கூச்ச சுபாவம் கொண்ட ஒரு இளைஞன் இங்கிலாந்துக்கு சட்டம் படிப்பதற்காக கப்பலில் செல்கிறான். அவன் சைவ உணவுப் பழக்கம் கொண்டவன். கப்பலில் எது சைவ உணவு என்று பிரித்தறிவதற்கு அவனால் இயலவில்லை. ஏறத்தாழ கப்பலில் பட்டினியாகவே பயணிக்கிறான். இங்கிலாந்து சென்ற பிறகும் அவன் கூச்சம் நீங்கவில்லை. பெரும்பாலும் பட்டினி கிடக்கிறான். அதே இளைஞனை அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவில் பார்க்கிறோம். முதலாளியால் கடுமையாகத் தாக்கப்பட்டு பற்கள் உடைந்த நிலையில் ஒரு தொழிலாளி அவனிடம் வருகிறான். அத்தொழிலாளியின் பொருட்டு அந்த முதலாளிக்கு எதிராகப் போராடி வெல்கிறான். கொஞ்ச நாளில் தொழுநோயாளி ஒருவன் அவனிடம் வருகிறான். அந்நோயாளிக்கு எல்லா சிகிச்சையும் செய்கிறான். அவனைத் தன்னால் தொடர்ச்சியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என்ற உறுத்தல் அந்த இளைஞனிடம் ஏற்படுகிறது. அந்த உறுத்தலைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் மருத்துவமனையில் தன்னார்வலனாகப் பணியாற்றுகிறான். அந்த அனுபவங்களைக் கொண்டு போரில் காயம்பட்டவர்களுக்கு உதவும் ஒரு தன்னார்வலர் படையை உருவாக்குகிறான். இந்தியா திரும்பும் அந்த இளைஞன் இந்தியாவின் மாபெரும் தலைவர்களை சந்திக்கிறான். மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி நிறவெறிக்கு எதிரான ஒரு நெடிய போராட்டத்தை நடத்தி வென்று மத்திய வயதடைந்து இந்தியா திரும்புகிறான்.
இந்தியாவில் அவர் ஒரு யோகியென்றே பார்க்கப்படுகிறார். அவர் எதிரிகளாலும் ஒரு எல்லைக்கு மேல் அவரை வெறுக்க முடியவில்லை. இயலாத காரியம் என்று எண்ணிய பலவற்றை சாதித்துக் காட்டுகிறார். அவர் பெயர் உலக அளவில் பிரபலமடைகிறது. இந்திய சுதந்திரத்துக்கு அவர் நடத்திய போராட்டங்கள் வித்திடுகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்களில் ஒரு மதவெறி பிடித்த மூடனால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
காந்தியைப் பற்றி அவரே சொன்னவை எழுதியவை பிறர் எழுதியவை போன்றவற்றைக் கொண்டு நாம் உருவாக்கிக் கொள்ளும் சித்திரம் இப்படித்தான் இருக்கிறது. இந்த சித்திரத்தில் சிற்சில மாற்றங்களைத் தவிர பெரிதாக இன்றுவரை எதுவும் மாறிவிடவில்லை. காந்தியை மட்டந்தட்ட வேண்டும் வசைபாட வேண்டும் என்ற நோக்கில் நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அறிவுச்சூழலில் நிலவும் வெறுப்பினைத் தாண்டி காந்தி இன்றும் இந்தியப் பொது மனதால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராகவே இருக்கிறார். காந்தியைப் பற்றிய பொதுச் சமூகத்தின் புரிதலை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நூல் சத்திய சோதனை. சலுகை விலையினால் பரவலாக விற்பனை ஆகிறது என்றாலும் சத்திய சோதனை இன்றும் பரவலாக வாசிக்கப்படும் ஒரு நூலாகவே உள்ளது. நான் சத்திய சோதனையை முதன்முறையாக 2012ல் ஆங்கிலத்தில் வாசித்தேன். தற்போது மூன்றாவது முறையாக வாசிக்கிறேன் (தமிழில்). இந்த பத்தாண்டுகளில் காந்தி குறித்து ஏராளமான நூல்களை வாசித்து இருக்கிறேன். அவற்றில் முதன்மையானது ராமச்சந்திர குஹா காந்தியின் சரிதத்தை விரிவாக எழுதிய இரு நூல்கள். Gandhi Before India என்ற நூல் தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இந்நூலில் குறிப்பிடப்படும் காலப்பகுதியே காந்தியின் 1920ஆம் ஆண்டு வரையிலான சுயசரிதையான சத்திய சோதனையிலும் இடம்பெறுகிறது.
