1
சுபத்ரா பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் என்ஃபீல்டு வீட்டு வாசலுக்கு வரும் சத்தம் துல்லியமாகக் கேட்டதும் கைகளில் ஒரு மெல்லிய நடுக்கம் ஓடியது. இப்போது அவளுக்கு இருபத்திமூன்று வயது. பட்டப்படிப்பு முடிக்க முடியவில்லை. அவள் வகுப்பில் அவள் ஒருத்திதான் பட்டப்படிப்பு முடிக்காதவள். அப்பாவுக்கு அவள் பட்டம் வாங்கவில்லை என்று தெரிந்தும் அவர் எதுவும் சொல்லவில்லை. அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தாள். அதெல்லாம் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டு வருடங்களில் அவர் அவளுடன் எதுவும் பேசவே இல்லை.
‘நாயகி’ வீட்டிற்குள் வந்தவரின் குரலில் சற்று உற்சாகம் இருப்பது போலப்பட்டது.
‘அவளுக்கு சரின்னா முடிச்சிடலாம்’
அம்மாதான் எல்லாவற்றையும் சொன்னாள்.‘பையன் அப்பாம்மாகூட இருக்காதாம். தஞ்சாவூர்ல தனியா வீடு இருக்காம். நகநட்டு எதுவும் கேக்கல. பொண்ணு நல்ல பொண்ணா இருந்தா போதும்னுதான் அவங்களா கேட்டிருக்காங்க.ஆறு மாசமா ஒன்னப் பத்தி விசாரிச்சு இருக்காங்க பாப்பா. ஒரு கெட்ட பேச்சு கூட அவங்க காதுல விழலன்னதும்தான் சம்மந்தம் பேசவே வந்திருக்காங்க’
இப்போது சுபத்ராவுக்கு சற்றுப் பெருமிதமாக இருந்தது. அப்பா எப்போதும் அவளை அவள் தோழிகளுடன் ஒப்பிட்டுத் திட்டிக் கொண்டே இருப்பார். நன்றாக படிப்பது, உடுத்துவது, சமைப்பது என்று எதிலும் அவள் அவள் தோழிகளுக்கு இணையில்லை. வீட்டிற்கு வரும் அர்ச்சனா, மிருதுளாவிடமெல்லாம் பேசுவதுபோல் தன்னிடம் அவர் ஒருநாளும் பேசியதில்லை என்பது அவளுக்கு எப்போதும் நினைவில் இருந்தது. அவள் கல்லூரி முடித்த இந்த மூன்றாண்டுகளில் அவள் தோழிகள் சிலர் வேலைக்குச் சென்றனர். சிலருக்கு குழந்தை பிறந்தது. தன்னுடைய வாழ்க்கை ரொம்பப் பின்தங்கி விட்டதாக நினைத்தாள். இப்போது அவளுக்கு எல்லோரையும் தன் குணத்தால் வென்று விட்டதாகத் தோன்றியது.
அருணை புகைப்படத்தில் பார்த்துவிட்டு நேரில் பார்ப்பது ஏமாற்றமாகத்தான் இருந்தது. அவனுடைய அகலமான தோள்கள் அவன் உயரமாக இருப்பான் என்று எண்ண வைத்தன. அவள் உயரம்தான் அவனும். நிறம் அவளைவிட சற்று மங்கல். முகம் லட்சணமாகவே இருந்தது. வயிறு லேசாக மேடிட்டிருந்தது. அவன் தங்கை ஷிவானியை ஏனோ இவளுக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கு மணமாகி சில மாதங்கள்தான் ஆகியிருந்தது என்பது அவள் முகத்தின் பூரிப்பிலும் தாலியின் அடர்த்தியிலும் தெரிந்தது. அவள் மீது தனக்குப் படரும் குரோதம் தன் மீது அவளுக்கும் படர்வதை அவளால் உணர முடிந்தது.
