1

இத்தளத்தின் நோக்கம் என்ன? நான் ஏற்கனவே sureshezhuthu.blogspot.in என்ற பெயரில் ஒரு வலைப்பூவில் அவ்வப்போது எழுதுகிறேன்‌. அவ்வப்போது வாசிக்கும் நூல்கள் குறித்த குறிப்புகளையும் பொதுவான விஷயங்கள் பற்றியும் என் பேஸ்புக் பக்கத்திலும் வாட்ஸ்அப் சேனலிலும் எழுதுகிறேன். அப்படி இருக்க இப்படியொரு தளத்தின் தேவை என்ன?

வலைப்பூவைவிட சற்றுக் கூடுதல் வசதிகள் வலைதளத்தில் உண்டு. அதோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்தத் தளம் இலக்கியம் பற்றிய என் பார்வையை முழுமையாக வெளியிடும் ஒரு வெளியாக இருக்கும். அது எப்படி என்று விளக்கவே இந்தக் கட்டுரை. ஒரு இடைச்செருகல். இந்தத் தளத்தில் ஆயிரம் வார்த்தைகளுக்கு குறைவான கட்டுரைகள் எதுவும் வெளியாகாது. கட்டுரைகள் மட்டும். வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள், சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள் போன்றவற்றுக்கு இந்த சொல் நிபந்தனை பொருந்தாது. தளத்தின் ‘நோக்கம்’ என்ன என்பது ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

தலைப்பில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் உபதலைப்பாக்கி பேசிச்செல்லப் போவதில்லை. இந்த நோக்கத்தை அடைய இன்னின்ன திட்டங்கள் இருக்கின்றன. திட்டங்களைச் செயல்படுத்த இதெல்லாம் வழிமுறைகள் என்றால் அதென்னவோ ராணுவத்தை நினைவூட்டுகிறது இல்லையா! கலை இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள யாராலும் ராணுவத்தனமாக செயல்பட முடியாது. எல்லாக் கலைஞர்களுமே கேள்விகளற்று கீழ்படியும் அமைப்பான ராணுவத்தை அஞ்சுவார்கள். Order என்ற ஆங்கிலச் சொல் ஒரே நேரத்தில் ஆணை, ஒழுங்கு என்ற இரண்டையும் குறிக்கிறதல்லவா! மீற முடியாது ஆணைகளின் வழியே உட்சபட்ச ஒழுங்கு உருவாகி இருக்கும் அமைப்புதான் ராணுவம். அமைப்புகளின் தலைமையில் இருப்பவர்களுக்கு தங்கள் அமைப்பினையும் ஒரு ராணுவமாக மாற்றிவிட முடியாத என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். யாரோ சிலபேரை நிர்வகிக்க வேண்டியிருப்பவர்களும் இந்த ராணுவ ஒழுங்கின் மீது ஆசை வைத்திருப்பார்கள்தான். ஆனால் கலை இந்த ராணுவ ஒழுங்கை அஞ்சுகிறது. அதன்மேல் கோபப்படுகிறது.

இந்த இடத்தில் பலருக்கும் ஒரு குழப்பம் வரும். கலைஞர்கள் எதற்கு ஆசைப்படுகிறார்கள்? ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிறார் ஒருவர். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார் இன்னொருவர். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஒழுங்கான அமைப்புகள் வேண்டும்தானே! ஆனால் இந்தக் கலைஞர்கள் ஒழுங்கு மிகுந்த அமைப்புகளை ஏன் இப்படி வெறுக்கிறார்கள்! ஒழுங்கு என்ற சொல்லுக்கு பதில் ஒத்திசைவு என்ற சொல் செயல்நிலையில் இருந்தால் கலைஞர்கள் ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

