நாவல் மற்றும் நாவல் விமர்சனம் என்ற சொற்களுக்கான அர்த்தம் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. தொடக்க காலங்களில் நாவல் என்பது வீட்டிலிருக்கும் பெண்கள் படிப்பதற்காக எழுதப்படுவதாகவும் நாவல் என்பது ‘காதல் கதை’ என்பதாகவும் எண்ணங்கள் இருந்தன. நாவல் விமர்சனம் என்பது நாவலின் ‘கதையை’ சுருக்கிச் சொல்வது என்ற எண்ணம் இருந்ததை க.நா.சுவின் விமர்சனக் கட்டுரைகள் வழியாக அறிய முடிகிறது. க.நா.சு இப்போக்கை கண்டிக்கிறார். பின்னர் இறுக்கமும் கூர்மையும் கொண்ட நவீனத்துவ நாவல்கள் வரத் தொடங்கியபின் நாவல் பற்றிய யோசனைகள் தமிழ்ச் சூழலில் மாறத் தொடங்கின. தனிமனிதனின் சிக்கல்களை விரிவாகப் பேசுவதே வெற்றிகரமான நாவல் என்ற கூற்றுக்கு ஒரு மறைமுக ஒப்புதல் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டிருந்ததை எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் வெளியான இன்று பல விமர்சகர்களின் பட்டியலில் முக்கியமானவையாக இடம்பெற்றுவிட்ட நாவல்களை வாசிக்கும்போது உணர முடிகிறது. கரைந்த நிழல்கள், ஜே ஜே சில குறிப்புகள், என் பெயர் ராமசேஷன், பள்ளி கொண்டபுரம் என்று சில நாவல்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தொன்னூறுகளிலேயே தமிழ் நாவல்களின் வடிவம் குறித்த  உரையாடல்களும் தேடல்களும் தமிழ் இலக்கியச் சூழலில் கூர்மையடைகின்றன. இக்காலகட்டத்தின் நாவல்களை முந்தையவற்றுடன் ஒப்பிட்டால் ஒரு வெளிப்படையான வேறுபாட்டைக் காண முடியும். அது பக்க அளவு. பெருநாவல்களின் காலம் என்று கூட தொன்னூறுகளின் பிற்பகுதியைச் சொல்லிவிட முடியும். ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல்களின் பொற்காலம் என்று கூட இந்த காலகட்டத்தை குறிப்பிட்டுவிட முடியும். இன்று தமிழில் நிலைபெற்றுவிட்ட வலுவான பல நாவலாசிரியர்கள் அக்காலத்திலேயே உருவாகி வந்தனர். ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, எம் கோபாலகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், ஜோ டி குரூஸ் என தமிழின் முக்கியமான நாவலாசிரியர்கள் அனைவருமே ஏறத்தாழ தொன்னூறுகளின் இறுதியிலும் புத்தாயிரத்தின் தொடக்கத்திலும் தங்களுடைய முதன்மையான நாவல்களில் ஒன்றை எழுதிவிட்டிருந்தனர். இன்றும் முக்கியமான நாவல்களைத் தருகிறவர்களாக இத்தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதை கவனிக்கிறோம். இவர்களுக்குப் பிறகு தமிழ்ச் சூழலில் இரண்டு தலைமுறை நாவலாசிரியர்கள் உருவாகிவிட்டாலும் முன்னோடிகளை ஒப்பிடும் போது தமிழ் நாவல் இலக்கியத்தின் போக்கு சுணங்கி இருப்பதையே அவதானிக்க முடிகிறது. இச்சுணக்கத்திற்கான காரணத்தை பேசிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