மணமான உடனேயே அருண் அவளுடன் தனி வீட்டிற்கு வந்துவிட்டான். அவளுக்கு அவன் உடல் தேவைப்பட்டது. ஆனால் அவனுக்கு அவளுள் புகத் தெரியவில்லை. தடுமாறினான். தோற்றான். அழுதான். அவள் அவனைத் தேற்றினாள். அந்த வீட்டில் அவர்கள் மட்டுமே இருந்தனர். நகரை ஒட்டி ஆனால் நகரின் இரைச்சல் தீண்டாத இடத்திலிருந்த அவ்வீட்டுக்கு அவள் மீது எந்தப் பச்சாதாபமும் இல்லாதது போலிருந்தது. மணமாகி ஒருசில மாதங்களிலேயே அவளுக்கு அவ்விடம் பழகிவிட்டது. அங்கு அவளுக்கு உறவென யாரும் இல்லாதது ஒரு வினோதமான சுதந்திர உணர்வைக் கொடுத்தது. சுற்றியுள்ள வீடுகளில் தன் அழகு அங்கீகரிக்கப்படுவதும் தான் பரீட்சையில் வென்றோமா தோற்றோமா என்று விளக்க வேண்டிய அவசியமில்லாததும் அவளுக்கு ஆறுதலைத் தந்தன. அவளுக்கு அவ்வீட்டில் இருந்து எங்குமே செல்லப் பிடிக்கவில்லை. இரவுகள் மட்டுமே வதையாக இருந்தன.
அவளுடைய இறுகிய குறியை அவன் குறி முதல்முறை முறை தீண்டியது. ஆனால் உராய்வில் மேல்தோல் கிழிந்து அவனுக்கு ரத்தம் வந்தது. அன்றிலிருந்து அவன் அவளை நெருங்க அஞ்சினான். ஆனால் அன்றிலிருந்து அவன் மீது அவளுக்கு அன்பூறியது. ஆனால் அவன் அவளை அதன்பிறகு புணரவே இல்லை. இரவுகளில் அவன் கைகள் அவள் மீது ஊர்ந்து கிளர்த்தும். வெறும் கிளர்ச்சியூட்டிவிட்டு அவன் தூங்கிவிடுவான். சில நாட்கள் கழித்தே அவள் கிளர்ந்து பிறகு அவன் கைலி நனைந்து போயிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அன்றிலிருந்து தன்னை அவன் வெறுமனே தீண்டக்கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்.
பல நாட்கள் தயங்கிய பின் உண்மையிலேயே அவன் அவளுடன் இணையத் தொடங்கினான். ஒருசில வாரங்கள் அந்த மகிழ்ச்சி நீடித்தது. அருணின் அம்மா ஒருநாள் அங்கு வந்தார்.அன்றிரவு அவனிடம் வழக்கமான பரபரப்பு இல்லை.
‘நாள் தள்ளிப் போகலையான்னு அம்மா கேட்டாங்க’
அவளுக்கு கோபம் வந்தது.
‘இப்ப நான் என்ன பண்ணனும்?’
அருண் எதுவும் சொல்லவில்லை.
‘ஷிவானிக்கும் இன்னும் ஆகலன்னு அப்பா ஃபீல் பண்றாராம்’
ஏன் அப்படிக் கேட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
‘நீயும் உங்கப்பாவும் வேணா போய் ட்ரை பண்ணுங்களேன்’
அருண் எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் முதல் மருத்துவமனை செல்லத் தொடங்கினர். அவனுக்கு உயிரணு எண்ணிக்கை குறைவாக இருந்தது.
‘பெரிய பிரச்சினை இல்ல. குளிக்கும்போது ஸ்கோரட்டம் நல்ல கோல்ட் வாடர்ல பட்ற மாதிரி ஒரு டூ மினிட்ஸ் உட்கார்ந்து இருங்க. செவ்வாழை நிறைய சாப்பிடுங்க. மெடிசின் எடுத்துக்கோங்க இம்ப்ரூவ் ஆகிடும்’
ஆனால் முடிவுகள் வந்தபிறகு அருண் சோர்ந்து போனவனாக இருந்தான். அவளுடன் உறவு கொண்டாலும் உற்சாகம் இல்லை. பதற்றம்தான் இருந்தது. எப்போதும் உச்சத்தில் ‘உள்ள போகுதா?உள்ள போறத ஃபீல் பண்ண முடியுதா’ என்று பதறினான். புணர்ச்சிக்குப் பிறகு அவள் கால்களை சில நிமிடங்கள் உயர்த்தியே பிடித்திருந்தான். ஷிவானியையும் அவள் கணவன் இப்படித்தான் பிடித்துக் கொண்டிருப்பான் என்று எண்ணியபோது சிரிப்பு வந்தது.
