக்கூட முடியாது! கள்ளமில்லாத மலைச்சாமியை சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஆளைப்போல எல்லோரும் பார்த்தனர். பணியாளர்களின் பயம் பதற்றம் மனச்சோர்வு எவ்வளவு அதிகரித்ததோ அந்த அளவு ஜென்ட்இண்ட்டின் லாபமும் அதிகரித்தது.

இதையெல்லாம் சொல்லும் நானும் அப்படித்தான் மாறிப்போனேன். உண்மையில் எனக்கு ஒரு தனிவாழ்க்கை இருந்தது போலவே தெரியவில்லை. ஒன்று தெளிவாகப் புரிந்தது. என்னால் அர்ஜுனாக மாற முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. என் உடல் எடை கூடியது. என்னால் முன்புபோல எதுவொன்றையும் விரைவாகச் செய்ய முடியவில்லை. மறதி அதிகரித்தது. குழந்தைகள் பற்றிகூட அக்கறை இல்லாத ஒரு விட்டேத்தித்தனம் வந்துவிட்டது. நேகா புணர்ச்சிக்கு அழைக்கும்போதெல்லாம் மறுநாள் ஏற்படும் உடற்சோர்வுக்கு அஞ்சியே அதைத் தவிர்த்தேன். அதனாலோ என்னவோ எனக்கு தேவைப்படும் போதெல்லாம் அவள் மறுக்கத் தொடங்கினாள். பாலியல் படங்களைப் பார்த்து சுயமைதுனம் செய்வதே எனக்கு இருக்கும் ஒரே இன்பமாக மாறிப்போனது. மனம் எப்போதும் பதற்றத்தில் இருந்தது. என்னுடன் யாரோ பேசிக்கொண்டே இருப்பதைப் போல உணர்ந்தேன். சிலநேரம் ஒரேயொரு வார்த்தை மட்டுமே மூளைக்குள் பலமணி நேரங்கள் ஓடியது.

‘சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் ‘சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும் சாகணும்’

நேகா என்னைக் கண்டு அஞ்சினாள். குழந்தைகள் அஞ்சினர். எனக்கு குடிப்பழக்கம் இல்லை. வேறெந்தப் பெண்ணுடனும் தொடர்பும் இல்லை. சாப்பாட்டிலும் பெரிய ஆர்வம் இல்லை. சொற்ப நேரம்தான் தூங்குவேன். எஞ்சிய நேரம் முழுவதும் முடிவே இல்லாமல் வந்து கொட்டும் வேலைகள்தான் மூளையை நிரப்பி இருக்கும். பயந்து கொண்டு தெருவைக் கடப்பவனை வந்து கவ்வும் வெறிநாய்கள்போல எழுந்த கணமே வேலைகள் நினைவுக்கு வரும்.

வேலைகள்.‌ வேலைகள். வேலைகள்.முடிவே இல்லாதவை.‌ ஒவ்வோரு வேலையும் முழு மனதையும் கோருகிறவை. நான் அவ்வளவு ஆசையாக வாங்கிய என்னுடைய பழைய சிடிஆர் மானிட்டரை ஒருநாள் எடுத்தேன். அன்று வீட்டில் யாரும் இல்லை. அதன் வெண்ணிற விளிம்புகளில் கருப்புப் புள்ளிகள். ஒரு மெல்லிய ஈரநைப்பு. அதைத் தொட்டதும் எனக்குள் மடை திறந்தது போல அழுகை ஊறியது. அந்த மானிட்டரை கட்டிக் கொண்டு அப்படி அழுதேன்! ஒரு கட்டத்தில் எனக்கு அந்த மானிட்டர் ரஜ்னி போலத் தெரிந்தது. நேகா போலத் தெரிந்தது. என் குழந்தைகள் போலவும். என்னால் எதையும் விடமுடியாது. நான் அங்கு இருந்துதான் ஆகவேண்டும். அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடிகளின் போதெல்லாம் என் குடும்பத்திடம் ஓடிவர வேண்டும் என்றே தோன்றும். அந்தக் கூட்டுக்குள் நான் பத்திரமாக இருந்தேன். அந்த பத்திரத்திற்காக நான் என் ஆன்மாவை இழந்தால் என்ன கெட்டுவிடும்.

நான் மெல்ல மெல்ல சீரடைந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் அதீத நிதானத்துடன் எதிர்கொண்டேன். எதுவொன்றம் என்னைக் கொல்ல அனுமதிக்கக்கூடாது என்று நான் உறுதியாக இருந்தேன். ஆனால் நான் சிடுசிடுப்பு கொண்டவன் ஆனேன். எந்நேரமும் என் மனம் கோபத்தில் கொதித்தது. அர்ஜுன் சுப்ரமணியனத்தை தரையில் கிடத்தி தலையை அறுக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை மட்டுமல்ல. அவரைப் போல ஒரு நூறு பேரையாவது தலையை அறுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நிறுவனத்தின் மையத்தில் அந்தத் தலையை சொருகி வைக்க வேண்டும். அவர்கள் வீட்டினர் அந்தத் தலைகளைப் பார்த்து அடையும் அதிர்ச்சியை ரீல்ஸாக எடுக்க வேண்டும். ஆனால் இந்த எண்ணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பது எனக்குத் தெரியும். எப்படி ரஜ்னியை ஒருநாள் யாரும் அறியாமல் புணர வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அதுபோன்ற ஆசைதான் இதுவும். நடக்கப் போவதில்லை. ஆனால் இந்த எண்ணங்கள் எனக்கு செயலூக்கம் அளித்தன.

