களிமண்ணை  குழைத்து கொட்டாங்குச்சியில் போட்டு கருவை இலைகளைத் தூவி கூட்டாஞ்சோறு தயாராகிவிட்டது. எண்ணெய் சீந்தாத தலையின் செம்பட்டை முடிகள் முன் வந்து விழ புறங்கையால் முடியை ஒதுக்கி மேலேற்றுகிறாள் மாலதி. சமையல் தயாரான திருப்தியில் மாதேஸ்வரனை ஏறிடுகிறாள்.

முதல் பிடியை கொட்டாங்குச்சியில் இருந்து கிள்ளி எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்கிறாள். ஏந்தலுக்காக இடது கையால் வலது கையைத் தூக்கி சூரியனுக்கு எதிரே ஏந்தியவாறு “எனக்கு நல்ல படிப்பு கொடு சாமி  அப்பாம்மாவ காப்பாத்து சாமி மாதேஸுக்கு ஜொரம் வரக்கூடாது சாமி” என்று வேண்டுகிறாள். மாதேஸ் சிரிக்கிறான்.

“என்னடா இளிப்பு” என வெட்டித் திரும்புகிறாள்.

உதட்டைக் குவித்துக் கொண்டு பழிப்பு காட்டுகிறான்.

“போடாங்கிட்டு” என கழுத்தை மீண்டும் நொடிக்கிறாள். 

“அப்பா இன்னிக்கு டிவி வாங்கிட்டு வரப்போகுதே” என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடுகிறான் மாதேஸ்.

ஜீனி ஐஸைக் கொண்டு வந்து வாயிஸ் திணித்தது போல ஒரு ஜில்லிப்பு உடலில் பரவி ஓடுகிறது மாலதிக்கு.

“டேய் எப்படா எப்படா” என அவனை துரத்தத் தொடங்குகிறாள். கொட்டாங்குச்சி சாதம் குப்புறக் கவிழ்கிறது.

மாலதி விழித்துக் கொண்டாள். பிரவீன் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறான். லேசாக காலால் எத்தி “எழுந்திருடா” என்கிறாள். அவன் போர்வையை இன்னும் அழுத்தமாக உடலோடு சுற்றிக் கொண்டு “ஏசிய கொறச்சு வைடா”என முனங்குகிறான். மாலதி லேசாக சிரித்தபடி வெப்பநிலையை மேலும் குறைக்கிறாள். அவள் கண்ணாடி பார்த்துக் கொண்டு பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது “உன்ட்ட போய் சொன்னேன் பாரு” என படுக்கையில் இருந்து பிரவீனின் குரல் கேட்கிறது. சிரித்துக் கொள்கிறாள். பல் துலக்கும் போது தன் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் குடியேறிவிடுவாதக அவளுக்குத் தோன்றியது.

மாலதி மாதேஸைத் துரத்திக் கொண்டு வீட்டுக்கு ஓடு வருகிறாள். மழை பெய்ததால் தெருவில் போடப்பட்டிருந்த செம்மண் சாலையில் சேறு குழைந்திருக்கிறது.

“யம்மா யம்மா அக்கா தொரத்துறாம்மா” என கண்ணை சுருக்கிக் கொண்டு ஊதாங்குழலை அடுப்பில் வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டிருக்கும் வாசுகியிடம் ஓடிச் சென்று மாதேஸ் சொல்கிறான். கண்ணில் புகையடித்து உடலை குலுக்கும் எரிச்சல் ஒரு கணம் பரவுகிறது. அதைக் கடந்து வருவதற்குள் முதுகில் பட்டென ஒன்று விழுகிறது.

“காலக்கழுவிட்டு வூட்டுக்குள்ள வாடான்னு எத்தன தரஞ்சொல்றது ஒங்கிட்ட” என்று மீண்டும் மொத்துகிறாள் வாசுகி.

“போடி குண்டச்சி” என அவள் முதுகில் ஓங்கிக் குத்திவிட்டு வாசலுக்கு ஓடி வருகிறான். குத்துகால் போட்டு அடுப்பை ஊதிக் கொண்டிருப்பவள் அவன் அடியை பொருட்படுத்தியதாகவேத் தெரியவில்லை. அம்மா கொஞ்சமும் கலங்கவில்லை என்பது அவனுக்கு ஆத்தரமூட்டியது. திரும்பிச் சென்று மீண்டும் முதுகில் சுள்ளென ஒரு அடி வைத்து விட்டு ஓடி வந்துவிடுகிறான்.