ஒருவழியாக சுபத்ரா கருவுற்றாள். ஷிவானி இன்னும் கருவுறாதது தனக்கு ஏன் இவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று வியந்தாள். ஒரு மாதத்தில் ஷிவானி கருவுற்ற செய்தி வந்தது. கருவுற்றிருந்த சமயத்தில் அருண் அவள்மீது அதீத அக்கறை காட்டினான். ஆனால் அது எதுவுமே தன்மீதான அக்கறை என்று அவளுக்குத் தோன்றவில்லை. கருவுற்றிருந்த காலம் முழுவதும் எப்போது இந்தக் குழந்தை வெளியே வரும் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்கு ஆள் போடுகிறேன் என்று அருண் சொன்னபோது மறுத்துவிட்டாள். அவளுக்கு வீட்டைவிட்டு எங்கும் போகப் பிடிக்கவில்லை. வளைகாப்பின் போதுகூட தன் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு ஓடிவந்துவிட்டாள்.
‘ரெண்டு நாள் புருஷன் கடையில சாப்பிடுறது இவளுக்கு பொறுக்கல அக்கா’
அம்மா தன்னைப் பற்றி பெருமிதமாக அவள் அக்காவிடம் சொல்வது எரிச்சலூட்டியது. அம்மாவுக்கு அந்த வீட்டிலிருக்கப் பிடிக்காமல்தான் அவள் போகிறாள் என்று தெரியாதா?தெரிந்தும் ஏன் இப்படி பொய்யாக நடிக்கிறாள்.
சுபத்ராவுக்கு சுயப் பிரசவமானது. என்னவோ உடலில் இருந்து பிதுங்கி வெளியேறிய ஆசுவாசம். ஆனால் குழந்தை அவள் நினைத்தது போல இருக்கவில்லை. அருணைப் போலவே இருந்தது. உயிர்க்களையும் லட்சணமும் இல்லாத ஆண் குழந்தை. உதட்டைக் கோணிக்கொண்டு உயிர்த்துடிப்புடன் அவள் குழந்தை அழும் போதெல்லாம் உடலுக்குள் ஆங்காரம் பற்றும். யாரும் இல்லாத சமயமெனில் அழட்டும் என்று குழந்தையை விட்டுவிடுவாள்.
ஷிவானிக்கு சிசேரியன். குழந்தை மிக மிக அழகாக இருந்தான். பிறந்து மூன்று மாதமாகியும் அவன் ரோஜா நிறம் மாறவே இல்லை. வீடியோ காலில் ஷிவானி அருணிடமும் அவளிடமும் குழந்தையை காண்பித்த போது தீப்பிடித்தது போல அடிவயிறு எரிந்தது சுபத்ராவுக்கு. மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்னரே வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டாள்.
‘ஏன் அதுக்குள்ள வந்துட்ட?’ என்று கேட்ட அருணிடம் ‘ஏன் தினமும் உங்கூட படுக்க யாரும் வந்துட்டு போறாளுங்களா’ என்று கேட்டு அடக்கினாள்.
ஷிவானி வீடியோ கால் பண்ணுவது வாடிக்கையானது. ஷிவானி தன் மகனுக்கு ருத்ரன் என்று பெயரிட்டிருந்தாள். அவன் நெருப்பு போலதான் இருப்பதாக சுபத்ரா நினைத்தாள். தன் மகனுக்கு ராஜேஷ் என்ற சாதாரண பெயரை வைத்தாள் வேண்டுமென்றே.
2
ஷிவானியும் அவள் கணவனும் அவ்வளவு எளிதாக இறந்து போனார்கள். இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த கோவிலுக்கு போயிருக்கிறார்கள். நிலைதடுமாறிய லாரியில் சிக்கிவிட்டனர். ஷிவானி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தாள். மூளையில் ரத்தக்கசிவு நிற்காமல் இறந்துபோனாள்.குழந்தையை வளர்ப்பது பற்றி பேச்சு வந்தபோது சுபத்ரா அடித்துப் பேசினாள்.
‘எங்க வீட்டு பிள்ளை அது. நல்ல காலமோ கெட்டகாலமோ எனக்கும் பாலூறுது. நான் வளத்துக்குறேன் அவன’ என்றாள் நெஞ்சில் கைவைத்து.
சுபத்ராவின் அம்மாவைத் தவிர அத்தனை பேரும் நெகிழ்ந்து போனார்கள்.ருத்ரன் அவள் முலைகளில் வாய் வைத்ததும் அப்படிக் கதறினான்.
‘நாலு மாசத்துலயே ஒனக்கு ஆயாக்காரிய தெரியுது குடிடா கம்னேட்டி’ என்று அவளைக் கிள்ளினாள்.