கலையின் வழி ஒத்திசைவுதான். உரையாடலுக்கு வாய்ப்பே இல்லாததாக நம்பப்படுகிறவற்றை கலை உரையாடலின் வெளிக்குள் கொண்டு வருகிறது. சமூக இயக்கத்துக்கு அதிகார அமைப்புகள் இன்றியமையாதவை. ஆனால் அமைப்புகள் உயிரோட்டத்துடன் இயங்க கலை அத்தியாவசியமானது. கலை யதார்த்த உலகத்துடன் முழுமையாக பிணைக்கப்பட்டிருப்பதில்லை. புறவுலக நெருக்கடிகளில் சிக்கிக் கொண்ட ஒருவர் ஒரு பாடலினைக் கேட்கும்போது ஒரு கவிதையை வாசிக்கும்போது அவர் அந்த நெருக்கடி அவருக்குள் விளைவித்த அகச்சோர்விலிருந்து வெளியேறுகிறார். அந்த வெளியேற்றத்தை எது சாத்தியப்படுத்துகிறதோ அது நிச்சயமாக அந்த நெருக்கடியுடன் தொடர்புடையதல்ல. நெருக்கடியையும் அதிலிருந்து ஒருவர் அடையும் விடுதலையையும் வேர்பிடித்துச் சென்றால் நாம் மனித அறிவின் தோற்றப்புள்ளிக்கு சென்று சேர்வோம். அங்கு ஒரு முட்டுச்சந்து இருக்கும். அங்கு சிரித்த முகத்துடன் கடவுள் நின்று கொண்டிருப்பார். நமக்குத்தான் குழப்பமாக இருக்கும். கலை புராதானமானது ஆன்மீகமானது என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் அது நாம் நினைக்குமளவு – எவ்வளவு நினைத்தாலும் – எளிமையானது அல்ல. ஹெகலையும் மார்க்ஸையும் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் நோக்கினால் ,புரிந்து கொள்ள முடியாத ஒரு விசை கலைப்படைப்புகளை ஒரு காலகட்டத்திலிருந்து இன்னொரு காலகட்டத்துக்கு கைமாற்றி விடுவதை நாம் உணர முடியும். இந்தக் கைமாற்றும் விசை நேர்நிலை உடையதாக இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் நம்முடைய அன்றாடத்தை ஓட்டுவதற்காக நாம் நம்பும் அல்லது ஏளனம் செய்யும் பெருங்கதையாடல்களுக்கு அப்பால் உள்ள ஒரு தர்க்கத்தின்படி கலைப்படைப்புகள் நம்மை வந்தடைகின்றன என்று சொல்லலாம். அப்படிச் சொல்லிவிட்டால் எல்லாம் ‘தெய்வானுக்கிரகம்’ என்று ஆகிவிடுகிறது இல்லையா? நாம் ஏதும் செய்தாலும் செய்யாவிட்டாலும் காலம் என்கிற ‘வடிகட்டி'(அவ்வளவு துல்லியமில்லாத வடிகட்டி) எது எதிர்காலத்திற்குத் தேவையோ அதைக் கொண்டு சென்று சேர்த்துவிடும் என்றாகிவிடுகிறது. ஆனால் முன்பு சொன்ன ‘தர்க்கத்தின்’ ஒரு காரணியாக நம்முடைய பார்வையும் இருக்க முடியும் இல்லையா. ஒரு செக்கினை சுற்ற ஒரே திசையில் விசையைச் செலுத்தும் பலர் தேவைப்படுவது போல காலசுழற்சியில் நம்முடைய பங்களிப்பும் இருக்க முடியும் என்பது ஒரேநேரத்தில் ஆசுவாசத்தையும் அச்சத்தையும் அளிக்கிறது. ஆசுவாசம் அப்படி ஒன்றும் ‘சும்மா’ வாழ்ந்து சாகப்போவதில்லை என்பதை நினைத்து. அச்சம் நம்முடைய ஒரு ‘பிழை’ வரலாற்றில் பல மடங்கு பூதாகரமான பிழை நடக்க வாய்ப்பாகிவிடுமோ என்பதால் தோன்றுவது. (அவ்வளவு அச்சப்படத் தேவையில்லை என்றும் தோன்றுகிறது.). அப்படியெனில் சமகால கலை ஈடுபாடு கொண்ட ஒருவரின் பணி என்ன? இந்த இடத்தில் கலை என்ற பொதுத் தளத்தில் இருந்து உருவிக் கொண்டு இலக்கியத்தின் பக்கம் வந்துவிடலாம். ஒரு சமகால இலக்கிய விமர்சகரின் பணி என்ன? இலக்கிய விமர்சகர் என்றொருவர் தேவையா? அவரை எந்த அளவுக்கு பொருட்படுத்தலாம்? எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி கட்டுரையின் தலைப்புக்கும் இக்கட்டுரை பேசிக் கொண்டிருப்பவற்றுக்கும் என்ன தொடர்பு!

2

இலக்கிய விமர்சனத்தில் ஏகப்பட்ட ரகங்கள் இருக்கின்றன. அதில் நான் க.நா.சு கட்சி. அதாவது ரசனை விமர்சனத்தின் கட்சி. ரசனை விமர்சனம் என்ற பழைய பெயரை பயன்படுத்தினாலும் கோட்பாடு, கருத்தியல் விமர்சனங்களை வாசிக்கும்போது ஏற்படும் மிரட்சி,வடிவமில்லாத மனித உடலை சதுரங்களாக வட்டங்களாக செவ்வகங்களாக எப்படி வெட்டுகிறார்கள் என்ற ஆச்சரியம் காரணமாக அவற்றின் பக்கம் போகாததால் எஞ்சி இருக்கும் ரசனை கட்சியை எடுத்துக் கொள்கிறேன்.