ராமச்சந்திர குஹா தன் நூலில் காந்தியை கூடுமானவரை கறாராகவே அணுகுகிறார். காந்தி சர்வதேச ஆளுமையாக மாறிய பிறகு அவருக்கு நெருக்கமானவர்களால் அவருடைய இளமைக்காலம் பற்றி சொல்லப்பட்ட தகவல்களில் உள்ள மிகைகளை சுட்டிக் காட்டுகிறார். காந்தியே தன் சுயசரிதையில் மௌனமாகக் கடந்திருந்த சில இடங்களை ஆழமான விசாரணைக்கு உட்படுத்துகிறார். ஒருவேளை குஹா காந்தியின் மீதான தன் பற்றினை சோதித்துக் கொள்ளும் வழியாகவும் அவரைப் பற்றிய இந்நூல்களைக் கண்டிருக்கலாம். இவ்வளவு கறார்த்தன்மையுடன் அணுகப்பட்டும்கூட ஆச்சரியப்படும் வகையில் காந்தியின் சுயசரிதையும் குஹாவின் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’ நூலும் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன.
ஏறத்தாழ தொன்மக் கதை போலத் தென்படும் காந்தி என்ற ஆளுமையின் வளர்ச்சியை எல்லா ஆதாரங்களும் உண்மை என்றே நிரூபிக்கின்றன. சரியாகச் சொல்வதானால் மக்களுக்கு நல்லது செய்வதையே நோக்கமாகக் கொண்ட ஒரு இந்திய சினிமா கதாநாயகனைப் போல காந்தி தெரிகிறார். பத்திருபது பேரை ஒரே நேரத்தில் அடித்துத் துவைக்கும் கதாநாயகியோடு இழைந்து இழைந்து நடனமாடும் இரண்டு பண்புகளைத் தவிர்த்து ஒரு சினிமாக் கதாநாயகனின் அத்தனை குணங்களையும் காந்தியிடம் காண்கிறோம். சில வருடங்களுக்கு முன் என் நண்பர் ஜெயவேல் ரஜினி நடித்த பாட்ஷா ஒரு ‘காந்திய’ திரைப்படம் என்றார்!
ஏழைப் பங்காளனாக அநீதியை எதிர்த்து நிற்பவராக காந்தி எப்படி மாறினார் (அவர் அவ்வாறு மாறினார் என்பதற்கு போதிய தரவுகள் நம்மிடம் உள்ளன) என்பது முக்கியமான கேள்வி. அதனுடன் ஏன் மாறினார் என்பதையும் இணைத்துக் கொள்ளலாம்.
காந்தியின் தொடக்ககால வாழ்க்கையைப் பார்க்கும் போது அவர் பின்னாட்களில் இப்படியான ஒரு மாபெரும் ஆளுமையாக எழுந்து நிற்பார் என்பதற்கான எந்தத் தடயமும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. கூச்ச சுபாவம் கொண்டவர், சராசரி மாணவர், விளையாட்டுகளிலும் கலைச் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க ஆர்வமோ தேட்டமோ இல்லாதவர் என்பதாகவே காந்தியைப் பற்றிய சித்திரம் நமக்கு கிடைக்கிறது. காந்தி இங்கிலாந்துக்கு படிக்கச் செல்வது கூட பாரம்பரியமாக தங்களுடைய குடும்பத்திற்கு கிடைத்துவந்த ஒரு பதவியை தக்க வைப்பதற்காகவே. விடலைப் பருவம் முடிந்தவராக இங்கிலாந்துக்கு கப்பலேறும் காந்திக்கு தாயிடம் செய்து கொடுத்த சத்தியங்களை காப்பாற்ற வேண்டும் பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்பதைத் தாண்டி பெரிய லட்சியங்களோ கனவுகளோ ஏதுமில்லை. சொல்லப்போனால் மரபான நியம நிஷ்டைகள் படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே அவரிடம் இருக்கிறது. நம்முடைய கதைகளில் கேட்ட இளமையிலேயே பெருஞ்செயல்கள் புரிவதற்கான ‘சமிக்ஞைகள்’ எதையும் லண்டனிலிருந்து திரும்பி வரும் காந்தியும் வெளிப்படுத்தவில்லை. சட்டம் பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தாலும் நீதிமன்றத்தில் வழக்காடும் திறமையை அவர் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் சற்றே ஆழ்ந்து வாசித்தால் அவரை உள்ளார்ந்து இயக்கிய விசை எது என நம்மால் கண்டு கொள்ள முடியும்.