தொடக்கம் முதலே சிறுகதைகள் மற்றும் கவிதைகளைப் போல தமிழ் நாவல்களின் வளர்ச்சிப்போக்கு சீரானதாக இருக்கவில்லை. வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை எழுதப்படுவதற்கு முன்பே தமிழின் முதல் நாவல் என்று நம்பப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதப்பட்டுவிட்டது. பிரதாப முதலியார் சரித்திரம் ஏகப்பட்ட கதைகளைப் பிணைத்து கதம்பம் போல செய்யப்பட்டதொரு நாவல். அத்தகையதொரு ‘கதைக்கொத்தினை’ தமிழ்ச்சூழல் நாவலாக ஏற்கவில்லை என்பது பிரதாப முதலியார் சரித்திரத்துக்கு பின்னர் வந்த நாவல்களைப் பார்க்கும்போது தெரிகிறது.  நவீனத்துவத்துக்கு பிறகான நாட்களில் நாவலை இப்படியொரு கதம்பமாக அமைப்பதில் ஒன்றும் தவறில்லை என்று ஒத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறோம். நவீன இலக்கியத்தின் தொடக்க காலத்தில் நாவல் என்கிற சொல்லும் நாவல் என்கிற கலைவடிவம் குறித்த அறிமுகமும் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்துவிட்டாலும் வங்கத்திலோ கன்னடத்திலோ கேரளத்திலோ நிகழ்ந்தது போல பெரிய முன்னெடுப்புகள் தமிழில் நடைபெறவில்லை.

இந்தியாவின் பிற மொழிச்சூழல்களில் நவீனத்துவம் அறிமுகமாவதற்கு முன்பே புதுமைப்பித்தனின் வழியாக தமிழில் அறிமுகமாகிவிட்டதால் தமிழில் மண்ணும் மனிதரும், ஆரோக்கிய நிகேதனம், கோரா போன்ற செவ்வியல் பெருநாவல்கள் உருவாகாமல் போய்விட்டதாக ஜெயமோகன் தன்னுடைய நாவல் கோட்பாடு என்ற நூலில் அவதானிக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் நாவல் வடிவத்தைப் பொறுத்தவரை குழப்பம் நிறைந்ததாகவே நீடிக்கிறது. ஒருபுறம் வரலாற்று மிகைகற்பனைகளாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற தொடர்கதைகளை ‘நாவல்’ என்று எண்ணி வெகுஜன சூழல் மயங்கி இருந்தது. மற்றொரு முனையில் தமிழில் நவீனத்துவ நாவல்கள் எழுதப்பட தொடங்கப்பட்டுவிட்டன. தி.ஜானகிராமன் நீங்கலாக அக்காலகட்டத்தின் படைப்பாளிகள் அனைவரும் சிறுகதைகளிலும் கவிதைகளிலுமே பெரும்பாலும் இயங்கினர். தி.ஜானகிராமனும் காமமும் அது சார்ந்த அகச்சிக்கல்களையும் யதார்த்த தளத்தில் அணுகும் நாவல்களையே அதிகமும் எழுதினார். அடுத்த தலைமுறை முழுமையாக நவீனத்துவத்துக்கு வந்து சேர்ந்திருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, நீல.பத்மநாபன் , சா.கந்தசாமி போன்றோர் ‘கச்சிதமான’ நாவல்களை எழுதுவதில் முனைந்திருந்தனர். மற்றொரு புறம் பூமணியின் பிறகு, வெக்கை போன்ற நாவல்கள் வாயிலாக இயல்புவாத எழுத்து வலுவாக தமிழில் அறிமுகமாகியது. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் இனக்குழு எழுத்துக்களுக்கு முன்னோடியாக அமைந்தது. ஜெயகாந்தனின் நாவல்கள் முற்போக்கு எழுத்து வகைமையை உயிர்ப்புடன் வைத்திருந்தன.