பத்துநாள் போராட்டத்துக்குப் பிறகு அவள் பாலை அவன் ஏற்றுக் கொண்டான். அவன் குடித்து மீந்ததுதான் தன் மகனுக்கு என்றானது. இரண்டு குழந்தைகளையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் அவளுக்கு நாக்கில் எச்சில் ஊறுமளவு ராஜேஷின் மீது வன்மம் பெருகும். இன்னும் குப்புறப் படுத்துக் கொள்ளாத அச்சிறு உயிர்கள் கையைக் காலை ஆட்டிக் கிடக்கும். அவள் ராஜேஷை கிள்ளிவிட்டு அடுப்படி வேலைகளை கவனிக்கப் போவாள். அவன் கீச்சுக் குரலில் கதறுவதைக் கேட்பது புணர்ச்சியை விட ஆழமான வெறிநிறைவை அவளுக்கு அளிக்கும். அந்தக் கீச்சுக்குரல் கதறக் கதற உதட்டைக் கடித்து கண்கள் சொருக அடுப்படியில் நிற்பாள். சுகம் குறைவது போலிருந்தால் திரும்ப வந்து கிள்ளிப்போவாள். ஆனால் ருத்ரனை நேர்மாறாக பார்த்துக் கொண்டாள். அவன் உடல் வாசனை இல்லாமல் அவளால் தூங்க முடியவில்லை. அவ்வுடலின் மென்மையும் மெதுமெதுப்பும் அவளுக்குத் தேவைப்பட்டன. தன் மகனை கணவனிடம் தள்ளிவிட்டு விடுவாள்.
ருத்ரன் செய்யும் ஒவ்வொன்றும் அவளுக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதை ராஜேஷால் செய்ய முடியாதது இன்னும் அவளை மகிழச் செய்தது. ருத்ரன் அவள் சொல்வதை கேட்கும் பிள்ளையாக இருந்தான்.ஆனால் ராஜேஷ் அப்படி இல்லை. அவள் சொல்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தாலும் அதைச் செய்யக்கூடாது என்ற உறுதி அவனிடம் இருந்தது. அந்த மெலிந்த சிற்றுடலில் அப்படி ஒரு உறுதி தொனிப்பது அவனை அவளுக்கு இணையான எதிரியென எண்ண வைத்தது. ஆனால் அவன் உடலை கற்பனையில் யோசித்துப் பார்க்கக் கூசினாள்.
ஒரு வயது முடிவதற்குள் ருத்ரன் எழுந்து நின்றான். அதுவொரு ஞாயிற்றுக்கிழமை. எழுந்து தள்ளாடி நடந்து ‘மா மா’ என்று கூறிக்கொண்டு அவளை நோக்கி வந்தான். சுபத்ராவுக்கு அழுகை வந்துவிட்டது. அருண் அவள் அழுவதை வித்தியாசமாகப் பார்த்தான். அவள் எதற்கும் அழுது அவன் பார்த்ததே இல்லை. சுபத்ராவும் அதை உணர்ந்துவிட்டாள். அன்றிலிருந்து அவள் ஜாக்கிரதை மிகுந்தவளானாள்.

3
சுபத்ராவால் அவள் வசித்த வீட்டைவிட்டு எங்கும் போகமுடியும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இரண்டரை வருடங்கள் அந்த வீட்டிலேயே அவள் இருந்திருக்கிறாள். அந்த வீட்டின் மீது அவளுக்கு பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை. தொடர்ந்து அங்கு வசித்ததால் அவ்வீட்டுடன் அவளுக்கு ஒட்டுதல் ஏற்பட்டது. அருண், ராஜேஷ், ருத்ரன் எல்லாம் அவ்வீட்டின் பகுதிகள் என்றே அவள் நினைத்தாள். வீட்டில் ஒரு இடம் கொதிக்கும் மற்றொரு இடம் குளிரும் என்பது போல அருணும் குழந்தைகளும் அவளிடத்தில் உணர்வுகளைத் தோற்றுவித்தனர்.
அருணின் கண்களில் விழுந்த சந்தேகத்தை அன்றிரவு அவனுடன் ஆவேசமான உறவில் ஈடுபட்டுத் தீர்த்தாள். ஆனால் அவனுடன் உறவு கொள்வது ருத்ரனை அவமதிப்பது போல உணர்ந்தாள். அவனுக்காகத்தானே இதைச் செய்கிறோம் என்று ஆறுதலும் அடைந்தாள்.
