மனிதர்களின் இறப்பை எப்படி எதிர்கொள்வது என்பதில் எனக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. அறிந்த ஒருவர் இறந்துவிட்டார் என்று தெரியவரும்போது அதுவொரு செய்தியாக மட்டுமே என்னுள் பதிவாகிறது. இறந்துபோன அந்த ‘இன்னார்’ எப்படி இருக்கிறார் என்று யாரும் கேட்டால் ‘அவர் இறந்துவிட்டார்’ என்று சொல்லும் அளவுதான் நான்‌ இறப்பை பொருட்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன். இதுவரை நான் அறிந்த இறப்புகளில் என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) மரணத்திற்காக மட்டுமே நான் உண்மையில் மனம் கலங்கி குற்றவுணர்வு அழுத்த அழுதிருக்கிறேன். பேஸ்புக் வழியே ‘தெரிந்த’ யாரோ ஒருவர் இறக்கும் செய்தி அவ்வப்போது வருகிறது. பிரபலங்கள், பிரபலமில்லாத அறிவுஜீவிகள் என்று ஏராளமானவர்களின் மரணச் செய்தியை அறிந்து அறிந்து மரணத்தின்‌ மீது வைத்திருந்த மரியாதையே போய்விட்டது!தன் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்று யாரும் சொன்னாலன்றி மரணத்திற்கு அஞ்சலி செலுத்தக்கூடத் தோன்றுவதில்லை. அஞ்சலிக்கு இணையாகவே பொருளற்று போய்விட்ட சொற்களாக மாறிய இரண்டு சொற்கள்.

1.வாழ்த்துக்கள்

2.கண்டனங்கள்

உண்மையில் இச்சொற்களை இக்கட்டுரையில் எழுதும்போது ஒரு அசௌகரியம் ஏற்படுகிறது. ஏதோ அருவருப்பான ஒன்று காலில் ஒட்டி இருப்பது போலத் தோன்றுகிறது. அஞ்சலி, வாழ்த்து, கண்டனம் என்ற மூன்றையும் தெரிவிக்காமல் கடந்து போக முடிகிறவையே நல்ல நாட்கள் என்று தோன்றுகிறது.வைரமுத்துவிற்கு கண்டனம் தெரிவிப்பதோ அவரை வாழ்த்துவதோ இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக இந்த தருணத்தின் வழியே விருதுகள் குறித்த என் யோசனைகள் சிலவற்றை முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஞானபீட விருதின் பூர்வாங்கம் பற்றி பேச ஒன்றும் இல்லை. ‘தூய விருது’ என்று எதுவும் உலகில் இல்லை. அதிலும் பணமும் புகழும் ஒரு விருதின் வழியே கிடைக்கும் என்றால் அதைப்பெற தன்னலநோக்கிகள் (careerist என்ற சொலலுக்கு இணையாக) முனைவது இயல்பாக எங்கும் நடப்பதுதான். சில வருடங்களுக்கு முன் ஒரு எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன். அதற்கு முன் அவர் பத்து நூல்கள் எழுதி இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு நூலுடனும் பெயருக்கு பின்னிருக்கும் அப்பா பெயர் போல ஒரு ‘விருது’ இருக்கிறது. ராம் தங்கம் என்ற எழுத்தாளர் அத்தகைய தன்னலநோக்கியாக மிக விரைவாக வளர்ந்து வருகிறார். இவர்கள் சிறிய அளவில் செய்து கொண்டிருப்பதை பெரிய அளவில் செய்ய முடிந்தவர் என்று வைரமுத்துவைச் சொல்லலாம்.

ஒரு எழுத்தாளர் தன்னலநோக்கியாக இருக்கக்கூடாதா? தாராளமாக இருக்கலாம். இன்றைய‌ இழிமுதலீட்டியச்சூழல் (Ugly capitalism) அதை முழுமையாக ஊக்குவிக்கவும் செய்யும். எல்லா பண்ட உற்பத்தியாளர்களும் தன் பண்டம்தான் உலகிலேயே ஒசத்தி என்றுதானே விற்பனை‌ செய்கிறார்கள்? ஆக பிரச்சினை தன்னலநோக்கிகள் அல்ல. பண்டம்தான்.