தொன்னூறுகளில் எழுத வந்தவர்கள் இறுக்கமான நவீனத்துவ நாவல்களையும், யதார்த்த தன்மை கொண்ட நாவல்களையும் ஒருங்கே எதிர்கொண்டனர். நவீனத்துவ நாவல்களுக்கு மாற்றாக புதுமையான கதைக்களங்களையும் வடிவங்களையும் தேர்ந்து கொண்ட நாவல்கள் வெளிவரத் தொடங்கின. யதார்த்த எழுத்து தன் எல்லைகளை மேலும் விரித்துக் கொண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தொய்வடைந்து மீண்டும் நவீனத்துவத்தின் வழியாக உயிர்ப்படைந்த தமிழ் நாவல் தொன்னூறுகளில் பின்நவீனத்துவ காலத்தில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. ஆனால் சிறுகதை மற்றும் கவிதை போன்ற வடிவங்களில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் அவ்வளவாக இருக்கவில்லை. நாவலில் மட்டும் ஏன் தமிழ் இலக்கியம் தொடர்ந்து தத்தளித்துக் கொண்டே இருக்கிறது என்ற கேள்வியையும் இணைத்துக் கேட்பதன் வழியாக இன்றைய சுணக்கமான சூழலை புரிந்து கொள்ள இயலும்.

நாவலை தத்துவத்தின் கலை வடிவம் என்றும் தகவல்களின் கலை என்றும் வரையறுக்கிறார்கள். தத்துவம் என்பது ஒவ்வொரு காலச்சூழலுக்குமான வாழ்க்கைப் பார்வையை தீர்மானிக்கிறது. அன்றாட நிகழ்வுகள், அரசியல் சார்ந்த முன்னெடுப்புகள், போராட்டங்கள், போர்கள் என அனைத்திலும் தத்துவத்திற்கு ஒரு பங்குள்ளது. ஒரு நாவலின் களத்தை கற்பனை செய்யும் எந்தவொரு ஆசிரியரும் அவருடைய காலச்சூழலின் தத்துவ நோக்குகளிலிருந்து தப்பிச் செல்ல இயலாது. ஒரு நிகழ்வினை தனியாகக் காணும் போது ஏற்படும் மன நகர்வுகளுக்கும் அதே நிகழ்வை ஒரு ஒட்டுமொத்தத்தின் பகுதியாக கற்பனை செய்யும்போது தோன்றும் பிரம்மிப்புக்கும் இடையேயான மோதல் புள்ளியிலேயே ஒரு நாவலாசிரியர் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதாவது ஒரு நாவலாசிரியர் ஒரே நேரத்தில் சமகாலத்தின் பிரதிநிதியாகவும் சமகாலத்தை கட்டமைத்திருக்கும் தத்துவ நோக்குகளின் விசாரணையாளராகவும் இருக்கிறார். நாவலாசிரியர் அவ்வாறாக வெளிப்படும்போதே அவர் ஒரு நாவலுக்குள் புனையும் சம்பவங்கள் சமகாலத் தன்மையையும் காலாதீதமான ஒன்று என்ற பிரமையையும் தோற்றுவிக்கின்றன.