உதடுகள் துடிக்க வாசலில் இருக்கும் எவர் சில்வர் குவளையிடம் வருகிறான் மாதேஸ். மாலதி வாசலில் நின்று கால்களை தேய்த்துக் கழுவிக் கொண்டிருக்கிறாள். இவனைப் பார்த்ததும் பாவப்படுவதை போல முகத்தை மாற்றிக் கொண்டு குவளைத் தண்ணீரை மொத்தமாக கவிழ்த்து விடுகிறாள். அவள் அப்படிச் செய்தது மாதேஸின் துடித்த உதடுகளில் அழுகையை வரவழைத்தது.

“டேய் இப்ப நீ அழுதன்னா அம்மா வந்து உன்ன மறுபடியும் அடிக்கும். அப்பா எப்ப டிவி வாங்கிட்டு வருதுன்னு சொன்னின்னா உனக்கு குவளைல தண்ணி பிடிச்சு தருவேன்” என்றாள்.

அவர்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் அடி பம்பில் ஏறி அழுத்தி தண்ணியடிக்க மாதேஸின் உயரம் அனுமதிக்காது.

“இன்னிக்கு வாங்கிட்டு வர்றதா சொன்னிச்சு. அதுக்குத்தான் டவுனுக்கு போயிருக்கு” என்றான்.

“அம்மாட்ட சொன்னிச்சா”

“இல்ல எங்கிட்டதான்” என பெருமையாகச் சொன்னான்.

அப்பா தன்னிடம் சொல்லாதது மாலதிக்கு வலித்தது.

“மாலதி மீட்டிங் முடிஞ்சு எப்போ புறப்படுவீங்கன்னு உம்புள்ள கேட்கிறான்” என அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு பிரவீன் கேட்கிறான்.

குளித்து தலையை ஈரம் உலர்த்திக் கொண்டிருந்தவள் “கொடு நான் பேசுறேன்” என்கிறாள் மாலதி.

“உங்கூட பேசமாட்டானாம். ஐ ஹேட் அம்மாவாம்”

“அடி செருப்பால ரெண்டு பேரும் என்ன வெளாட்றீங்களாடா” என அலைபேசியை வெடுக்கென பிரவீனிடமிருந்து பிடுங்குகிறாள்.

“செல்லம் என்னடா அம்மா மேல கோவமா” என்று அவள் பேசத் தொடங்கியதுமே எதிர்முனை அழத் தொடங்கிவிட்டது.

“இல்லடாம்மு இல்லடா அழக்கூடாது அம்மா நாளைக்கு காலைல வந்துடுவேன்டா. ஆண்டிய டிஸ்டர்ப் பண்ணக்கூடாது அழக்கூடாது சமத்து பிள்ளையா இருக்கனும் சரியா” என கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

அதுபோல தான் கொஞ்சப்பட வேண்டும் என விரும்பியவனாய் பிரவீனும் கண்ணைக் கசக்குகிறான். தலையில் ஒரு குட்டு விழுகிறது.

“வாசுகியக்கா வாசுகியக்கா” என்று குரலை இழுத்தபடி மல்லிகா வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள்.

“வாங்க அத்த” என ஓடிவந்து மரப்படலை திறக்கிறாள் மாலதி. வாசுகி அரவையில் உளுந்து உடைத்துக் கொண்டிருந்தாள். எழுந்து புடவை முந்தானையால் கழுத்து வியர்வையைத் துடைத்தபடி ஆர்வமில்லாதவளாக “வா மல்லிகா” என அழைக்கிறாள்.

இருவரும் பேசத் தொடங்கியதை மாதேஸ் ஆர்வம் மின்னும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அம்மா வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கு அவனுக்குப் பிடிக்கும். அப்பாவுடன் சண்டை வரும் போதெல்லாம் “அக்கம்பக்கம் யார் வூட்டுலையாவது போய் உக்காந்து ஒக கத பேசிட்டா வாறேன். இங்க வாறவளுவ மேலயும் வள் வள்ளுன்னு வுழுந்தா எங்கதான் போய் ஆத்திகிறதாம்” என்று அம்மா மூக்குரியும்.