வைரமுத்து தயாரித்த பண்டம் எத்தகையது?‌ வைரமுத்துவின் முதல் நாவலான காவி நிறத்தில் ஒரு காதல் தொடங்கி ஆனந்த விகடனில் அவர் தொடராக எழுதிய மூன்றாம் உலகப்போர் வரை வாசித்து இருக்கிறேன். இவற்றைக் கொண்டு வைரமுத்துவை வகைப்படுத்த வேண்டும் என்றால் அவருடைய நாவல்கள் பாசாங்குப் படைப்புகள் என்று வகைப்படுத்தலாம். ஒரு வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொள்வதை தொடர்ந்து கவனிக்கும் குழந்தை அவர்களைப் போலவே பாசாங்கு செய்யத் தொடங்கிவிடும் இல்லையா?‌ வைரமுத்துவின் நாவல்களும் அத்தகையவையே.

அவர் காவி நிறத்தில் ஒரு காதல் எழுதியபோது புரட்சகர இயக்கங்கள் , பெண்ணியம் போன்ற கருதுகோள்கள் தீவிரமாக செயல்பட்டன.‌ கூடவே எப்போதும் இருக்கும் இலக்கிய ஐட்டங்களான ஞானத்தேட்டம், துறவு போன்றவற்றைக் கலந்து ஒரு பாசாங்குப்படைப்பை எழுதினார். மலினமான தமிழ்ப்படத்தின் இறுதிக்காட்சியைப்போல அந்த நாவல் முடியும்.

தண்ணீர் தேசம் நடுக்கடலில் படகில் சென்று மாட்டிக்கொள்ளும் காதல் ஜோடிகள் பற்றிய கதை. ‘அப்பாவி’ காதலி. தமிழ்பற்றுக் கொண்ட ‘வீரமான’ காதலன். அந்த நெருக்கடியான சூழலின் வழியே வாழ்வின் நிலையாமை, மனிதர்களுக்கு இடையே இருக்க வேண்டிய பரஸ்பர ஒற்றுமை பற்றியெல்லாம் நாயகன் பாடமெடுப்பான். கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் நாவல்களில் உண்மையில் பொருட்படுத்தத்தகுந்த சில தருணங்கள் உண்டு. ஆனால் அந்த மனவிலக்கம் ஏற்படுத்தும் போலிநடை இந்த நாவல்களின் எல்லா உயிர்ப்பான தருணங்களையும் நீர்த்துப் போகச் செய்திருக்கும். இவ்விரு நாவல்களும் பெரிய வரவேற்பினை பெற்றவை. அதற்கு காரணம் இந்நாவல்கள் தமிழின் நாட்டுப்புறவழக்கினை போலிசெய்தன என்பதே. வைரமுத்து இந்த நாவல்களை எழுதுவதற்கு முன்பே கி.ராஜநாராயணன், பூமணி, நாஞ்சில் நாடன் எனப் பலரும் நாட்டுப்புற வழக்கை திறம்பட தம் படைப்புகளில் கையாண்டிருந்தனர். கதையை உரையாடல்கள் வழியே நகர்த்துவதற்காக மட்டுமின்றி பாத்திரங்களின் அகத்தை பிரதிபலிப்பதாகவும் அவர்களின் நடை அமைந்தது.

உதாரணமாக தலைகீழ் விகிதங்கள் நாவலில் சிவதாணுவும் அவன் மனைவியும் பேசுவது ஒரே ‘வழக்கு’தான். ஆனால் அவர்கள் குரலைக் ‘கேட்டால்’ சிவதாணுவிடம் ஒரு மெல்லிய எரிச்சலும் அவன்‌ மனைவியிடம் ஒரு வெகுளித்தனமும் வெளிப்படுவதை உணர முடியும். வைரமுத்துவின் நாட்டுப்புற வழக்கில் இத்தகைய நுண்மைகள் கிடையாது. அவருடைய நுகர்வோரான நகர்ப்புறத்தினரின் முன் நாட்டுப்புற மனிதர்களை கழைக்கூத்தாடிகள் போல அவர் காட்சிப்படுத்தினார். புணர்ச்சியில் கூட இவர்களுக்கு உண்மை முகத்தை வெளிப்படுத்த தெரியுமா என்று நம்மை சந்தேகப்பட வைக்கும் போலிப்பாவனைகள் நிறைந்த மத்தியத்தர ஆனந்த விகடன் வாசகர்களுக்கு வைரமுத்துவின் போலி எழுத்து இனித்திருக்கும்.