நவீனத்துவத்திற்கு பிந்தைய முதல் தலைமுறை படைப்பாளிகள் படைப்பின் தத்துவம் சார்ந்த சிக்கல்களை ஓரளவு வெற்றிகரமாக எதிர்கொண்டனர் என்றே சொல்ல வேண்டும். தர்க்கம் சார்ந்த இறுக்கங்கள் தளர்ந்திருந்த அந்தச் சூழல் நாவல் வடிவத்தில் பல புதுமைகளை செய்து பார்க்க நாவலாசிரியரை அனுமதித்தது. தொன்னூறுகளில் நிகழ்ந்த இந்த முன்னகர்வுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. தாராளமயச் சூழலையும் அதற்கு முந்தைய நெருக்கடி நிலை போன்ற அரசியல் சூழல்களையும் இப்படைப்பாளிகள் எதிர்கொண்டிருந்தனர். தாராளமயம் அதுவரையில் மெதுவாக நிகழ்ந்து கொண்டிருந்த நகர்மயத்தையும் தொழிற்சமூக உருவாக்கத்தையும் துரிதப்படுத்தியது. அது சமூக மதிப்பீடுகளை மாற்றியமைத்தது. (இந்த மாற்றம் குறித்த ஒரு துல்லியமான சித்திரம் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை நாவலில் உண்டு) இந்த மாற்றங்கள் ஏற்படுத்திய சலனங்களையும் தொன்னூறுகளின் நாவல்களில் நம்மால் காண முடிகிறது. ஆனால் புத்தாயிரத்தில் நாவல் எழுத வந்தவர்கள் முழுமையாகவே உலகமயச் சூழலையும் அதன் நியதிகளையும் புரிந்து கொண்டவர்களாக இருந்தனர். ஆகவே அந்தத் தளத்தில் மோதலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்கவில்லை. ஆகவே கண்முன் காணும் யதார்த்தத்தை மட்டுமே நாவலுக்கும் ஒரு போக்கு இப்போது வலுப்பெற்றுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் வெளியான புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்களும் அவர்களுடைய சொந்த வாழ்க்கை சார்ந்த ஒரு அவதானிப்பை முன்வைத்திருப்பதை நாம் கண்டிருக்க முடியும். சிலர் தமிழின் நாவல் இலக்கியம் சார்ந்து நம்பிக்கையாக பேசுவதையும் இந்தப் பின்னணியில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்வனுபவங்களை புனைவாக மாற்றுதல் என்பது ஒரு திறன் என்பதை மறுக்க இயலாது. ஆனால் அத்திறன் மட்டும் வெளிப்படுவதை ஒரு முழுமையான நாவலாகக் கொள்ள இயலாது என நினைக்கிறேன். ஆனால் தமிழ்ச்சூழலில் நடைபெறும் உரையாடல்களை பார்க்கும்போது வாழ்க்கைத் தருணங்களை சீராகவோ சற்று களைத்தோ கோர்த்துவிட முடிந்தால் அதை நாவலாக ஒத்துக் கொள்ளும் போக்கு வலுப்பெறுகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. தமிழ் நாவல்களில் சமீபத்தில் தோன்றியிருக்கும் ‘வண்ணமயமான’ சூழலுக்கு வெவ்வேறு வகையான வாழ்க்கைச் சூழலில் இருந்து எழுத வந்திருக்கும் படைப்பாளிகள் காரணமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய வாழ்வை தங்களுடைய மொழியில் சொல்கின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் நாவல் என்பதை ‘புதிய களங்களை சித்தரித்தல்’ என்று மட்டும் சுருக்கிவிட இயலுமா என்ற கேள்வி எழுகிறது. சற்று மொழித்திறன் கைவந்த பிறகு எந்தவொரு வாழ்க்கைச்சூழலையும் நினைவுத் தொகுப்பையும் கதையாக மாற்றிவிட இயலும். அதை புனைவெழுத்தின் ஒரு அடிப்படை தொழிற்திறன் என்று கொள்ளலாம். இத்திறன் வாய்க்கப்பெற்றவர்களாக முந்தைய தலைமுறையை விட பலர் இன்று உள்ளனர். வாய்மொழி உரையாடலை விட எழுத்து மொழியில் உரையாடிக் கொள்வது பெருகிவிட்ட இன்றைய சூழலில் எழுதும் லாவகம் கைவரப்பெற்றவர்கள் அதிகரித்திருப்பது இயல்பானதே.

இந்த அடிப்படைத் தகுதியை ஒத்துக் கொண்டு சமகால எழுத்தாளர்களின் நாவலை வாசித்துச் செல்லும்போது பெரும்பாலும் கடுமையான ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலான தருணங்களில் நாவலை வாசித்து முடிக்கும்போது அதன் உடல் முழுக்கப் பரவியிருந்த உள்ளீடின்மை மட்டுமே நினைவில் நிற்கிறது. நாவல் இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்கத்திற்கான காரணமென இந்த உள்ளீடின்மையை வகுத்துக் கொள்கிறேன்.