காந்தி மிகுந்த ‘ஆச்சாரமான’ குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரம் என்பதை விடாப்பிடியாக நியாதிகளைப் பின்பற்றுதல் என்று புரிந்து கொள்ளலாம். இந்த விடாப்பிடித்தனம் காந்தியின் இறப்பு வரை தொடர்ந்திருப்பதை நம்மால் காண முடிகிறது. காந்தி தொடக்க காலத்தில் தன்னுடைய தேவை சார்ந்து மட்டுமே உலகத்தைப் பார்க்கிறார். ஆனால் அதனை சுயநல நோக்கு என்று சொல்ல முடியாது. அவருடைய மரபு அவருக்கு வாழ்க்கை எவ்வாறு நகர வேண்டும் என்று எதைக் கற்றுக் கொடுத்ததோ அதன்படியே நடக்கிறார். காந்தியின் தொடக்ககால பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதான பற்றினைக்கூட இவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து சென்ற அவர் வயது இளைஞர்கள் இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்ஸியம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு நகர காந்தி சைவ உணவுக் கழகத்தை தேடிப் போகிறார். சிக்கனமான வாழ்க்கை சைவ உணவுக் கழகம் என எல்லாமும் அவருடைய சமகால நெருக்கடிகள் சார்ந்ததாகவே உள்ளன. ஆனால் இச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவதன் வழியாக அக உரம் பெற்று அடுத்த செயலை நோக்கி நகர்கிறார்.
காந்தியின் சமகால சீர்திருத்தவாதிகளுக்கும் காந்திக்குமான வேறுபாடு இதுதான். காந்தியின் வாழ்க்கை நோக்கை மரபு கட்டமைக்கிறது. வாழ்க்கை போக்கிற்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான தேடல் அவருடைய அன்றாடத்தை கட்டமைக்கிறது. மற்ற சீர்திருத்தவாதிகள் ஒரு ‘லட்சிய சமூகத்தை’ உருவகித்து அதற்கான தடை என்றே சமகால சமூகத்தை பார்க்கின்றனர். ஆனால் காந்தி சமகாலத்தின் பிரச்சினைகளிலேயே ஆழமான கவனத்தை செலுத்துகிறார். காந்திக்கு தான் இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை இருக்கிறதே தவிர சமூகம் இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை எதுவும் இல்லை. ஒரு எல்லையில் சமூகம் எந்த மாற்றத்துக்கும் உட்படாது என்று அவர் கருதுகினாரோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.