மூன்றாம் உலகப்போர் வைரமுத்து செய்த பாசாங்குகளில் உச்சம். வைரமுத்துவுக்கு ஒரு ‘பேட்டர்ன்’ இருக்கிறது. அவர் தீவிர இலக்கிய உலகில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கிறார். அந்த விவாதங்களை கச்சாப்பொருளாகக் கொண்டு தன் எழுத்தைப் பூசுகிறார். வைரமுத்து சுஜாதா போல சுவாரஸ்யமான எழுத்தாளரும் அல்ல. எந்த சுமாரான நவீன எழுத்தாளருடன் ஒப்பிடும் அளவுகூட தீவிரமான எழுத்தாளரும் அல்ல. அவர் எழுத்தின் வழியே வெறுமனே பாவலா காட்டுக்கிறார். இந்த பாவனை இந்திய ஆங்கில எழுத்தில் உண்டு. வைரமுத்துவை இந்த விருதுக்கு தேர்வு செய்திருப்பவர்கள் அவர் அளவுக்கே பாசாங்கானவர்களாகவே இருக்க முடியும்.

மேற்சொன்ன விஷயங்களை நான் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. வைரமுத்துவை வாசிக்கும் யாருக்கும் இதெல்லாம் முதல் வாசிப்பிலேயே தெரியக்கூடிய விஷயம்தான். பிரச்சினை குடிநீரில் மலம் கலப்பது போல வைரமுத்துவின் இந்த போலி எழுத்து இந்திய இலக்கிய உலகில் ஊடுருவப் போகிறது என்பதுதான். வைரமுத்துவே வாங்கிவிட முடிகிற அளவு ஞானபீடம் ஒரு தகுதியற்ற விருது. ஆனால் இன்றும் இந்திய அளவில் அவ்விருதினை வாசகர்கள் பொருட்படுத்துகிறார்கள். வைரமுத்து போன்ற ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படும் போது மொத்த தமிழ் இலக்கியத்தின் தரமும் இதுதான் என்று அவர் அவர்கள் முடிவு செய்வார்கள்.

கே.ஆர்.மீரா வாசித்தபோது மொத்த மலையாள இலக்கியமும் பாசாங்கு பண்ணத் தொடங்கிவிட்டதாக எனக்குத் தோன்றியது. கே.ஆர்.மீரா ஒரு தனித்த வெளிப்பாடு அல்ல. கேரளாவில் இருந்து ‘சமூக அக்கறை உள்ள சினிமா, இலக்கியம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் பெரும்பான்மை படைப்புகளில் இந்த முற்போக்கு பாசாங்கு உண்டு. (முல்லைக்கல் மாதவன் நாயர்களின் உலகம் அது!)

கே.ஆர்.மீரா கேரள முற்போக்கு இயக்கங்களுடன் எத்தகைய தொடர்புடையவர் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டு முற்போக்கினர் கே.ஆர்.மீராவை பெரும் படைப்பாளி என்று உண்மையாகவே நம்புகின்றனர்! மலையாளிகள் தங்கள் சரிவு மீரா வரைதான் என்று சந்தோஷப்படலாம். ஏனெனில் நாம் வைரமுத்துவரை சரிந்திருக்கிறோம். கே.ஆர்.மீரா போலவே வைரமுத்துவும் தனித்த வெளிப்பாடு அல்ல. மலையாளத்தைவிட நம்முடைய சரிவு ஆழமானதாக இருப்பதற்கு காரணம் வைரமுத்து என்பவர் பிரதிநிதித்துவம் செய்வது அரசவை கவிஞர் என்ற மரபை. மீராவின் எழுத்துக்கள் மேம்போக்காகவாவது அதிகாரத்தை கேள்வி கேட்கின்றன. வைரமுத்துவின் எழுத்துக்கு அந்த இயல்பு இல்லை. ஏனெனில் அவர் இயல்பிலேயே அதிகாரத்துக்கு எதிரான முனகல்கூட கிடையாது.உ.வே.சாவின் என் சரித்திரம் நூலில் ஊர் ஊராகப் போய் அந்த ஊரின் ஜமீன்தாரைப் புகழ்ந்து பரிசில் பெறும் கவிராயர்கள் பற்றிய சித்திரம் வரும். இது தமிழ் சுமக்கும் இழிவு அல்லது புரியாத இருட்டு. ஒரு கை கவித்திறத்தை வெளிப்படுத்த மறு கை பரிசிலுக்காக ஏந்தப்பட்டிருக்கும். ஆனால் வைரமுத்து கவிஞரும் அல்ல.