முதலாவதாக இன்றைய நாவல்களில் பயின்று வரும் பாத்திரங்களின்  தன்மை. ஒரு புனைவில் வரக்கூடிய பாத்திரம் எவ்வாறு நம் நினைவில் தங்குகிறது என்று கேட்டுப் பார்க்கலாம். புனைவில் ஒரு பாத்திரத்தின் இடத்தில் நாம் நம்மை பொறுத்திப் பார்க்கிறோம் அல்லது நம் எதிர்நிலையாக அப்பாத்திரத்தை சிந்திக்கிறோம். அப்படி சிந்திப்பதற்கான இடைவெளியையும் மௌனங்களையும் கொண்டிருக்கும் பாத்திரங்களை புனைவுக்குள் உருவாக்குவது எழுத்தாளரின் திறன். இத்திறன் எழுத்தாளரின் தனிப்பட்ட கேள்விகளாலும் சிக்கல்களாலுமே உருவாகிறது. ஒரு படைப்பின் பாத்திரங்கள் எவ்வளவு சிக்கல்தன்மை கொண்டதாக இருக்கின்றனவோ அந்த அளவு படைப்பை ‘ஆழமானது’ என்று சொல்கிறோம். இந்த ‘ஆழம்’ என்ற சொல் இன்று கேலியாகப் பார்க்கப்படுவது கூட உண்மையில் அச்சொல் எதை சுட்டுகிறது என்பது மறந்துவிட்டதால் தான் என்று தோன்றுகிறது. தமிழ் பிரபாவின் பேட்டை புதிய களத்தினைக் கொண்டிருந்தாலும் பாத்திரங்களில் வெளிப்படும் ஆழமின்மை அந்த நாவலை உள்ளீடற்றதாக மாற்றுகிறது.

இரண்டாவது சிக்கலாக உடனடியாக கவனத்தைக் கோரக்கூடிய விஷயங்களை புனைவாக்குவதால் ஏற்படும் உள்ளீடின்மை. செய்திகள் வாசகரின் அல்லது பார்வையாளரின் மனதில் எதிர்வினை உருவாக்கும் விதமாகவே ‘கட்டமைக்கப்படுகின்றன’. மட்டுறுத்தலும் தணிக்கையும் கொண்ட செய்திகளுக்கே அதுதான் நிலை. அதற்கு வெளியே இயங்கும் சமூக ஊடகச் செய்திகள் மேலும் மேலும் உணர்ச்சியைத் தூண்டுகிறவையாகவே உள்ளன. இத்தகைய சமகால நிகழ்வினால் தூண்டப்பட்டு எழுதப்படும் ஆக்கங்கள் இயல்பாக இந்த உள்ளீடின்மையில் சென்று விழுகின்றன. சிவப்புப் பணம், பெயல் போன்ற நாவல்கள் சமகால சிக்கல்களைப் பேச முற்பட்டு நாவலாகாமலேயே தோல்வியுறுகின்றன. கவனங்கோருதலுக்காக காமத்தையும் வன்முறையையும் படைப்பு முழுக்க கையாள்வது இன்னொரு உத்தியாகிறது. பொண்டாட்டி , கொமோரா போன்ற நாவல்கள் காமத்தையும் வன்முறையையும் எழுதி தங்கள் பக்கங்களை நிரப்பிக் கொண்டுள்ளன.

மூன்றாவதாக முழுமை நோக்கை அளிக்க இயலாமை.  ஒரு சுவாரஸ்யமான அல்லது தொந்தரவு தரக்கூடிய ஒரு தருணத்தை ஆசிரியரால் கதையுடல் முழுக்க பின்தொடர முடிந்தால் ஒரு வெற்றிகரமாக சிறுகதையை எழுதிவிட இயலும். அங்கு உத்தேசிக்கப்படுவது ஒரு முரண் மட்டுமே. ஆனால் நாவலை பொறுத்தவரை அதன் கதையுடலினூடாக ஒரு முழுமை நோக்கை வாசகனுக்கு கடத்த வேண்டிய தேவை இயல்பாக உருவாகிவிடுகிறது. ஆகவே நாவல் ஒரு சிறிய முரணை மட்டும் பேசும் வடிவமாக இருக்க இயலாது. எளிமையாகச் சொல்வதென்றால் நாவலில் ‘வில்லன்’ இருக்க இயலாது. துன்பப்படுகிறவனின் துயரத்தையும் கடந்து துன்பப்படுத்துகிறவனின் துயரத்தையும் பேசும் போதே ஒரு நாவல் முழுமையடைகிறது. ஆனால் ஒரு தரப்பின் துயர் விசாரணையாகவே பெரும்பாலான நாவல்கள் நின்றுவிடுவதாலோ என்னவோ முழுமை நோக்கை அளிக்க இயலாமல் போகிறது.

