என் ஞாபக மறதியை நொந்து கொண்டு எழுதத் தொடங்குகிறேன்‌. கொஞ்சநாள் முன் ஒரு எழுத்தாளருடன் பேசினேன். அவர் பெண். பேச்சு தமிழ்க் கதைகளில் உள்ள பாலியல் மீறல்கள் குறித்த சித்திரம் பற்றிச் சென்றது. அவர் பெயர்தான் மறந்துவிட்டது. அவர் சொன்னது நினைவிருக்கிறது.

‘என்னுடைய பாட்டியை நான் கடுமையான ஒழுக்க நெறி கொண்டவர் மீறல்களை மன்னிக்காதவர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்குத் தெரிந்ததைவிட அவர் ஏராளமான பாலியல் மீறல்களை நேரடியாகவே பார்த்திருக்கிறார் என்று சமீபத்தில்தான் தெரிந்தது. அவற்றை அவர் மனவிரிவுடன்தான் எதிர்கொண்டிருக்கிறார். அது பல தலைமுறைகளாக அடுக்களை வழியே கடத்தப்படும் மனவிரிவு!’

இது அவர் சொன்னது. அதன்பிறகுதான் நவீனமடைதலையும் பாலியல் மீறல்களை அனுமதிப்பதையும் நானும் எல்லோரையும் போல நேர்விகிதத்தில் விளங்கிக் கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. பொதுச் சமூகத்தில் நவீனத்தைக் கொண்டு வருவதில் இணையம் பரவலாவதற்கு முன்புவரை சினிமாவிற்கு ஒரு முக்கியமான பங்கு இருந்தது. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு சினிமாவில் கல்லூரி என்று காட்டப்பட்டவற்றில் பெண்கள் அணிந்திருந்த உடைகள் இன்றுதான் இயல்பானதாக மாறி இருக்கின்றன. என் இளம் வயதில் கல்லூரி சென்ற என் மூத்த சகோதரிகள் அணிந்திருந்த சுடிதார்கள் ஒரு பெரிய சாக்கு படுதாவை தலையை நுழைப்பதற்கு மட்டும் இடம்வெட்டி அணிந்து கொண்டது போலிருக்கும். அன்றைய சினிமாவுக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி அப்படிப்பட்டது!‌ ஆகவே இயல்பாக சினிமா யதார்த்த வாழ்வைவிட முன்னே இருப்பதாக நாம் நினைத்தோம். நமக்கு ‘முன்னே’ இருப்பவர்கள் பாலியல் ஒழுக்கம் கொண்டிருக்கமாட்டார்கள் என்ற எண்ணமே பொதுவாக இருந்தது. இதே எண்ணம்தான் வெள்ளைக்காரர்கள் பற்றியும் நமக்கு இருந்தது. எதெல்லாம் நாகரிகம் என்று நினைத்தோமோ அங்கெல்லாம் பாலியல் மீறல் இருந்ததாக நம்பப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்தும் அத்துறை இங்கு பெரிய அளவில் வளர்ந்த போது ‘அவர்கள் ஒழுக்கமற்றவர்கள்’ என்ற எண்ணமே முதலில் ஏற்பட்டது.

இதன் மறுபக்கத்தில் கிராமங்கள் ஒழுக்கத்தில் ஊன்றி நிற்பவை என்ற எண்ணம் அமைந்தது. கிராமப் பெண்கள் ஒழுக்கமானவர்கள் என்றும் நகரப் பெண்கள் நம்ப முடியாதவர்கள் என்றும் பொதுவாக பேசப்பட்டது. இதை அப்படியே நான் கருப்பு வெள்ளையாக நான் நம்பாவிட்டாலும் இந்த நம்பிக்கையை ஒரு அலைவரிசை என்று கொண்டால் குறைந்த அளவிலாவது என்னிடமும் இத்தகைய முன் முடிவுகள் இருந்தன. அதனாலோ என்னவோ அந்த எழுத்தாளருடனான உரையாடல் என்னை சற்று யோசிக்க வைத்தது.