சொற்றொடர்களை எதுகை மோனையாக அடுக்கி அதைக் கவிதை என நம்ப வைத்தவர். நவீன உரைநடைக்குப் பழகாத தமிழ் மனம் இதுபோன்ற அடுக்குத் தொடர்களை இன்றும் கவிதை நம்புகிறது.ஒரு உதாரணம்.பேஸ்புக்கில் நவீன எழுத்தாளர்களுக்கு பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை என்று அங்கலாய்க்கும் ஒருவர் எனக்கு நண்பராக இருக்கிறார்‌. பிழை இல்லாமல் தமிழ் எழுதப்பட வேண்டும் என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால் அவர் நவீன இலக்கியம் என்பதே தமிழைப் பிழையில்லாமல் எழுதத் தெரியாதவர்களின் பிதற்றல் என்று நம்புகிறார். இன்றைய நவீன உரைநடையின் வடிவத்தை உருவாக்கித் தந்தவர்களே நவீன இலக்கியவாதிகள்தான் என்பது அவருக்குத் தெரியவில்லை. அது போகட்டும் . அவர் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இப்படி.

/சினிமாப் பாடல்களுக்குச் /சின்முறை தேசியவிருதுகள் பெற்றுச் /சிங்கநடை போட்டவர்/

வைரமுத்துவே இப்படி பொருளில்லாமல் ‘சீனாவுக்கு சீனா’ போட்டு எழுதக்கூடியவர்தான்! இந்த சீனாவுக்கு சீனாவெல்லாம் அலுத்துப்போய்தான் நவீன இலக்கியம் பக்கமே ஒரு வாசகர் வருகிறார். இன்னமும் இவர்கள் நம்மை எதுகை, மோனை, சந்தம், தொடை போன்றவற்றை ரசித்துக் கொண்டிருங்கள் என்கிறார்கள். இத்தகைய பழமைவாதிகள் முதன்மை பெறும் அளவில்தான் தமிழ்நாடு இருக்கிறதா? ஆம்.பல சமயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக் குறியீடுகளை அதன் அறிவுப்புலத்துடன் தொடர்புறுத்தி குழப்பிக்கொள்கிறோம். தமிழ்நாட்டை செல்வசெழிப்பு மிகுந்த கடினமாக உழைக்கும் ஒரு மரபான குடும்பத்துடன் வேண்டுமானால் ஒப்பிடலாம். தமிழ்ப் பெண்கள் அளவு இந்தியாவில் வேறெங்கும் கட்டுப்பெட்டித்தனம் மிகுந்த பெண்களைப் பார்க்க முடியாது.உறவுமீறல்களை கொலை வழியாக மட்டுமே பெரும்பாலான தமிழ்ச் சாதிகளுக்கு எதிர்கொள்ளத் தெரியும். அதேநேரம் தமிழகம் பொருளாதார அளவில் முன்னேறிக் கொண்டும் இருக்கிறது. இது இரட்டைத் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

வைரமுத்து போன்ற பாசாங்குக்காரரின் செல்வாக்கு உருவாகி வருவது இப்படித்தான். அதாவது வைரமுத்துவை குறைசொல்லி பயனில்லை. வைரமுத்து நம்மிடம் நீடிக்கும் ஒரு பண்பாட்டின் நீட்சி. எங்கும் நாகரிகமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டு தகுதியற்ற பண்டத்தை தயாரித்துக் கொண்டு அதிகார வர்க்கத்திடம் நயமாக நடந்து கொண்டால் எந்த உயரத்தையும் எப்படிப் பிடிக்க முடியும் என்பதற்கு வைரமுத்து ஒரு உதாரணம்.ஆனால் ஏன் இப்படிப்பட்டவர்களால் மிக எளிதாக ஏறிச் செல்ல முடிகிறது? நம் அதிகாரவர்க்கத்தின் இயல்பே அத்தகையதாக இருக்கிறது.