அருண் உறங்கி வெகுநேரமாக சுபத்ரா இறங்கவே இல்லை. குளிக்காமல் ருத்ரனை தொடக்கூடாது என்று அவனிடமிருந்தும் தள்ளியே படுத்திருந்தாள். ருத்ரனிடம் அவளுக்கு இருக்கும் அன்பு வெளியே தெரிந்தால் அவனிடமிருந்து தன்னைப் பிரித்து விடுவார்கள் என்று பயந்தாள். மறுநாள் முதல் அவள் அவளாலேயே முழுதாக புரிந்து கொள்ள இயலாத ஒரு ரகசியமென ருத்ரனின் மீதான தன் உணர்வுகளை பாதுகாக்கத் தொடங்கினாள். ருத்ரனின் ஆத்தாவும் தாத்தாவும் அவனை வந்து பார்த்துச் செல்ல கேட்டுக் கொண்டாள். தன் பெற்றோர்களையும் அடிக்கடி வீட்டுக்கு அழைத்தாள். அருணின் பெற்றோர்களும் வந்து சென்றனர். ருத்ரன் ஷிவானி இருந்ததைப் போல ஆரோக்கியத்துடனும் ராஜேஷ் அருண் போல நோஞ்சையாகவும் இருப்பதாகவும் பேசிச் சென்றனர். எப்போதும் பாதி திறந்திருக்கும் ராஜேஷின் வாய் அவனுக்கு அம்மா இருப்பதாலேயே யாரிடமும் எந்தப் பரிதாபத்தையும் தூண்டவில்லை. மாறாக அவன் எல்லோருக்கும் எரிச்சலூட்டினான். அவன் உடல் வியர்வையும் சளியும் சுரந்து நீர்மை கண்டிருந்தது. அந்த பிசுபிசுப்பு யாருக்கும் பிடிக்கவில்லை. அதோடு அவன் யாரைக் கண்டாலும் அழுதான். ருத்ரன் சிரித்தான்.
சுபத்ரா வீட்டை வைத்திருந்த நேர்த்தி குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட விதம் எல்லோரையும் கவர்ந்தது. அவள் மெல்ல மெல்ல பெரிய மனுஷி ஆகிக் கொண்டிருந்தாள். விசேஷங்களுக்கு செல்லும்போது கருவுறாத பெண்களுக்கு ஆலோசனைகளும் புதிதாக கருவுற்றவர்களுக்கு மருத்துவமும் சொன்னாள். இரண்டில் ஒன்று மட்டுமே அவள் குழந்தை என்றும் இன்னொன்று இறந்துபோன நாத்தியின் குழந்தை என்றும் அறிந்து கொண்டவர்களிடம் அவள் மதிப்பு கூடியது. ருத்ரன் அவள் பெருமையின் அடையாளமாக இருந்தான்.
ராஜேஷைப் பார்த்தால் அவளுக்குத் தோன்றும் அருவருப்பு இன்னும் குறையவில்லை. ஆனால் அது ருத்ரன் அளித்த மகிழ்ச்சியால் எங்கோ ஆழத்துக்குப் போய்விட்டது. எப்போதாவது வெறி தோன்றும்போது ருத்ரனை தூங்க வைத்த பிறகு ராஜேஷுடன் தனியறையில் அமர்ந்து அவனை மிரட்டுவாள். அவனுக்கு இரண்டு வயதே ஆகி இருந்தாலும் ருத்ரன் தன் அருகில் இல்லாமல் போவது தனக்கு நல்லதில்லை என்று அவன் புரிந்து வைத்திருந்தான்.
குழந்தை கட்டிலில் பாவமாக உட்கார்ந்திருப்பான். அவனுடைய பெரிய கண்களில் நீர் கோர்த்துவிடும். ‘அப்பாட்ட அப்பாட்ட’ என்று மெல்லிய குரலில் விசும்புவான். புழுவை கோழி கொல்லும் நோக்கமற்று கொத்துவது போல சுபத்ரா வெறுமனே அவனைப் பார்ப்பாள். குழந்தை எழுந்து கஷ்டப்பட்டு கட்டிலை விட்டிறங்கி – அவள் வந்து தன் சின்னக் கையை பிடித்து விடுவாளோ என்ற பயத்துடன் – கதவருகே போனான். தாழ்ப்பாள் அவனுக்கு எட்டாது. கதவருகிலேயே நின்று கொண்டு ‘அப்பாட்ட அப்பாட்ட’ என்று சற்று குரலை உயர்த்துவான். ஆனால் அவன் கீச்சுக் குரலின் சத்தம் அதிகரித்ததும் சுபத்ராவுக்கு ஆங்காரம் வந்துவிடும்.