சமீபத்தில் தஞ்சை ப்ரகாஷின் இரண்டு கதைதளை வாசித்தேன்.‌ முதல் கதை அங்கிள். சாளிப்பிள்ளை என்ற ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற நாற்பது வயது ஆணை மையப் பாத்திரமாகக் கொண்ட கதை. சாளிப்பிள்ளை வசதியானவர். இந்தியா முழுக்க அவருக்கு பெண்களுடன் உறவிருக்கிறது. இவர் நடத்தையால் திருமணமான கொஞ்ச நாளிலேயே மனைவி அவரைவிட்டுச் சென்று விடுகிறாள். இப்போது ஊரில் வசிக்கும் சாளிப்பிள்ளைக்கு தன் வீட்டருகில் வசிக்கும் லிடியா என்ற இளம்பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவள் அழகால் ஈர்க்கப்பட்டாலும் அவளுடன் விகல்பம் இல்லாமல்தான் பழகுகிறார். எந்த அளவுக்கு என்றால் கிழிந்த உடையில் பளீரென அவள் உடல் தெரியும்போது லிடியாவின் அம்மாவிடம் சென்று அவள் துணியை தைத்துக் கொடு என்று கண்டிக்கும் அளவு.ஆனால் ஒருநாள் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் அவள் பாண்டி என்ற இளைஞனுடன் உறவு கொள்வதைப் பார்க்கிறார். அவனை அடித்து விரட்டுகிறார். லிடியாவின் அம்மாவிடம் இதைச் சொல்லி வைக்கிறார். ஆனால் இப்போது சாளிப்பிள்ளையிடம் லிடியா குறித்து இருந்த ஏதோவொரு தடை உடைகிறது. அவளை பலவந்தப்படுத்தி அடைய முயல்கிறார்.

அடுத்த கதை ஜானு பாட்டி அழுது கொண்டிருக்கிறாள். ஜானுப்பாட்டிக்கு எழுபது வயது கடந்துவிட்டது. நிமிர முடியாதவள். பிராமணக் குடும்பம். அவள் மகனுடைய பராமரிப்பில் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. அவள் பேத்தி சீதாதான் தினம் விளக்கேற்றுகிறாள். கிழவிக்கு பார்வை மங்கிவிட்டது. பொழுது சாய்ந்து விளக்கேற்றிவிட்டதாக பாட்டியிடம் சீதா சொல்லி விடுகிறாள். அவள் அப்பாவிற்கு பழக்கமான ஒரு திருமணமான இளைஞனான ராஜாராமன் அடிக்கடி பாட்டி வீட்டிற்கு வருகிறான். ஏறத்தாழ மொத்த கதையும் பாட்டியின் பார்வையில் நடக்கிறது. சீதா விளக்கேற்றாத அந்த நாளில் கோவில் இருளில் அவன் சீதாவுடன் உறவு கொள்கிறான். கண் தெரியாவிட்டாலும் பாட்டி இந்த விஷயத்தை ‘சென்ஸ்’ பண்ணி விடுகிறாள். அவள் அவனைக்கூப்பிட்டு பக்குவமாக இனி வீட்டுப் பக்கம் அவன் வரக்கூடாது என்று எடுத்துச் சொல்லி அனுப்பி வைக்கிறாள். சீதாவையும் கண்டிக்கிறாள்.

இவ்விரண்டு கதைகளும் தொகுப்பில் அடுத்தடுத்து உள்ளன. இரண்டு கதைகளிலும் ஒரு ரகசிய உறவு அம்பலப்படுகிறது. ஆனால் இரண்டையும் பார்க்கிறவர்கள் அதைக் கையாளும் விதத்தில்தான் எத்தனை வேறுபாடு. சாளிப்பிள்ளைக்கு பாண்டியன் மீது பொறாமை எழுகிறது. இன்னொரு வகையில் அந்த உறவினை தான் கண்ணுற்றது லிடியாவை தான் அடைவதற்கான வாய்ப்பு என்றும் அவரால் புரிந்து கொள்ளப்படுகிறது. இத்தனைக்கும் பாண்டியும் லிடியாவும் மணமாகாதவர்கள். அவர்கள் மணந்து கொண்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சீதா ஏமாற்றப்படுகிறாள். அவளுக்கு பதினாறு வயதுதான் ஆகிறது. அவளிடம் உடலை குறுகுறுக்க வைத்து அவளை அடைய முயல்கிறான்‌ ராஜாராமன். ஆனால் ஜானுப்பாட்டி எவ்வளவு நாசூக்காக அதைக் கையாள்கிறாள்! அவளைத் தவிர வேறு யாருக்கு அது தெரிந்திருந்தாலும் இரண்டு குடும்பங்களும் கடும் விளைவுகளை சந்தித்து இருக்கும்.

முன்பு எழுத்தாளருடன் நிகழ்ந்த உரையாடலை இக்கதை எனக்கு மீண்டும் ஞாபகப்படுத்தியது. மேலும் பாலியல் மீறல்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றிய கேள்வியையும் இவ்விரண்டு கதைகளும் எழுப்பின. குறிப்பாக சிறுவர்கள் சம்மந்தப்பட்ட பாலியல் மீறல்களை.