வழக்கமான  குரலில் பேசிக் கொண்டிருந்த மல்லிகா சட்டென சத்தத்தை குறைத்தாள். வாசுகி சிறுவர் மலரில் எண்களைக் கொண்டு கோடுகளை இணைத்து முயலுருவத்தை உருவாக்கிக் கொண்டிருந்த மாதேஸை “உள்ள போயி வரடா” என்றாள். உடலை நெளித்துக் கொண்டு எழுந்து சென்றான்.

“வீரமணி மொவன் தனசேகர் பண்ணி வெச்சுருக்கிறத கேட்டியா? குடியான வூட்டு பொன்ன இழுத்துட்டுப் போயிட்டானாம்” என்றாள் மல்லிகா. வாசுகி உள்ளுக்குள் மகிழ்ச்சியோ அதிர்ச்சியோ அடையவில்லை.

“மீட்டிங் முடிச்சிட்டு மாதஸை பார்த்துட்டு போயிடலாமா” என்று காரில் சென்று கொண்டிருக்கும் போது பிரவீன் மாலதியைக் கேட்டான். கன்னத்தில் கையூன்றி சாலையை வெறித்த வண்ணம் வந்தவள் “ம்ம் சரி பிரவீன்” என்றாள்.

பிரவீனும் மாலதியும் நுழைந்த போது அரங்கம் முழுமையாக நிறைந்திருந்தது. மஞ்சள் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருந்த அரங்கில் மாலதியின் முகம் மேலும் அழகாகத் தெரிவதாக பிரவீன் எண்ணிக் கொண்டான். கன்னத்தை தொட்டாடும் கருமையான குழல்கற்றைகள் அதற்கு நேர் எதிரான மஞ்சள் முகம் அதற்கும் எதிரான சிவந்த உதடுகள் நீலப்புடவை என்று நீண்ட மனதை கட்டுப்படுத்த அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டான்.

“பண்பாட்டு மானுடவியல் துறை பேராசிரியையும் சிந்தனையாளருமான மாலதி அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்” என்று மேடையிலிருந்து அவள் அழைக்கப்பட்ட போது பிரவீனை நோக்கித் திரும்பினாள் மாலதி. முகத்தில் இருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கி தீர்க்கமாக அவள் செல்வது தான் அவளை அத்தனை அழகியாகக் காட்டுகிறது என எண்ணிக் கொண்டான். அவன் கைகளை மெல்லத் தொட்டுவிட்டு மேடைக்குச் சென்றாள்.

மாலதி யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. கூட்டத்தில் பெரும்பாலானவர்களின் முகத்தில் வறுமை தென்படவில்லை. மாலதி மேடையேறி பேசத் தொடங்கினாள்.

“நண்பர்களே நாம் வெகு தூரத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அன்றாடங்களில் இருந்து வரலாற்றிலிருந்து இருந்து நாம் நம்மை வெகுவாகத் துண்டித்துக் கொண்டு விட்டோம். ஒரு இனிய ஞாயிற்றுக்கிழமை மாலையை ஏதோவொரு கல்லூரி ஆசிரியையின் பேச்சைக் கேட்பதற்காக வீணடிக்கத் தயாராகி இங்கு வந்து அமர்ந்திருக்கும் உங்களுக்கு நான் சொல்வது அதிர்ச்சி அளிக்கலாம். உங்களையே நான் குற்றம் சொல்லத் தொடங்குவது உங்களுக்குள் கோபத்தை கிளறலாம். சில நல்லிதயம் கொண்டவர்களுக்கு சோர்வு கூட வரலாம். ஆனால் இது உண்மை. நாம் உண்மைகளில் இருந்து வெகுவாகத் தள்ளி வந்துவிட்டோம். உண்மைகளை மறைக்கக்கூடிய உடனடிக் காரணி உணர்ச்சி தான். உணர்ச்சிகளின் வழியாக உண்மைகளிலிருந்து நாம் தப்பிச் செல்ல நினைக்கிறோம். உரத்து பேசுவதன் வழியாக நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விடுவதன் வழியாக நாம் உணர்ச்சிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கிறோம். நாம் தப்பிச் செல்ல நினைக்கும் உணரச்சிகளில் தலையாயது நீதியுணர்ச்சி. ஆம் நாம் காமத்தில் இருந்து கூட தப்பித்துக் கொள்ள விழையவில்லை. ஆனால் நீதியில் இருந்து தப்பித்துக் கொள்ள விழைகிறோம்.”

ஒன்பது மணியாகியும் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு வராதது வாசுகிக்கு மெல்லிய கலக்கத்தை ஏற்படுத்தியது. மதியம் மல்லிகா சொன்னது வேறு மனதை போட்டு ஒரு பக்கம் அரித்துக் கொண்டிருந்தது.