ரசனை சார்ந்து ஒரு படைப்பினைப் பற்றி பேசத் தொடங்கும் ஒருவனை ‘அடித்து’ உட்கார வைப்பது எளிது. ‘வர்க்கப் புரட்சி வரவேண்டும் என்று நீ விரும்புகிறாயா இல்லையா?’ , ‘பின்காலனியச் சொல்லாடல்களில் விளிம்புநிலையினர் மீதான வன்முறை அதிகரித்து இருக்கிறதா குறைந்திருக்கிறதா?’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்டால் ரசனை விமர்சகன் ‘திருதிரு’வென்று முழிக்கத்தான் செய்வான். ஏனெனில் அவனுக்கு ஒரு படைப்பு ‘பிடித்திருக்கிறது’. அதே படைப்பு அவனுக்கு நேற்று ‘பிடிக்கவில்லை’. அல்லது இன்று ‘பிடிக்கவில்லை’. நாளை ‘பிடித்திருக்கிறது’. விமர்சனம் என்ன விடலைப் பெண்ணின் காதலா? ‘காரணமே’ சொல்ல முடியாமல் இருப்பதற்கு என்று எரிச்சல் உருவாவது இயல்புதான். ஆனால் ரசனை விமர்சகன் தன் வாழ்க்கையில் இருந்து படைப்பினைப் பார்க்கிறான். ஆகவே அவன் வாழ்க்கை ‘வளர வளர’ அவனுடைய இலக்கியம் பற்றிய பார்வையும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று ஒரு படைப்பை அவன் முன்னிறுத்தக் காரணம் அப்படைப்பு அவனுக்கு ‘பிடித்திருப்பது’ மட்டும்தான்! ‘உனக்கு ஏம்ப்பா பிடிச்சிருக்கு’ என்று கேள்வி வரும்போதுதான் அவன் காரணங்களை அடுக்கத் தொடங்குகிறான். அவனுடைய காரணங்களும் அவன் வாழ்க்கையில் இருந்து எடுத்துக் கொண்டதுதான்.

அப்படியெனில் ரசனை விமர்சகன் ‘திட்டவட்டமாக’ எதையும் சொல்வதில்லையா என்ற கேள்வி வரும். கோட்பாட்டு விமர்சகரைவிட ரசனை விமர்சகன் திட்டவட்டமாக ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும். திரும்பி வரவேண்டிய கட்டாயம் இருக்கும்போது காட்டில் செல்லும் வழியில் தெளிவான அடையாளங்களை விட்டுச் செல்வதுபோல! தன்னுடைய கூற்றை ஒரு ரசனை விமர்சகன் மாற்றிக் கொள்ளும்போது முன்பு ‘திட்டவட்டமாக’ எதைச் சொன்னானோ அதையே மறுக்க வேண்டி இருக்கும். ஆகவே ரசனை விமர்சகனிடத்தில் அவன் முடிவாக என்ன சொல்கிறான் என்று பார்ப்பதைவிட அந்த முடிவுக்கு அவன் எப்படி வந்து சேர்கிறான் என்று பார்ப்பதே ஒரு விமர்சகனையும் அவன் வழியே அவன் அவதானிக்கும் இலக்கியச்சூழலையும் புரிந்து கொள்வதற்கான சரியான வழி.

3

(இரண்டாவது அத்தியாயத்தில் படர்க்கையில் ரசனை விமர்சகன் என்று குறிப்பிட்டது பொதுப்பிரயோகம் அல்ல. என்னைத்தான்.!)

இந்தத் தளத்தின் நோக்கம் ஒருமாதிரி புரியத் தொடங்கி இருக்கும் என நினைக்கிறேன். ஒரு இலக்கிய வாசகனாக , எழுத்தாளனாக, விமர்சகனாக நானொரு பயணத்தில் இருக்கிறேன். இந்தப் பயணத்தில் என்னுடன் விவாதிக்த விரும்புகிறவர்களுக்கான தளம் இது என்று சொல்லலாம். இந்தத் தளத்தின் வழியே நிகழும் விவாதங்கள் அனைத்தும் மேலே நான் குறிப்பிட்டிருக்கும் பொதுப்புரிதலுடன் நடக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. அதனை மேலும் சற்று விளக்கலாம் என நினைக்கிறேன்.