நான்காவதாக குறிப்பிட வேண்டியது பின்நவீனத்துவ நாவல்களை எதிர்கொள்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு அல்லது சுணக்கம். தமிழில் நாவல்கள் எழுதப்படும் அளவு அவை சார்ந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே கல்வித்துறை சார்ந்த கலைச்சொற்களைக் கொண்டு நாவல்களுக்கான இடத்தைக் கோரும் வேலையும் நடைபெறுகிறது. சரியாக எழுத வராததையே ஒரு திறன் என்று ஒத்துக் கொள்ளக் கோரியும் ஒரு பக்கம் பிரச்சாரங்கள் நடக்கின்றன. இன்றைய சூழலில் தொன்னூறுகளின் நாவலாசிரியர்களை முறையாக அணுகி அவர்களை விமர்சன ரீதியாக வகுத்துக் கொண்டால் மட்டுமே தமிழ் நாவல்கள் வடிவ ரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் முன்னகர இயலும். ஆனால் தமிழில் நாவல்களைப் பற்றிய பேச்சுகள் இன்றைய சூழலை ‘நவீனமானதாகவும்’ நேற்றை ‘பழமையானதாகவும்’ கற்பனை செய்கின்றன. நாவல் என்பது ஒரு கலைவடிவம் என்பதைத் தாண்டி புனைவை ஒரு பிரச்சாரமாகவும் விளையாட்டுப் பொருளாகவும் பார்க்கின்றனர். முன்னோடிகளை வாசித்த தடயங்களை சமகால நாவலாசிரியர்கள் பலரிடமும் கண்டறிய முடிவதில்லை. ஆகவே இன்றைய நாவல்கள் பலவும் முன்னோடிகளை ஒப்பிட எளிமையானதாகவேத் தெரிகின்றன.

ஐந்தாவதாக இன்றைய சூழலின் ஒட்டுமொத்தமான தத்துவார்த்த சிக்கலால் ஏற்படும் சோர்வு. குறையும் வளங்கள், நுகர்வுச் சூழல் அளிக்கும் பொருளின்மை, லட்சியங்கள் அனைத்தும் சடங்குகளாகவும் பாவனைகளாகவும் மட்டுமே பின்பற்றப்படும் அவநம்பிக்கை தரக்கூடியச் சூழல் என்ற பின்னணியில் இன்றைய நாவலாசிரியனுக்கு எழுத அஞ்சுவது என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியை பொறுப்புடன் எதிர்கொள்வது தமிழ் நாவல்களின் செல்திசையில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம்.

தனித்தனி நாவல்களைப் பற்றி பேசினால் கட்டுரை நீண்டுவிடும் என்பதற்காக தற்போது வெளியான நாவல்கள் பலவற்றையும் வாசித்து உருவாக்கிக் கொண்ட அவதானிப்புகளை இக்கட்டுரை வாயிலாக முன்வைத்துள்ளேன். நாவல் பொறுத்தவரை தனிப்பட்ட தேடலும் ஆர்வமும் மட்டுமே ஒரு சிறந்த படைப்பை தந்துவிடாது என்பது என் ஆழமான நம்பிக்கை. சூழலின் ஆரோக்கியமும் முதிர்ச்சியும் ஒரு நல்ல நாவல் உருவாவதற்கு அவசியம் என்ற டி.எஸ்.எலியட்டின் கூற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவ்வடிப்படையில் தனித்தனி நாவல்களின் ‘பெருமைகளைப்’ பேசுவதைவிட ஒட்டுமொத்த சூழலின் இயல்பைப் பேசுவது பொறுத்தமானதாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


அக்டோபர் 2020, காலச்சுவடு இதழ்

https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/250/search/articles/14-நம்-நாவல்களின்-உள்ளீடின்மையை-எவ்வாறு-வெல்லப்-போகிறோம்