“யக்கா டவுன்ல தான் கல்யாணம் நடக்கும்னு மேலத்தெரு ஆளுங்கெல்லாம் அங்கின சுத்திட்டு கெடக்குறாங்களாம். அத்தான டவுன் பக்கம் போக வேணாம்னு சொல்லி வைக்கா. அதுவே ஒரு அப்பாவி மனுசன். மத்தவன் குத்தஞ்செஞ்சா கூட மூஞ்சி சிறுத்துப் போற ஆளு. இதப்புடிச்சு எங்கடா எங்கூட்டுப் பிள்ளன்னு கேட்டானுவொன்னா பளிச்சுன்னு செருப்பெடுத்து அடிக்கத் தெரியாம முழிச்சிட்டு நிக்கும்” என்று சொல்லிவிட்டுப் போயிருந்தாள் மல்லிகா. கோபால் நகருக்குத்தான் போயிருக்கிறான் என்பதை அவளிடம் சொல்லத் தோன்றவில்லை. சொல்லியிருந்தால் மேலும் அதைரியம் கொடுக்கும் வார்த்தைகளை சொல்லிவிட்டுப் போயிருந்திருப்பாள். மதியத்திலிருந்து செருப்பில் நுழைந்த நெருஞ்சி முள் போல விட்டுவிட்டு குத்திய மனம் இப்போது ஒரேடியாக பதறுகிறது. ஒன்பதரை மணிக்கு குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு படுக்க வைத்தபின்பு ரோட்டாவில் மொண்ட தண்ணீரை கை நடுங்கி கீழே போட்டுவிட்டாள். சாணி மெழுகிய மண் தரை என்பதால் ரோட்டா விழுந்தது பெரிதாக சத்தம் எழுப்பவில்லை. ஆனால் அழக்கூடாது என காத்து வைத்திருந்த வைராக்கியம் உடைந்து வாசுகி அழத்தொடங்கிய போது வாசலில் சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.  பெரும்பாலும் வைக்கோல் அல்லது கீற்று வேய்ந்த களிமண் சுவர் கொண்ட அறுபது வீடுகள் இரண்டு சாரிகளாக பிரிந்திருக்கும் தெருவில் மஞ்சள் நிற குண்டு பல்புகள் ஒன்பது மணி வரை  மங்கலாக எரியும். அதற்குப் பிறகு வீடுகளில் மின்சாரப் பயன்பாடு குறையக்குறைய தெரு விளக்குகளில் பிரகாசம் கூடும். அன்று தெருவிளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

“நீதி என்ற வார்த்தையை நான் சொன்னதுமே ஐம்பது நெருங்கும் பலருக்கு தமிழ்நாட்டின் பிரபல சொல்லாட்சியான சமூகநீதி என்பது நினைவுக்கு வந்திருக்கும். தமிழ் நிலத்தின் தேசியம் சாராத முதற்பெரும் அரசியலே நீதி என்ற வார்த்தையுடன் தான் தொடங்குகிறது. ஆனால் உண்மையில் நீதி என்பது ஒரு நவீன சொல்லாட்சி தானா? அது உருவான நூற்றாண்டுக்கு முந்தைய நிலையை விடுங்கள். இன்றைய நாளில் நீதி என்பதற்கான வரையறையும் அதைத் தடுக்கும் சாதி என்பதற்கான வரையறையும் சரியாகவே இருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு தூரத்துக்கு சரி? சாதிக்கான வரையறையை நாம் சற்று மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு தூரம் எனில் சாதிப் பற்றுடைய ஒருவரை நிம்மதி இழக்கச் செய்யும் உண்மையான அர்த்தத்தில் சாதியை மறுவரையறை செய்து கொள்ள வேண்டும். அந்த வரையறை அதை உருவாக்குகிறவர்களுக்கே கோபத்தை வரவழைக்கலாம். ஆனால் மேம்போக்கான போலி ஒப்பாரிகள் காதை அடைக்கும் இன்றைய நாளில் உண்மையில் புண்ணின் திறந்த வாயில் மருந்து ஊற்றுவது போல அந்த வரையறையை முன்னிறுத்துவதே சரியாக இருக்கும்.”