இன்றிருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளும் உண்மையான அறிவுஜீவிகளை அஞ்சுகின்றன அல்லது அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள முனைகின்றன. இன்றைய அதிகார வர்க்கம் வைரமுத்து போன்ற ஒருவர் அறிவு முகமென முன்வைக்கப்படுவதையே விரும்பும். ஆழமாக வேரோடி இருக்கும் ஒரு பெரிய நோயின் வெளிப்பாட்டு வடிவமாக மட்டுமே இந்த விருது அறிவிப்பினைப் பார்க்க வேண்டும்.

ஆனால் அப்படி முழுதாக அவநம்பிக்கையும் கொள்ளத் தேவையில்லை. வைரமுத்து அளவுக்கு பாசாங்கு செய்யாத எளிய எழுத்தாளரான அகிலனுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது இந்த அளவு எதிர்ப்பு கிளம்பவில்லை. சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற எதிர்வினை மட்டுமே அன்று அவ்விருதளிப்புக்கு எதிரான முக்கிய ஆவணமாக இன்றும் திகழ்கிறது. இன்று இவ்விருது அறிவிப்புக்கு பலமான எதிர்ப்பு நிலவுகிறது. ஆங்கில நாளிதழ்களிலும் அவ்வெதிர்ப்பு பதிவாகிறது. இதன் உச்சமாக ஜெயமோகன் Living tamil literature award என்ற பெயரில் ஞானபீடம் என்ற விருதை சிறுத்துப் போகச் செய்யும் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட ஒரு விருதினை அறிவித்து இருக்கிறார். வைரமுத்து ஞானபீடத்தை வாங்கியதன் வழியாக அவ்விருது பூரணமாக மதிப்பிழக்கும் ஒரு வாய்ப்பு திறந்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஞானபீடம் அதற்கான எதிர்வினைகள் போன்றவற்றைக் கடந்து இந்த சிக்கலை அணுக வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். இலக்கியத்தின் அழகியல் அது கிளர்த்தும் நுண்ணிய உணர்வுகள் எல்லாம் வாசக அனுபவத்துடன் தொடர்புடையவை. அத்தகைய நுண்ணிய அலகுகளை விட்டுவிடுவோம். விருது, ரொக்கம் போன்ற புறவய மதிப்பீடுகளைப் பற்றிப் பேசுவதால் இலக்கியத்தையும் சற்று புறவயப்படுத்திக் கொள்வோம்.

எந்தவொரு கலைப்படைப்பும் அதை அணுகுகிறவனிடம் எந்த அக நகர்வையும் உருவாக்காமல் அவனை அங்கேயே இருத்தி வைத்தால் அதை நாம் கலைப்படைப்பு என்றே சொல்லமாட்டோம். இலக்கியமும் அதையே செய்கிறது. வாசகருக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறது. அதன் வழியே சமகாலத்தை அவர் என்னவாகப் பார்க்கிறாரோ அங்கிருந்து அவர் பார்வையை மாற்றி அமைக்கிறது. இந்த இயல்பினாலேயே இலக்கியம் சமகாலத்தின் மீது கடுமையான அதிருப்தியை உருவாக்குகிறது. ஆழத்தில் இருக்கும் இந்த அதிருப்தியே சமூக மாற்றத்தின் முதல் படியாகிறது.