என் செயலூக்கத்துக்கு அர்ஜுன் ஒரு பரிசு கொடுத்தார். வெள்ளிக்கிழமைகளில் வெளியேற்றப்படுகிறவர் பற்றிய அறிவிப்பை நான் வெளியிட வேண்டும். அர்ஜுன் ஆணையை என்னிடம் கொடுப்பார். உரையில் எந்தத் தளம் என்று எழுதப்பட்டிருக்கும். அர்ஜுன் ஆற்றுவது போன்ற அதே இழிவான உரை. அவ்வளவு இழிந்த சொற்களை நானா இவ்வளவு புன்னகையுடன் பேசுகிறேன்? உண்மையில் வளர்ச்சி என்பது இந்த இழிவுகளில் கூசாமல் ஈடுபடுவதுதான் என்பது எனக்குப் புரிந்தது அல்லது நான் அப்படி சமாதானம் செய்து கொண்டேன். இப்போது என் மனதில் கோபம் இல்லாதுபோய் இளக்காரம் மண்டியது.

எந்தவொரு சிஈஓவின் பேச்சும் கஸ்டமரிடம் பேரம் பேசும் வேசி பேசுவதன் வேறு வடிவம்தான் என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. இதை நான் கோபத்திலோ கசப்பிலோ சொல்லவில்லை. விபச்சாரத்துடன் ஒவ்வொரு தொழிலும் அவ்வளவு ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன. அர்ஜுன் சுப்ரமணியன் போன்றவர்கள் வேசைத்தனத்தில அதீதமான திறனை வெளிப்படுத்துகின்றனர்! எனக்கும் இப்போது அந்தத் திறன் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. ஆனால் நீங்கள் தொழில் செய்யும்போது இதுமாதிரி ஒரு‌ எண்ணம் தோன்றுவதே தவறுதான். இதுமாதிரியான எண்ணங்கள் மனதின் ஆழத்தில் விழுந்து முளைக்கத் தொடங்கும். அப்படி முளைக்கும் எண்ணம் ஏதோவொரு வகையில் வெளிப்பட்டுவிடவும் செய்யும். அப்படி நான் வெளிப்படும் ஒரு வாய்ப்பு வந்தது.

அர்ஜுன் சுப்ரமணியன் உண்மையில் கடவுளேதானா என்று என்னை சந்தேகப்பட வைத்த அந்த நாள் அது.

அன்று அர்ஜுன் என்னிடம் உரையைக் கொடுத்தார். பன்னிரெண்டாவது தளம்.மலைச்சாமி பத்தாவது தளத்தில் இருப்பார். நான் லிஃப்ட்டில் ஏறியதும் நேராக பன்னிரெண்டை அழுத்தினேன். எனக்கு ஒரு கணிப்பு இருந்தது. அன்று லேஆஃப் செய்யப்பட இருப்பது ஒரு பெண். அவள் பெயர் ஜெனிஃபர். என்னுள்ளே இருக்கும் பதற்றங்களின் வெளிவடிவம்போல அவள் இருப்பாள். நான் அவள் கண்களை சந்திக்க அஞ்சுவேன். அவள் கண்களில் என் அகநிர்வாணம் தெரிவது போன்ற எண்ணம் எனக்கு. நிச்சயம் அவள்தான். அவளுடைய மூளையால் நிச்சயமாக அந்தச் செய்தியை அலசிப் பார்க்க முடியாது. அவள் உலகம் அந்த கணமே இருண்டுபோகும். வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்ற எண்ணமே அவளுக்கு ஏற்படாது. நிச்சயமாக அவள் அங்கிருந்து ஓட முனைவாள். ஒரே அடியாக செத்துப் போகத்தான் ஆசைப்படுவாள். ஜெனிஃபருக்கு குழந்தைகளும் இல்லை. நிச்சயமாக அவள் சாவைத் தேர்ந்தெடுப்பாள் என்று நான் நம்பினேன். அவள் சாகவேண்டும் என்றுகூட விரும்பினேன்!

லிஃப்ட் திறந்தது. நான் உள்ளே நுழைந்ததும் வழக்கமான சங்கடமான அமைதி கவிந்தது. என் கையில் உரை இருப்பதையும் அருகில் மலைச்சாமி இல்லாமல் இருப்பதையும் எல்லோரும் பார்த்தனர். திடீரென்று அத்தனை பேரும் அறுக்கக் காத்திருக்கும் ஆடுகள் போல என் கண்களுக்குத் தெரிந்தனர். எல்லோர் முகத்திலும் குழப்பம். மலைச்சாமி அருகில் இல்லாததால் அன்று லேஆஃப் இல்லையோ என்ற ஆவல்கூட சில முகங்களில் தென்பட்டது. அர்ஜுன் இவ்வளவு பெரிய இன்பத்தை எனக்கு ஏன் தாரை வார்த்தார்? இத்தனை நாள் நான் எப்படி காணாமல் போனேன்? தவிக்கும் இரைஞ்சும் பதறும் அந்த முகங்கள்! அய்யோ! நான் கடவுளாகிவிட்டேனா? இல்லை நானொரு பூதகணம். அர்ஜுன்தான் கடவுள். நான் இரண்டு தளங்கள் கீழிறங்கி மலைச்சாமியை அழைக்கப் போனேன்.