மரப்படலை திறந்து கொண்டு உள்ளே வருவது கோபாலகிருஷ்ணன் தான் என்று தெரிந்ததும் வாசுகி சற்று ஆசுவாசமடைந்தாள். சைக்கிளின் பின்புறம் ஒரு பதினான்கு அங்குல ஓனிடா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி அட்டைப் பெட்டியில் சுற்றியிருந்தது. அதைப் பார்த்ததும் அவள் முகம் ஒளிபெற்றது. சகஜமான மனநிலை கணவன் மீதான செல்லக் கோபமாக மாறியது. பையனை ஏமாற்றிவிடக்கூடாது என தொலைக்காட்சிப் பெட்டியை அவன் பொறுத்திருந்து பத்திரப்படுத்தி தூக்கி வந்திருப்பது அவனை முத்தமிடத் தூண்டியது. தொலைக்காட்சிப் பெட்டியை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு உள்ளே சென்ற உடனே அவனே கன்னத்தில் முத்தமிட்டாள். கன்னத்தை துடைத்துக் கொண்டு கோபாலகிருஷ்ணன் சிரித்தான்.

“புள்ளைவோ தூங்கிடுச்சா” என்றவாறே சுவர் மூலையில் போய் உடம்பை தேய்த்த வாக்கில் படித்திருந்த மாதேஸை காலை உசுப்பி எழுப்பினான். கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்திருந்தவனின் கண்ணோரம் தொலைக்காட்சிப் பெட்டி வராததன் வருத்தம் வழிந்திருந்தது. அப்பாவை பார்த்ததுமே அழத்தொடங்கினான்.

“டிவி வாங்கியாத்துட்டேன்டா குட்டிப்புள்ள” என அவனைத் தேற்றினான்.

“காலைல ஆண்டெனா வெச்சு படம் பாக்கலாம் என்னைய்யா?” பிரிக்காத தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்து சொன்னான்.

“இப்பவே பிரிச்சு காட்டு” என அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மாதேஸ். மின்சாரம் அணைந்தது.

“வரலாற்றினை தூரத்திற்கு தள்ளிக் கொண்டு போகும்போது அது நம்மை உணர்வெழுச்சி கொள்ள வைக்கிறது. பெருமை மிக்க தொல்பழங்காலம் குறித்து பேசத்தொடங்கி நம் இன்றின் உரசல்களை தனித்துக் கொள்ள முனைகிறோம். உரசல்களற்ற ஒரு சமகாலத்தை நேற்றே நாம் அனுபவிக்க வேண்டிய சங்கடங்களை அனுபவித்துவிட்டதாக எண்ணி கனவு காண்கிறோம். நம் உரசல்கள் குறையத் தொடங்கும் போது உண்மையில் உலகமே மாறிவிட்டதாக நம்புகிறோம். உண்மை அதுவல்ல. உரசல்கள் நடைபெற்றிருக்காத நேற்றோ உரசல்களுக்கு வாய்ப்பற்ற நாளையோ வெறும் கற்பனை தான். நாம் செய்யக்கூடியதெல்லாம் இன்றின் உரசல்களை எப்படி எதிர்கொள்வது என்பதுதான். சமகாலத்தில் சாதியை எப்படி வரையறை செய்வது என்பது குறித்து பேசவே நான் இங்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இந்த சமகாலம் என்ற சொல் நம்மைத் தொந்தரவு செய்கிறது. அதிலும் சம்பவங்கள் ஒரேநேரத்தில் சமகாலத்திலும் வரலாற்றிலும் நடைபெறுகின்றன என்று நம்பும் என்னைப் போன்ற  ஒருத்தியின் பேச்சு நம்மை மேலும் தொந்தரவு செய்யலாம். உரசலை உருவாக்காலாம். ஆனால் வேறு வழியில்லை. செயல்முறையை வைத்து  இந்த சாதியை மறுவரையறை செய்தாக வேண்டிய காலத்தில் தான் நாம் இருக்கிறோம்.”

மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டபோதும் மாதேஸ் தொலைக்காட்சிப் பெட்டியை பிரித்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருந்தான். அடுப்புக்கட்டைக்கு அருகில் ஒரு மர முக்காலியில் அந்த சிறிய ஓனிடா தொலைக்காட்சிப் பெட்டியை கோபாலகிருஷ்ணன் தூக்கி வைத்தான். அலுமினிய விளக்கின் ஒளி தொலைக்காட்சியின் கருஞ்செல்லுலாய்டில் பிரதிபலித்தது. அந்த ஒளியைப் பார்த்தவாறே மாதேஸ் அமர்ந்திருந்தான். அவனை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த வாசுகியும் கோபாலகிருஷ்ணனும் படுக்கப் போய்விட்டனர். அவர்கள் எழுந்து சென்றவாக்கில் தொலைக்காட்சிக்குள் தெரிந்தனர். மாதேஸ் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான்.