‘என்னடா நொப்பாட்ட. முடியாங்கோலி நாயே’ என்று கத்துவாள். அவன் உரத்து அழத் தொடங்குவான்.‘ச்சீ ச்சீ ச்சீ ச்சீ வாய மூடு நாயே. எவ்வளவு அசிங்கமா கத்துற நீ ச்சீ’ என்று அவன் கன்னத்தில் அறைவாள். அழுது செருமி ஓயும்வரை காத்திருந்து மீண்டும் அவனை கட்டிலில் தூக்கி அமர வைப்பாள்.
அவன் மீண்டும் ‘அப்பாட்ட’ என்பான்.‘ஒப்பன் என்ன புடுங்கிடுவானா?’ என்று சொல்லி இடையைக் காட்டி ‘இந்தா இத காமிச்சா நாயி நாக்க தொங்கபோட்டுகிட்டு வரும்’ என்பாள்.
இதெல்லாம் இப்போது அடிக்கடி நடப்பதில்லை. ருத்ரன் நடக்கத் தொடங்கிய பிறகும் ராஜேஷ் தவழ்ந்து கொண்டிருந்தான். அவன் புட்டச் சதையில் பளீரென்று அடிப்பாள். குழந்தை வலியில் அலறி தவழந்து தவழ்ந்து ஓடுவான். ருத்ரன் அவன் அப்படித் தவழ்வதைக் கண்டு சிரிப்பதைக் கண்டு சுபத்ரா அவனை மீண்டும் புட்டச் சதையில் அடிப்பாள்.
அருண் மீது கோபமாக இருக்கும் நாட்களில் ருத்ரன் ஆழ்ந்துறங்கிய பிறகு ராஜேஷை தூக்கிக் கொள்வாள். தூங்கும் குழந்தையைக் கிள்ளுவாள். குழந்தை வலியில் அலறி எழுவான். மீண்டும் தூக்கத்திற்குள் போகும்போது மீண்டும் அவனைக் கிள்ளுவாள். மீண்டும் அலறுவான். அருணுக்கு தூக்கம் கலைந்துவிடும். அவன் இனி உறங்கமாட்டான் என்ற திருப்தி தோன்றியதும் ராஜேஷை தூக்கிப் போட்டுவிட்டு தூங்குவாள்.
ராஜேஷ் சுபத்ராவுக்கு சலித்துவிட்டான். அவனும் அவளிடமிருந்து தப்பித்தால் போதுமென மறைந்து அமர்ந்து விளையாடக் கற்றுக் கொண்டான். ருத்ரன் இரண்டு வயதிலேயே சரளமாக பேசத் தொடங்கிவிட்டான். ராஜேஷ் தன் பலவீனமான குரலில் ‘ம்மா ப்பா எப்ப’ என்பது போல உதிரி உதிரியாக பேசுவது அவளுக்குத் திருப்தி அளித்தது. ஒருவேளை எல்லாமும் அப்படி அப்படியே சென்று ஒரு இறுதியை அடைந்திருக்கும். ஆனால் எதுவொன்றும் அப்படியே தொடர்வது எதற்கோ பிடிப்பதில்லை போலும்.
சுபத்ராவின் அம்மா கமலநாயகி அவள் கணவனுடன் ஏற்பட்ட பிணக்கால் மகளுடன் தங்கிச் செல்லலாம் என்று வந்தாள்.
4
அம்மா வந்த அன்றே அவள் உடனடியாக கிளம்பிப்போக வாய்ப்பில்லை என்று சுபத்ராவுக்கு புரிந்து கொண்டது. அவள் மூளை உட்சபட்ச கூர்மையுடன் இருந்தது. அம்மா தன்னுடன் இருப்பதை அங்கீகரிக்காமலும் எதிர்க்காமலும் இருக்க அவளுக்குத் தெரிந்திருந்தது. ருத்ரனுடனான தன் அந்தரங்க நேரங்கள் இல்லாமல் போகும் என்று அவள் உணர்ந்து கொண்டாள்.
