மாறுதிசை மின்னோட்டம் (alternating current). பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் ஆசிரியர் சொல்லக்கேட்ட இப்பதம் என் வாழ்வின் முதல் தத்துவக் குழப்பத்திற்கு காரணமாக இருந்தது. சனிக்கிழமை விடுமுறை என்றால் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பும்போது மனதிலொரு இன்பக்கொதிப்பு இருக்குமில்லையா? காதலிக்கும் பெண் என்ன செய்தி அனுப்பி இருப்பாள் என்று எழுந்ததும் அலைபேசியைப் பார்ப்பதற்கும் இடையிலான சிலநொடிகளில் விரல்நுனிகளில் எல்லாம் ஒரு குறுகுறுப்பு ஏற்படுமில்லையா? பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தை பிரித்து படிப்பதற்கு முன்பே தொடுகையின் போதே அப்புத்தகத்தின் சாரம் உங்களுள் கடத்தப்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா? பறவைகளின் கீச்சொலி தவிர வேறெந்த ஓசையும் இல்லாத விடியலுக்காக உங்கள் மனம் ஏங்கி இருக்கிறதா? பாம்புகள் சீறும் புனையலோசையை கேட்டு அச்சத்துடன் அதைக்காண சென்றிருக்கிறீர்களா? ஊரிலிருந்து வரும் மனைவியை அழைக்க அவள் வருவதற்கு அரைமணி நேரம் முன்பே பேருந்து நிலையத்திற்கு சென்று நிலையில்லாமல் காத்திருந்து இருக்கிறீர்களா? இனிப்புகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு பயணித்திருக்கிறீர்களா? யோசித்துப் பார்த்தால் மகிழ்ச்சியான கணங்களைவிட அதற்கு முந்தைய கணங்கள்தான் மகிழ்ச்சியை பொதிந்து வைத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. முதல்வரியில் சொன்ன தத்துவக் குழப்பம் அதுதான். மாறுதிசை மின்னோட்டத்தினை எளிதாக கடத்தலாம். ஆனால் சேமிக்க முடியாது. மாறாக நேர்திசை மின்னோட்டத்தை (Direct current) சேமிப்பது எளிது. ஆனால் கடத்த முடியாது. இயற்கை எவ்வளவு பெரிய சிக்கலைப் பொதிந்து வைத்திருக்கிறது பாருங்கள்! நெய்வேலியிலோ கல்பாக்கத்திலோ உற்பத்தியாகும் நேர்திசை மின்னோட்டம் உற்பத்தியான உடனேயே நம் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியிலோ மின்விளக்குகளிலோ பிரதிபலித்து விடுகிறது. ஆனால் அதை எங்குமே தேக்க முடியாது. மகிழ்ச்சியும் அப்படித்தான் இருக்கும்போல. உற்பத்தியான கணமே செலவழிந்து விடுகிறது. மகிழ்ச்சிக்கு முந்தைய கணத்திலேயே மகிழ்ச்சியை உணர்ந்து கொள்கிறவன் மகிழ்த்திருக்க வேண்டிய கணத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? மகிழ்ச்சியை நடித்துக் கொண்டிருக்கிறானா? உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி என்பதுதான் உலகில் அதிகமுறை சொல்லப்பட்ட பொய்யாக இருக்குமோ? இன்பம் தேக்கி வைக்கப்படக்கூடியதல்ல என்ற எண்ணத்தின் கண்வழியே பார்த்தால் நம் வாழ்க்கை எவ்வளவு அபத்தமாகவும் துக்ககரமானதாகவும் மாறிவிடுகிறது. வங்கிகளில் பணமாக பிள்ளைகளில் நம்பிக்கையாக எவ்வளவு மகிழ்ச்சியை நாம் தேக்கி வைக்கிறோம்! ஆனால் தேக்கும் அந்நொடியே அது இன்மைக்குப் போய்விடுகிறது. ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இரண்டு மின்தகடுகளுக்கு இடையே ஒரு காந்தம் சுழலும்போது மாறுதிசை மின்னோட்டம் உற்பத்தி ஆகிவிடும். நம்முடைய தகடுகளுக்கு இடையே நம் காந்தம் எப்போது சுழலும் என்று நம்மால் கண்டறியவே முடியாது. லட்சியவாதிகள் ‘செயல்வழியிலான மகிழ்ச்சி’ என்ற போலியான செயற்கையான மகிழ்ச்சி உற்பத்தி நிலையை பரிந்துரைப்பார்கள். ஏமாந்து விடாதீர்கள்! எப்படி உங்களால் மகிழ்ச்சியை தேக்க முடியாதோ அதுபோல அதை உங்களால் உற்பத்தி செய்யவும் முடியாது. எது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. மிக நெருக்கமான ஒருவரின் இறப்பு உங்களுக்கு அளவிட முடியாத ஆனந்தத்தை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே பழுதுபட்ட மின் இணைப்பு கொண்ட ஈரமான வீட்டில் நடப்பது போல மகிழ்ச்சியிடம் செல்லுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானலும் மகிழ்ச்சியால் தாக்கப்பட்டு கொல்லப்படலாம்.