நான் மீறல் என்ற வார்த்தையையே பயன்படுத்த விரும்புகிறேன். பாலியல் குற்றங்கள் முற்றிலும் வேறு. ஆனால் விபத்து போல நடக்கும் பாலியல் மீறல்களை நாம் எவ்வாறு கையாள்கிறோம்?‌ இந்த இரண்டு கதைகளை வைத்துப் பார்க்கும்போது ஆண் பாலியல் மீறலை ஒருவகையிலும் பெண் இன்னொரு கோணத்திலும் பார்ப்பதான எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் அதை அப்படியே கருப்பு வெள்ளையாகப்‌ பார்க்க முடியாது. யதார்த்தத்தில் ஒரு பெண்ணைப் பற்றிய பாலியல் கதைகளை பரப்புவதில் பெண்களே முன்நிற்கின்றனர். ஆணோ பெண்ணோ நமக்கு பொதுவாக இதுபோன்ற கதைகளைப் பேசும்போது ஒரு கிளர்ச்சி உருவாகிறது. அது பாலியல் கிளர்ச்சி அல்ல அல்லது அக்கிளர்ச்சியில் பாலுறவின் பங்கு மிகக்குறைவு.

உண்மையில் அக்கிளர்ச்சி எங்கிருந்து உருவாகிறது? இன்றுவரை நமக்கு மனிதர்களுடன் உருவாகும் உணர்ச்சிகரமான அண்மை பாலுறவின் வழியாக உருவாவதுதான். அதாவது குடும்பம் என்ற அமைப்பு.‌ குடும்ப அமைப்பை வலுவாக நிலைநிறுத்துவதில் பாலுறவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. பாலுறவு என்கிற அஸ்திவாரத்தின் மீதுதான் குடும்பம் நிலைத்திருக்கிறது. குடும்பத்திற்கு மாற்றாக செய்யப்படும் எல்லா யோசனைகளும் வெற்றிபெற முடியாதது குடும்பத்தை போன்ற பாலியல் முறைப்படுத்தல்கள் மற்ற அமைப்புகளில் நடைபெறுவதில்லை.

தீவிரமான பாலுறவு விலக்கம் கடைபிடிக்கப்படும் அமைப்புகளில் பாலியல் மீறல்கள் நடைபெற்றவண்ணமே இருக்கின்றன. ஆகவே ஒரு‌ மனிதர் இன்றுவரை பிணைப்புக்காக இன்னொரு‌ மனிதரை பாலுறவின் வழி கட்டமைக்கப்பட்ட உறவு அல்லது படிமத்தின் வழியே மட்டுமே அணுக முடியும்.இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளும் ‘அண்ணா-தங்கை’, ‘அக்கா-தம்பி’ போன்ற போலி உறவுகளுக்கு பின்னிருப்பதும் பாலுறவு முறைப்படுத்தல்தானே! தங்களை சகோதர சகோதரி போன்றவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இருவர் உடலுறவு கொண்டதாக தெரியவரும்போது நாம் பெரிதாக அதிர்ச்சி அடையமாட்டோம்.

நான் சொல்ல வந்தது இதுதான். ஒருவருடன் பிணைப்பு உருவாக நமக்கு பாலுறவுசார் படிமங்களே உதவுகின்றன. அரசியல்வாதிகள், சாமியார்கள் போன்றவர்கள் தங்களை அன்னை, தந்தை என்றெல்லாம் அழைத்துக் கொள்வது அன்னை, தந்தை போன்றவை பாலுறவு சார் அடையாளங்கள் என்பதால்தானே! வெகுஜனக் கலையின்‌ முக்கியமான அம்சமாக காமம் இருப்பது இந்தக் காரணத்தால்தான். ஒரு கதையில் அல்லது சினிமாவில் காமம் சார்ந்த சித்தரிப்பு இடம்பெறும்போது நம் மனம் அதனுடன் எளிதாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. இலக்கியத்தில் கலைப்படைப்புக்கும் வெகுஜன எழுத்துக்கும்மான ஒரு முக்கியமான வேறுபாடு எழுத்தாளர் காமத்தை கையாளும் விதம். வெகுஜனப் படைப்புகளில் காமம் வாசக மனதுடன் ஒரு பிணைப்பை உருவாக்குவதற்கான ஒரு‌ கண்ணியாக செயல்படுகிறது. அதேநேரம் காமத்தை நேரடியாகவும் அப்பட்டமாகவும் பயன்படுத்தும்போது அது அனைவருக்குமானதாக ஆக முடிவதில்லை. ஆகவே தாய்ப்பாசம் தந்தைப்பாசம் அல்லது அதுபோன்ற ஒன்றை ரஞ்சகப் படைப்புகள் ரசிகர்களின் ஈர்ப்புக்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தப் புரிதலுடன் பாலியல் மீறல்கள் பற்றிய பேச்சுகளுக்குத் திரும்பலாம்.