‘எத்தன நாளக்கிடி உம்புள்ளக்குள்ளத ஊரான் புள்ளையோட பங்கு போடுவ. அந்தப் பயல நாம்பாத்துக்கிறேன். நீ எம் பேரன வச்சிக்க. அனாதப்பய எத்தத்தண்டி இருக்காம்பாரு கடுவம்பூனையாட்டம்’
சுபத்ரா ராஜேஷை வெகுநேரம் பார்க்கும்படி ஆனது. அவனும் ஆத்தா இருக்கும் தைரியத்திலோ என்னவோ சற்று தெளிந்திருந்தான். அவனால் இப்போது சுபத்ராவின் முகம் பார்த்து சிரிக்க முடிந்தது. அவன் வௌவால் முகம் அவளுக்கு வெறுப்பூட்டியது. மொத்த முகத்திலும் பற்களும் கண்களும் மட்டுமே பெரிதாகத் தெரிந்தன. அவன் அவளைப் பார்த்து சிரிக்கும் போதெல்லாம் அவன் பிறந்த கொஞ்ச நாட்களில் அழுத ஞாபகமே திரும்பத் திரும்ப வந்தது. ஈர்க்குச்சி போன்ற அந்த உடலில்தான் உயிர்வாழ வேண்டும் என்று என்னவொரு ஆவேசம்! அவன் குரல் அவ்வளவு சத்தமாகவும் கீச்சுத்தன்மையுடனும் இல்லாவிட்டால் தான் அவனை அவ்வளவு வெறுக்கமாட்டோமோ என்றுகூட நினைத்தாள். அவன் கீச்சுக்குரலில் சுவரில் நகம் கீறுவது போல கத்துவது அருணை நினைவூட்டியது. அவளுடைய செழுமையான உடலில் தன்னை பதியம்போட வேண்டும் என்று அவள் மீது அவன் ஆவேசமாக இயங்கியதும் அந்த இயக்கம் தன்னை கொஞ்சமும் கிளர்த்தாததும் நினைவுக்கு வந்தன. மூன்றாவது மனுஷியாக அவ்வுறவை வெளியில் இருந்து பார்த்தால் தன் தகுதிக்கு பல மடங்கு மேலான ஒன்றை பெற்றுவிட்ட ஒருவனின் வெறியும் ஆவேசமும் பேராசையும் ஆங்காரமும் பொறாமையும்தான் அருணிடத்தில் அவளுக்குத் தெரிந்தது. அவனைப் போலவே ஒரு எலி அவன் மூலமாக தனக்குப் பிறந்தது அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
மெல்ல மெல்ல சுபத்ரா தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். அம்மாவிடம் இருந்து தன்னிடம் தாவும் ருத்ரனை பார்க்கத்தான் பாவமாக இருந்தது. ருத்ரனைப் பார்த்து ராஜேஷ் இப்போதெல்லாம் சிரித்தான். அது கேலிச் சிரிப்பு போல அவளுக்குத் தோன்றியது. திடீரென ராஜேஷ் அவ்வீட்டின் செல்லப்பிள்ளையாக மாறிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.அருணும் வேலை முடித்து வரும்போது ருத்ரனை கவனிப்பதில்லை. அம்மாவே ராஜேஷை தூக்கிக் கொண்டு வெளியே போய் வரச் சொல்கிறாள். அருண் வண்டி ஓட்டும்போது தான் தன் அம்மாவின் கையிலிருப்பதை குழந்தையால் நம்பவே முடியவில்லை. அவனுடைய வௌவால் முகத்தில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பரவுவதை சுபத்ராவால் ரசிக்க முடியவில்லை.
சுபத்ரா மெல்ல மெல்ல புதிய யதார்த்தத்திற்கு பழகிக் கொண்டாள். அவளால் இப்போது ராஜேஷை மன்னிக்கக்கூட முடியும் என்று தோன்றியது.
அம்மா ஒருநாள் மாலை கிளம்பிப்போனார். அப்போது அருண் வீட்டிற்கு வந்துவிட்டான். மறுநாள் அருண் அலுவலகம் போகும்வரை பொறுத்திருந்தாள். அருண் புறப்பட்ட பிறகு ருத்ரனை ஆவேசமாக தூக்கி முத்தினாள். ஆனால் அவள் மனதின் ஆவேசம் உடலுடன் ஒத்திசையததால் தன் மனமே தன்னிடம் நடிக்கிறதோ என்று அவளுக்குத் தோன்றியது. ராஜேஷைப் பார்த்தாள். அவன் கண்களில் ஜாக்கிரதை உணர்ச்சி கூடியிருந்தது.
அவன் அவளிடமிருந்து தப்பிக்க தயாராக இருப்பது போலிருந்தான்.
‘உனக்கு அவ்வளவு சூனியம் இருக்கா’ என்று மனதினுள் கறுவினாள்.