ஒரு மணி நேரமும் தொடர்ந்து தொலைக்காட்சியின் முன்பே அமர்ந்திருந்தான். கொல்லைப்பக்க கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. வாசுகி எழுந்து சென்று பார்த்தபோது மல்லிகா நின்றிருந்தாள்.

அவள் முகத்தில் தெரிந்த துயரும் தீர்மானமும் வாசுகிக்கு விஷயத்தை உணர்த்திவிட்டன.

“வீடெல்லாம் கொளுத்தப் போறாங்களாங்கக்கா” என்று அவள் சொன்னபோது வாசுகி உண்மையில் நிம்மதியை உணர்ந்தாள். எப்படியோ உயிர்ச்சேதமின்றி தப்பித்துவிடலாம் என எண்ணி தலை முடியை முடிந்து கொண்டு சென்று கோபாலகிருஷ்ணனை எழுப்பினான். அவனது ஒருசில சவடால் துள்ளல்கள் “இங்கேருங்க பார்த்திபன் அண்ணன்தான் எறங்கப் போறாராம். கொறஞ்சது எண்பது பேராவது வருவானுவோ. மூடிகிட்டு வீட்டவுட்டு போயிருவோம். புள்ளைவோ பேப்பரு நோட்டு புஸ்தகமெல்லாம் பொழுதடையிறப்பவே எடுத்து கட்டிட்டேன். பேசாம பொறப்படலாம்  மூட்டைய கட்டுங்க” என்று வாசுகி நிலைமையை விளக்கிய போது அடங்கின.

கோபாலகிருஷ்ணன் அவமானப்பட்டது போல முகத்தை வைத்துக் கொண்டு முக்கியமான  பொருட்களை கட்டத் துவங்கினான். டிவியை எடுக்கலாம் எனத் திரும்பிய போதுதான் ஒரு மணிநேரமாக அதன் முன்னே நடக்கும் எதையும் கவனிக்காமல் உட்கார்ந்திருக்கும் மகனைப் பார்த்தான். அவனுக்கு உள்ளுக்குள் என்னவோ பொங்கியது.

“நேற்று சாதிக்கு பல வரையறை இருந்தன. அவற்றில் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது நம்முடைய சாதிகள் அகமண வழக்கத்தால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது. அதாவது இனக்குழுவுக்குள்ளேயே மண உறவுகளை உண்டாக்கிக் கொள்வது. இந்த வரையறையின் சிக்கல் அது அகமண முறை போன்ற மிகுந்த சமத்காரமான சொல்லை பயன்படுத்துகிறது என்பது தான். உண்மையில் இன்றைய தினத்தில் சாதிக்கான சமூகத் தேவை பொருளியல் ரீதியாக இல்லை. சாதி குறித்து நாகரிகமாக சொல்வதெனில் அது நிலப்பிரபுத்துவ காலத்தில் குலங்களை அடுக்கி உற்பத்தியை மையத்தில் குவித்து உபரியை உருவாக்கி அரசினை உருவாக்கப் பயன்பட்டிருக்கலாம். ஆனால் இன்று சாதி செயல்படும் இடம் மிகச்சுருங்கி விட்டது. அதாவது சாதி மனிதர்களின் இடுப்பு கீழ் செயல்படும் ஒரு விஷயமாக இன்று மாறியிருக்கிறது. “

“இப்ப எதுக்குங்க டிவிய பாக்குறீங்க. அவனுங்க முக்கியமா  ஒடைக்க வர்றதே பொருளுகலத்தான். கையில கொஞ்சம் காசு சேந்து நிமிந்திரக்கூடாதுன்னு தான் இந்த மாதிரி அரிப்பெடுத்து ஓடுற அவங்கூட்டு தேவிடியா நாய்கள சாக்கா வெச்சுகிறானுங்க.  நீங்க இதத்தூக்கிட்டு போவப்பாத்தீங்கன்னா ரோட்டுலயே உங்க தலையில இத தூக்கிப் போட்டு உடைட்பான்” என்றாள் வாசுகி. கோபாலகிருஷ்ணனுக்கு மாதேஸை பார்க்க பார்க்க ஏக்கம் பொங்கியது.