ஒரு இலக்கிய வாசகன் எந்தவொரு அரசியல் கருதுகோளுக்கும் தன்னை ஒப்புக்கொடுக்காமலிருப்பது இதனால்தான். சமகாலத்தின் எல்லா நகர்வையும் ஒரு இலக்கிய வாசகன் ‘தவிர்க்க முடியாதது’ என்றே நம்புகிறான். அவனுக்கு சமகாலத்தில் முழுமையாக நம்பும்படி எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதன் முழு எதிர் நிலையில் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு அரசியல் தரப்பும் ‘தன்னை’ நம்பச் சொல்கிறது. ‘தன்னால்’ எல்லாவற்றையும் சரிசெய்ய முடியும் என்கிறது. அது அரசியல் மற்றும் வணிகத்தின் இயல்பும் கூட. அரசியலுக்கு தன் கருத்துத் தரப்பும் வணிகத்துக்கு தன் பண்டமும் உலகிலேயே உயர்ந்தவை. மாசற்றவை. மற்றதெல்லாம் தீங்கு. அசுத்தம்.

நிலையான வலுலான நோக்கம் கொண்ட அமைப்புகளுடன் பெரும்பாலான படைப்பாளிகளால் இணைந்து செயல்பட முடியாது. நிறுவனத்தின் இயல்புக்கு நம்மை ஒப்புக் கொடுக்கும்போது மனிதனின் ஆதாரமான துக்கம், கையறுநிலை போன்றவற்றை விசாரிக்கும் இயல்பினை ஒரு படைப்பாளி இழக்கிறான். அவனுக்கு உலகம் ரொம்பவும் சரியாக இயங்குவதாகத் தோன்றுகிறது. அந்த சோம்பேறித்தனத்தில் இருந்து மலினமான படைப்புகள் வெறும் எழுத்து ஜோடனைகள் வெளிவரத் தொடங்குகின்றன. வைரமுத்துவின் எழுத்து ஜோடனைகளின் புதைகுழி எனலாம்.

ஊடாக இன்னொன்றையும் சொல்ல வேண்டும். வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள். சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் கோணங்கி மீது சில இளைஞர்களால் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.‌ அவரிடமிருந்து மழுப்பமான ஒரு மறுப்பு மட்டுமே வந்தது. அதன்பிறகு அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதாலேயே மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தேன். இனியும் அந்த தவிர்ப்பு தொடரவே செய்யும்.மீடூ இயக்கத்தின் நோக்கமும் அதுதான். காதல் இல்லாமல் வெறும் அதிகாரத்தை மட்டும் துணைத்து இன்னொருவரை பாலியல் ரீதியாக சுரண்டுகிறவர் அவர் சார்ந்த சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டும். வைரமுத்துவை திரைத்துறையில் சிலர் ஒதுக்கினர். ஆனாலும் அவர் தொடர்ந்து அரசியல் மேடைகளில் இடம்பெற்றார். ஒரு சமூகமாக அது நம் தோல்வி. அவருக்கு எதிரான நம் கண்டனங்கள் வலுவாக இல்லை. அதற்கு காரணமும் பாலியல் சுரண்டல் பற்றிய நம்முடைய புரிதலின்மைதான். ஒரு பெண்ணுக்கு ‘சலுகை’ அளிப்பதாகச் சொல்லி அவளை பாலுறவுக்கு உடன்படச் சொல்வதும் குற்றமே என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களாகவே நாம் இன்றும் இருக்கிறோம்.வைரமுத்து சமூகத்தால் ஒதுக்கப்படவில்லை. அவருடைய பாசாங்குப் படைப்புகள் பல்லாயிரம் பிரதிகள் விற்றிருக்கின்றன.‌ இன்று‌ ஞானபீடம்வரை சென்றுவிட்டார்.இதையெல்லாம் மொத்தமாக யோசித்தால் நாம் ஏன் மீண்டும் மீண்டும் தோற்கிறோம் என்ற ஒற்றைக் கேள்வியால் மனம் நிரம்புகிறது. வைரமுத்துவின் படைப்புகள் பிறமொழிகளுக்குச் செல்வது தமிழுக்கு அவமரியாதை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். முதலில் வைரமுத்து போன்ற ஒருவர் ஊடுருவும் அளவு நம் அமைப்புகள் ஏன் பலவீனமானவையாக இருக்கின்றன என்ற கேள்வியே முதன்மையானது.