காந்தியின் கதையைப் பார்க்கும்போது அவருடைய வாழ்க்கை நோக்கு விரிவடைந்து கொண்டே செல்வதைக் காண்கிறோம். இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பி, தாய் இறந்த செய்தியை கேள்விப்பட்டு, ராய்ச்சந்திரரின் போதனைகளை உள்வாங்கி, வழக்கறிஞர் தொழிலிலும் சோபிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா செல்லும் காந்தி இங்கிலாந்திலிருந்து வந்த மனிதரிலிருந்து முற்றிலும் வேறானவராக இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள் கசப்பானவை. ஆனால் அக்கசப்பினை விழுங்க அவர் எங்குமே ‘சரணடைவதில்லை’. ஹென்றி சால்ட்,டால்ஸ்டாய்,ராய்ச்சந்திரர் என பலரை தன்னுடைய ஆசிரியர்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் யாரையும் தன்னால் குருவாக ஏற்க முடியவில்லை என்றே காந்தி சொல்கிறார். காந்தியின் மனம் இந்த ஊசலாட்டங்களூடாகவே பயணிக்கிறது. உலகின் அத்தனை தத்துவ தரப்புகளுடனும் விவாதிக்க முனையும் ஒரு தர்க்கவாதியும் மரபான விவேகம் நிறைந்த ஒரு தந்தை மனநிலை கொண்ட ஆளுமையும் இணைந்தே காந்தி தன்னை வளர்த்துக் கொள்கிறார். நிறவெறிக்கு எதிரான ஆன்ம பலத்தை அந்த விவேகியும் காலணியத்தையும் சமகால அரசியலையும் துல்லியமாக உணரும் ஆற்றலை அந்த தர்க்கவாதியும் காந்திக்கு அளிக்கின்றனர். இந்தியர்களால் கர்மயோகி எனப் போற்றப்பட்டவர் தன்னுடைய வெளிநாட்டு நண்பர்களால் மிகச்சிறந்த நிர்வாகி என பாராட்டப்படுவதற்கு காந்தியின் இந்த கலவையான ஆளுமையே காரணமாகிறது.
காந்தியை நவீன உலகின் ஆசிரியனாக மாற்றுவதும் அவருடைய இந்த சிக்கலான ஆனால் துல்லியமான ஆளுமையே. கட்டுரையின் தொடக்கத்தில் வெகுஜன சினிமா நாயகனுடன் காந்தியை ஒப்பிட்டேன். உண்மையில் வெகுஜன சினிமா நாயகன் என்பவன் இன்றைய சாமானியன் காணும் ஒரு பகல் கனவு. அக்கனவில் அந்த சாமானியனின் லட்சிய வடிவமும் இணைந்தே இருக்கின்றது. காந்தி இந்த சாமானியனின் கனவில் எப்படியோ புகுந்து கொண்டிருக்கிறார். வெகுஜனப் பிரக்ஞையில் காந்தி நிகழ்த்தி இருக்கும் ஊடறுப்பே ஜனநாயகத்தின் முதல் படியாகவும் அமைந்திருக்கிறது. அதேநேரம் வீரமும் பராக்கிரமும் நிறைந்த நம்முடைய பழைய நாயகர்களிடமிருந்தும் நம்மால் முழுமையாக தப்பிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே நம்முடைய நாயகர்கள் ஒரே நேரத்தில் வன்முறையாளர்களாகவும் விவேகிகளாகவும் உள்ளனர்.
காந்தி செய்ததாக சொல்லப்படும் பிழைகள் அனைத்தும் சிறுத்துக் கொண்டே போகின்றன. பெருங்கதையாடல்கள் பொருளிழந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட எந்தவொரு மாற்றத்துக்கும் ஒரு மனிதரை முழுமையாக பொறுப்பேற்கச் சொல்வது அபத்தம் என்பது உணரப்படுகிறது. காந்தியை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற நினைப்பவை அரசியல் தரப்புகளே அன்றி தத்துவத் தரப்புகள் அல்ல. அரசியல் தரப்புகள் குறுகிய கால நோக்கு கொண்டவை. மீண்டும் மீண்டும் அரசியல் நோக்கிலேயே காந்தியைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும் அவர் உருவாக்கி அளித்திருக்கும் வாழ்க்கை நோக்கினை மௌனமாகக் கடந்து செல்வதும் நம்முடைய போதாமைகளையே காட்டுகிறது. காந்தியின் வழிகள் இன்றைய உலகுக்கு எவ்வளவு அவசியமானவை அல்லது அவசியமற்றவை என்பது சார்ந்த விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்.
இன்றைய நெருக்கடிகளுக்கும் போதாமைகளுக்கும் தீர்வு சொல்லு தகுதி கொண்ட இந்திய சிந்தனைப் போக்கென காந்தியத்தை நான் நம்புகிறேன். நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே தீர்வென்றும்.
ஜனவரி 2023, காலச்சுவடு இதழ்
Leave a Reply