பார்த்திபன் ஆறடிக்கு சற்று கூடுதல் உயரம். கோபாலகிருஷ்ணன் திருமணமாகி அட்டென்டர் வேலையில் சேருவதற்கு முன் பார்த்திபனிடம் வேலை செய்திருக்கிறான். இப்போதும் சாலையில் பார்த்தால் சைக்கிளை விட்டு இறங்காமல் அவன் செல்வதில்லை. பார்த்திபனை இருளில் தூரத்தில் பார்த்த போதே மூட்டை முடிச்சுகளோடு வரப்புகளில் ஓடும் ஜனங்களின் சத்தத்தை கோபாலகிருஷ்ணன் கேட்டு விட்டான். சில துணிகளை எடுத்துச் சுருட்டி கட்டிக் கொண்டிருக்கும் போதே பார்த்திபன் வீட்க்குள் நுழைந்துவிட்டான். அவன் முகம் கடுகடுப்பை காட்டத் தவித்துக் கொண்டிருந்தது.

“இந்தா போயிடுறோம்ணே” என டிவி முன் உட்கார்ந்திருந்த மாதேஸை எழுப்பச் சென்றாள் வாசுகி.

“சாதியின் பாவனைகள் அழிந்த புத்தாயிரத்தில் அதன் பங்களிப்பு பாலுறவு கண்காணிப்பமைப்பு என்ற எல்லையில் நின்று செயல்பட்டு வருவது நாம் அறிந்த நிதர்சனம். அதாவது இன்று தங்களை ஆதிக்கத்தன்மை மிக்க சாதியினர் என்று கற்பனை செய்து கொள்கிறவர்கள் மிகுந்த பெருந்தன்மையுடன் ஆதிக்கப்புனைவுகளை உருவாக்கிக் கொள்ளாத சாதியினர் வீட்டில் உண்கின்றனர் அவர்களோடு நட்பு பாராட்டுகின்றனர். ஆனால் அது அத்தனையும் ஒரு வகையான நவீன வேடம் தான். யாரையும் புண்படுத்ததாத வகையில் நாகரிகமாகச் சொல்வதெனில் அவர்களுக்கேத் தெரியாமல் அவர்கள் அணியும் வேடம். சாதி எதைக் காப்பதற்காக அல்லது எதன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக நடைமுறையில் இருக்கிறதோ அதில் இம்மியும் மாற்றமில்லை. பெரும்பான்மை ஆண் வழிச்சமூகமாக மாறிவிட்ட நம் நிலத்தில் சாதி பொத்திப் பாதுகாக்க வேண்டிய பொருளாக எண்ணுவது பெண்குறி தான். ஆம் ஆதிக்கப்புனைவுகள் கொண்ட சாதிகளின் ஆண் குறிகள் எங்கும் நுழைவதற்கு சாதி அனுமதி வழங்குகிறது. ஆனால் பெண் குறிகளில் நுழைக்கப்பட வேண்டிய ஆண்குறிகளை மட்டும் அது தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது.”

அவர்கள் வீட்டை விட்டு புறப்படும் முன்னரே பார்த்திபன் அடுப்புகட்டைக்கு மேலிருந்த கிரைண்டரை தூக்கி கீழே போட்டான். சாணி மெழுகிய மண் தரையில் பொத்தல் விழுந்தது. அந்த மெல்லிய சத்தத்தை கேட்டதாலும் அம்மா தோளினை தொட்டதாலும் மாதேஸ் திரும்பினான். அவனுக்கு அங்கு நடைபெறுவது என்னவென்று புரியவில்லை. மாலதி பயந்தவளாக அப்பாவுக்கு பின்னே ஒளிந்திருந்தாள். மாதேஸ் அவளை நோக்கி வந்தபோது பார்த்திபன் டிவியை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். மாலதி தன்னை நோக்கி வரும் தம்பிக்கு பழிப்பு காட்டுவதற்காக  சவுக்கு கட்டையுடன் டிவியை நோக்கிச் செல்லும் பார்த்திபனை கண்களால் அவனிடம் சுட்டிக்காட்டினாள்.