பொதுவாக இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டு வாசிக்க வருகிறவர்கள் நெடுநாள் இலக்கியப் பரிச்சயம் கொண்டவர்களிடத்தில் ‘பரிந்துரைப் பட்டியல்’ எதிர்பார்ப்பார்கள். தமிழின் முக்கியமான விமர்சகர்கள் என்று நான் கருதும் பலரும் முக்கியமான படைப்புகளின் பட்டியலை அளித்திருக்கிறார்கள். எனக்கும் பட்டியல் உருவாக்கும் விருப்பமிருக்கிறது. ஆனால் எந்தவொரு மிகச் சிறந்த விமர்சகரின் பட்டியலும் அப்படியே அடியொற்றி நடக்க வேண்டிய புனிதக் கட்டளை கிடையாது. (சிறந்த விமர்சகர்கள் முந்தைய வரியை எழுதிவிட்டுத்தான் பட்டியலும் கொடுத்திருப்பார்கள்.) அப்படியெனில் பட்டியல்களின் பயன் என்ன? ஒரு இலக்கியப் பிரதி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் திறந்து கொள்ளக்கூடியது. ஒரு விமர்சகரின் பட்டியலில் உள்ள எல்லா நூல்களையும் வாசித்த ஒருவர் அந்த விமர்சகரின் அழகியல் பார்வைக்கு முழுக்க எதிர்நிலை எடுக்க முடியும். தொடர்பே இல்லாத வாசிப்புடைய இருவரின் வாழ்க்கை நோக்குகள் நெருங்கி வரவும் முடியும். ஆகவே ரசனை பட்டியலை உருவாக்குமே தவிர பட்டியல் ரசனையை உருவாக்காது என்ற தெளிவு நமக்கு அவசியம். ரசனை என்ற சொல்லை இக்கட்டுரையில் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால் ரசனை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஒருவரின் இலக்கிய ரசனை அந்தரங்கமானது. அந்தரங்கத்தின் சுருதி குலையாமல் அதனை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்கிறவர் இலக்கிய விமர்சகராகிறார். ஆனால் அந்தரங்கம் ஏராளமான காரணிகளால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்றிருந்த நம் ரசனை இன்று எந்த அறிவையும் கூடுதலாக அடையாமல் வெறுமனே தூங்கி எழுந்ததன் வழியாகக்கூட மாறி இருக்கும். ரசனை உடைய ஒருவரால் மோசமான ஒன்றை எளிதாக இனங்காண முடியும். ஆனால் இதுதான் சிறந்தது என்று அறுதியிட முடியாது. அப்படியே அறுதியிட்டாலும் கொஞ்சநாளில் அவ்வெண்ணம் மாறிவிடும்!

உறுதியற்ற பரப்பின் மீது நின்றபடி‌ நடனமாட அழைப்பது போலத் தோன்றுகிறது அல்லவா! அப்படியில்லை. வலுவான காற்று வீசும்போது தன்னை இறுக அடைத்துக் கொள்ளும் கூரைவீடுகள் பிய்ந்து போகும். நம்மை நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். விசேஷமான ஒரு கணத்தில் விசேஷமான ஒரு ‘ஞானம்’ கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டு சும்மா இருப்பதைவிட கடந்துபோகும் ஒவ்வொரு கணமும் இன்னொரு கணத்தைவிட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல என்ற மனநிலையுடன் எந்நேரமும் விழிப்புடன் இருப்பது சிறந்தது அல்லவா!‌ ரசனையுடைய இலக்கிய வாசகர்கள் தங்களை அவ்வாறு திறந்து வைத்துக் கொள்ள முடியும்.

இன்று இலக்கியம் குறித்தும் வாழ்க்கை குறித்தும் நமக்கிருக்கும் புரிதலில் நம்முடைய பலவீனங்கள், பயங்கள் எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்துகின்றன என்று நம்மை நாமே கேட்டுப் பார்க்கலாம். நம்முடைய உண்மையான தோலின்மீது எத்தனை அடுக்குகள் படிந்து கிடக்கின்றன என்று விசாரித்துப் பார்க்கலாம். அப்படியொரு தொடர் விசாரணையில் இருப்பவன் என்ற வகையில் அப்படியான விசாரங்கள் தோன்றுகிறவர்களுடன் உரையாடுவதே இறுதி இலக்கற்ற இந்தப் பயணத்தின் நோக்கம் திட்டம் வழிமுறை அனைத்தும்.