நம்மையும் பாலியல் மீறல் பற்றிய பேச்சுகள் அல்லது கிசுகிசுக்களின் ஒரு பகுதியாக நிறுத்தி யோசித்துப் பார்ப்போம். மேலும் மேலும் நிறுவனமயமாகிக் கொண்டே செல்லும் உலகில் நம்மை நாம் மனிதர்கள் என்று உணர்வதற்கு இருக்கும் வாய்ப்புகள் சாப்பாடும் காமமும்தான். சாப்பாட்டில் நமக்கு இன்று சுதந்திரம் இருக்கிறது. பெயரளவுக்கேனும். ஆனால் காமத்தில் அப்படியான சுதந்திரம் இல்லை. இருக்கவும் முடியாது. கட்டற்ற காமம் என்பது சமூக சீர்குலைவுக்கும் அடிமைத்தனத்திற்குமே வழிவகுக்கும். ஆனால் காமம்‌ குறித்து நம் ஆழ்மனம் யோசித்துக் கொண்டே இருக்கிறது. கிசுகிசு பேச்சுகள்‌‌ என்பதை இந்த ஆழ்மன இச்சையின் வெளிப்பாடுதான்.

இந்த எண்ணங்கள் மெல்ல மெல்ல மேல்நிலையாக்கம் (sublimation) அடைந்துதான் உறவுப் பிணைப்புகள் பற்றிய பாவனையாக உருக்கொள்கிறது. ஒரு இளம்பெண்ணை ஒரு ஆண் இச்சையுடன் தொடுவதும் அவளையே ‘நான் உன்னை மகளாக எண்ணுகிறேன்’ என்று சொல்லித் தொடுவதும் ஒரே சங்கிலியின் அடுத்தடுத்த புள்ளிகள்தான். நான் இங்கு மகளாக ஒரு பெண்ணை எண்ணும்‌ ஆணின்‌ உணர்வை சந்தேகிக்கவோ கீழ்மைப்படுத்தவோ இல்லை. இரண்டிற்கும் உள்ள தொடர்பினை சுட்டவே விழைகிறேன்.நாம் ஒரு பாலியல் அத்துமீறலை பார்க்கும்போது அல்லது கேள்விப்படும் எப்படி நடந்து கொள்வது? உண்மையில் இந்தக் கேள்விக்கு வந்து சேரவே இவ்வளவு சுற்றினேன். இந்தப் பாலியல் அத்துமீறலில் தொடர்புடையவர்கள் இருவரும் பெரியவர்களாக இருக்கும்போது அது பற்றி பெரிதாக யோசிக்கத் தேவையில்லை. ஏனெனில் அத்தகைய மீறல்களின் முடிவுகள் ஏகப்பட்ட பொருளியல் காரணிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய மீறல்கள் ஒரு இளம்பெண், இளைஞன் அல்லது சிறுவர்கள் ஈடுபடும்போது நாம் என்ன செய்வது?

முதலில் இதுபோன்ற ஒரு நிகழ்வில் நம்மை நாம் விலக்கிக் கொண்டு யோசிக்க வேண்டும். சரியாகச் சொல்வதென்றால் ஜானுப்பாட்டி போல யோசிக்க வேண்டும். அத்தகைய உறவில் ஈடுபட்டவர்களின் நலன் கெடாதவாறு யோசிப்பதே சரியானது. முன்பே சொன்னதுபோல ஜானுப்பாட்டி அந்த சிக்கலை வேறு எவ்வகையில் கையாண்டிருந்தாலும் இரண்டு குடும்பங்களின் அழிவு உறுதி! ஆனால் அவள் உட்சபட்ச விவேகத்துடன் நடந்து கொள்கிறாள். அத்தகைய விவேகம் நம்மிடம் உள்ளதா என்ற கேள்வியையே நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். எளிமையாக சொல்வதென்றால் நம்முடைய காமத்தாலோ தாய்மை ,தந்தைமை போன்ற உணர்வுகளாலோ அடுத்து வரும் தலைமுறையினரின் வாழ்வை சிதைத்துவிடுதல் கூடாது.