டிவி உடையப் போகிறது என்ற தகவல் மட்டும் அந்த சிறு மூளைக்குள் எப்படியோ நுழைந்துவிட்டது. டிவியின் மீது இறங்க வேண்டிய சவுக்கு கட்டையின் விசை மாதேஸின் பின்னந்தலையில் இறங்கியது. அந்த விசையால் உந்தப்பட்டு அவன் தலை செல்லுலாய்டில் மோதியது. உடைந்த கண்ணாடித்துகள்கள் அவன் கண்களில் ஏறின. பின்மண்டையில் பட்ட அடியால் கண்களிலும் முகத்திலும் குத்திய கண்ணாடித் துகள்களுடன் மாதேஸ் சரிந்து விழுந்தான்.

யோசிப்பதற்குள் அனைத்துமே நடந்து முடிந்தன. பார்த்திபன் குழந்தையை அடித்துவிட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்று கொண்டிருந்தான்.

வாசுகி சற்றும் யோசிக்கவில்லை. புலம்பவுமில்லை. கையில் வைத்திருந்த அம்மா வீட்டு சீரான பித்தளை தவளையால் பார்த்திபனை எம்பித் தலையில் அடித்தாள். மல்லாந்து விழுந்த வாக்கில் “அய்யோ அம்மா” என அலறினாள். அலறியடியே முன் நின்ற வாசுகியை நோக்கி கூப்பிக் கையெடுத்தான். என்ன நினைத்தாளோ பித்தளை தவளையை கீழே போட்டுவிட்டாள். பார்த்திபனின் கையிலிருந்து விழுந்து சவுக்குக் கட்டையை எடுத்து விரித்திருந்த அவன் கால்களுக்கு நடுவே ஓங்கி அடித்தாள். அவனிடமிருந்து மிக விநோதமான கேட்டால் சிரிப்பினை வரவழைக்கும் ஒரு ஒலி எழுந்தது.

“ஆகவே இன்றைய நாளில் நாம் சாதியை இவ்வாறு தான் வரையறுக்க வேண்டியிருக்கிறது. சாதி என்பது வரலாற்று அறிவும் நவீனப் பெருமிதங்களும் ஜனநாயக மாண்பும்  இல்லாத மக்களால் பெருமிதத்துடன் எண்ணிக்கொள்ளப்படும் ஒரு வகையான மனப்புனைவு. இந்த புனைவமைப்பு சமூகத்தில் நடைபெறும் எந்த அசைவியக்கங்களையும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு ஆண்-பெண் மண உறவின் போது மட்டும் அதை வழிநடத்த எத்தனிக்கிறது. ஒருவேளை தான் உருவாக்கி வைத்திருக்கும் அல்லது உருவாக்கியதாக எண்ணியிருக்கும் வரிசையில் இந்த மண நிகழ்வுகள் நடைபெறவில்லை எனில் மணமக்களை கொலை செய்யவும் இந்த புனைவமைப்பு தயங்குவதில்லை.”

மாதேஸின் அறை தூய்மையாக இருந்தது. பிரவீன் செவிலியிடம் பேசிக்கொண்டிருந்தான். சக்தீஸ்வரி அறையினுள் நுழைந்த போது மாதேஸை பார்க்க வரும் போது தோன்றும் நடுக்கம் அப்போதும் தோன்றியது. நீண்டு ஒட்டிய முகத்துடன் ஆடும் உடலுடன் கிண்டில் ரீடரில் நடுங்கும் விரல்களால் எதையோ தடவித் தடவி வாசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“வா மாலதி” என எப்போதும் அழைக்கும் அந்த குற்றம்சாட்டுவதைப் போன்ற குரலில் இப்போதும் அவளை அழைத்தான். அந்த இரவுச் சூறையாடலுக்குப் பிறகு மாதேஸுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் மாலதிக்டு தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாதேஸ் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தண்டுவடத்திலும் முகுளத்திலும் ஏற்பட்ட பாதிப்புகள் அவனுக்கு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திவிட்டன. வாசிக்கவும் எழுதவும் பழகிக் கொண்டான்.

மாலதியிடம் “இப்போ ஒரு கதை எழுதினேன் ” என நடுங்கும் கையால் தன் அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.

“களிமண்ணை  குழைத்து கொட்டாங்குச்சியில் போட்டு கருவை இலைகளைத் தூவி….” என்று தொடங்கிய அந்தக்கதையை முழுதாக வாசித்துவிட்டு “இப்படியே நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல” என்று சொல்லியபோது அவளுக்கு ஆத்திரம் நெஞ்சை முட்டியது.


நவம்பர் 2018, காலச்சுவடு இதழ்

https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/227/search/articles/18-வரையறுத்தல்