ருத்ரன் விகல்பமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான். நான் எதையோ இழந்துவிட்டோம் என்று சுபத்ராவுக்குத் தோன்றியது.அவள் கண்களில் நீர் திரண்டது. கூடத்தில் உட்கார்ந்தாள். அழுத கண்களுடன் ராஜேஷைப் பார்த்தாள். அவன் பெரிய பற்கள் தெரிய அவளைப் பார்த்து சிரித்தான். ருத்ரனைப் பார்த்தாள். அவன் ஓடிவந்து அவள் கண்களைத் துடைத்தான். ராஜேஷ் அவள் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். ருத்ரனும் அமர்ந்தான். சுபத்ராவுக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது. கைகளை பின்னே ஊன்றி கண்களை மூடிக் கொண்டாள். அவள் மடியில் அமர்ந்தபடியே ராஜேஷ் ருத்ரனை கன்னத்தில் அறைந்தான். அறைந்துவிட்டு சுபத்ராவை பார்த்து சிரித்தான். மேற்கூரையை பார்த்து அமர்ந்திருந்தவள் ராஜேஷின் இளித்த முகம் நோக்கிக் குனிந்தாள்.
ருத்ரன் அவளை அடிக்கும்வரை அவளுக்கு அப்படி எந்த உத்தேசமும் இல்லை. அவளுக்கு விளையாட்டின் விதி புரிந்தது. இப்போது அவர்கள் மூவரும் வட்டமாக அமர்ந்திருந்தனர். ராஜேஷ் ருத்ரனை அடிப்பான். ருத்ரன் சுபத்ராவை அடிப்பான். சுபத்ரா ராஜேஷை அடிப்பாள். சுபத்ரா மெல்ல ராஜேஷின் கன்னத்தில் அறைந்தாள். ராஜேஷ் சிரித்துக் கொண்டே ருத்ரனின் கன்னத்தில் அறைந்தாள். ஆனால் வேகமாக. ருத்ரனுக்கு அழுகை வந்தது. ஆனால் அவனால் சுபத்ராவை வேகமாக அறைய முடியவில்லை.
‘தம்பி வேகமா அறடா அம்மாவை நல்லா வேகமா அறடா’ என்றாள்.
ஆனால் அவன் மெல்லத்தான் அறைந்தான். அவன் அவளை மென்மையாக அறைந்ததால் அவளால் ராஜேஷை வேகமாக அறைய முடியவில்லை. ஆனால் ராஜேஷ் மீண்டும் பளாரென ருத்ரனை அறைந்தான். ருத்ரன் ஆட்டத்தின் விதியை கெடுத்துக் கொண்டிருந்தான். அவன் மீண்டும் சுபத்ராவை மென்மையாக அறைந்து அவள் ராஜேஷை வேகமாக அறைய முடியாதபடி தடுத்தான்.ஆனால் நான்கு சுற்றுகள் முடிந்தபிறகே ராஜேஷும் ஆட்டத்தின் விதியை கடைபிடிக்கவில்லை என்று அவளுக்குப் புரிந்தது. மீண்டும் மென் தொடுகை என ருத்ரனின் அறை. அவளிடமும் ஆட்டத்தின் விதி தளரத் தொடங்க குழந்தை ராஜேஷின் புண்பட்ட ஆன்மாவை பிரதிபலிக்கும் பெரிய கண்களும் பெரிய பற்களும் சிரிக்கும் அழகே இல்லாத முகத்தை நோக்கிக் கையை ஓங்கினாள்.
December 9, 2025 at 5:48 pm
அம்மா எனும் பிம்பம் உடைக்கப்பட வேண்டிய ஒன்று தான். மனவிகாரங்களுடன் உள்ள நிறைய தாய்மார்களை தெரியும். பிள்ளைகளை அடித்து தனது விகாரங்களை தணித்துக் கொள்ளும் நபர்களும் உண்டு. நான் நேரடியாக கண்ட சில காட்சிகளும் தாய்களும் நினைவுக்கு வந்து போனார்கள். இப்படியெல்லாம் இருப்பாங்களான்னு நினைப்பவர்களுக்கு மட்டும் ஒண்ணு சொல்லனும். இதைவிட மோசமான அம்மாக்களே கூட உண்டு. அருமையான சிறுகதை. பாராட்டுக்கள் ❤️
December 27, 2025 at 7:18 pm
அருமை தோழரே….
என் கண்கள் கலங்கி விட்டன…